வெற்றியும் தோல்வியும் இரவும் பகலும் போலத்தான். ஆனால், இதை அப்படியெல்லாம் ஏற்றுக்கொள்பவர்கள் குறைவுதான். வெற்றி வந்தால் சந்தோஷம். தோல்வியென்று வந்துவிட்டால் அவ்வளவுதான். அதிலும் தோல்வி மேல் தோல்வி என்பதே வாழ்க்கையாகிவிட்டால்... துவண்டு சுருங்கிக் கொள்வார்கள்.
ஆனால், தன் வாழ்க்கையில் நிகழ்ந்த அத்தனைத் தோல்விகளையும் அப்படியே புறந்தள்ளிவிட்டு, வாழ்நாள் முழுவதும் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருந்தவர்களில், பயணித்துக் கொண்டே இருந்தவர்களில் மிக முக்கியமானவர் ஆச்சி என எல்லோராலும் அழைக்கப்படுகிற மனோரமா! ஆண் பெண் என எல்லோருக்குமே, வாழ்தலுக்கான ஆகச்சிறந்த உதாரண மனுஷி இவர்.
’’நாமளும் சினிமால நடிப்போம், ஜெயிப்போம்’’ என்றெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை மனோரமா. மன்னார்குடிதான் பூர்விகம். கோபி சாந்தாதான் நிஜப்பெயர். அம்மாவின் பாசம் கிடைத்தது என்றாலும் அப்பாவின் பாசம் என்பது மருந்துக்கும் கிடைக்காமல் போனது. அம்மாவின் தங்கையையே அப்பா திருமணம் செய்துகொண்டு, அம்மாவையும் மளைவையும் வீட்டைவிட்டே துரத்திவிட்டார். கோபிசாந்தாவின் வாழ்க்கையே தன் வாழ்க்கை என அவரின் அம்மா காரைக்குடி பக்கமுள்ள பள்ளத்தூருக்கு வந்தார்.
பள்ளத்தூருக்கு அருகில் உள்ள கோட்டையூரில் இருந்து என் தாத்தா சைக்கிளில் என்னை அழைத்துக் கொண்டு பள்ளத்தூருக்கு யாரையோ பார்ப்பதற்கு வந்தார். ஓரிடத்தில் சைக்கிளை நிறுத்தினார். ‘இதோ... இந்த இடத்துல அம்மாவும் பொண்ணும் உக்கார்ந்துக்கிட்டு, முறுக்கு, அதிரசம்னு பலகாரம் வித்தாங்க. இப்ப அவங்க பொண்ணு பெரிய நடிகையாயிட்டாங்க. அந்த நடிகையை உனக்குத்தெரியும். ‘வா வாத்யாரே வூட்டாண்டே நீ வராங்காட்டி நான் வுடமாட்டேன்’ பாட்டைப் பாடி நடிச்சது யாரு?’’ என தாத்தா கேட்டதும் நான் ‘’மனோரமா’’ என்று சொன்னதுமான பால்யம் நினைவில் இருக்கிறது. கோபிசாந்தாதான் பின்னாளில் மனோரமா என்றானார்.
சிறுமி கோபி சாந்தா சூட்டிகையாக இருந்தார். துறுதுறுவென சுறுசுறுவென இருந்தார். பள்ளத்தூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சென்று வேலை பார்த்தார். கோயில் திருவிழாவும் திருவிழாவில் போடப்படுகிற நாடகங்களும்தான் மிகப்பெரிய பொழுதுபோக்கு. நாடகங்களைப் பார்த்துவிட்டு, அந்த வசனங்களையெல்லாம் அட்சரம் பிசகாமல் சொல்லிக் காட்டினார். பள்ளத்தூரே வியந்து பார்த்தது. இதைப் பார்த்துவிட்டு ஆச்சியை நாடகத்தில் நடிக்க அழைத்துக் கொண்டார்கள். அந்த நாடகத்தில் கோபி சாந்தாவின் நடிப்பைப் பார்த்துவிட்டு, நடிகர் எஸ்.எஸ்.ஆர். தன் நாடகங்களில் சேர்த்துக் கொண்டார். ஒவ்வொரு நாடகத்திலும் தன் நடிப்பால் கவனம் ஈர்த்தார். கோபி சாந்தா எனும் ஐந்தெழுத்து மனோரமா என்று நான்கெழுத்தானது. பிறகு திரையுலகில் நடித்து ஜெயித்து ‘ஆச்சி’ என்று மூன்றெழுத்தாக சுருங்கியது. ஆனால், மனோரமா தொட்ட உயரங்களும் வெற்றிகளும் அசாதாரணம். நாடகத்தில், இவர் நடிப்புக்கு மட்டுமின்றி பாடியதற்கும் கைதட்டல்கள் கிடைத்துக் கொண்டே இருந்தன.
கவியரசர் கண்ணதாசன் தான் தயாரித்த படத்தில், நடிக்க வைத்து அறிமுகப்படுத்தினார். மன்னார்குடியில் இருந்து பள்ளத்தூர் வந்தவர், பள்ளத்தூரில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்தார். கோபிசாந்தா இப்போது மனோரமாவாகி, வரிசையாக நடிக்கத் தொடங்கியிருந்தார்.
சின்னச்சின்ன வேடங்களில்தான் நடித்தார். பிறகு காமெடி வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். மனோரமாவின் முகபாவங்களும் நக்கலான பேச்சும் அவரின் வித்தியாசமான உடல்மொழியும் எல்லோரையும் கவர்ந்தன. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ஆர், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என எல்லோர் படங்களிலும் நடித்தார். கருணாநிதி வசனத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாகவும் நாடகத்தில் தோன்றினார். எண்பதுகளில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், முரளி, மோகன் என எல்லோரிடமும் ரவுண்டு வந்தார். அடுத்த தலைமுறை நடிகர்களான அஜித், விஜய், விக்ரம், விஷால் என மூன்று நான்கு தலைமுறை நடிகர்களுடளுடனும் இயக்குநர்களுடனும் நடித்தார்.
நகைச்சுவைக் கலைஞர்களான ஏ.கருணாநிதி, கே.ஏ. தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன் என ஏகப்பட்ட காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். யாருடன் நடித்தாலும் அவர்களுக்கு சரியான ஜோடியாகப் புகழப்பட்டார் மனோரமா. ஏவி.எம். படங்களில் நடித்தார். தேவர் பிலிம்ஸ் படங்களில் நடித்தார். ஸ்ரீதர், பாலசந்தர் முதலானோர் படங்களில் நடித்தார். பீம்சிங், பந்துலு, ஏ.பி.நாகராஜன் என மிகப்பெரிய ஜாம்பவான் இயக்குநர்களின் படங்களிலெல்லாம் நடித்தார்.
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்குத் தக்கபடி தன்னைப் பொருத்திக்கொள்கிற ஆற்றலும் திறமையும் மனோரமாவின் தனி ஸ்பெஷல். சின்ன வேடம், பெரிய வேடம், காமெடி வேடம், குணச்சித்திர வேடம் என்றெல்லாம் இல்லாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார்.
அம்மாவுக்கு நேர்ந்தது போலவே இவரின் வாழ்விலும் சோகமும் துயரமும் நுழைந்து அமைதியைக் கலைத்துக் குலைத்தன. நாடகத்தில் நடிக்கும்போதே உடன் நடித்தவரைக் காதலித்து பின்னர் திருமணம் செய்துகொண்டார். குழந்தையும் பிறந்தது. ஆனால் அதன் பின்னர், மனோரமாவை விட்டுவிட்டு கணவர் எங்கோ போய்விட, ‘’உனக்கும் புருஷன் சரியில்ல, எனக்கும் புருஷன் சரியில்ல. நமக்கு நாமதான் துணையா இருக்கணும்’’ என்று அம்மாவை பெண் ஆறுதல் சொல்ல, மகள் அம்மாவுக்கு ஆறுதல் சொல்ல, அம்மாவும் மகனுமே உலகம் என்று அவர்களுக்காகவே நடித்தார்.
சம்பாதித்தார். சொத்துகள் சேர்த்தார். இரவென்றும் பகலென்றும் பாராமல், தனக்கென ஆசையேதும் வைத்துக்கொள்ளாமல் நடித்துக் கொண்டே இருந்தார் மனோரமா. ஜெயித்துக் கொண்டே இருந்தார். பாலசந்தரின் ‘எதிர்நீச்சல்’ படத்தில் மனோரமாவுக்கு காமெடி ரோல் இல்லை. ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தில் கலகல ரோலை கனக்கச்சிதமாகச் செய்திருப்பார்.
‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் சிவாஜி, பத்மினியைக் கடந்து, நமக்குள் ஜொலித்த ஜில்ஜில் ரமாமணியை மறக்கமுடியுமா என்ன? சிவாஜி ‘மண்டு மண்டு’ என்பார். ‘ஏன்ன்ன்ன்ன்ன்...’ என்று இழுத்து மனோரமா பேசுகிற செட்டிநாட்டு பாஷை, மனோரமாவுக்கே உண்டான ஸ்பெஷல். காரைக்குடிப்பக்கம், பெண்களை ‘ஆச்சி’ என்று அழைப்பார்கள். பள்ளத்தூரில் இருந்த மனோரமாவை, நகரத்தார் என்று நினைத்தார்களோ என்னவோ... அல்லது மரியாதையாய் அழைக்கவேண்டும் என்றோ என்னவோ... ‘ஆச்சி’ என்று அழைத்தார்கள். ’தெரியாதோ நோக்கு தெரியாதோ...’ என்று பிராமண பாஷையிலும் ‘வா வாத்யாரே வூட்டாண்டே நீ வராங்காட்டி நான் வுடமாட்டேன்’ என்று சென்னை பாஷையிலும் என எத்தனையோ பாடல்கள் பாடி அசத்தியிருக்கிறார். ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தில் பாட்டிதான் நாயகி. பாட்டிதான் மனோரமா. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மெட்ராஸை சுத்திப் பாக்கப் போறேன்’ என்று பாடியதும் மிகப்பெரிய ஹிட்டடித்தது.
அறிஞர் அண்ணாவுடன் நடித்திருக்கிறார் ஆச்சி. ‘உதயசூரியன்’ நாடகத்தில் மு.கருணாநிதிக்கு ஜோடியாக நடித்தார். எம்ஜிஆருடனும் சிவாஜியுடனும் எக்கச்சக்க படங்களில் நடித்தார். ஜெயலலிதாவுட்ன் நடித்திருக்கிறார்.
அதேபோல், கே.பாலாஜி தயாரித்த பெரும்பாலான மனோரமாவுக்கு ஓர் அற்புதமான கேரக்டர் உண்டு. ஏ.பீம்சிங், ஏபி.நாகராஜன், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கே.பாலசந்தர், கே.பாக்யராஜ், ஷங்கர் என இன்றைய இயக்குநர்கள் வரை மிகப்பெரிய ரவுண்டு வந்தவர் மனோரமா.
’புதிய பறவை’ யில் வேலைக்கார கதாபாத்திரம். ‘அன்பே வா’ படத்திலும் வேலைக்கார கேரக்டர். ஆனால், இரண்டுக்கும் மலையளவு வித்தியாசங்கள் காட்டியிருப்பார், ’சூரியகாந்தி’ முதலான படங்களில் இவரின் தனித்துவமான நடிப்பு ரசிக்கவைத்தது. பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ படத்திலும் ‘ஆராரோ ஆரிரரோ’ படத்திலும் மிகச்சிறந்த கேரக்டரைக் கொடுத்து அசத்தச் செய்திருப்பார் பாக்யராஜ். ‘ஜென்டில்மேன்’, ‘காதலன்’, ‘இந்தியன்’ என தொடர்ந்து தன் படங்களில் ஆழமான, அற்புதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து மனோரமாவின் நடிப்பில் நம்மையெல்லாம் பிரமிக்க வைத்திருப்பார் ஷங்கர்.
’பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே... நான் போயி வந்தேண்டி அவ புடவை நல்லால்லே...’ என்பது உள்ளிட்ட எத்தனையோ பாடல்களைப் பாடிய மனோரமா, தெலுங்குப் பாடல் கூட பாடியிருக்கிறார். ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் கண்ணம்மா மனோரமா வெளுத்து வாங்கியிருப்பார். அந்த ‘கண்ணம்மா...’ ‘கம்முன்னு கிட...’ என்பதை இன்னும் மறக்கவில்லை ரசிகர்கள்!
ஒருபக்கம் அம்மாவை குழந்தையைப் போல் பார்த்துக் கொண்டார். இன்னொரு பக்கம்... மகனை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். வலி, வேதனை குறித்து நினைக்கக்கூட நேரமில்லாமல், படங்களில் நடித்துக்கொண்டே இருந்தார் மனோரமா. ’சின்னதம்பி’, ’சின்னக்கவுண்டர்’ மாதிரி எத்தனையோ படங்களில் தன் குணச்சித்திர நடிப்பாலும் வட்டார மொழி வசன உச்சரிப்பாலும் நம்மை ஈர்த்துக் கொண்டே இருந்தார். நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தார். மனோரமா எனும் ஆச்சியின் அசாத்திய சாதனை இதுதான்! இதையடுத்துதான் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கையும் கின்னஸ் சாதனையும்!
1937-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிறந்த மனோரமாவை ‘பொம்பள சிவாஜி’ என்றே சொல்லுவார்கள். 2015-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி ஆச்சி மறைந்தார். சிவாஜிக்கு ஜோடியாகவும் ‘ஞானப்பறவை’ எனும் படத்தில் நடித்தார்.
மணி ரத்னம், கமல், இளையராஜா கூட்டணியில் உருவான நாயகன் படத்தைப் பார்த்துவிட்டு, பிரமித்துப் போனாராம் மனோரமா. அத்துடன் நின்றுவிடாமல், “படத்துல வேலு நாயக்கருக்காக தீக்குளிக்கிற காட்சில ஒரு அம்மா வருவாங்களே. அந்தக் காட்சியை எனக்குக் கொடுத்திருந்தா, அப்பேர்ப்பட்ட படத்துல நாமளும் நடிச்சிருக்கோம்னு பெருமையா இருந்திருக்கும்” என்று புலம்பிக் கொண்டே இருந்தாராம் ஆச்சி. இவர் எத்தனையோ வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும் கலையின் மீது உண்மையான காதலையும் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடனே இருப்பதையும் கண்டு மலைத்துப் போனார்கள் பலரும்!
மனோரமா ஆச்சியை பேட்டிக்காக ஒருமுறை அவர் வீட்டுக்குச் சென்று பார்க்கும் போது, நடக்கமுடியாமல் நடந்து வந்தார். நைட்டியுடன் இருந்தார். ‘’போட்டோ பிடிக்காதீங்க தம்பி. பழைய படங்களையே வைச்சிக்கங்க’’ என்றார். அந்தப் பேட்டியை முடித்துவிட்டு கிளம்புகிறவேளையில் மழை. ‘’மழை ஆரம்பிச்சிருச்சா? சித்த உக்கார்ந்துட்டுப் போங்க கண்ணு’’ என்று சொல்லிவிட்டு பேட்டியைக் கடந்து நிறைய விஷயங்கள் பேசினார்.
‘’சிவாஜி அண்ணன் வீடு வழியாத்தானே போவீங்க. அவர் வீட்டு வாசல்ல இருக்கிற பிள்ளையாரை கும்பிட்டுப்போங்க. ரொம்ப சக்திவாய்ந்தவர் தம்பீ’’ என்றார். “அண்ணன் மட்டும் என்ன... என் அம்மா இறந்தப்ப என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சுக் கிடந்தேன். சிவாஜி அண்ணன் வந்து, ‘நான் இருக்கேன்’ன்னு சொல்லிட்டு, அம்மாவோட ஈமக்காரியங்களையெல்லாம் செஞ்சாங்க! அவர்தான் கொள்ளி போட்டாரு. அவரையும் இழந்துட்டு நிக்கிறேன்’’ என்று நெகிழ்ந்து விசும்பினார் மனோரமா.
“அழாதீங்கம்மா” என்ற போது சட்டென்று சுதாரித்துக் கொண்டு, “எவ்வளவோ அழுதாச்சு தம்பீ. இதோ... மழை லேசா விட்ருச்சுபோல. குடை தரட்டுங்களா கண்ணு’’ என்று வாசல் வரை என் தோள் பிடித்து நடந்துவந்து, வழியனுப்பி வைத்தார் புன்னகைத்தபடி! அதுதான் ஆச்சி மனோரமாவின் அன்புமனசு!
- ஆச்சி மனோரமாவின் நினைவுதினம் (அக்டோபர் 10) இன்று.