'ராயன்’ விமர்சனம் - இயக்குநராக ஜொலித்தாரா தனுஷ்!?


சென்னை: நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்டிருந்தாலும் தனக்குப் பிடித்த முகமாக தனுஷ் குறிப்பிடுவது இயக்குநர்தான். மனதை வருடும் மயிலிறகாக ‘பவர் பாண்டி’யில் இயக்குநராக கவனம் ஈர்த்தவர். இந்த முறை அண்ணன், தம்பி, தங்கை செண்டிமெண்ட்டுடன் வன்முறையை களமாகக் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்து ‘ராயன்’ ஆக இயக்கி, நடித்திருக்கிறார். படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

காத்தவராயன் தனுஷூக்கு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா என இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. சிறுவயதில் எதிர்பாராத விதமாக அம்மா, அப்பாவை இழக்கும் இவர்கள் ஊரை விட்டு வெளியே வருகிறார்கள். தன் தம்பி, தங்கையை பொறுப்பாக வளர்த்து ஆளாக்குகிறார் தனுஷ். இதில் முதல் தம்பி சந்தீப் ஊரில் வம்பிழுத்து கொண்டு இருக்க, இரண்டாவது தம்பி காளிதாஸ் ஜெயராம் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.

தங்கை துஷாரா மீது உயிரே வைத்திருக்கிறார் தனுஷ். சந்தீப் குடித்துவிட்டு ஒரு தகராறில் ஏரியா ரெளடி சரவணின் மகனைக் கொன்றுவிட, சந்தீப்பை சரவணன் கொலை செய்வதற்கு முன்பு ராயன் பிரதர்ஸ் சரவணைக் கொன்று விடுகிறார்கள்.ரெளடிகளின் பிரச்சினை ஏரியாவில் இருக்கக்கூடாது என நினைக்கும் காவல்துறை அதிகாரியாக வரும் பிராகாஷ்ராஜ், இந்தப் பிரச்சினையை எப்படி தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்? தனுஷூம் அவரது தம்பிகளும் தங்கையும் என்ன ஆனார்கள் என்பதுதான் ‘ராயன்’ படத்தின் கதை.

நடிகராக தனுஷூக்கு ஐம்பதாவது படம் இது. இயக்குநராக நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது படம். இந்த இரண்டு பொறுப்புகளையும் உணர்ந்து படத்தை இயக்குநராகப் பார்த்து பார்த்து இயக்கி இருப்பது ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. பொறுப்பான அண்ணனாக, குடும்ப பொறுப்புகளைத் தூக்கி சுமக்கும் இறுக்கத்தோடும், குடும்பத்திற்கு ஒரு பிரச்சினை என வரும்போது திமிறி எழும் அசுரனாகவும் நடிப்பில் அதகளப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.

சந்தீப், காளிதாஸ் ஜெயராம், துஷாரா என மூவரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தான் மட்டுமே திரை முழுக்க ஆக்கிரமிக்காமல் சந்தீப், காளிதாஸ், துஷாரா என மூவருக்கும் திரைக்கதையில் வலுவான கதாபாத்திரம் கொடுத்திருப்பது சிறப்பு. படத்தின் இன்னொரு மிகப்பெரும் பலம் ஏ.ஆர். ரஹ்மானின் இசை. படத்தின் ஆரம்பத்தில் இருந்து, இறுதி வரை கதையின் இன்னொரு கதாபாத்திரமாக திரைக்கதையைத் தூக்கிப் பிடித்து அற்புதமான திரையரங்க அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது ரஹ்மானின் பின்னணி இசையும், பாடல்களும்.

செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், அபர்ணா கதாபாத்திரங்கள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் எழாமல் இல்லை. ஓம். பிரகாஷின் ஒளிப்பதிவும் கலை இயக்குநர் ஜாக்கியின் கலை இயக்கமும் படத்தின் கதைக்குத் தீனி போட்டிருக்கிறது. ஆனால், கதையில் தனுஷின் அம்மா- அப்பா என்ன ஆனார்கள், ஏழு வருடங்களுக்கு முன்பு தனுஷ் செய்த சம்பவம் என சரவணன் குறிப்பிடுவது என்ன போன்ற பல கேள்விகளுக்கு பதில் இல்லை.

படம் முழுக்க செல்வராகவன், வெற்றிமாறன் படங்களின் சாயல் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல, திரைக்கதையில் வரும் திருப்பம் நம்பும்படியாக இருப்பதற்கு வலுவான காரணங்கள் இல்லை. முதல் பாதியில் விறுவிறுப்பாக ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் எமோஷனல், துரோகம் என அதீத வன்முறையைக் கையில் எடுக்கிறது. இரண்டாம் பாதியின் நீளத்தையும் எடிட்டர் பிரசன்னா குறைத்திருக்கலாம். முதல் பாதியின் விறுவிறுப்பையும், களத்தையும் இரண்டாம் பாதியில் தக்க வைத்திருந்தால் ’ராயன்’ இன்னும் ஜொலித்திருப்பான்.

x