நாலு பேருக்கு நல்லது செய்ய உருவெடுத்த ‘நாயகன்!’


தமிழ் சினிமாவில் , ’டிரெண்ட் செட்டர்’ என்கிற வார்த்தை ரொம்பவே பிரபலம். முற்றிலும் புதிய பாணியில் வரும் ஒரு படம் ட்ரெண்ட் செட்டராகக் கருதப்படும். அதன் பின்னர் வருகிற படங்கள், அந்தப் படத்தின் தாக்கத்திலேயே எடுக்கப்படும். கதை, கதை சொல்லுகிற பாணி, வசன உத்தி, காட்சிகளின் நேர்த்தி, ஒளிப்பதிவின் வெளிச்சம், இயக்கத்தின் ஆளுமை என அடிதொட்டு அதேமாதிரி படங்களைப் பண்ணுவார்கள். எந்த இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்து வந்தாலும் அவர்கள் ‘டிரெண்ட் செட்டர்’ படத்தை இயக்கிய இயக்குநரின் பாணியில் படமெடுப்பார்கள். அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்திய மிக முக்கியமான படம்... ‘நாயகன்’.

தொழில்நுட்பத்தில் உலகத்தரத்தை எட்டிய தமிழ்ப் படம் எனும் பெருமை, இன்றைக்கும் நாயகனுக்கு உண்டு. இதற்குப் பிறகு வந்த பல படங்கள், தொழில்நுட்ப ரீதியில் இதன் சாயலைக் கொண்டே இருந்தன. நடிப்பில் முத்திரை பதித்த கமல்ஹாசனுக்கு, இந்தப் படம் ரொம்பவே ஸ்பெஷல்.

முக்தா பிலிம்ஸ், மணிரத்னத்தை இயக்குநராகக் கொண்டு படமெடுக்க முன்வந்தது. பம்பாய் வரதராஜ முதலியார் எனும் மனிதரின் வாழ்க்கையைக் கருவாக, இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு, கதை ஒன்றை உருவாக்கினார். கமலும் சம்மதித்தார். எழுபதுகளில் ஒவ்வொரு பரீட்சார்த்த முயற்சிகளை அவ்வப்போது மேற்கொள்ளும் கமலுக்கு, ‘நாயகன்’ அநேகமாக இன்னொரு பரீட்சை. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு. லெனின் - வி.டி.விஜயனின் எடிட்டிங். இளையராஜாவின் இசை. எழுத்தாளர் பாலகுமாரனின் வசனம்.

மக்களுக்கு ‘காட்ஃபாதர்’. அரசாங்கத்துக்கு எதிரி. இதுதான் ஒன்லைன். ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்ல’ என்ற வார்த்தையை வாழ்க்கையாக்கிக்கொண்ட வேலு என்ற இளைஞனின் வாழ்வியலைச் சொன்னதுதான் ‘நாயகன்’. அதாவது, தூத்துக்குடி தொழிற்சங்கத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட, அவரின் எட்டுவயது மகன் வேலு, போலீஸ் கான்ஸ்டபிளைக் குத்திவிட்டு, ரயிலேறி மும்பைக்கு வருகிறான். அங்கே தாராவியில் வாழும் இஸ்லாமியப் பெரியவர் அரவணைக்கிறார். அங்கேயே வளர்கிறான், வாழ்கிறான். ’கடத்தலுக்குத் துணை போறீங்களே வாப்பா. இது சரியா தப்பா?’ என்று கேட்கிறான். ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்லை’ என்று சொல்லும்போதுதான் டைட்டில் முடியும். பிறகு, ‘நீங்க நல்லவரா கெட்டவரா’ என்று பேரன், தாத்தாவிடம் கேட்கும்போது, முடிவுபெறும். இதனிடையே உள்ள வாழ்க்கைதான்... நாயகன்.

இஸ்லாமியப் பெரியவரைக் கொன்ற போலீஸ்காரரைக் கொன்று போடுகிறான் வேலு. பிறகு மக்கள் மனதில் இடம்பிடிக்கிறான். பாலியல் தொழிலாளர் விடுதியில் பார்க்கிற பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.

வேலு எனும் இளைஞராகவும் வேலுநாயக்கர் எனும் தகப்பனாகவும் நாயக்கர் என்கிற மிகப்பெரிய மனிதராகவும் அடுத்தடுத்த வயது, காலகட்டம் என்று அத்தனை நேர்த்தி காட்டி நடித்து, வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன். கயமை குணம் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை கமல் அடித்துக் கொன்ற பின்னர், ‘காசுலாம் வேணாம், வந்துட்டுபோங்க, அதுபோதும்’ என்று டீக்கடைக்காரச் சொல்ல, ‘இனிமே இப்படித்தான்’ என்று ஜனகராஜ் சொல்ல, தியேட்டரில் விசில் பறக்கும். அடித்துத் துவைத்து, நார்நாராகக் கிழித்து, தெருவில் கமலைத் தூக்கிப்போட, நடக்க முடியாமல், உதடு கிழிந்து பேசமுடியாமல், ‘நான் அடிச்சா நீ செத்துருவே’ என்பார் கமல். கைத்தட்டலில் காது கிழியும்.

மும்பை, தமிழர்கள் வாழ்க்கை, தாராவி என்று மொத்த மும்பை நிலப் பகுதிகளை அப்படியே இங்கே செட் போட்டுக் காட்டியிருப்பார் தோட்டா தரணி. படத்தின் நிறத்தையும் ஆங்காங்கே வைக்கும் லைட்டிங்கையும் பார்த்து, சினிமா உலகமே பி.சி.ஸ்ரீராமைக் கொண்டாடியது.

நாயகி பாத்திரப் படைப்பிலும் மிகப் பெரிய புரட்சி செய்திருப்பார்கள். பாலியல் தொழிலாளர் விடுதியில் வளர்ந்த பெண்ணைத் தற்செயலாகச் சந்தித்து அவளைக் காதலித்து திருமணம் செய்துகொள்வார் கமல். ‘கொஞ்சம் சீக்கிரமா விட்டுடுறீங்களா. நாளைக்கி கணக்குப் பரீட்சை’ என்று அந்தப் பெண் சொல்லும்போது வருகிற பரிவும் அன்புமாகட்டும், பிறகு ஒருநாள் பார்க்கும் போது, ‘என்ன பரீட்சை நல்லா எழுதுனியா? என்னைப் பார்த்து ஓடுறே. பிடிக்கலேன்னா சொல்லு போயிடுறேன்’ என்று சொல்ல, ‘பயமா இருக்கு... அழுதுருவேனோன்னு பயமா இருக்கு. பாத்தீங்களா... அழுதுருவேன்னு சொன்னேன்ல...’ என்று அழுது அரற்றுபவளை அப்படியே நெஞ்சில் அணைத்துக்கொண்டு, ‘அழு...’ என்று சொல்லும் அரவணைப்பாகட்டும்... அது தமிழ் சினிமாவுக்கு புதிய காதல். புதிய உறவு.

காட்சி அமைப்புகள், இயல்பான நடிப்பு, கேமரா கோணங்கள், கலை இயக்கம், லைட்டிங்... மிக முக்கியமாக வசனங்கள் என இந்தப் படத்தை எப்போது ஒளிபரப்பினாலும் பார்க்கிற மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இன்றைக்கும் உண்டு. வசனங்களை எழுத்தாளர் பாலகுமாரன் எழுதியிருப்பார். படத்தின் வசனங்களில் ஒரு நாவல் டச் கொடுத்திருப்பார். அதுதான் பாலகுமாரன் ஸ்டைல் என்று சினிமாவில் பெயரெடுத்தது.

‘நாலு பேருக்கு உதவும்னா எதுவுமே தப்பில்ல’, ‘இது பயமில்லீங்க, பெருமை’, ‘நான் அடிச்சா நீ செத்துருவே’, ‘இனிமே இப்படித்தான்’, ‘அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்’, ‘நமஸ்தே, மேரா பாவா மர்கயா’, ‘ஏழைங்க உசுருக்கு அவ்ளோதான் மதிப்பு’, ‘ஐயரே, அஞ்சு வாங்கறோம், தாராவிலதான் நிறுத்துறோம்’, ‘பணத்தை வச்சுட்டு சரக்கை எடுத்துக்கோ’, ’நீங்க நல்லவரா கெட்டவரா?’ என்று படம் முழுக்க தன் வசனங்களால் இன்னும் கேரக்டர்களுக்கு உயிரூட்டியிருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். இதுதான் அவருக்கு முதல் படம்.

வசனமே இல்லாத காட்சியும் கவனம் ஈர்க்கும். கைத்தட்டலை அள்ளும். நாசர் கமலைக் கைது செய்யவருவார். கமல், மனைவிக்கு திதி கொடுத்துவிட்டு வருவார். அருகில் வந்ததும் நாசரின் யுனிஃபார்மைப் பார்ப்பார். சட்டென்று நிமிர்ந்து கைகூப்புவார். நாசர் விறைத்தபடி நிற்பார். சட்டென்று ஒருநிமிடம் மெளனம். தலையசைப்பார். ’போலாம் கைது பண்ணிக்கோ’ என்பதைச் சொல்லாமல் சொல்வார். அப்போது தண்ணீரில் வேஷ்டி நனையாமலும் வேஷ்டி தடுக்காமலும் இருக்க லேசாக வேஷ்டியைத் தூக்கிப் பிடித்தபடி, கால் அகட்டி நடந்துவருவதில்... கமலின் பாடிலாங்வேஜ் மிரட்டியெடுத்தது.

நாயக்கர் கொன்ற போலீஸ்காரரின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டவன். அவனுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பார் வேலு நாயக்கர். இதுவொரு தனிக்கவிதை. மகனுக்கு அப்பாவைக் கொன்றது வேலு நாயக்கர் என்பது தெரியவருகிறது. கோர்ட்டில். ஆஜர்படுத்தப்படுகிறார் நாயக்கர். சாட்சியங்கள் இல்லையென்று விடுதலையாகிறார். ஊரே மகிழ்ச்சியில், ஆரவார ஆர்ப்பரிப்புடன் வரவேற்கிறது. அந்த மனநிலை பாதிக்கப்பட்டவன், அப்பாவின் போலீஸ் உடையைப் போட்டுக்கொண்டு, துப்பாக்கியால் நாயக்கரைச் சுட்டுக்கொல்கிறான். ‘நாலு பேருக்கு உதவும்னா எதுவும் தப்பில்ல’ என்று வாழ்ந்த வேலு நாயக்கர்... பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே வீழ்வான் எனும் சொல்லுக்கு ஏற்ப, இறந்துபோகிறார்.

’நாயகன்’ படப்பிடிப்பில்...

‘காட்சிப்படுத்துதல்’ என்றொரு அழகான வார்த்தை உண்டு. காட்சிப்படுத்துதலும் திரைக்கதை விரிவாக்கமும்தான் ’நாயகன்’ படத்தை, சாதாரணப் படத்தில் இருந்து பிரம்மாண்டமான, கவிமயமான, ஆகச்சிறந்த கதைச் சொல்லிப் படமாக நமக்கு உணர்த்தியது.

அப்போது மீசை இல்லாத கமல் புதுசுதான். ஒவ்வொரு காலகட்டத்துக்கு தக்கபடி அவரின் தோற்றமும் நடை பாவனைகளும் மாறிக்கொண்டே இருக்கும். அறுபதுகளில் நடக்கிற கதைக்கு ஏற்ப, பஃப் வைத்த ஜாக்கெட், ரெட்டை ஜடைப் பின்னல், சீட்டிப் பாவாடை என சரண்யாவின் ஆடைகளிலும் மற்ற கதாபாத்திரங்களிலும் நேர்த்தி காட்டியிருப்பார் மணிரத்னம்.

கமல் - ஜனகராஜ் காம்பினேஷன் எப்போதுமே சூப்பர். இதிலும்தான். ‘இனிமே இப்படித்தான்’ என்பது, ‘பாருப்பா இந்தப் புள்ளைய’ என்பது, ‘நீ போ நாயக்கரே, உனக்கு ஒண்ணும் ஆவாது நாயக்கரே’ என்று வீறாப்பு காட்டுவது என்று படம் முழுதும் ஜனகராஜ், அமர்க்களப்படுத்தியிருப்பார்.

சரண்யாவுக்கு முதல் படம். தேர்ந்த நடிப்பை வழங்கியிருப்பார். நிழல்கள் ரவி, கார்த்திகா, டெல்லிகணேஷ், விஜயன், பிரதீப் சக்தி, நாசர், ஏ.ஆர்.எஸ், கிட்டி, டினு ஆனந்த் எனப் பலரும் அவரவர் வேலையை, கடமையுடன் செய்திருப்பார்கள். ‘எனக்கு இந்தி தெரியும்’ என்று ஆரம்பித்து கடைசி வரை கமலுக்கு நெருக்கமாக இருக்கும் ஐயர் கேரக்டரில் டெல்லி கணேஷ் பிரமாதப் படுத்தியிருப்பார். ஆஸ்பத்திரியில் குழந்தையைசேர்த்துவிட்டு, டெல்லி கணேஷும் கமலும் பேசிக்கொள்ளும் இடத்தில் இருவரின் நடிப்பும் உயரம் தொட்டிருக்கும்.

ஒரு காட்சிக்கு, காட்சியின் கனத்தை ரசிகனுக்குக் கடத்துவதற்கு எப்படி ஷாட் வைக்க வேண்டும் என்று படம் முழுக்கவே பாடம் எடுத்திருப்பார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். ஒவ்வொரு காலகட்டத்தையும் உணர்த்த கோடு போட்ட கோட்டுசூட்டு, அம்பாசிடர் கார், இறுதியில் மாருதி கார் வரைக்கும் காலகட்டத்தைச் சொல்லி, ஒரு பீரியடு படத்தை, ஒரு மனிதரின் வாழ்க்கையுடன் அழகாக, உறுத்தாமல் படைத்திருப்பார் மணிரத்னம்.

இரண்டரை மணி நேரமும் படம் நெடுக வந்து நம் மனதை ஆக்கிரமித்துவிடுகிற கேரக்டர்... இளையராஜா. அவரின் பின்னணி இசை, மற்றுமொரு ராஜ சரித்திரம். படம் போட்ட கால்மணி நேரத்தில், ‘தென்பாண்டிச் சீமையிலே’ என்று ஆரம்பிக்கும்போதே, சிறுவன் வேலுவுடன் நம்மை இரண்டறக் கலக்கச் செய்துவிடுவார் இளையராஜா. படம் முழுக்க ஆங்காங்கே வருகிற இசை, நம்மைக் கலங்கடித்துவிடும்.

‘நான் சிரித்தால் தீபாவளி’ அப்படியே அறுபதுகளின் ஸ்டைல் பாடல். ‘நீயொரு காதல் சங்கீதம்’ காதல் ப்ளஸ் கவிதை. காட்சியும் கவிதைதான். ‘என்னை விட்டுட்டு போயிருவியா’ என்று கேட்பதும் தாலியை எடுத்து ஒற்றிக்கொள்வதும் அழுவதும் அவளை தேற்றுவதும் என்று பாடலின் காட்சிகள் இருக்கும். அடுத்து, இங்கேதான் வந்து விழுந்து கிடந்தேன் என்று சொல்ல, அப்போ இந்த அளவுக்கு உயரமா இருப்பீங்களா என்று கேட்பதும் அவர் சரி செய்து விவரிப்பதும் பாடலுக்குள் வரும் மெளனக் காட்சிகள். ‘நிலா அது வானத்து மேலே’ ஆரம்ப இசையும் பாடலும் குதூகலப்படுத்திவிடும். ’அந்தி மழை மேகம்’ பாடலும் கொண்டாட்டமும் நமக்குள்ளும் தொற்றிக்கொள்ளும். முக்கியமான இடங்களில் வருகிற ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடல் நம்மைக் காயப்படுத்திவிடும். மருந்தும் போட்டுவிடும். இரண்டுமே செய்யும் ஜாலம் இளையாராஜாவின் ராஜ ரகசியம்!இளையராஜாவுக்கு இது 400-வது படம்.

‘நாயகன்’ படத்துக்கு முன், பின் என்று தமிழ் சினிமாவின் தொழில்நுட்பத்தையும் மேக்கிங் ஸ்டைலையும் பார்க்க வேண்டும். அப்படியொரு உலகத்தரம் வாய்ந்த படமாக அமைந்தது. இந்தியாவின் தலைசிறந்த நூறு படங்கள் பட்டியலில், ‘நாயகன்’ படமும் இருக்கிறது.

படத்தின் ’மெளத்டாக்’ ரகளையைக் கிளப்ப, ஹவுஸ்ஃபுல் ஓட்டம். டிக்கெட் கிடைக்காமல், பக்கத்து ஊர்களுக்குப் போய் படம் பார்த்தவர்களெல்லாம் உண்டு. மும்பை, தாராவி, தாதா, மனித வாழ்க்கை என்று எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. இப்போதும் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கூட எடுப்பார்கள். ’ஒரு சினிமா எப்படி எடுக்கணும்’ என்பது சிலரின் கேள்வி. ’நாயகன் மாதிரி இருக்கணும்’ என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் பதில்!

1987 அக்டோபர் 21-ம் தேதி தீபாவளியன்று வெளியானது ‘நாயகன்’. படம் வெளியாகி, 35 ஆண்டுகளாகின்றன. இன்னும் பல நூற்றாண்டுகளானாலும் ‘நாயகன்’ நாயகனாகவே மக்கள் மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பான்!

x