பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பிரபல இந்தி இயக்குநர் சஜித் கானை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சருககு மகளிர் ஆணைய தலைவி கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் சுவாதி மலிவால். இவர் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில்," இந்தி மொழியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் பிரபல இந்தி இயக்குநர் சஜித் கானும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இவர் மீது மீ டூ இயக்கத்தின்போது, 10 பெண்கள் தங்களுக்கு சஜித் கான் பாலியல் புகார் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தனர். இது சஜித்கானின் கேவலமான மனநிலையைக் காட்டுகிறது. அப்படிப்பட்டவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். இது மிகவும் தவறானது. எனவே, உடனே அவரை நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். அவரது கடிதத்தை தனது சமூக வலைப்பக்கத்தில் சுவாதி மலிவால் வெளியிட்டுள்ளார். மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மலிவாலின் கோரிக்கைக்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சஜித்கான் தொடர்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.