பிரியதர்ஷன் : நான்கு மொழிகளிலும் பிரியம் சம்பாதித்த ‘இளமை இயக்குநர்!’


பிரியதர்ஷன்

திரையில் தோன்றும் ஒரு நடிகரின் பெயர் சொல்லி, ‘இந்த நடிகரின் படம்’ என்று பெயர்வாங்குவது மிகப்பெரிய விஷயமில்லை. ஆனால், திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் இயக்குநரின் பெயரைச் சொல்லி, ‘இது இந்த இயக்குநரின் படம்’ என்று சொல்லி பெயர் வாங்குவது என்பது மிகப்பெரிய விஷயம்.

ஒரு கதையை உருவாக்கி, அந்தக் கதைக்குத் தேவையான நடிகர்களைத் தேர்வு செய்து, கதைக்குத் தேவையான லொகேஷனைக் கண்டறிந்து, அந்த லொகேஷனை அழகுறக் காட்டுவதற்கு ஒளிப்பதிவாளரை கூட்டாகச் சேர்த்துக் கொண்டு, படத்தின் ஜீவனை இசை வழியே சொல்லுவதற்கான இசையமைப்பாளருடன் கைகோத்து என படத்தின் மொத்த வெற்றிக்கான கடும் உழைப்பையும் ஆத்மார்த்தமான லயிப்பையும் கொடுக்கிற இயக்குநர்கள், எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அதிலும் இந்த மாநிலம்தான் என்றில்லாமல், எல்லா மாநிலங்களிலும் படமெடுத்து, அந்தந்த மொழி ரசிகர்களைக் கட்டிப்போடுவதற்கு மிகப்பெரிய ஆளுமை இருக்கவேண்டும். அப்படியொரு ஆளுமைமிக்க இயக்குநர்களில் பிரியதர்ஷனும் மிக மிக முக்கியமானவர்!

கேரள சினிமாவில் இருந்து புறப்பட்டு வந்தவர் பிரியதர்ஷன். சினிமா என்பது ‘விஷூவல்’ என்பதை உள்ளார்ந்து அனுபவித்து, அதை தன் ஒவ்வொரு படத்திலும் வண்ணங்கள் குழைத்து, சப்தங்களுக்கு சரியான விகிதங்கள் கொடுத்து, புதுமை இயக்குநராகவே கண்டறியப்பட்டார் பிரியதர்ஷன்.

எண்பதுகளின் முற்பகுதியில், மலையாளச் சினிமாவுக்குள் தன் தடம் பதிக்கத் தொடங்கினார். அடுத்து வந்த 18 வருடங்களுக்கு, மிகத்தீவிரமாகச் செயலாற்றினார். கேரளத்தில் இவர் எடுத்த படங்களெல்லாம் அங்கே கொண்டாடப்பட்டன.

தமிழில் மு.க.தமிழரசு தயாரிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘கோபுர வாசலிலே’ படமும் பாடல்களும் இன்றைக்கும் நம்மால் மறக்கமுடியாத காவியமாக பதிந்திருக்கிறது. கார்த்திக், பானுப்ரியா, நாசர், ஜனகராஜ், ஜூனியர் பாலையா, சார்லி என கலக்கியெடுத்தார்கள். கேரளத்தின் இயக்குநர்களுக்குப் பிடித்த வி.கே.ராமசாமியும் சுகுமாரியும் மனம் கவர்ந்திருப்பார்கள்.

’மழை பெய்யுன்னு மத்தளம் கொட்டுன்னு’ என்கிற படத்தைப் பார்த்துவிட்டு, ஒரு தலைமுறையே பிரியதர்ஷனுக்கு ரசிகர்களாக மாறியது. ‘சித்ரம்’ இளைஞர்களை ஈர்த்தது. ‘கிலுக்கம்’ படமும் ‘அபிமன்யு’ படமும் வித்தியாசமான பிரியதர்ஷனை நமக்கு உணர்த்தியது. ’தேன்மாவின் கொம்பத்’ மலையாளத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தமிழில் கவிதாலயா தயாரிக்க, கே.எஸ்.ரவிகுமார் இயக்க, ரஜினி நடிக்க ‘முத்து’வாக வந்து ஜொலித்தது.

கலைப்புலி தாணுவின் பிரம்மாண்டத் தயாரிப்பில், இவர் எடுத்த ‘காலாபாணி’ தமிழில் ’சிறைச்சாலை’யாக வந்து நம்மைக் கதறடித்தது. பிரபுவின் நடிப்பும் மோகன்லாலின் நடிப்பும் அந்த சிறைச்சாலைக் கொடுமைகளும் சுதந்திர இந்தியாவுக்கு முந்தைய காலகட்டங்களும் அத்தனை பிரமிப்புமாக, ரத்தமும் சதையுமாக நமக்குத் தந்து உறையச் செய்திருந்தார் பிரியதர்ஷன்.

மலையாளப் படங்களையும் இந்தியில் ரீமேக் செய்தார் பிரியதர்ஷன். நேரடிப் படங்களையும் இந்தியில் எடுத்தார். இந்தி திரையுலகில், மணி ரத்னத்துக்கு எப்படி தனி மார்க்கெட்டும் ரசிகர் கூட்டமும் உருவானதோ அதேபோல், பிரியதர்ஷனுக்கும் அங்கே வேல்யூ கூடியது. ’ஹீரா பெரி’, ’ஹங்காமா’ முதலான படங்கள், அந்த மொழிக்காரர்களின் ரசனைக்குத் தக்கபடி இயக்கினார். சில படங்களை, தன் ரசனைக்குத் தக்கபடி அந்த ரசிகர்களையும் மாற்றினார்.

’பூச்சக்கொரு மூக்குத்தி’, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய நகைச்சுவைப் படமாகவும் அமோக வசூலைக் குவித்த படமாகவும் மலையாளத்தில் கொண்டாடப்பட்டது. சொல்லப்போனால், இவரின் படங்களில் வருகிற நகைச்சுவை, தனித்துவமானதாக இருக்கும். ‘இது பிரியதர்ஷன் ஸ்டைல்’ என்றே அதற்குப் பெயர் வைத்து ரசித்துச் சிரித்தார்கள் மக்கள்.

’அயல்வாசி ஒரு தரித்திரவாசி’, ’தீம் தரிகிட தோம்’ ஆகிய படங்கள் இயக்குநர் பிரியதர்ஷனின் தனித்துவத்தை அடையாளப்படுத்தும் படங்களாக அமைந்தன. இயக்குநர் ஃபாசில் போல், பாலுமகேந்திரா போல், இளையராஜா தன் படங்களுக்கு ரொம்பவெ ஸ்பெஷல் என்பதில் உறுதியாக இருந்தார் பிரியதர்ஷன்.

காதலின் உணர்வுகளைச் சொல்லும் படமும் எடுப்பார். சமூகப் பிரச்சினைகளை சாடுகிற படமும் எடுப்பார். சுதந்திரத்துக்கு முந்தைய நம் தேசத்தின் நிலையைப் பதிவு செய்வார். பிரகாஷ்ராஜைக் கொண்டு, ‘காஞ்சிவரம்’ என்று நெசவின் நொய்மை நிலையையும் உணர்த்திப் படமெடுப்பார். ‘லேசா லேசா’ மாதிரியும் படமெடுப்பார். தன்னை எப்போதுமே சுருக்கிக்கொள்ளாத விசாலமான இயக்குநர் பிரியதர்ஷன் என்று பாலிவுட் உலகமே கொண்டாடுகிறது.

தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்து ஹாட்ரிக் சாதனைகளைப் படைத்தார். திடீரென ஜோதிகா, தபு முதலானோரைக் கொண்டு ‘சிநேகிதியே’ மாதிரி பெண்களை மையமாகக் கொண்டு, த்ரில்லர் சஸ்பென்ஸ் ஸ்டோரி கொடுத்து பிரமிக்கவும் வைத்தார்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளிலும் படங்களை நேரடியாக இயக்கினார் என்பதே சாதனையென்றால், நான்கு மொழிகளிலும் படங்களை எடுத்து வெகுவான ரசிகர்களைக் கவர்ந்து ஜெயித்தது மற்றுமொரு சரித்திரம்! தமிழில் பரதன் இயக்கி, கமல் தயாரித்து நடித்த ‘தேவர் மகன்’ படத்தை ‘விராஷத்’ என்ற பெயரில் இந்தியில் எடுத்தார். அதுவரை பிரியதர்ஷன் அடைந்த வெற்றியை விட, இது மும்மடங்கு வெற்றியையும் புகழையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

’’என்னுடைய படங்களில் அது எப்பேர்ப்பட்ட கதைக்களமாக இருந்தாலும், அதில் ஒரு கவிதைக்கான அழகு இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பேன். அதேபோல, இளையராஜா மாதிரி ஒருவர் இசைக்குக் கிடைத்துவிட்டால், வசனங்களை இன்னும் குறைத்து, இசை வழியே கதையைச் சொல்ல ஆசைப்படுவேன். என் படங்கள் வெளியாகி இத்தனை வருடங்களாகிவிட்டன, இவ்வளவு காலங்களைத் தாண்டிவிட்டன என்றெல்லாம் நீங்கள் சொல்லலாம். ஆனால், நான் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறேன். என் நினைவுகள், இன்னும் வாலிபமாகத்தான் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகின்றன. என் வயதுக்கும் என் படங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. சொல்லப்போனால், என் அனுபவங்களுக்கும் என் படங்களுக்கும் கூட தொடர்பு இல்லை. ஒவ்வொரு படத்தையும் புதிய படம் போல, முதல் படம் போல இயக்கிக் கொண்டிருக்கிறேன்’’ என்று மலர்ந்த முகத்துடன் சொல்லிச் சிரிக்கிற பிரியதர்ஷன், 1957-ம் ஆண்டு, ஜனவரி 30-ம் தேதி பிறந்தார்.

66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ‘என்றும் 16’ பிரியதர்ஷனுக்கு வாலிப வாழ்த்துகளைச் சொல்லுவோம்.

x