மறைவுச் செய்தி என்பதே எப்போதும் மனதை கனமாக்கி, கண்ணீரைக் குளமாக்கிவிடத்தான் செய்யும். இந்தியாவின் தலை சிறந்த இயக்குநர் கே.விஸ்வநாத்தின் மரணம், திரையுலகில் மிகப்பெரிய துக்க அலையை எழுப்பி, அதிலிருந்து மீளமுடியாமல் சிக்குண்டு போய்க்கிடக்கிற நிலையில்... இப்படியொரு துக்கச் செய்தி... ‘வாணி ஜெயராம் மரணம்’ என்று!
ஒரு குயிலைப் போல, தன் குரல் வழியே நமக்குக் குதூகலங்களையும் சந்தோஷங்களையும் மயிலிறகு வருடலையும் தந்த ‘ஏழு ஸ்வரங்களின் நாயகி’ வாணி ஜெயராம்... இப்போது நம்மிடம் இல்லை!
குரல் வழியே நம் செவியில் புகுந்து சிந்தையில் கலந்த கானக்குரலரசிதான் வாணி ஜெயராம். தமிழகத்தில் பிறந்த பாடகியரில் வாணி ஜெயராம், தனித்துத் தெரிந்து தன் எல்லைகளைப் பரப்பியவர். வேலூர்ப் பக்கம்தான் பூர்விகம். தமிழ்தான் தாய்மொழி. ஆனால், இந்திப் பாடலின் மூலமாகத்தான் எல்லோருக்கும் அறிமுகமானது அந்தக் குரல். கேட்டமாத்திரத்தில், பிடித்துப் போன குரல் அது.
பின்னாளில், ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்றெல்லாம் ஸ்வரங்களை தன் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு, உச்சஸ்தாயியில் மகத்துவம் பாடியவர், வீட்டில் எட்டாவது பெண்ணாகப் பிறந்தார். ‘துரதிருஷ்டக்காரி’ என்றுதான் வீடு சொல்லியது. ஆனால், வளர்ந்து, பாடகியானதும், ‘நாமெல்லாம் அதிர்ஷ்டம் பண்ணிருக்கோம். வாணி ஜெயராம் மாதிரி ஒருத்தங்க நமக்குக் கிடைச்சிருக்காங்களே’ என்று மொத்தத் தமிழகமும் கொண்டாடியது.
‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ என்று பாடியபோது, அந்த மல்லிகைப் பூவே இந்தக் குரல் கேட்டு மயங்கித்தான் போயிருக்கும். திருமண வயதில் இருந்தவர்களும் திருமணம் செய்து கணவரும் குழந்தைகளுமாக வாழ்ந்தவர்களும் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருந்த பாடல் அப்போது இந்தப் பாடலாகத்தான் இருந்தது. சிலோன் ரேடியோவில், வாணி ஜெயராமின் இந்தப் பாடலை ஒருநாளில், ஒருமுறையேனும் ஒலிபரப்பாவிட்டால், அங்கே வேலை பார்ப்பவர்களுக்கு தூக்கம் வராதோ என்னவோ? நம் துக்கத்தைத் துரத்தியடித்து, தூக்கத்தைக் கொடுத்த இதமான பாடல் அது!
இசைத்துறையில் பல்துறைகளிலும் பல கலைகளிலும் கற்றுத்தேர்ந்தவர் வாணி ஜெயராம். சங்கீதத்தின் நுட்பங்கள் முழுவதையும் அறிந்துகொண்டார். வடக்கத்திய இசையும் கஸல் பாடல்களும் இவரின் குரல்களில் கட்டுண்டு ஜீவனுள்ள பாடல்களாக வெளியே வந்தன.
எழுபதுகளில் இருந்து தொடங்கியது வாணி ஜெயராமின் இசைப்பயணம். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி உச்சியிலிருந்த காலம். அப்போது இவரின் இந்திப் பாடல்களைக் கேட்ட எம்.எஸ்.வி., ‘தீர்க்கசுமங்கலி’ எனும் படத்துக்கு வாணி ஜெயராமை அழைத்தார். ’’இந்தப் பாடல், மிகக் கடினமான பாடல். புதிய குரல் தமிழகத்துக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று உன்னை அழைத்திருக்கிறேன். நன்றாகப் பாடு. பெரிய எதிர்காலம் உனக்காகக் காத்திருக்கிறது’’ என ஆசீர்வதித்தார். அதுதான் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல்!
அடுத்தடுத்து பாடல்கள் கிடைத்தன. ஹிட்டாகின. வாணி ஜெயராம் குரலுக்கு ரசிகர் கூட்டம் உருவானது. ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இரண்டு பாடல்களைக் கொடுத்தார் மெல்லிசை மன்னர். ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்ற பாடல் படத்தின் தொடக்கத்தில் வரும். டைட்டில் பாடல் இது. படத்தின் க்ளைமாக்ஸில், ‘கேள்வியின் நாயகனே’ பாடல். இந்த இரண்டு பாடல்களும் வாணி ஜெயராம் குரலில், நம்மை சொக்கிப் போட்டன. எம்.எல்.வசந்தகுமாரியின் பேத்தியான ஸ்ரீவித்யாவுக்கு, ‘பைரவி’ எனும் கதாபாத்திரத்துக்கு மேலும் கெளரவம் சேர்த்தார் வாணி ஜெயராம்!
இந்தியில் பாடினார் வாணி ஜெயராம். கன்னடத்திலும் அழைத்தார்கள். தெலுங்கில் இவரின் குரலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மலையாளத்திலும் மராட்டியிலும் கூட பாடினார். ஒடியா, குஜராத்தி என பாடாத மொழிகளே இல்லை. இவரின் குரலை ரிக்கார்டிங் செய்யாத ஸ்டூடியோக்களே இல்லை. எல்லா மொழிகளிலும் அட்சரம் பிசகாமல் பாடினார். அட்சர சுத்தமாகப் பாடினார். வாணி ஜெயராமின் தனித்துவமும் இதுதான்; மகத்துவமும் இதுதான்!
சங்கர் கணேஷ், இளையராஜா, சந்திரபோஸ் என்று எல்லா இசையமைப்பாளர்களுக்கும் வாணி ஜெயராம் குரல் மீது மிகப்பெரிய மரியாதையும் ஈர்ப்பும் உண்டு. ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது?’ என்ற கஸல் சாயல் பாடலை இப்போதும் கேட்டுப் பாருங்கள். நம் நெஞ்சங்களை சொல்லாமல் அள்ளிக்கொள்வார் வாணி ஜெயராம்.
’மார்கழி பூக்கள் என்னை தீண்டும்..ம்ம்/ மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா/ தேன் தரும் மேகம் வந்து போகும்/ சிந்து பாடும் இன்பமே/ ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்/ பார்த்தாலும் போதை தரும்.ம்.யாரது யாரது...’ என்று ‘யாரது’வுக்கு ஒரு அழுத்தம் கொடுப்பார். ’நெஞ்சள்ளிப் போவது’ என்பதைக் குழைத்துச் சொல்லுவார். ஏக்கமும் துக்கமும் முக்கியமாகக் காதலுமாகக் கரைத்துக் கொடுத்திருப்பார்.
‘’என் வரிகளில் வாணி ஜெயராம் அம்மா நிறைய பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். ‘யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது’ பாடலை, அந்த ராகத்தை, இங்கே உள்ள ரசிகர்கள் புரிந்து உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். ’பாலைவனச்சோலை’ படத்தில், ‘மேகமே மேகமே பால் நிலா தேயுதே’ என்ற பாடலையும் அப்படியொரு ஜீவன் சிதையாமல் பாடியிருப்பார் வாணியம்மா’’ என்று கவிப்பேரரசு ஒருமுறை மேடையில் சிலாகித்துள்ளார்.
ஸ்ரீதரின் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில், ‘ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது’ என்ற பாடலில் காதலின் அடர்த்தியை பாடினார். ‘நீ கேட்டால் நான் மாட்டேனென்றா சொல்வேன் கண்ணா’ என்ற பாடலில், கொஞ்சம் காதலின் அதீத அதிகாரத்தை உணர்த்தினார். ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ படத்தில், ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’ என்ற பாடலைக் கேட்டால், கல்யாண வயதுப் பெண்களின் ஆர்வமும் அபிலாஷையும் கொஞ்சமே கொஞ்சமான வெட்கமும் அதில் இழையோடியிருப்பதை உணரமுடியும்.
‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் ‘பாரதி கண்ணம்மா நீயடி சின்னம்மா’ பாடலில் எஸ்பி.பி-யும் வாணி ஜெயராமும் உருகி உருகிப் பாடுவார்கள். ஸ்ரீப்ரியா தயாரித்து கமல் நடித்த ‘நீயா’ படத்தில், ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா’ என்ற பாடலில் வாழ்தலின் ஏக்கத்தை அந்தப் பாம்பென இருக்கும் மனித உருவங்கள் ஆசை ஆசையாகப் பாடுவதான பாடலை உணர்ந்து, ஒவ்வொரு வார்த்தைக்குள்ளேயும் காதல் தேன் தடவிக் கொடுத்திருப்பார் வாணி ஜெயராம்.
கர்நாடக சங்கீதங்களையும் கஸல் முதலான பாடல் கலைகளையும் கற்றுத் தேர்ந்த வாணி ஜெயராமிற்கு, மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ படத்தின் பாடல் வித்தியாசமானதும் ஸ்பெஷலானதுமான பாட்டுதான்! ‘நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா நெஞ்சுக்குள்ளே அந்த நெனப்பு வந்து மயக்குதய்யா’ என்று ‘நித்தநித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்கா’ என்று வித்தியாசமான ஜாலிப் பாடலில் சங்கதிகளையும் செருகித் தந்திருப்பது, அவரின் ரசிகர்களான நமக்கே புதுசுதான்!
பாடாத மொழிகளில்லை. பெறாத விருதுகள் இல்லை. தேசிய விருதுகள், மாநில விருதுகள், தமிழக அரசின் விருதுகள், தனியார் அமைப்புகளின் விருதுகள் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அவை, வாணி ஜெயராமின் பாடல்களின் எண்ணிக்கை அளவுக்கு நீளமானவை!
1945 நவம்பர் 30-ம் தேதி பிறந்த கலைவாணி என்கிற வாணி ஜெயராமுக்கு அண்மையில் தான் மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்து கெளரவித்தது.
‘தூரிகை எரிகின்ற போது/ இந்த தாள்களில் ஏதும் எழுதாது/ தினம் கனவு எனது/ நிலம் புதிது விதை பழுது’ என்றெல்லாம் ‘மேகமே மேகமே’ பாடலில் பாடிய அந்த கானக்குரல், ‘எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்/ எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும் அது எதற்கோ...’ என்று பாடிய போது கதையின் நாயகிக்காக அழுதோம். வருந்தினோம்.
விருது அறிவித்த நிலையில் வாணி ஜெயராம் கானக்குயிலரசிக்கு மாலையிட்டு வாழ்த்த நினைத்த தருணத்தில், வாணி ஜெயராம் எனும் குயில் தன் குரலை அடக்கிக்கொண்டுவிட்டது. ‘மேகமே மேகமே... பால் நிலா தேயுதே’ என வருந்திப் பாடிய வாணி ஜெயராம்... பரந்து கிடக்கிற காற்றின் வெளியிலும் மேக வெளியிலும் இரண்டறக் கலந்து, எட்டாவது ஸ்வரமாக, இனி எட்டவே எட்டாத ஸ்வரமாக இரண்டறக் கலந்துவிட்டார்!
வாணி ஜெயராமின் ரசிகர்கள் மட்டுமில்லை... அவருடைய காலடி பட்டு, குரலைப் பதிவு செய்த ரிக்கார்டிங் அறைகள் கூட வாணி ஜெயராமின் மறைவுச் செய்தி கேட்டு துக்கித்துப் போயிருக்கும். மெளனமாக அஞ்சலி செலுத்தியிருக்கும்!
உடலால் வாழ்ந்தது போதும் என காலம் முடிவு செய்துவிட்டது. ஆனால், காலங்கள் தோறும் தன் குரலால் வாழ்ந்துகொண்டே இருப்பார் வாணி ஜெயராம்!