லாலு பிரசாத் யாதவிற்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய இளையமகள்: சிங்கப்பூரில் இன்று அறுவை சிகிச்சை


பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு சிங்கப்பூரில் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இதற்காக அவரது இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கியுள்ளார்.

பிஹார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவிற்கு கால்நடை தீவன ஊழல் வழக்குகளில் சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனைக்காலம் பாதி நிறைவடைந்த நிலையில், உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த வழக்குகள் அனைத்திலும் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதன் காரணமாக லாலு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். லாலு பிரசாத்தின் இரண்டாவது மகள் ரோகினி ஆச்சார்யா தனது கணவர், குழந்தைகளுடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மோடி தலைமையிலான மோடி அரசை கடுமையாக இவர் விமர்சித்து வருகிறார்.

சிங்கப்பூருக்கு சமீபத்தில், லாலு பிரசாத் சென்றிருந்தார், அங்கு அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது லாலுவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தனது சிறுநீரகத்தை தானமாக வழங்க அவரது மகள் ரோகினி முடிவு செய்தார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்து பின் ஒப்புதல் அளித்தனர். லாலுவிற்கு சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் இன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.

இதற்கு முன் ரோகினி தனது தந்தை லாலு பிரசாத் யாதவுக்காக பிரார்த்தனை செய்யுமாறு மக்களுக்கு ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு முன்னதாக பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி, எம்.பி மிசா பார்தி ஆகியோர் சிங்கப்பூர் சென்றடைந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

லாலு பிரசாத்திற்கு நடைபெறும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை சிறந்த முறையில் நடைபெற தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில், சமூக நீதி காவலரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ்விற்கு இன்று நடைபெறும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமான முறையில் நடைபெறவும், அவர் விரைந்து குணம் பெறவும் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

x