நாகேஷ்: காமெடியால் நம்மை குஷிப்படுத்திய நகைச்சுவை டாக்டர்!


நாகேஷ்

நகைச்சுவை நடிகர்களுக்கு, நகைச்சுவை என்பது வெகு இயல்பாகவே அமையவேண்டும். அவர்களுக்குள் எப்போதும் ஹ்யூமர் சென்ஸ் என்பது இருக்கவேண்டும். நமக்கு எதிரில் இருப்பவர்களைக் கூட ஒற்றைவார்த்தையை கடுமையாகச் சொல்லி, அழவைத்துவிடமுடியும். ஆனால், சிரிக்கவைக்க முடியாது. அது, நமக்குள் இயல்பாகவே இருக்கவேண்டும்.

சினிமாவில், ரைமிங்டைமிங் அம்சங்களுடன், உடல்மொழியிலும் காமெடி பேசியவர்களே நகைச்சுவையில் தனித்துவம் மிக்க கலைஞர்களாக ஜெயித்திருக்கிறார்கள். நாகேஷ் எனும் நகைச்சுவை சமுத்திரம் அப்படித்தான்.

இயற்பெயர் குண்டுராவ். பெயருக்கும் உடலுக்கும் ஒரு இஞ்ச் கூட சம்பந்தமில்லை. வெலவெலவென இருக்கும் நாகேஷை, அவரின் நண்பர்கள் '’பேசாம சர்க்கஸ் கம்பெனில சேர்ந்துடு. அதுக்குத்தான் லாயக்கு இந்த ரப்பர் உடம்பு’' என்று கேலி பேச, அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை நாகேஷ். மைனஸ் பாயின்ட் உடம்பையே, ப்ளஸ் பாயின்டாக்கிக் கொண்ட அவரின் மேனரிஸங்கள்... பாடி லாங்வேஜ்கள்... முகபாவனைகள் எல்லாமே மிகப் பெரிய கைத்தட்டலையும் பாராட்டுகளையும் நாகேஷுக்கு பெற்றுத் தந்தன.

“சினிமால நடிக்கறதுக்கு ஒரு முகவெட்டு இருக்கணும்’’ என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள். நாகேஷுக்கு முகம் முழுக்கவே அம்மைத் தழும்புகள். ஆரம்பத்தில்... நடிக்க சான்ஸ் கேட்ட கம்பெனிகளெல்லாம், முகத்தைப் பார்த்தே கிண்டலடித்தன. வாய்ப்புக் கிடைக்காத வலியையும் தாண்டி, வலிய வந்த முகத்துக்கு நேரான முகம் குறித்த விமர்சனங்கள் இன்னும் இன்னுமாக வலியைக் கொடுத்தன!

'’வீட்ல கண்ணாடி இருக்குதா இல்லியா? அதைப் பாத்தீங்களா, இல்லியா’’ என்று நக்கலடித்த சினிமாக் கம்பெனிகளெல்லாம், பின்னாளில், ‘’முதல்ல நாகேஷ் சார் கால்ஷீட்டை வாங்கிருங்கப்பா’’ என்று சொல்லும் அளவுக்கு ஒருகட்டத்தில் உயர்ந்து ஜெயித்தார். சினிமாவில் ஒரு ஹிட் கொடுத்தால் போதும், அவர்களின் பின்னாலேயே சினிமா உலகம் ஓடும் என்பார்கள் அல்லவா! அபடித்தான் நாகேஷின் பின்னால், எல்லாக் கம்பெனிகளும் ஓடின. இதில், அவரை கிண்டலடித்து அனுப்பிய கம்பெனிகள்தான் முதலில் வந்தன.

கவிஞர் வாலி, நாகேஷ், ஸ்ரீகாந்த் மூவரும் ஒரே அறையில் வசித்தவர்கள். அவரவர்கள் சான்ஸ் கேட்டு அலைந்து திரிந்த காலம் அது. மூவரில் யாரிடம் காசு இருந்தாலும் அவர்கள் மூவருமே ராஜாக்கள்தான். அன்றைய உணவுக்கு எந்தப் பஞ்சமுமில்லை என்று பசியையும் வறுமையையும் உணவையும் சரிசமமாகப் பரிமாறிக்கொண்டார்கள்.

தாராபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்து, வேலை பார்த்துக் கொண்டிருந்த நாகேஷுக்கு கே.பாலசந்தரின் நட்பு கிடைத்தது. சின்னச் சின்னதாக நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அதிலெல்லாம் சோபிக்கிற கேரக்டர்கள் அமையவில்லை.

ஒரு நாடகத்தில் போஸ்ட்மேன் கேரக்டர் கிடைத்தது. ஒரேயொரு காட்சியில் வந்தாலும் நாகேஷ், தன் உடல்மொழியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். நாடகத்தில் நடித்த முக்கியமானவர்களையெல்லாம் விட்டுவிட்டு, ஒரேயொரு காட்சியில் வந்த போஸ்ட்மேனை கரவொலி எழுப்பி பாராட்டினார்கள்.

பாலசந்தருடன் இன்னும் நெருக்கம் ஏற்பட்டது. ‘வாடா போடா’ நண்பர்களின் பட்டியலில் வாலி, ஸ்ரீகாந்த், கே.பாலசந்தர் என பட்டியல் நீண்டது. முக்தா சீனிவாசன், இவரின் திறமையை அறிந்து, ’தாமரைக்குளம்’ படத்தில் அறிமுகப்படுத்தினார். தன் நாடகங்களில் தொடர்ந்து நாகேஷைப் பயன்படுத்தினார் பாலசந்தர். தனக்குள் நாகேஷ் இருப்பதையும் நாகேஷுக்குள் தான் இருப்பதையும் இருவருமே புரிந்துகொண்டார்கள்.

நாடகத்தைப் படமாக்க ஏவி.எம் முன்வந்தது. ஆனால், இயக்குநர் கிருஷ்ணன் பஞ்சுதான் என்று சொன்னது. கதை வசனம் எழுதிய பாலசந்தர், ‘’நாகேஷ்தான் நடிக்கவேண்டும்’’ என்று கண்டிஷன் போட்டார். ‘சர்வர் சுந்தரம்’ வெளியானது. பிறகு, முதல் படமான ‘நீர்க்குமிழி’ படத்தை இயக்கினார். அதில் நாகேஷையே நாயகனாக்கினார். அடுத்து ‘மேஜர் சந்திரகாந்த்’ நாடகம் சினிமாவானது. அதே ஏவி.எம். நிறுவனம், இந்தமுறை பாலசந்தரையே இயக்கவைத்தது. மேஜர் சுந்தர்ராஜனுக்கும் நாகேஷுக்கும் முக்கியத்துவம் கொடுத்த கதையில், நாகேஷ் இன்னொரு பரிமாணம் காட்டினார்.

இப்படித்தான், புதுமை இயக்குநர் ஸ்ரீதரின் கண்களில் பட்டார் நாகேஷ். தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார். ஒவ்வொரு படத்திலும் நாகேஷ், தன் தனித்துவமான உடல்மொழியாலும் அஷ்டகோணலாக்கி சேட்டைகள் செய்யும் முகபாவனைகளாலும் ரப்பர் போல் வளைந்து ஆடுகிற நவீன டான்ஸ்களாலும் எல்லோரையும் கவர்ந்தார். முக்கியமாக, அதுவரை தமிழ் சினிமாவில் உள்ள எந்தக் காமெடி நடிகரின் சாயலுமில்லாமல், இவர் செய்யும் டயலாக் டெலிவரிகள் அனைத்திலும் புதுமை கொடிகட்டிப் பறந்தன. நாகேஷின் மார்க்கெட்டும் பட்டொளி வீசிப் பறந்தது.

‘திருவிளையாடல்’ படத்தின் தருமி கதாபாத்திரத்தை நாகேஷ்தான் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் இயக்குநர் ஏ.பி.நாகராஜன். அப்போது சினிமாவில் பிஸியாகிவிட்டிருந்தார் நாகேஷ். வளர்ந்துகொண்டே இருந்தார். ‘’அரைநாள் கால்ஷீட் கொடுத்தாப் போதும்’’ என்று அவருக்காகக் காத்திருந்தார் ஏ.பி.என். சிவாஜி முன்னே நடந்து செல்ல, பின்னே இருந்தபடி நாகேஷ் கொடுத்த அலப்பறைகள் அனைத்தும் சிவாஜிக்குத் தெரியாது.

எல்லாம் முடிந்து படத்தைப் போட்டுப் பார்த்தார்கள். தருமியின் காட்சியை சிவாஜி பார்த்தார். ஏ.பி.நாகராஜனிடம் ஏதோ கிசுகிசுத்தார். மீண்டும் அந்தக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. பின் வரிசையில் உட்கார்ந்திருந்த நாகேஷுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. நெஞ்செல்லாம் லப்டப் எகிறியது. மீண்டும் ஏ.பி.நாகராஜனின் காதில் சிவாஜி ஏதோ சொன்னார்.

‘’அவ்ளோதான்... இந்தக் காட்சியை ‘கட்’ பண்ணச் சொல்லிட்டாரு சிவாஜி’’ என்பதாக நினைத்து அழுகை முட்டிக்கொண்டு வந்தது நாகேஷுக்கு. எல்லோரும் எழுந்து செல்ல, ஏ.பி.நாகராஜனின் காருக்கு அருகிலேயே கைகட்டி, பரிதாபமாக நின்று கொண்டிருந்தார் நாகேஷ்.

‘’என்னய்யா... கிளம்பலையா?’’ என்று ஏ.பி.என். கேட்டார். பொசுக்கென்று அழுதேவிட்டார் நாகேஷ். தான் நினைத்ததைச் சொல்லி வேதனையுடன் இயக்குநரின் கைப்பிடித்துக் கொண்டு நின்றார் நாகேஷ். ‘’லூஸாய்யா நீ? ‘இந்தக் காட்சில ஒரு சீனைக் கூட கட் பண்ணிடாதே. இந்தப் பயலுக்கான சீன் இது. பிய்ச்சு உதறிட்டான். எங்கேயோ போகப்போறான். அப்படியே வைச்சிரு’ன்னு சொல்லிட்டுப் போனாருய்யா’’ என்று சொல்ல, சிவாஜியின் கார் சென்ற திசைக்கு கும்பிடு போட்டார் நாகேஷ்.

’பூவா தலையா’, ‘பாமா விஜயம்’, ‘அனுபவி ராஜா அனுபவி’ , ‘எதிர்நீச்சல்’ என பாலசந்தர் ஒருபக்கம், ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ என்று ஸ்ரீதர் ஒருபக்கம், இந்தப் பக்கம் ஏவி.எம்., அந்தப் பக்கம் தேவர் பிலிம்ஸ், இங்கே எம்ஜிஆருடன் நடித்தார். அங்கே சிவாஜி படங்களில் வரிசையாக வந்தார். ஜெமினியுடன், முத்துராமனுடன், ஜெய்சங்கருடன், ரவிச்சந்திரனுடன் என நாகேஷ் நடிக்காத நடிகர்களில்லை. அவரை வைத்து இயக்காத இயக்குநர்களில்லை.

காமெடி ரோல் பண்ணுகிறவர், நெகடிவ் கேரக்டர் செய்தால் எடுபடுமா? ஆனால், அந்த ரோலிலும் நாகேஷை ரசித்தார்கள். ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் வைத்தி கதாபாத்திரத்தை நாகேஷைத் தவிர வேறு எவர் செய்திருந்தாலும் இந்த அளவுக்கு ரசித்திருப்போமா. செல்லமாகத் திட்டிக்கொண்டே நாகேஷின் வில்லத்தனத்தை ரசித்தார்கள். வைத்தியைப் பார்த்து, அவரின் செயல்களைப் பார்த்து கோபப்படாதவர்களே இல்லை. மோகனாம்பாளுக்கும் சண்முகசுந்தரத்திற்கும் கொடுத்த குடைச்சல்களை, வைத்தி நாகேஷைத் தவிர யார் பண்ணியிருந்தாலும் சோபித்திருக்காது.

சிவாஜி அவ்வளவு சீக்கிரத்தில் யாரையும் பாராட்டிவிடமாட்டார். அதேசமயம் அவரின் பாராட்டை பார்வையாலேயே வெளிப்படுத்திவிடுவார் என்பார்கள். 'திருவிளையாடல்' படத்தில், நாகேஷுக்குக் கிடைத்த வரவேற்பை அறிந்த சிவாஜி, வேறொரு படப்பிடிப்பின் போது, எல்லோருக்கு முன்பாகவும் ‘’டேய் நாகேஷ்...’’ என்று சத்தமாக அழைத்தார். நாகேஷ் ஓடிவந்தார். சிவாஜியும் ஓடிவந்தார். அப்படியே அலேக்காக நாகேஷைத் தூக்கிக்கொண்டு, தட்டாமாலை சுற்றினார். ‘’இன்னும் நிறைய பண்ணுடா’’ என்று வாழ்த்தினார்.

ஸ்ரீதர், பாலசந்தருக்கு இணையான அன்பையும் காதலையும் நாகேஷின் மீது வைத்திருப்பவர் கமல்ஹாசன். சந்தர்ப்பம் கிடைக்கும் தருணங்களிலெல்லாம் நாகேஷ் எனும் கலைஞனைப் புகழ்ந்து வியப்பார். அதனால்தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, திரையுலகில் இருந்து கொஞ்சம் விலகியிருந்த நாகேஷை, 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நடிக்கவைத்தார். அதுவும் எப்படி? வில்லனாக்கியிருந்தார்.

இயல்பாகவே நகைச்சுவை இருந்தால்தான், நகைச்சுவை நடிப்பில் தனி முத்திரை பதிக்கமுடியும். 'பஞ்சதந்திரம்' படப்பிடிப்பு. இடைவேளையின் போது, உணவருந்திக் கொண்டிருந்தார்கள். தட்டில் உள்ள சிக்கனை, ’போல்க்’ எனப்படும் குச்சியைக் கொண்டு குத்திக் குத்திச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கமல். நாகேஷ் சாப்பிட்டே முடித்துவிட்டார். கையலம்பிவிட்டு கமலிடம் வந்த நாகேஷ்... '’என்ன இவ்ளோ குத்தியும் கோழி சாகலையா இன்னும்’' என்று சொல்ல, மொத்த யூனிட்டும் வெடித்துச் சிரித்தது.

கமலுடன் ‘நம்மவர்’ படத்தில் அந்த புரபஸர் கதாபாத்திரத்தை நாகேஷைத் தவிர வேறு யார் பண்ணிவிடமுடியும்? மகள் இறந்ததிலிருந்து வருகிற பத்து நிமிடக் காட்சியை, அப்படியே நாகேஷுக்கு வழங்கிவிட்டு, சக நடிகனாக, சாதாரணமாக இருப்பார் கமல். எத்தனை முறை அந்தக் காட்சியைப் பார்த்தாலும் நம்மைக் கலங்கடித்துவிடுவார் நகைச்சுவைத் திலகம் நாகேஷ்.

நாகேஷை தன் குருவாகச் சொல்லி நெகிழும் கமல், வரிசையாக தன் படங்களில் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே வந்தார். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு அவதாரமெடுத்து நம்மையெல்லாம் சிரிப்பில் ஆழ்த்திய நாகேஷ், ‘மகளிர் மட்டும்’ படத்தில் பிணமாக நடித்தே நம்மைச் சிரிக்கவைத்தார். ‘தசாவதாரம்’ படத்தில் கே.ஆர்.விஜயாவின் கணவராக, நெடுநெடு கமலின் அப்பாவாக நடித்து அசத்தினார். தன் சிஷ்யன் கமலுடன் நடித்த அந்தப் படமே அவரின் கடைசிப்படமாகவும் ஆனது!

1933-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பிறந்த ’நகைச்சுவை சர்வர்’ நாகேஷ், 2009-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மறைந்தார். நகைச்சுவை மருத்துவர் நாகேஷ் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் நமக்கு வழங்கிய நகைச்சுவை மருந்துகள், காலம் கடந்தும் நமக்கு சுகமளித்துக்கொண்டே இருக்கும். மனக்காயங்களுக்கு மருந்துபோட்டுக்கொண்டே இருக்கும்!

x