ராஜபாட்டை நடத்தும் ராஜமெளலி!


எஸ்.எஸ்.ராஜமௌலி

’ஜக்கன்னா’ என்றால் யாரென்று நமக்கெல்லாம் தெரியுமா? ஆனால், நெருங்கிய வட்டாரத்தில் அவரைச் செல்லமாக அப்படித்தான் அழைக்கிறார்கள். இந்தியா முழுவதுமான திரைவட்டாரம், சமீப ஆண்டுகளாக, பெருமையும் கம்பீரமுமாக உச்சரித்துக்கொண்டிருக்கிறது அவர் பெயரை. அவர்... எஸ்.எஸ்.ராஜமெளலி.

அவரின் திரையுலக வாழ்க்கையை ‘பாகுபலி’க்கு முன்... ‘பாகுபலி’க்குப் பின் என்றுதான் பிரிக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட ராஜமெளலி, ஆந்திரத்தில் ஜெயித்து, தமிழிலும் வெற்றி பெற்று, இன்றைக்கு இந்தியாவே உச்சரிக்கப்படுகிற, உற்று கவனிக்கப்படுகிற மிகப்பெரிய இயக்குநராக வளர்ந்திருக்கிறார்.

பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, திரைத்துறைக்குள் நுழைய கனவு கண்டவருக்கு, தொலைக்காட்சித் தொடர்களில் வாய்ப்புகள் கிடைத்தன. பிரபல இயக்குநர் கே.ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலில், தொலைக்காட்சி சீரியல்களில் பணிபுரிந்தார். இவர் இயக்கிய சீரியல்கள் அனைத்துமே புதுவிதமாக இருந்தன. எல்லோரையும் கவர்ந்தன. இந்த சமயத்தில்தான் 2001-ம் ஆண்டு, திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது ராஜமெளலிக்கு.

எஸ்.எஸ்.ராஜமெளலி

இயக்குநர் கே.ராகவேந்திர ராவ் படத்தைத் தயாரிக்க, அவரிடம் இருந்த ராஜமெளலி படத்தை இயக்கினார். ஜூனியர் என்.டி.ஆர். நடித்த அந்தப் படத்தின் பெயர்... ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’. ஜூனியர் என்.டி.ஆருக்கு கிடைத்த முதல் மிகப்பெரிய வெற்றிப் படம் இதுதான். இந்தப் படம் தமிழில் சிபிராஜை வைத்து ரீமேக் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

இதையடுத்து, 2003-ம் ஆண்டு ‘சிம்மாத்ரி’ எனும் படத்தை இயக்கினார். படம் அதிரிபுதிரி ஹிட்டானது. தமிழில் விஜயகாந்த் நடிக்க ‘கஜேந்திரா’ என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். தெலுங்கில் அடைந்த வெற்றியில் பாதியைக் கூட தமிழில் பெறமுடியவில்லை.

2004-ம் ஆண்டு ‘சை’ என்ற படத்தை இயக்கினார் ராஜமௌலி. இதுவும் எல்லோராலும் பாராட்டப்பட்டது. தெலுங்கில் வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் என்று ராஜமெளலி பேசப்பட்டார். ’சத்ரபதி’ என்ற படமும் ‘விக்கிரமுடு’ என்ற படமும் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றன. இதில் ‘விக்கிரமுடு’ படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. சிவா இயக்கினார். ‘சிறுத்தை’ எனும் பெயரில் கார்த்தி நடித்து வெளிவந்த இந்தப் படம், சிவாவை, ‘சிறுத்தை’ சிவா என்றே அழைக்கும் அளவுக்கு வெற்றி பெற்றது.

'யமதொங்கா’ படமும் ’மகதீரா’ படமும் அடைந்த வெற்றியைக் கண்டு தெலுங்குத் திரையுலகே ஆச்சரியத்துடன் ராஜமெளலியைப் பார்த்தார்கள். ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத், மிகச்சிறந்த கதையுணர்வு கொண்ட எழுத்தாளர். சினிமாவுக்கான திரைக்கதை மொழியையும் நன்கு அறிந்தவர். ராஜமெளலியின் படங்களுக்கு அப்பா கதையில் உதவி செய்ய, காஸ்ட்யூம்ஸ்க்கு மனைவி ரமா உதவி செய்துவருகிறார். தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது அவரின் திரைப்பயணம்.

எஸ்.எஸ்.ராஜமௌலி

ஆங்கிலப் படத்தின் பாதிப்பால் ஈர்க்கப்பட்டு, அதை இன்ஸ்பிரேஷனாக வைத்துக் கொண்டு ‘மரியாத ராமண்ணா’ என்ற படம் எடுத்தார். படம் முழுக்க ரசித்துச் சிரித்தார்கள் தெலுங்கு ரசிகர்கள். இந்தப் படமும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. நடிகர் சந்தானம் நடிக்க, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ தான் தெலுங்கு ‘மரியாத ராமண்ணா’.

இறந்த பிறகு ஆவியாக வந்து பழி வாங்கும் படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆவி மனிதரின் உடலுக்குள் புகுந்து பழிக்குப் பழி வாங்கும் படங்களைக்கூட நம்பி பார்த்திருக்கிறோம். இறந்தவரின் ஆத்மா, ஒரு ஈக்குள் புகுந்துவிட, அந்த ஈ, வில்லனைப் பழிவாங்குகிறது என்று சொன்னாலே ‘கேக்கறவன் கேனப்பயலா இருந்தா எருமைமாடு ஏரோப்ளேன் ஓட்டுதாம்’னு கிண்டல் பண்ணுவோம்தானே. ஆனால், ஒரு ஈ, வில்லனைப் பழிவாங்கும் படத்தை எடுத்து, அதையும் தமிழிலும் தெலுங்கிலுமாக எடுத்து மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தார் ராஜமௌலி.

இந்தப் படங்களெல்லாமே ராஜமெளலியை மிகச்சிறந்த இயக்குநர் வரிசையில் உட்கார வைத்தது. ‘நான் ஈ’ முதலான படங்கள் தமிழகத்திலும் ராஜமெளலியின் பெயரை பிரபலப்படுத்தியது.

இதன் பின்னர், அப்பா விஜயேந்திர பிரசாத் சரித்திரப் புனைவுக் கதை ஒன்றைச் சொல்ல, அதை திரைக்கதையாக விரிவுபடுத்தத் தொடங்கினார் ராஜமெளலி. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் உதவியுடனும் பிரம்மாண்டமான செட்டுகளுடனும் ஏகப்பட்ட நடிகர் நடிகைகளுடனும் மிகுந்த பொருட்செலவில், பான் இந்திய படமாக ‘பாகுபலி’யை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியிட்டார்.

‘பாகுபலி’யைப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள், திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். நண்பர்களுடன் சேர்ந்து, குடும்பத்தினருடன் சேர்ந்து என்றெல்லாம் ஐந்தாறு முறை பார்த்தார்கள். ‘கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்னான்?’ என்பதுதான் அந்த வருடமும் அடுத்த பாகம் வரும் வரையிலும் டாப்பிக்காக இருந்தன. அநேகமாக, படத்தின் இரண்டாம் பாகம் என்பதை முதல் பாகத்திலேயே சொல்லி, வெளியிடப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.

‘பாகுபலி 2’ இன்னும் பல மடங்கு வெற்றியை வாரிக்குவித்தது. தமிழகத்திலும் மலையாளத்திலும் கன்னடத்திலும் பிடித்த இயக்குநர்கள் வரிசையில் எஸ்.எஸ்.ராஜமெளலியையும் சேர்த்துச் சொன்னார்கள் ரசிகர்கள். நம்மூரில், பாலுமகேந்திரா, மகேந்திரனெல்லாம் இளையராஜா இசை இல்லாமல் படம் பண்ணியதில்லை அல்லவா. அதேபோல் ராஜமெளலி படங்கள் அனைத்துக்குமே மரகதமணிதான் இசை. இருவருக்கும் அப்படியொரு காம்பினேஷன் ஒத்துப்போனது. தெலுங்கில் மரகதமணிக்கு ‘கீரவாணி’ என்று பெயர். பாடல்களையும் ஹிட்டாக்கி விடுவார். பின்னணி இசையிலும் புகுந்துவிளையாடிவிடுவார்.

இந்தக் கூட்டணியுடன், அடுத்து களமிறங்கிய ‘ஆர்.ஆர்.ஆர்.’ படமும் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. நல்ல வசூலையும் வாரிக்குவித்தது. திரையுலகுக்கு வந்து இந்த 21 ஆண்டுகளில், இந்திய அளவில் ராஜமெளலிக்கு மார்க்கெட் வேல்யூ உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனாலும் அமைதியும் தன்னடக்கமுமாக எல்லோரிடமும் அன்புடன் பேசுகிற, தன் வெற்றி எதையுமே தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதவராக, இயல்பானவராகவே இருக்கிறார்.

ஸ்ரீசைல ஸ்ரீ ராஜமெளலி என்கிற எஸ்.எஸ்.ராஜமெளலி என்கிற ’ஜக்கன்னா’வுக்கு (அக்டோபர் 10-ம் தேதி) இன்று பிறந்தநாள்.

வாழ்த்துகள் ராஜமெளலி சார்!

x