நண்பர் பாலு மகேந்திராவுக்கு உதவிட கமல் தயாரித்த படம்!


நட்புக்கு எல்லையுமில்லை வயதுமில்லை. நட்பு என்பதில் அன்பையும் பொருத்திக் கொள்ளலாம். பேதமில்லாத நட்பும் அன்பும் காலங்கள் கடந்தும் வாழ்ந்துகொண்டே இருக்கும். அப்படியான நட்பும் அன்பும் கமல்ஹாசனுக்கும் பாலுமகேந்திராவுக்கும் உண்டு.

வாலிபப் பருவத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’ தொடங்கி வரிசையாகப் படங்கள் பண்ணிக்கொண்டிருக்கும் போதே, மலையாளத்திலும் கமலுக்கு படங்கள் குவியத் தொடங்கின. இன்றைக்கு உலகநாயகன் என்று போற்றப்படுகிற கமல்ஹாசன், கதாநாயகனாக முதன்முதலில் நடித்ததும் மலையாளத்தில்தான்!

ஆக, அந்தக் காலகட்டத்தில் இருந்தே ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திரா அறிமுகம் கிடைக்க, இருவரும் மனம் விட்டுப்பேசினார்கள். கமலின் சினிமா குறித்த சிந்தனைகளும் பாலுமகேந்திராவின் சினிமா மீதான தேடலும் ஒருபுள்ளியில் வந்து இணைந்தன. இன்னும் நட்பு பலப்பட்டது.

அப்போது ஒளிப்பதிவாளராக மட்டுமே இருந்த பாலுமகேந்திரா, கன்னடத்தில் படம் ஒன்றை இயக்கவும் முடிவு செய்தார். கதையைத் தயாரித்துக் கொண்டு, நண்பர் கமலைச் சந்தித்துச் சொன்னார். ‘’நடிச்சிட்டாப் போச்சு. ஆரம்பிங்க. டைரக்‌ஷன் பண்றதுக்கு இவ்ளோ காலம் எடுத்ததே தப்பு’’ என்று கமல் சொல்லி உற்சாகப்படுத்த, ‘கோகிலா’ என்கிற கன்னடப்படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எண்பதுகளில் நம் இதயம் தொட்ட நடிகர்களில் ஒருவரான நடிகர் மோகனின் முதல் படமும் இதுதான்!

இதன் பின்னர், தமிழில் ‘அழியாத கோலங்கள்’ படத்தை இயக்கினார் பாலுமகேந்திரா. இந்தப் படத்தில் நட்புக்காக, கெளரவத் தோற்றத்தில் நடித்திருப்பார் கமல். இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள். நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொள்வார்கள். அவரிடம் இருந்து இவரோ, இவரிடம் இருந்து அவரோ... வேறு எதையும் எதிர்பார்க்காமல் பழகினார்கள். அப்படியொரு ஆத்ம நட்பு அவர்களுக்குள்!

‘மூன்றாம் பிறை’யில் இணைந்தார்கள். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது படம். கமலுக்கு தேசிய விருது கிடைத்தது. இன்னும் பல விருதுகள், கமலுக்கும் பாலுமகேந்திராவுக்கும் படத்துக்கும் கிடைத்தன.

இதனிடையே, இயக்குநர் மகேந்திரனும் கமலுக்கும் கமல் குடும்பத்துக்கும் நல்ல நெருக்கமும் பழக்கமும் கொண்டிருந்தார். அவர் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு நல்ல ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தார் மகேந்திரன். உடனே கமல், பாலுமகேந்திராவை அழைத்தார். இருவரும் அறிமுகமாகிக் கொண்டார்கள். ‘’இவர், நீங்க நினைச்ச மாதிரி படம் எடுக்கறதுக்கு சரியான ஆள்’’ என்று சொல்ல, ‘முள்ளும் மலரும்’ படத்துக்கு பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்தார்.

‘மூன்றாம் பிறை’யை இந்தியில் ‘சத்மா’ என்று எடுக்க, கமலும் நடித்துக் கொடுத்தார். பிறகு ரஜினி, மோகன், அரவிந்த்சாமி, நிழல்கள் ரவி என்றெல்லாம் வைத்து பல படங்களை இயக்கினார் பாலு மகேந்திரா. ஆனாலும் ஒருகட்டத்தில், பாலு மகேந்திராவுக்கு பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. கொஞ்சம் கடனும் இருந்தது. ‘இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர்’ என்று எல்லோரும் மரியாதையும் பெருமையுமாக பாலு மகேந்திராவைக் கொண்டாடிக்கொண்டிருக்க, பாலு மகேந்திராவுக்கு யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது என்பதெல்லாம் தெரியவில்லை. இப்படியெல்லாம் பாலு மகேந்திரா கேட்டதும் கிடையாது. கடன் சுமையால் அழுத்தத்தில் இருந்தார்.

பாலு மகேந்திராவுக்கு நெருங்கிய இன்னொரு நட்பு வட்டாரத்தில் இருந்து ஒருவர், ‘’கமல் சாருக்கும் உங்களுக்கும் தான் நல்ல புரிதல் இருக்குதே. உங்கமேல பேரன்பு வைச்சிருக்கார் கமல் சார். அதனால அவர்கிட்ட கேளுங்க. கமல் மாதிரி உங்களைப் புரிஞ்சவங்ககிட்டக் கேட்டாத்தான் உங்களுக்கு கெளரவக் குறைச்சல் இல்லாம இருக்கும்’’ என்று சொல்ல, தயக்கத்துடன் கமல் அலுவலகத்துக்குச் சென்றார் பாலு மகேந்திரா.

அவரைப் பார்த்ததும் படப்பிடிப்புக்குக் கிளம்பிக்கொண்டிருந்த கமல், வரவேற்று அமரச் சொல்லி, பேசத்தொடங்கிவிட்டார். மணிக்கணக்கில் பேசினார்கள். தமிழ், மலையாள, இந்தி சினிமாக்கள் தொடங்கி, உலக சினிமாக்கள் வரை பேச்சு பயணிக்கிறது.

‘’ஆமாம், என்ன விஷயம், திடீர்னு வந்திருக்கீங்க?’’ என்று கமலும் கேட்கவில்லை. ‘’நான் உங்ககிட்ட பண உதவி கேட்டுதான் வந்திருக்கேன்’’ என்று பாலு மகேந்திராவும் சொல்லவில்லை. என்னதான் ஆழ்ந்த நட்பும் பிரியமும் இருந்தாலும், பாலு மகேந்திராவுக்கு இது புதுசு!

ஒருகட்டத்தில், கமல் கடிகாரம் பார்த்தார். ‘’அட... இவ்ளோ நேரமாச்சே. உங்களைப் பாத்ததும் எல்லாமே மறந்துபோச்சு. ஷூட்டிங்குக்கு ரொம்ப லேட் இன்னிக்கி’’ என்று சொல்லிவிட்டு, ‘’ஒருநிமிஷம்... இதோ வரேன்’’ என்று உள்ளே சென்றார் கமல்.

கமலிடம் பண உதவி கேட்கவேண்டாம். கெளரவம், தன்மானம் தடுக்கிறது என எண்ணியபடியே, சோர்வான முகத்துடன் இருந்தார் பாலு மகேந்திரா. அப்போது படப்பிடிப்புக்கு ரெடியாகி வந்த கமல், ‘’அடிக்கடி வாங்க, பேசுவோம்’’ என்று கைகுலுக்கிவிட்டு, ‘’இந்தாங்க’’ என்று ஒரு பெரிய காக்கி கலர் கவரைக் கொடுத்தார். ‘என்ன...’ என்பது புரியாமல் கமலைப் பார்த்தார். ‘’வாங்கிக்கங்க’’ என்றார் கமல்.

கவரை வாங்கிய பாலு மகேந்திரா, பிரித்தார். உள்ளே பணம். கட்டுக்கட்டாக பணம். பாலு மகேந்திரா எவ்வளவு கேட்க நினைத்தாரோ... அதைவிட ஐந்து மடங்கு தொகை இருந்தது அதில்! நெகிழ்ந்து கண்ணீர் கசிய கமலின் கரம் பற்றிக்கொண்ட பாலு மகேந்திராவுக்கு பேச்சே வரவில்லை. ‘’கொஞ்சம் கொஞ்சமா...’’ என்று பாலு மகேந்திரா உடைந்த குரலில் சொல்ல, அவரின் கைகளை இன்னும் இறுகப் பற்றிக்கொண்டார் கமல். ‘’என்ன கொஞ்சம் கொஞ்சமா? அதெல்லாம் முடியாது. மொத்தமாத்தான் வேணும். என் பாலு (மகேந்திரா) இப்படியெல்லாம் இருக்கமாட்டாரே. இது இனாமும் இல்ல. கடனாவும் தரலை. நம்ம ராஜ்கமலுக்கு நீங்க உடனே படம் பண்றீங்க. அதுக்கு அட்வான்ஸ்தான் இது. உற்சாகமா சேர்ந்து கலக்கறோம்’’ என்று சொன்னார் கமல்.

பாலு மகேந்திராவின் முகத்தையும் தவிப்பையும் புரிந்துகொண்டு, அதேசமயத்தில் அவரின் கம்பீரத்துக்கும் கெளரவத்துக்கும் குந்தகமேதும் வந்துவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தார் கமல். இப்படியான நட்பையும் நண்பரையும் மனம் நெகிழ்ந்து மேடையில் எல்லோருக்கு முன்பாகவும் சொல்லி உருகினார் பாலு மகேந்திரா.

1995-ம் ஆண்டு, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், பொங்கல் திருநாளில் வந்து, கலகலப்புப் பொங்கல் விருந்து படைத்தார்கள் கமலும் பாலு மகேந்திராவும். மிகப்பெரிய வசூலையும் கொடுத்து சக்கைப்போடு போட்ட அந்தப் படம்... நட்புக்காக, நண்பருக்காக கமல் உருவாக்கிய அந்தப் படம்... ‘சதி லீலாவதி.’

x