எப்போதும் சிரித்த முகமாக இருப்பது ஒருவகை. ஒருவர் சிரித்தாலே, நம் மனதிலொரு நிறைவு வருவது மற்றொரு வகை. தமிழ் சினிமாவில், கே.ஆர்.விஜயாவின் புன்னகை, மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. எல்லோராலும் ரசிக்கப்பட்டது. ‘புன்னகை அரசி’ என்றே கொண்டாடினார்கள். அவருக்கு அடுத்து ‘புன்னகை இளவரசி’யாகத் திகழ்கிறார் நடிகை சினேகா.
மும்பை, ஷார்ஜா என்று வளர்ந்தாலும் கடலூருக்கு அடுத்திருக்கிற பண்ருட்டிதான் பூர்விகம். வீட்டில் அவருக்கு சுஹாசினி என்று பெயர் சூட்டினார்கள். யதார்த்தமான அழகும், பாந்தமான சிரிப்பும் வசீகரிப்பதாக அவருடைய தோழிகளெல்லாம் சொன்னார்கள். ஒருகட்டத்தில், சினிமாவில் நடிக்கும் எண்ணமும் மேலோங்கியது.
ஒருபக்கம் வாய்ப்புக்காக முயற்சிகள் செய்துகொண்டிருக்க, வாரப் பத்திரிகை ஒன்றில் ‘கதாநாயகி’ தேர்வுக்கு விண்ணப்பிக்கச் சொல்லி அறிவிப்பு வெளியானது. வாய்ப்பும் கிடைத்தது. வாரப் பத்திரிகை மூலமாகவும் தேர்வு செய்யப்பட்டார். ஏற்கெனவே ஒரு சுஹாசினி இருக்கிறார் என்பதால் ‘சினேகா’ என்று மாற்றம் செய்யப்பட்டது.
2001-ம் ஆண்டு, ’இங்கே ஒரு நீலபட்சி’ எனும் மலையாளப் படத்தில் அங்கே அறிமுகமானார். இங்கே சுசி கணேசனின் ‘விரும்புகிறேன்’ படத்தில் பிரசாந்துடன் நடித்தார். அதேசமயம், மாதவனுடன் ‘என்னவளே’ படத்தில் நடித்தார். 2001-ல் ‘என்னவளே’ வந்தது. அடுத்த ஆண்டில் ‘விரும்புகிறேன்’ வந்தது. இரண்டு படங்களிலும் கவனம் ஈர்த்தார் சினேகா.
இதையடுத்து தொடர்ந்து படங்கள் வரத்தொடங்கின. லிங்குசாமி முதன்முதலாக இயக்கிய ‘ஆனந்தம்’ படத்தில் நடிகர் அப்பாஸின் ஜோடியாக நடித்தார் சினேகா. கும்பகோணப் பெண்ணாகவே இயல்பான முகத்துடன் நம் வீட்டுப் பெண் எனும் தோற்றத்துடன் செம்மையாகவே நடித்தார்.
யுகபாரதியின் ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ என்ற பாடலுக்கு சினேகாவின் சின்னச் சின்ன நடன அசைவுகளும் முகபாவனைகளும் ரொம்பவே கவர்ந்தன. அப்போது டி.வி சேனல்களில் ஒருநாளைக்கு மூன்று நான்கு முறையேனும் இந்தப் பாடலை ஒளிபரப்புவார்கள்.
இயக்குநர் வஸந்தின் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்தில் மிகச்சிறந்த கேரக்டரை உள்வாங்கி வெகு அழகாக நடித்திருப்பார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய ‘பார்த்தாலே பரவசம்’ படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. இதை பெரிய பாக்கியமாகக் கருதி நடித்தார். இந்தப் படம் பாலசந்தர் இயக்கிய 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ஏனோ ஓடவில்லை. ஒருவேளை ஓடியிருந்தால், இன்னும் மிகப்பெரிய அளவில் வலம் வந்திருப்பார் சினேகா.
ஆனாலும் விஜய்யுடன் ‘வசீகரா’ படத்திலும் அஜித்துடன் ‘ஜனா’ படத்திலும் நடித்து கவனம் ஈர்த்தார். ’புன்னகை தேசம்’ படத்தில் சினேகாவின் கதாபாத்திரமும் நடிப்பும் ரொம்பவே ரசிக்கப்பட்டன. விக்ரமுடன் ‘கிங்’ படத்தில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் நல்ல நல்ல கேரக்டர்களாகவே அவருக்குக் கிடைத்தன.
எஸ்.எஸ்.ஸ்டான்லி இயக்கத்தில் ஸ்ரீகாந்துடன் சினேகா நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. படத்தில் சினேகா பேசுகிற வசனங்கள் கைத்தட்டல்களை அள்ளின. அதேபோல, இயக்குநர் விக்ரமனின் ‘உன்னை நினைத்து’ படத்தில் சூர்யாவுடன் நடித்தார். இதில் லைலாவும் உண்டு என்றபோதும் சினேகாவின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் கூடுதல் கவனத்தை ஈர்த்தது.
கமல், சிம்ரன் மெயின் ஜோடியாக நடித்த ’பம்மல் கே.சம்பந்தம்’ படத்தில் அப்பாஸுடன் ஜோடி போட்டு காமெடி பண்ணினார் சினேகா. அதேபோல் ஸ்ரீகாந்துடன் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்துக்குப் பிறகு ‘போஸ்’, ‘பார்த்திபன் கனவு’ படங்களில் நடித்தார். கரு.பழனியப்பன் முதன்முதலாக இயக்கிய ‘பார்த்திபன் கனவு’ படத்தில் இருவேடங்களில் நடித்து அசத்தினார். ஜனனி, சத்யா எனும் இரண்டு கதாபாத்திரங்களிலும் நம்மை ரசிக்கவைத்திருப்பார். சினேகாவின் மிகச்சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த படங்களில் தனியிடம் பிடிக்கிறது ‘பார்த்திபன் கனவு’.
சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் இரண்டு மூன்று நாயகிகள். எனினும், ஒரு ஆத்மார்த்தமான தோழியாக முற்போக்கு குணமும் கம்பீரமும் கொண்ட சினேகாவின் நடிப்பு நமக்குள் தன்னம்பிக்கையை விதைத்தது. ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலையும் பாடலுக்கு சினேகாவின் நடிப்பையும் அவ்வளவு எளிதில் கடந்துவிடவோ மறந்துவிடவோ முடியாது.
’பிரிவோம் சந்திப்போம்’ படத்தில் குடும்ப உறவுகளுக்காக ஏங்கியும் தனிமையில் நொந்துபோயுமாகக் கவலையும் துக்கமும் கொள்கிற சேரனின் மனைவி கதாபாத்திரத்தை சினேகாவைத் தவிர வேறு எவருமே இந்த அளவுக்குச் செய்திருக்க முடியாது என பத்திரிகைகள் விமர்சனங்களில் குறிப்பிட்டன. இயக்குநர் சரண் இயக்கிய ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தையும், அதில் சினேகா நடித்த ஜானகி கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் ரொம்பவே ரசித்தார்கள். படத்தில் கமலைச் சந்திக்கிற காட்சிகளில் எல்லாம் யதார்த்தமாகவும் ஒருவித காதல் உணர்வுடனும் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கினார்.
செல்வராகவன் இயக்கத்தில் ‘புதுப்பேட்டை’யில், தனுஷுக்கு ஜோடியாக, பாலியல் தொழிலாளியாக நடித்தார். துணிச்சலான அந்த கேரக்டருக்கு கூடுதல் வலு சேர்த்தார். இதேபோல் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நாகர்கோவில் பெண்ணாக நடிப்பில் வெளுத்துக்கட்டியிருப்பார். பின்னர் மகன் தனுஷுடன் வருகிற காட்சிகளிலும் முதிர்ச்சியான பார்வையையும் உடல்பாஷையையும் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி கேரக்டருக்கு உயிரூட்டியிருப்பார்.
நடுவே ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் பிரசன்னாவுடன் நடித்தார். அப்போது காதல் மலர்ந்தது. பிறகு திருமணம், இரண்டு குழந்தைகள் என இல்லறத்தையும் அழகுற நடத்திக்கொண்டிருக்கிறார். அத்துடன், விளம்பரப் படங்களில் சினேகாவுக்கென தனி மார்க்கெட் இருக்கிறது. படங்களில் நடித்து வந்தாலும் விளம்பரங்களில் நடிப்பதில் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்தி வருகிறார்.
‘’விளம்பரப் படங்களில் நடிப்பதால், நான் ஒவ்வொருவரின் வீட்டு வரவேற்பறைக்கும் போய்விடுகிறேன். அவர்கள் வீட்டுப் பெண்ணைப் போலத்தான் என்னைப் பார்க்கிறார்கள். நேரில் என்னைப் பார்க்கும்போதெல்லாம், ‘நீ எங்க வூட்டுப் பொண்ணும்மா’ என்று சொல்லி வாழ்த்துகிறார்கள். சினிமாவோ, விளம்பரமோ... தொடர்ந்து மக்களை சந்தித்துக்கொண்டிருக்கிறேன். அதுதான் எனக்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருகிறது’’ என்று ஒரு மேடையில் பேசும்போது குறிப்பிட்டார் சினேகா.
’ஆனந்தம்’ படத்துக்காக தமிழக அரசின் விருது வாங்கியிருக்கிறார். மேலும் பல விருதுகளும் விஜய் அவார்ட் முதலான அங்கீகாரங்களுக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
1981 அக்டோபர் 12-ம் தேதி பிறந்த சினேகா, இன்னும் இன்னும் வாழ்த்துகளையும் விருதுகளையும் குவித்துக்கொண்டே இருப்பார்.