சென்னை: நண்பராக விஜயகாந்தின் வெற்றிடம் எப்போதுமே என் வாழ்வில் நிரப்ப முடியாதது என நடிகர் வாகை சந்திரசேகர் கூறியிருக்கிறார்.
நடிகர், அரசியல்வாதி எனப் பன்முகம் கொண்டவர் வாகை சந்திரசேகர். இவர் தனது சினிமா மற்றும் அரசியல் பயணம் குறித்து இந்து தமிழுடனான நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். அதில் தனது நண்பர் விஜயகாந்தின் அரசியல் பயணம் பற்றி பேசினார்.
அப்போது, “நானும் விஜயகாந்தும் சினிமாவில் வந்த ஆரம்ப காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். சினிமாவில் வாய்ப்புக்காக போராடிய காலத்தில் இருந்தே பிறருக்கு உதவ வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருந்தார். பின்பு, சினிமாவில் வளர வளர பிறருக்கு உதவுவதில் அதிக அக்கறை செலுத்தினார்.
அவர் அரசியல் களத்திற்கு வந்ததை வரவேற்கிறேன். ஆனால், நான் பார்த்து வளர்ந்த கட்சியை அவர் விமர்சித்த போது என்னைப் பெற்ற தாய், தந்தையரை விமர்சித்தது போல வருத்தமாக உணர்ந்தேன். அரசியல் களத்தில் அவரை எதிர்த்து, விமர்சித்துதான் அரசியல் செய்தேன்.
அரசியலையும் நட்பையும் நான் ஒரே நேர்க்கோட்டில் வைத்து குழப்பிக் கொள்ளவில்லை. ஆனால், நண்பராக அவரது வெற்றிடம் எப்போதுமே என் வாழ்வில் நிரப்ப முடியாதது. அவரும் நானும் நண்பர்களாக வயதை மறந்து குழந்தைகளாக விளையாடுவோம்” என்றார்.