‘நாட்டாமை’ போல ஒரு படம் - ஆசையை வெளிப்படுத்திய அருண் விஜய்!


வேளாங்கண்ணி: ‘ரெட்ட தல' திரைப்படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. ஜனரஞ்சகமான திரைப்படங்களை மக்கள் விரும்புவதால் ஆக்ஷன் படத்தில் விரும்பி நடிக்கிறேன் என நடிகர் அருண் விஜய் பேட்டி கொடுத்துள்ளார்.

'ரெட்ட தல' திரைப்படத்தை இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, கதாநாயகிகளாக தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர்.

'ரெட்ட தல' திரைப்படத்தின் இறுதிக்கட்ட சண்டை காட்சிகள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள வெள்ளைற்று அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே படப்பிடிப்பு ஓய்வின்போது வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்த நடிகர் அருண் விஜய், அங்கு ஆரோக்கிய மாதா பேராலயத்தில் அன்னையிடம் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார்.

அப்போது அவருக்கு பேராலய பங்குதந்தை அற்புதராஜ் ஆசி வழங்கினார். அதன் பின்னர் வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து நடிகர் அருண் விஜய் பிராத்தனை செய்தார். பின்னர் 'ரெட்ட தல' திரைப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அருண் விஜய், “ஜனரஞ்சகமான திரைப்படங்களை ரசிகர்கள் விரும்புவதால், அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஆக்சன் படத்தில் விரும்பி நடிக்கிறேன். ‘ரெட்டை தல’ திரைப்படம் இதுவரை நான் ஏற்று நடித்திராத பாத்திரம் என்பதால், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளேன்.

காலம் வரும்போது அப்பா முத்திரை பதித்த ’நாட்டாமை’ திரைப்படம் போல், நானும் நிச்சயம் அதற்கான படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பேன். ‘வணங்கான்’ திரைப்படப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளது. அப்படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்தை காதலித்து நடித்தேன். டைரக்டர் பாலா அப்படத்திற்காக கூடுதலாக உழைத்தார். அவரது இயக்கத்தில் நடித்தது சுகமான மற்றும் பிரமாதமான அனுபவம்” என்றார்.

x