மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயிப்பது இல்லை. நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில், கனவுகளைத் துரத்துவது மிகவும் முக்கியமானது என்று விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா கூறினார்.
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள அவாஹில் பகுதியில் தேசிய மாணவர் படை வருடாந்திர மலையேற்ற பயிற்சி முகாம் நடந்து வருகிறது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா கோவா,கேரளா, லட்சத்தீவு, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, அந்தமான், புதுச்சேரியை சேர்ந்த 350 மாணவிகள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர். இதில் விண்வெளிக்குச் சென்ற ஒரே இந்தியரும், அசோக சக்ரா விருது பெற்றவருமான,விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா கலந்துக்கொண்டார்.
அவர் மாணவிகளிடம் பேசுகையில்," மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல. நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் கனவுகளைத் துரத்துவது மிகவும் முக்கியமானது. எந்த தடங்கல்களும் ஊக்கமளிக்கும் ஆன்மாவை நிறுத்தாது, உந்துதல் உள்ளிருந்து இருக்க வேண்டும். தொழில்நுட்ப உலகில் இந்திய அறிவின் தேவை மிக முக்கியமானது, மரியாதையைச் சம்பாதிக்க வேண்டும், அது தேசத்துக்கான கடமையைச் செய்வதன் மூலம் கிடைக்கும்’ என்றார். தலைமை விருந்தினருக்கு கோவை குரூப் கமாண்டர் கர்னல் சிவராவ் நினைவுப் பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட என்சிசி கமாண்டர் கர்னல் சீனிவாஸ், பயிற்சி அதிகாரி லெப். கர்னல் பட்தாக் முன்னிலையில் முகாம் நடக்கிறது. பயிற்சி அதிகாரிகள் கூறுகையில், " இந்த முகாமில் தினமும் மாணவிகள் 18 கி.மீ பயணம் மேற்காண்டு, பழங்குடியினர் மக்களான தோடர்களின் இருப்பிடங்களை கண்டு, சேவை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், பழங்குடியினர் அருங்காட்சியகம், யுனஸ்கோ பாரம்பரிய மலை ரயில்நிலையம் ஆகிய இடங்களைப் பார்வையிடுவார்கள் " என்றனர்.