பேட்டி என்று உட்கார்ந்தாலே செக்ஸ் பற்றி பேசுகிறார்கள்!


செய்தி வாசிப்பாளர் டூ கதாநாயகி பட்டியலில் இணைந்திருக்கிறார் திவ்யா துரைசாமி. ‘குற்றம் குற்றமே’, ‘எதற்கும் துணிந்தவன்’ என அடுத்தடுத்து படங்களில் கவனம் குவித்தவர் தற்போது ‘சஞ்ஜீவன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் குறித்தும், அவரது சினிமா பயணம் குறித்தும் திவ்யா துரைசாமியிடம் பேசினோம்.

சஞ்ஜீவன்’ படத்தில் நீங்கள் நடிக்க ஒப்புக்கொள்ள என்ன காரணம்?

எனக்கு முதன் முதலில் நடிப்பதற்காக வந்த வாய்ப்பு இது. அப்போது என்னுடைய நண்பரும் காஸ்ட்யூம் டிசைனருமான சத்யாவிடம் இந்தப் படம் குறித்து கேட்ட போது, “நல்ல டீம் நிச்சயமாக நீ நடிக்க வேண்டும்” என்று சொன்னார். அவர் சொன்னதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதுமட்டுமல்லாமல், கதையும் டீமும் எனக்குப் பிடித்திருந்தது. ஸ்நூக்கர் விளையாட்டு முதல் முறையாக இதில் கையாண்டிருக்கிறார்கள். படத்தில் என்னைக் காட்டிய விதமும் பிடித்திருந்தது.

செய்தி வாசிப்பாளர், நடிகை என இதற்கெல்லாம் ஒப்பனை மிக அவசியம். ஆனால், நீங்கள் படங்களிலும் பொதுவிலும் ஒப்பனையில் அதிக கவனம் செலுத்தவதில்லையே?

நீங்கள் கேட்பது சரிதான். செய்தி வாசிக்கும்போது அங்கு அதிக அளவிலான ஒளியில் மேக்கப் இல்லாமல் உட்காரவே முடியாது. அப்படி பழகிவிட்டு சினிமாவில் ஒப்பனை இல்லாமல் தோன்ற எனக்கு முதலில் தைரியமே வரவில்லை. அந்தத் தயக்கத்தை உடைத்து வரவே எனக்கு கொஞ்ச நாட்கள் ஆனது. அதுவும் இல்லாமல், நான் இதுவரை நடித்த படங்களிலும் என் கதாபாத்திரத்திற்கு என தனியாக ஒப்பனை தேவைப்படவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறீர்களா..?

பிக் பாஸ் தமிழுக்கு வந்த போது, அதில் என்னதான் இருக்கிறது என்பது பற்றித் தெரிந்துகொள்ள முதல் சீசன் மட்டும் நான் பார்த்தேன். அதையும் நான் முழுதாகப் பார்க்கவில்லை. அதன் பிறகு பெரிதாக எந்த சீசனையும் நான் பார்க்கவில்லை. குறிப்பாக, இந்த சீசனில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது. வாய்ப்பு வந்தால் போவேனா என்று கேட்டால் இப்போதைக்கு படங்கள் இருப்பதால் போக முடியாது.

அடுத்த வருடம் எப்படி இருக்கும் என்று தெரியாது. மேலும், பிக் பாஸ் பார்வையாளர்களில் ஒருவராகப் பேச வேண்டும் என்றால் 100 நாட்கள் எல்லாம் ஒரு நிகழ்ச்சிக்காக என்னால் பார்க்க முடியாது. அது என்னுடைய நேரத்தை எடுத்துக் கொள்வது மட்டுமில்லாமல் அதற்குப் பழகியும் விடுவேன்.

உங்கள் படங்களைப் பார்த்துவிட்டு குடும்பத்தில் என்ன சொன்னார்கள்?

நான் எவ்வளவு பெரிய விஷயத்தைச் செய்தாலும் என் குடும்பத்தில் பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ள மாட்டார்கள். சன் டிவியில் வேலை செய்தாலும், சூர்யா சார் படத்தில் கமிட் ஆனாலும் ‘அப்படியா!’ என்ற அளவில் தான் அவர்களது ரியாக்‌ஷன் இருக்கும். அதனாலேயே என்னவோ நானும் எந்தவொரு பெரிய விஷயம் செய்தாலும் அதை பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளமாட்டேன்.

பொதுவாக, நடிகைகளிடம் கேட்பதில் உங்களுக்குப் பிடிக்காத கேள்விகள் என்றால் எதைச் சொல்வீர்கள்?

பேட்டி என்று உட்கார்ந்தாலே சில கேள்விகள் தொடர்ந்து கேட்பார்கள். கேஸ்டிங் கவுச், பீரியட்ஸ், செக்ஸ் பற்றி பேசுகிறார்கள். இதுபற்றி எல்லாம் யாரும் எந்தவொரு புரட்சியை ஏற்படுத்தவும் கேட்பதாக எனக்குத் தெரியவில்லை. கவனக் குவிப்பிற்காக தலைப்பு வைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதை எல்லாம் பார்க்கும் போது எனக்குத் தேவையில்லாத கேள்விகளாகத் தோன்றும்.

படங்கள் உதவி: அசோக்

x