ஒரே குடியிருப்பில் வசிக்கும் பதின்பருவச் சிறுவர்கள் சிலர், ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். இதில் ஒருவரின் பாட்டி வசிக்கும் கிராமத்தில் நிகழ்வதாக நம்பப்படும் அமானுஷ்யங்களைக் காண்பதற்காக, பள்ளிக்கு கட் அடித்துவிட்டுச் செல்கிறார்கள். காட்டுப் பகுதியில் செல்லும்போது அவர்களில் 5 பேர் ஒவ்வொருவராகத் தொலைந்து விடுகிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற பதற்றத்துடனும் நண்பர்களை காணாத துக்கத்துடனும் எஞ்சியுள்ள சிறுவர்கள் பயணத்தைத் தொடர்கிறார்கள். இதற்கிடையே ஏலியன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஜனா (பார்த்திபன் ராதாகிருஷ்ணன்), ஏலியன்கள் தன்னைத் தொடர்பு கொள்வார்கள் என்று காத்திருக்கிறார். சில விசித்திர நிகழ்வுகளைக் கண்டு, சிறுவர்கள் சுற்றி அலையும் பகுதிக்கு அவர் வருகிறார். சிறுவர்கள் ஏன் தொலைந்தார்கள்? அவர்களுக்கு என்ன ஆனது? இதற்கும் ஜனாவின் ஆராய்ச்சிக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது மீதிப் படம்.
பரிசோதனை முயற்சிகளுக்குப் பேர்போன பார்த்திபன், இம்முறை பதின்பருவத்தினரின் சாகச உணர்வுடன் அறிவியல் மிகுபுனைவைக் கலந்து வித்தியாசமான படத்தைத் தர முயன்றிருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் பதின்பருவச் சிறுவர்கள் நிகழ்த்தும் உரையாடல் இன்றைய உயர்வர்க்க சிறுவர்களின் உலகுக்குள் சஞ்சரிக்க வைக்கிறது. பள்ளியிலிருந்து வெளியேறும் சிறுவர்கள் எடுக்கும் முடிவுகள் எதற்கும் ஏற்றுக்கொள்ளும்படியான காரணங்கள் இல்லை. ஆனாலும் ஒவ்வொருவராகத் தொலைந்துபோகும்போது பிற சிறுவர்களுக்கு ஏற்படும் பதற்றம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
அந்த வகையில் முதல் பாதி அலுப்புத் தட்டாமல் நகர்கிறது. இடையிடையே பார்த்திபனின் வழக்கமான வார்த்தை விளையாட்டுகளும் அதில் தெறிக்கும் சமூகப் பகடியும் ரசிக்க வைக்கின்றன. ஆனால் அவையே சில இடங்களில் சீரியஸான காட்சிகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவும் அமைந்து விடுகின்றன.
இரண்டாம் பாதியில் படம் அறிவியல் மிகு புனைவு வகைமைக்குத் தடம் மாறுகிறது. ஆனால் இது தொடர்பான விளக்கங்கள் அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படாத அமானுஷ்யங்களை, அறிவியலைப் போல் முன்வைப்பதாக அமைந்திருக்கின்றன. இவற்றைப் பின் தொடர்வதும் புரிந்துகொள்வதும் சிரமமாக இருக்கின்றன. ஜனாவுக்கும் சிறுவர்களுக்கும் நிகழும் உரையாடலும் அப்போது நிகழும் சம்பவங்களும் சில இடங்களில் புன்னகையை வர வைக்கின்றன.
எட்டு ஆண்கள், ஐந்து பெண்கள் என 13 சிறுவர்களுமே அர்ப்பணிப்புடன் நடித்திருப்பது படத்துக்குப் பலம். இவர்களின் பாத்திரப் படைப்பிலும் சில சுவாரஸியங்கள் உள்ளன. அதே நேரம் பதின்பருவ ஈர்ப்பை காதலாக மிகைப்படுத்தும் காட்சிகளும் பாடல்களும் தேவையற்றத் திணிப்புகள்.
பார்த்திபனின் நடிப்பில் குறை இல்லை. யோகிபாபு 2 காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார். பிற கதாபாத்திரங்கள் எதுவும் தாக்கம் செலுத்தவில்லை. டி.இமானின் பின்னணி இசை திரைக்கதையின் மர்மத்தன்மைக்கும் சுவாரஸியத்துக்கும் துணைபுரிகிறது. கவாமிக் யூ.ஆரியின் ஒளிப்பதிவு கதையோடு பயணிக்க உதவி இருக்கிறது. ஒட்டுமொத்த கதை, திரைக்கதையில் குறைகள் இருந்தாலும் புதுமையான களம், வித்தியாசமான கதாபாத்திரங்கள், காட்சிகள் ஆகியவற்றுக்காக இவர்களின் பயணத்தில் இணையலாம்