தமிழ்த் திரையுலகின் 105 ஆண்டுகால வளர்ச்சியை மதிப்பிடும்போது, அதில் உள்ளடக்கத்துக்கே முதலிடம் கொடுக்க வேண்டும். புதிய படைப்பாளிகளின் வரவால், புதுப் புதுக் கதைக் களங்கள், அறிவியல் புனைவுகள் என தனது உள்ளடக்க எல்லைகளை விரித்துச் செல்கிறது புத்தாயிரத்தின் தமிழ் சினிமா. அடுத்து, தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் எந்த அளவுக்கு எடுத்தாள்கிறோம், அதற்கேற்ப எவ்வாறு நம்மை தகவமைத்துக் கொள்கிறோம் என்பதையும் பார்க்கவேண்டும். அந்த வகையில் நவீன டிஜிட்டல் சினிமாவின் வருகைக்குப் பின்னர், ஒளிப்பதிவு, திரையிடல் ஆகிய இரண்டு முக்கிய நடைமுறைகளிலும் படச் சுருள் விடை பெற்றுக்கொண்டது மாபெரும் திருப்புமுனை. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் அசுர வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளாகத் சூப்பர் ஸ்டாராகத் தன்னைத் தக்க வைத்திருக்கும் ஒரே உச்ச நடிகர் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தைக் காண்பதற்காக அவருடைய ரசிகர்கள் இப்போதும் அதே முதல் நாள் முதல் காட்சி ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் பி.வி.ஆர். திரையரங்கக் குழுமம் ரஜினியின் 72-வது பிறந்த நாளை ஒட்டி தமிழ்நாட்டின் 4 முக்கிய நகரங்களில், அவர் நடித்த முக்கிய படங்களைத் திரையிட்டு, ரஜினிகாந்த் திரைப்பட விழா நடத்துகிறது.
இந்தத் திரைப்பட விழா ஒருபுறம் இருக்க, 20 ஆண்டுகளுக்கு முன்பு, ‘பாட்ஷா’ என்கிற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ’பாபா’ படத்தில் மீண்டும் இணைந்தார்கள் ரஜினியும் - சுரேஷ் கிருஷ்ணாவும். அந்தப் படம் அப்போது தோல்வி அடைந்தபோது, அதை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் தன்னால் நஷ்டத்தை சந்திக்கக்கூடாது என்று அவர்களைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து உரிய இழப்பைக் கொடுத்து அனுப்பினார் ரஜினி.
அந்த ‘பாபா’ படம் ஏன் தோல்வி அடைந்தது என்பதுபற்றி, சுரேஷ் கிருஷ்ணாவை நேர்காணல் எடுத்தபோது அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்: “ ‘பாட்ஷா’ படத்துக்குப் பிறகு எங்கள் கூட்டணியில் வந்ததால் மீண்டும் ஒரு ‘டான்’ கதையை எதிர்பார்த்து ரஜினியின் ரசிகர்கள் வந்தார்கள். ‘பாட்ஷா’, ‘பாபா’ என்கிற டைட்டிலும் ஒரு ஒற்றுமையுடன் இருந்ததும் அவர்களை அதேபோன்றதொரு படத்தை எதிர்பார்க்க வைத்துவிட்டது. ஆனால், அதிலும் கூட மிகக்பெரிய ஹீரோயிசம். அவரை கடவுள் அளவுக்கு கொண்டுபோய் ஹீரோயிசம் செய்திருந்தேன். ரஜினி சாரின் சொந்தக் கதை, அவரே திரைக்கதையும் எழுதியிருந்தார். அவரே தயாரிப்பாளர். முழு சுதந்திரத்துடன் தான் ‘பாபா’வை உருவாக்கினோம். ஆனால், ரசிகர்கள் இன்னொரு ‘பாட்ஷா’வை எதிர்பார்த்து வந்ததுதான் தவறாகப் போய்விட்டது.
ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு ரசிகர்கள் ’பாபா’வை இப்போது பார்த்தால் அது அவர்களுக்குப் பிடித்துவிடும்.” என்றார். அது உண்மைதான்! டிஜிட்டல் முறையில் மீள் பதிப்பு செய்யப்பட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் சில காட்சிகளுக்கு புதிய இசை வழங்கி, சில காட்சிகளுக்கு ரஜினி மீண்டும் டப்பிங் பேசி, கிளைமாக்ஸ் மாற்றப்பட்ட ‘பாபா’ படம், ரஜினி ரசிகர்களுக்காக மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த டிஜிட்டல் மீள் பதிப்பை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் முதல் நாள் வசூலாக 80 லட்சம் வசூலித்துக் கொடுத்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறது டிஜிட்டல் ‘பாபா’.
தோல்வியைத் துடைத்த ‘சந்திரமுகி’
அப்போது ‘பாபா’ தோல்வியிலிருந்து மீட்டெடுத்த படம் ‘சந்திரமுகி’. வாசுவும் ரஜினியும் மீண்டும் கைகோத்த படம். ‘உழைப்பாளி’க்குப் பிறகு விஷ்ணுவர்த்தனை வைத்து கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருந்தார் பி.வாசு. அந்த வெற்றிக்கு நன்றி செலுத்துவதற்காக கேரளத்தில் உள்ள தனது குலதெய்வக் கோயிலுக்குச் சென்றிந்தார் வாசு. அப்போது சென்னையிலிருந்து அவருக்கு போன். பேசியவர் இளைய திலகம் பிரபு. “ரஜினி அண்ணா... நம்ம சிவாஜி புரோடெக்ஷன்ல படம் பண்றார். நீதான் டைரக்டர்ன்னு சொல்லிட்டார்... நீ கேரளாலேர்ந்து வந்ததும் மத்ததைப் பேசிக்கலாம்” என்றார்.
பிரபுவும் ரஜினி சாரும் சொன்னபிறகு மறுபேச்சு ஏது? சுவாமி தரிசனம் முடித்து அறைக்கு வந்ததும் இரவெல்லாம் யோசனை செய்து ரஜினிக்காக ஒரு கதையை ரெடி செய்தார் வாசு. வலது கை இல்லாதா கதாநாயகன். ஆனால், அதை ஒரு குறையாக எடுத்துகொள்ளாமல் அவன் செய்யும் சாகசங்களும் சாதனைகளும் என்ன என்பதுதான் கதை. வலது கை இல்லாத ரஜினிக்கு துணையாக இன்னொரு ரஜினி இரண்டாம் பாதில் கதையில் வருவார். ‘வலது கை’ என்று தலைப்பும் வைத்துவிட்டார் வாசு.
சென்னை திரும்பியதும் ரஜினியைப் பார்த்து கதை சொல்ல வேண்டியது மட்டும்தான் பாக்கி. அடுத்தநாள் சென்னை வந்ததும் நேராக சிவாஜி புரோடெக்ஷன் அலுவலகத்துக்குப் போனார் வாசு. நடிகர் திலகத்தின் மூத்த வாரிசு ராம்குமார் வாசுக்காகக் காத்துகொண்டிருந்தார். ராம்குமார் அறைக்குள் நுழைந்ததுமே, “வாசு... ரஜினி சார் ‘ஆப்தமித்ரா’ படத்தை தமிழ்ல பண்ணணும்கிறார்” என்றார்.
வாசுவுக்கோ அதிர்ச்சி. மலையாளப் படமான ‘மணிச்சித்திரத்தாள்’ படத்தின் உரிமையை வாங்கிய வாசு, அதன் மைய இழையை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழுக்கு ஏற்ப, பிரபு நாயகனாக நடிக்கும் விதமாக முற்றிலும் கதாபாத்திரங்களை மாற்றி எழுதி பிரபுவிடமும் சிவாஜி பிலிம்ஸில் ஸ்கிரிப்ட் டீமில் உள்ள எல்லோருடமும் கதையைச் சொல்லியிருந்தார். ஆனால், பிரபு பயந்தார். “படம் ரொம்ப கிளாசிக்கா இருக்குப்பா. இந்த சமயத்துல எதுக்கு ரீமேக். நான் ரிஸ்க் எடுக்க விரும்பல வாசு... தமிழ்ல இந்தக் கதை ஓடும்ங்கிற நம்பிக்கை இல்லை” என்று மறுத்துவிட்டார்.
ஆனால், ராம்குமாருக்கு நம்பிக்கை இருந்தது. வாசு மனம் தளராமல் இதே கதையை விஷ்ணு வர்த்தனையும் மறைந்த சௌந்தர்யாவையும் வைத்து ‘ஆப்தமித்ரா’ என்கிற கன்னடப் படமாக எடுக்க, அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.
மாறு வேடத்தில் ரயிலில் பயணம்
இந்தப் படம் கன்னடத்தில் பிய்த்துக்கொண்டு ஓடுவதைப் பற்றிக் கேள்விப்பட்ட ரஜினி, பி.வாசுவின் உதவி இயக்குநர் ஒருவரைத் துணைக்கு அழைத்துகொண்டு ரயிலில் மாறு வேடத்தில் பயணித்து பெங்களூரு போனார். அங்கே உள்ள தனது அபார்ட்மென்ட்டில் தங்கிக்கொண்டு, மாலைக் காட்சிக்கு மீண்டும் மாறுவேடத்தில் போய் ரசிகர்களோடு ரசிகனாக அமர்ந்து ‘ஆப்தமித்ரா’ படத்தைப் பார்த்தார். ரசிகர்களின் ஆராவாரத்தைப் பார்த்து அசந்துபோன ரஜினி, ஒரு எளிய ரசிகனாக மாறி மீண்டும் அடுத்த காட்சியிலும் அதே படத்தைப் பார்த்ததுதான் ஆச்சரியம்!
இதுதான் நாம் அடுத்து செய்ய வேண்டிய படம் என்று முடிவெடுத்து பெங்களூருவிலிருந்தே பிரபுவுக்கும் ராம்குமாருக்கும் போன் செய்து விஷயத்தைச் சொல்லிவிட்டு சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய ரஜினி, வாசுவின் வருகைக்காக காத்திருந்தார்.
வாசுவும் சிவாஜி புரோடெக்ஷன் அலுவலகத்திலிருந்து நேரே போயஸ் கார்டன் போனார். அவரை வரவேற்ற ரஜினி, “வாங்க... வாசு சார்... ‘ஆப்தமித்ரா’ பின்னியிருக்கீங்க… இப்படியொரு ஹீரோயின் சப்ஜெக்ட் படத்தை நான் பார்த்ததில்ல. விஷ்ணுவர்த்தன் சாரோட சாஃப்ட்னெஸுக்கு அவ்வளவு அருமையா கேரக்டர் பொருந்தியிருக்கு.” என்றார்.
வாசு வியந்தேதான் போனார்! ரஜினி எவ்வளவு திறமையான திரைக்கதை ஆசிரியர். ஹீரோயின் சப்ஜெக்ட் எப்படி தனக்கு சரியாக வரும் என்று நினைக்கிறார் என்பது புரியாமல் வாசு அதைப் பேச வாயெடுத்தபோது, “அதுல வர்ற ராஜா கேரக்டரை பெரிசா ஆக்கிட்டா வேலை முடிஞ்சது. மணிச் சித்திரத்தாள் கதையை நீங்கள் ஆப்தமித்ராவா மாத்தியிருக்கும்போது ராஜா கேரக்டரை பெரிசா ஆக்க மாட்டீங்களா... என்ன? அதே மாதிரி வடிவேலு கால்ஷீட்டையும் வாங்கிடுங்க. வடிவேலுக்கு முதல் பாதியில நல்ல பார்டிசிபேஷன் கொடுங்க. நீங்க எப்பன்னு சொன்னீங்கன்னா. டிஸ்கஷன்ல நானும் உட்கார விரும்புறேன்” என்றார் ரஜினி. வாசு விக்கித்துத்தான் போனார்! ரஜினிக்காக வில்லத்தனமான வேட்டையன் கதாபாத்திரம் எப்படி உருவானது. வாசுவின் நினைவுகள் அடுத்த அத்தியாயத்தில்...
(சரிதம் பேசும்)