திரை விமர்சனம்: சர்தார்


’இரும்புத் திரை’, ’ஹீரோ’ போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘சர்தார்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. தீபாவளி வெளியீடு என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் எப்படி வந்திருக்கிறது?

வங்கதேசக் கடலில் ஒரு கப்பலில் வைத்து கொல்லப்படுகிறார் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர். அவரைக் கொன்றது உளவுத் துறை ஏஜென்ட் சர்தார் (கார்த்தி) என்று இந்திய அரசால் குற்றம்சாட்டப்பட்டு, தேசத்துரோகி என்று அறிவிக்கப்பட்டு சிட்டகாங் சிறையில் அடைக்கப்படுகிறார்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு நிகழ்காலத்தில், சென்னையில் காவல் துறை அதிகாரியாக வலம்வருகிறார் சர்தாரின் மகன் விஜய பிரகாஷ் (கார்த்தி). தேசத்துரோகியின் மகன் என்னும் அவப்பெயரிலிருந்து விடுபடுவதற்காக காவல் துறை அதிகாரியாக தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் கவனம் பெறுவைக்கிறார் விஜய பிரகாஷ்.

இந்தச் சூழலில் ராஜாஜி பவனிலிருந்து முக்கியமான உளவுத் துறை ரகசியக் கோப்புகள் தொலைந்துபோகின்றன. அதை எடுத்துச் சென்றது தண்ணீரைத் தனியார்மயமாக்குவதற்கு எதிரான போராட்டத்துக்காக அங்கு வந்த சமீரா (லைலா) என்பதைத் தெரிந்துகொள்கிறார். சமீராவைத் தேடிச் செல்கிறார். ஆனால் சமீரா உயிரிழந்துவிடுகிறார். அவரது மரணத்துக்கான காரணத்தைத் தோண்டி செல்லும்போது, அவர் இந்திய அரசின் ஆலோகராக இருக்கும் ரத்தோர் என்னும் தொழிலதிபரின் ‘ஒரே நாடு ஒரே குழாய்த்தொடர்’ திட்டத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவர் என்பதை விஜய பிரகாஷ் தெரிந்துகொள்கிறார்.

மேலும் சமீரா, சிட்டகாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சர்தாரை சென்னைக்கு வரவழைக்க முயன்றதையும் தெரிந்துகொள்கிறார். சமீராவின் மரணத்துக்கு நியாயம் கிடைத்ததா? சர்தாருக்கும் அவருக்குமான தொடர்பு என்ன? தேசியப் பாதுகாப்பு ஆலோசகரை சர்தார் ஏன் கொன்றார்? ரத்தோரின் மக்கள் விரோதத் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிப் படம்.

தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதன் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தண்ணீர் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் உளவுத் துறைப் பின்னணியில் அம்பலப்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன். ஆனால் கதையில் பல்வேறு விஷயங்களைச் சொல்ல முயன்றிருப்பதும் திரைக்கதையின் பலவீனங்களும் அவருடைய நல்ல நோக்கத்துக்கு முட்டுக்கட்டைகளாக அமைகின்றன. தண்ணீர் வணிகம் குறித்த வசனங்களில் இருக்கும் அழுத்தம், தாக்கம் செலுத்தும் காட்சிகளாகத் திரைக்கதையில் வெளிப்படவில்லை.

உளவுத் துறை ஏஜென்ட்டுகள் தொடர்பான காட்சிகளுக்காகத் தீவிரமான ஆய்வை மேற்கொண்டிருப்பதைத் திரைக்கதையில் காண முடிகிறது. அவை தொடர்பான காட்சிகள் படத்தை ஓரளவு சுவாரசியமாக்குகின்றன. ஆனால் காவல் துறை அதிகாரியாக இருக்கும் விஜய பிரகாஷ் மிக எளிதாக ஒவ்வொரு கட்டத்தையும் கடந்துவிடுகிறார். மர்மங்களை அவிழ்ப்பதில் அவருக்கு எந்தச் சவாலும் இருப்பதில்லை. அதேபோல் சர்தார், சிறையிலிருந்து மீண்ட பிறகு மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் நம்பகத்தன்மை இல்லை. படத்தின் பிரதான வில்லனான ரத்தோர் மிகப் பெரிய தொழிலதிபராகவும் இந்திய அரசின் ஆலோசகராக சர்வதேச நீதிமன்றங்களில் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வாதாடுகிறவராகவும் காண்பிக்கப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்டவரின் திட்டங்களும் நடவடிக்கைகளும் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.

மிடுக்கான காவலராகவும் முதிய அதே நேரம் வீரியம் குறையாத உளவுத் துறை ஏஜென்ட்டாகவும் கார்த்தியின் நடிப்பு படத்துக்கு மிகப் பெரிய பலம். உண்மையில் அவருக்கான மாஸ் காட்சிகளே, அவற்றின் தர்க்கப் பிழைகளைத் தாண்டி படத்தைத் தொய்வடையாமல் கடத்த உதவியிருக்கின்றன. நாயகியாக நடித்திருக்கும் ராஷி கன்னா மக்கள் உரிமைகளுக்காகப் போராடும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார். ஓரளவுக்கு கவனிக்கத்தக்க கதாபாத்திரத்தில் குறைவைக்காமல் அவர் நடித்திருந்தாலும் அந்தக் கதபாத்திரம் கதைக்குப் பெரிதாக பங்களிக்கவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் லைலா. கதையின் முக்கியமான திருப்பத்துக்கு உதவும் கதாபாத்திரம் என்றாலும் அவருக்கும் திரைக்கதையில் போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஃப்ளாஷ்பேக் பகுதியில் சர்தாரின் முறைப்பெண்ணாக வரும் ரஜிஷா விஜயனுக்கு வழக்கமான நாயகி கதாபாத்திரம்தான். அனாதையாக்கப்பட்ட விஜய பிரகாஷை எடுத்து வளர்க்கும் காவலராக வரும் ராமதாஸ், சர்தாரின் லட்சியத்துக்காகத் திரைமறைவிலிருந்து வேலைபார்க்கும் உளவுத் துறை ஏஜென்ட்டுகளாக யூகி சேது, அவினாஷ் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன. பின்னணி இசை சில இடங்களில் ரசிக்க வைத்துள்ளது. ஜார்ஜ் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையானதைத் தந்துள்ளது.

தண்ணீர் தனியார்மயத்தின் தீமைகளையும் நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கும் ‘சர்தார்’, திரைக்கதை சொதப்பல்களால் உரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.

x