சிலருடைய பெயருக்கும் அவர்களுக்கும் அப்படியொரு பொருத்தம் வெகு அழகாக அமைந்துவிடும். ‘சரியாத்தாம்பா பேர் வைச்சிருக்காங்க’ என்று நாமே கூட பலரின் பெயரையும் அவரின் செயல்களையும் பார்த்துவிட்டுச் சொல்வோம். ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தில் எம்ஜிஆரின் பெயர் ஆனந்தன். அவரிடம் ஒருவர், ‘’உன் பேரென்னப்பா?’’ என்று கேட்பார். ‘’எந்தப் புண்ணியவான் ஆனந்தன்னு பேர் வைச்சானோ தெரியல... ஆனந்தமா இருக்கேன்’’ என்பார். எம்ஜிஆரின் நிஜவாழ்வை ஒப்பிட்டு, ரசிகர்கள் கரவொலி எழுப்பிக் கொண்டாடினார்கள். சீதாதேவிக்கு ஜானகி என்றொரு பெயர் உண்டு. அதேபோல, எம்ஜி.ராமச்சந்திரனுக்கு ஜானகியே மனைவியானதும் எப்படியொரு பொருத்தம் பாருங்கள். அப்படித்தான் நம் வாழ்வில் தன் குரலால் இரண்டறக் கலந்திருக்கும் வாணி ஜெயராமையும் குறிப்பிடத் தோன்றுகிறது.
'’பொதுவாவே, என் பெயர்க்காரணத்தை யார்கிட்டயும் சொல்றதில்லை. ஏதோ... விளம்பரத்துக்காக இல்லாததையும் பொல்லாததையும் சொல்ற மாதிரி சிலருக்குத் தோணலாம். ஆனா நான் சொல்லப் போறது சத்தியம். நான் எங்க வீட்ல எட்டாவது பெண்ணாப் பிறந்தேன். அதுல அவங்களுக்குக் கொஞ்சம் வருத்தம்.
இதனால, பதினைஞ்சு நாள் வரைக்கும் எனக்கு பேர் வைக்காமத்தான் இருந்தாங்க. அப்போ வீட்டுக்கு வந்த ஜோஸியர் ஒருத்தர், என் பிறந்த நேரத்தையும் தேதியையும் வைச்சு ஜாதகம் கணிச்சுட்டு ’பூர்வ ஜென்மத்திலே தேனும் பாலுமா பகவானுக்கு அபிஷேகம் பண்ணின பலனோட உங்க பெண் பிறந்திருக்கா, இவ சரஸ்வதி அம்சம். இவளோட பெருமையைப் பிற்காலத்துல நீங்க புரிஞ்சுக்குவீங்க’ன்னு சொன்னாராம். அதுக்கப்புறம் தான் அம்மா எனக்கு ’கலைவாணி'னு பேர் வைச்சாங்க...’’ என்று வாணி ஜெயராம் தன்னடக்கத்துடன் சொல்லியிருக்கிறார். எவ்வளவு அழகான பெயர்ப் பொருத்தம்!
தெலுங்கில் இருந்து இங்கு வந்து பி.சுசீலாம்மா நம் மனங்களை தன் குரலால் வசீகரித்துக் கொண்டிருந்தார். அதையடுத்து ஆந்திரத்தில் இருந்து வந்த எஸ்.ஜானகி மட்டும் என்ன... அவரும் விதம்விதமாகப் பாடி, தினுசு தினுசாகப் பாடி நமக்குள் இரண்டறக் கலந்தார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த வாணி ஜெயராம், இசைத்துறையில் பல்துறை வித்தகர் என்றுதான் சொல்ல வேண்டும். முறையான பயிற்சியும் முயற்சியும் மேற்கொண்டு, சங்கீதத்தின் நுட்பங்கள் முழுவதையும் அறிந்து வைத்திருந்தார். குறிப்பாக, வடக்கத்திய இசையும் பாடல்களும் இவருக்கு குரல்வந்த களையாக இருந்தன.
தமிழில் இருந்து இந்திக்குப் போவார்கள். ஆனால் தமிழகத்தில் வேலூரில் பிறந்த வாணி ஜெயராம், இந்தித் திரையுலகில், ‘குட்டி’ எனும் திரைப்படத்தில், பாடகியாக அறிமுகமானார். வடக்கே உள்ள கஸல் பாடலை நம் தமிழகத்தில் அச்சு அசலாகப் பாடி, அந்த மெல்லியத் தென்றலுக்குள் நம்மை அப்படியே கைப்பிடித்து அழைத்துச் செல்லும் குரல், வாணி ஜெயராமுக்கு!
வாணி ஜெயராமின் இசைப்பயணம், எழுபதுகளில் இருந்து தொடங்கியது. அதாவது முன்னதாகவே, மெல்லிசை மன்னர்கள் பிரிந்து, மெல்லிசை மன்னராக எம்.எஸ்.வி வலம் வந்து கொண்டிருந்த காலம். இளையராஜாவுக்கு ‘அன்னக்கிளி’ வராத காலம். அப்போது இவரின் இந்திப் பாடல்களைக் கேட்ட எம்.எஸ்.வி., ‘தீர்க்கசுமங்கலி’ எனும் படத்துக்கு கவிஞர் வாலியிடம் பாடலைக் கேட்டு வாங்கினார். இந்தப் பாடல், மிகக் கடினமான பாடல். புதிய குரல் தமிழகத்துக்கு வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தவர், வாணி ஜெயராமை அழைத்தார். பாடவைத்தார்.
'வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்/ வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்/ திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது/ குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி/ கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது/ என் கண்ணன் துஞ்சத்தான்/ என் நெஞ்சம் மஞ்சம்தான்/ கையோடு நானல்லவோ/ என் தேவனே உன் தேவி நான்/ இவ்வேளையில் உன் தேவை என்னவோ/ மல்லிகை என் மன்னன் மயங்கும்/ பொன்னான மலரல்லவோ’ என்ற பாடல் வெளியானதும், தமிழகத்தின் திக்குதிசைகளெல்லாம் இந்தப் பாடல்தான் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இலங்கை வானொலி 'மல்லிகைப்பூ என் மன்னன் மயங்கும்' பாடலை குத்தகைக்கு எடுத்துக்கொண்டது என்றுதான் சொல்லவேண்டும். ஒருநாளைக்கு, பத்துப்பனிரெண்டு தடவையாவது ஒலிபரப்பிவிடுவார்கள். ரேடியோவே கதியென்று கிடந்த ரசிகர்களும் ரசிகைகளும் இன்றைக்கும் தங்கள் மலரும் நினைவுகளை மணக்க மணக்கச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
1971-ம் ஆண்டு, வெளியானது ‘தீர்க்க சுமங்கலி’ திரைப்படம். முத்துராமனும் கே.ஆர்.விஜயாவும் நடித்தார்கள். ‘பொன் மாங்கல்யம் வண்ண பூச்சரம்/ பொன் மாங்கல்யம் வண்ண பூச்சரம்/ மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது/ ஓராயிரம் இன்ப காவியம்/ உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது/ நம் இல்லம் சொர்க்கம்தான்/ நம் உள்ளம் வெல்லம்தான்/ ஒன்றோடு ஒன்றானது/ என் சொந்தமும் இந்த பந்தமும்/ உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது’ என்று ஒவ்வொரு பெண்ணும் தங்களின் கணவன்மார்களை நினைத்து, பாட்டுபுத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு பாடினார்கள். இளம்பெண்கள், தங்கள் எதிர்காலக் கணவனின் முகம் அறியாத நிலையிலும் சொல்லிலும் சொற்களைச் சொன்ன விதத்திலும் சொக்கித்தான் போனார்கள்.
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம். ரஜினி அறிமுகமான படம். கமலின் மிகச்சிறந்த நடிப்பில், ஸ்ரீவித்யாவின் பிரமாதமான நடிப்பில் வெளியான படம். ‘சிந்து பைரவி’ ஜே.கே.பி போல, ‘அபூர்வ ராகங்கள்’ பைரவியும் பேசப்பட்டாள். இங்கே... ஜேசுதாஸ். அங்கே... வாணி ஜெயராம். இங்கே... இளையராஜா. ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் மெல்லிசை மன்னர்.
’ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்/ ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்/ இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி/ காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்/ வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்’ என்று சொல்லிவிட்டு அந்த ‘ம்’ சொல்லும் போது ஆறேழு ‘ம்ம்ம்ம்ம்ம்ம்’ சேர்த்துக் குழைத்திருப்பார் வாணி ஜெயராம்.
’காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி/ ஏன் என்ற கேள்வி ஒன்று/ என்றைக்கும் தங்கும்
ஏன் என்ற கேள்வி ஒன்று/ என்றைக்கும் தங்கும் மனிதன்/ இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்/ இன்பம் துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்/ ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ என்று சொல்லும் போது இந்த முறை ‘ல்’ பாடிவிட்டு ஆறேழு ‘ல்ல்ல்ல்ல்ல்ல்’ என்று சொல்லும் அழகில், எட்டாவது ஸ்வரமாக ஜ்வலித்துக் கலக்கினார் வாணி ஜெயராம்.
இந்தியில் பாடினார். கன்னடத்தில் பாடினார். தெலுங்கில் பாடினார். மலையாளத்திலும் மராட்டியிலும் கூட பாடினார். ஒடியா, குஜராத்தி என பாடாத மொழிகளில்லை. எல்லா மொழிகளிலும் அட்சரம் பிசகாமல் பாடினார். வார்த்தைகளுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பாடினார். அதுதான் வாணி ஜெயராமின் தனித்துவமான ஸ்டைல்!
'பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும்/ கன்று பால் அருந்தும் போதா காளை வரும்/ சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்/ சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம்/ கொஞ்சம் சிந்தை செய்தால்
உனக்கு பிறக்கும் வெட்கம்/ தாலிக்கு மேலும் ஒரு தாலி உண்டா/ வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா/ கதை எப்படி அதன் முடிவெப்படி/ கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா’ என்று சசிரேகாவுடன் இணைந்து ஜாலம் பண்ணி, படத்தின் க்ளைமாக்ஸையே பாடலாக வடித்துக் கொடுத்து, பலம் சேர்த்திருப்பார் வாணி ஜெயராம்.
மெல்லிசை மன்னரை அடுத்து சங்கர் கணேஷ் வந்தார்கள். அவர்களுக்கு வாணி ஜெயராம் குரலில் அசாத்தியங்கள் அத்துப்படி. அதிலும் கஸல் பாடலில் தேர்ந்தவர் என்பதால்தானோ என்னவோ அதைப் போன்ற பாடல்களாகக் கொடுத்தார்கள். அத்தனையிலும் அசத்தல் முத்திரைகளைப் பதியவிட்டார் வாணி ஜெயராம்.
இயக்குநர் கே.ரங்கராஜனின் முதல் படம் ‘நெஞ்சமெல்லாம் நீயே’. மோகன், பூர்ணிமா ஜெயராம், ராதா நடித்த இந்தப் படத்துக்கு இசை சங்கர் கணேஷ். வைரமுத்துவின் வரிகள்.
'யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது/ யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது/ தாளாத பெண்மை வாடுமே/ வாடுமே..ஏஏ.ஏ’ என்பார்.
’மார்கழி பூக்கள் என்னை தீண்டும்..ம்ம்/ மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா/ தேன் தரும் மேகம் வந்து போகும்/ சிந்து பாடும் இன்பமே/ ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்/ பார்த்தாலும் போதை தரும்.ம்.யாரது யாரது...’ என்று ‘யாரது’வுக்கு ஒரு அழுத்தமும் ‘நெஞ்சள்ளிப் போவது’க்கு ஒரு குழைவும் மொத்தத்தில் ஏக்கமும் கரைத்துக் கொடுத்திருப்பார், தன் குரலில்! கஸல் பாணியில் அமைந்த பாடல் இது.
ராபர்ட் ராஜசேகரன் இயக்கத்தில் ‘பாலைவனச்சோலை’ படத்தில், ‘மேகமே மேகமே பால் நிலா தேயுதே/ தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே/ மேகமே மேகமே பால் நிலா தேயுதே/ தேகமே தேயினும் தேன்மொழி தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே’என்ற பாடல் அப்படியே வடக்கத்திய கஸல் பாடலுக்கு நிகரானது.
’தந்தியில்லா வீணை சுரம் தருமோ/ புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ/ பாவையின் ராகம் சோகங்களோ’ என்று வாணி ஜெயராம் குரலில் பாடலைக் கேட்கும்போது, நமக்குள் சோகம் அப்பிக்கொள்ளும். பாடலைக் கேட்டு முடித்த பிறகும் கூட, நம்மை இம்சை பண்ணும். அப்படியொரு குரல் அவருடையது!
அதேசமயத்தில், இளையராஜா வந்தார். வித்தியாசம் வித்தியாசமாக வாணி ஜெயராமைப் பயன்படுத்திக்கொண்டார். ‘என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்’ என்று ஒருவிதமாகக் கொடுத்தார். அதேபோல, ‘நானே நானா யாரோதானா’ என்ற பாடலைக் கேட்டால் நமக்குள் இசை போதே ஏறித்ததும்பும்.
’முள்ளும் மலரும்’ படத்தில் அப்படியொரு பாடல், வாணி ஜெயராமுக்குப் புதுசுதான்.
'நித்தம் நித்தம் நெல்லு சோறு/ நெய் மணக்கும் கத்திரிக்கா/ நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா/ நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதைய்யா’ என்று வாணி ஜெயராமின் குரலில், ‘நித்த நித்தம் நெல்லுச்சோறு’ பாடலைக் கேட்டால், வயிறு முட்ட சாப்பிட்டவருக்கும் உடனே பசியெடுத்துவிடும்.
‘இளமை ஊஞ்சலாடுகிறது’ படத்தில் ‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா’ பாடலில், குதூகலமும் கேலியும் வழிந்தோடச் செய்வார் வாணி ஜெயராம். அதேபோல், அதே படத்தில், 'ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது/ உலாவும் உன் இளமை தான் ஊஞ்சலாடுது’ என்ற பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். மனதில் வாணி ஜெயராமின் குரல் ஊஞ்சலாடி மகிழ்வித்துக் கொண்டே இருக்கும்.
’மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க/ சங்கமங்களில் இடம் பெரும் ம்பவங்களில்
இதம் இதம்/ பணத்தால் நினைத்தால் இனிப்பதென்ன/
’நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்/ கற்பனைகளில் சுகம் சுகம் / கண்டதென்னவோ நிதம் நிதம்/ மழை நீ/ நிலம் நான்/ மயக்கம் என்ன’ என்று கேட்கும்போதெல்லாம் ஒரு மயக்கமும் இதமும் மனசுக்குள் நிறைந்திருக்கும்!
’நீயா’ படத்தின் ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்’ பாடலைப் பாட்டுக்கச்சேரிகளில் பாடத் தொடங்கினாலே கரவொலி காது கிழிக்கும். படத்தின் வெற்றிக்கு இந்தப் பாடலும் வாணி ஜெயராமின் ஏக்கமும் காதலுமான குரலும், நம்மை இனிக்கச் செய்துவிடும். இளமை நினைவுகளை மீட்டெடுத்துத் தரும்!
பாடாத மொழிகளில்லை. பெறாத விருதுகளும் இல்லை. தேசிய விருதுகள், மாநிலவாரியான விருதுகள், தமிழக அரசின் விருதுகள் என பதக்கப் பட்டியலைச் சொல்வதற்குப் பதிலாக, அவரின் ஒவ்வொரு பாடலுமே, நம் காதுக்கு இனிமையும் அழகும் சேர்க்கிற தொங்கட்டான்கள்; ஜிமிக்கிகள்!
1945 நவம்பர் 30-ம் தேதி பிறந்த கலைவாணி என்கிற வாணி ஜெயராமிற்கு, இன்று 77-வது பிறந்தநாள்.
ஏழு ஸ்வரங்களையும் கடந்த எட்டாவது ஸ்வரமாக, எவருக்கும் எட்டாத ஸ்வரமாகத் திகழும் வாணி ஜெயராம் அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.