பாட்டு எழுதுவதிலும் மெட்டுக்குப் பாட்டு எழுதுவதிலும் கைதேர்ந்தவர் கவிஞர்கள்தான், நம் மனதில் இடம்பிடிக்க முடியும். அப்படி, தன் வசீகர வரிகளால் நம்மை ஈர்த்த பாடலாசிரியர்களில் கவிஞர் பிறைசூடனும் முக்கியமானவர்.
1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் அருகே உள்ள நன்னிலத்தில்தான் பிறந்தார். சந்திரசேகரன் என்கிற பெயரை, பின்னாளில் தமிழ் மீது காதலால், பிறைசூடன் என்று அப்படியே மாற்றிக்கொண்டார். இளம் வயதிலிருந்தே கவிதையிலும் கவியரங்கத்திலும் பெயர் பெற்ற பிறைசூடன், நிறைய சிற்றிலக்கிய நூல்களில் கவிதைகளை எழுதினார். ஒருகட்டத்தில், சினிமாவுக்குப் பாட்டெழுதும் எண்ணம் மேலோங்க, அதற்கான முயற்சிகளைக் கையிலெடுத்தார்.
ஏகப்பட்ட முயற்சிக்குப் பிறகு, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறைசூடனின் வரிகளில் மயங்கி, முதல் வாய்ப்பை வழங்கினார். 1985-ல் இயக்குநர் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் எழுத்தாளர் அனுராதா ரமணனின் கதை ‘சிறை’ என்று படமானது. லட்சுமி, ராஜேஷ் நடித்த இந்தப் படத்தில், ’ராசாத்தி ரோசாப் பூவே’ என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரைப்படத் துறைக்குள் பாடலாசிரியராக நுழைந்தார். ஜேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடிய இந்தப் பாடல், அழகிய மெலடி லிஸ்ட்டில் இன்றைக்கும் இருக்கிறது.
எண்பதுகளில் பாட்டெழுத வந்த பலருக்கும் இருக்கும் ஒரே ஆசை... இளையராஜாவின் இசையில் பாட்டு எழுத வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. வரிசையாக பலரின் இசையில் பாட்டு எழுதிக்கொண்டிருந்த பிறைசூடனுக்கு அப்படியொரு வாய்ப்பும் வந்துசேர்ந்தது. ’சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக்கிளி, துள்ளித்துள்ளிப் பாடும் அன்னக்கிளி’ என்று ‘அன்னக்கிளி’ இளையராஜாவுடன் இணைந்தார். ’வானத்து அம்புலியை வரவழைக்க வேண்டுமென்று தனியாக தவமிருந்து வெகுநாளும் வேண்டிநின்றேன்’ என்ற வரிகள், ராமராஜனுக்கும் ரூபினிக்குமான வரிகளா... அல்லது அவர் இளையராஜாவுக்காக எழுதிய வரிகளா என்று அவருக்குத்தான் தெரியும்.
இளையராஜாவின் சொந்தப் படம். இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘ராஜாதி ராஜா’ படத்தில், ‘மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா’ பாடலை எழுதி ஹிட்டாக்கினார். படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட்டாகின. இந்தப் பாடல் அழகிய மெலடி டூயட்டாக அமைந்தது. பாடலின் வரிகள் பிடித்துப் போய், ரஜினிகாந்த் பிறைசூடனை அழைத்து ஒரு தொகையைப் பரிசாகக் கொடுக்க, ‘’இந்தப் பாட்டு எழுதினதுக்கு சம்பளம் கொடுத்துட்டாங்க வேணாம் சார்’’ என்று மறுத்துவிட்டதை பிறைசூடனே சொல்லியிருக்கிறார்.
தொடர்ந்து இளையராஜாவின் இசையில் பிறைசூடன் ஏராளமான பாடல்களை எழுதினார். பி.வாசுவின் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பணக்காரன்’ படத்தில் ‘நூறுவருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ என்ற பாடல், இன்றைக்கும் கல்யாண வீடுகளில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு, மண்டபத்தில் டான்ஸ் ஆடுகிற இளைஞர்களும் இருக்கிறார்கள். மிக இயல்பான வார்த்தைகளைப் போட்டு, கல்யாண தம்பதிக்கு அட்வைஸ் மழை பொழிந்திருப்பார்.
‘புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும் / பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும் / முதலில் யோசிக்கணும் பிறகு நேசிக்கணும் மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு / உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி இருந்தா ஊரறிய மாலை கட்டிப்போடு / சொத்து வீடு வாசல் இருந்தாலும் சொந்தம்பந்தம் எல்லாம் அமைஞ்சாலும் / உள்ளம் ரெண்டும் ஒட்டாவிட்டா கல்யாணம்தான் கசக்கும்’ என்று எளிமையாகவும் அதேசமயம் ஆழமாகவும் அட்வைஸ் சொல்லி அசத்தியிருப்பார் பிறைசூடன்!
பாடல்களுக்குள் எளிமை, இனிமை இந்த இரண்டும் முக்கியம் என்பதில் உறுதியாக இருந்தார் பிறைசூடன். இயக்குநர் வஸந்தின் முதல் படமான ‘கேளடி கண்மணி’யில் எல்லாப் பாடல்களுமே வெற்றி பெற்றன. ஆனாலும் ரமேஷ் அரவிந்த் - அஞ்சு டூயட் பாடலான, ‘தென்றல்தான் திங்கள்தான் நாளும் சிந்தும்’ என்ற பாடலும் அதற்கான இசையும் அவற்றைப் படமாக்கிய விதமும் என இளமை ராஜாங்கம் நடத்தியது! இன்றைக்குமான இரவுப் பாடல்களின் பட்டியலில், பிறைசூடனின் இந்தப் பாடலும் இருக்கிறது.
கவிதை எழுதுவது சுலபம். ஆனால் மெட்டு எனும் வரையறைக்கு உட்பட்ட வரிகளையும் போட வேண்டும். அது கவிதையாகவும் ஈர்க்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவால். அதனை பல பாடல்களில் வெகு அழகாகக் கையாண்டிருப்பார் பிறைசூடன். ராஜ்கிரண் முதன்முதலாக நடித்து கஸ்தூரி ராஜா இயக்கி, மீனா முதன்முதலாக நாயகியாக நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ . படத்தின் ஒவ்வொரு பாடலும் கதையின் கனத்தை நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கும். ‘சோலைப்பசுங்கிளியே...’ என்று இளையராஜா குரல் வரும்போதே நாம் உடைந்துவிடுவோம். பிறகு பாடலின் ஒவ்வொரு வரிகளும் நம்மை உலுக்கியெடுத்துவிடும். படம் பார்க்கும்போது அப்படியே உறைந்து வரிகளைக் கேட்டு எவருக்கும் தெரியாமல் அழுதவர்கள்தான் ஏகத்துக்கும் இங்கே! அந்த வரிகளுக்குதான் அரசின் விருது கிடைத்தது பிறைசூடனுக்கு!
விஜயகாந்தின் 100-வது படம் எனும் பெருமை கொண்டது ‘கேப்டன் பிரபாகரன்’ படம். இளையராஜாவின் இசையில் ஸ்வர்ணலதாவின் வசீகரக்குரலில் பிறைசூடனின் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாட்டுக்கு அசராமல் ஆடித்தீர்த்த இளைஞர் பட்டாளமே உண்டு. மேடைக் கச்சேரிகளில் இந்தப் பாடலைப் பாட ஆரம்பிக்கும்போதே, அங்கேயும் இங்கேயும் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக யார் யாரோ ஆடிக்கொண்டிருப்பார்கள். அந்த ஆட்டவரிகளைக் கொடுத்தவர் பிறைசூடன்.
பிரியதர்ஷன் இயக்கத்தில் வந்த ‘கோபுர வாசலிலே’ படத்தில் ‘காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ பாடலை இப்போது கேட்டாலும் அடுத்த வாரம் வெளியாகும் படத்துக்கான பாடலைப் போல் புதுமையாகவும் நவீனமாகவும் இருக்கும். நம்மை காதல் செய்யத் தூண்டும். இந்தப் பாடலும் அவரின் கைவண்ணம்தான். முரளி நடித்த ‘இதயம்’ படத்தின் ‘இதயமே... இதயமே...’ என்ற பாடல் ஆரம்பிக்கும்போதே நம் நெஞ்சம் கனத்துப் போகும். உள்ளே ஊடுருவி வருகிற வரிகளில், முரளியின் சோகம் நமக்குத் தொற்றிக்கொள்ளும். அதேநேரத்தில் கேயார் இயக்கிய ‘ஈரமான ரோஜாவே’ படத்தின் ‘கலகலக்கும் மணியோசை’ பாடல் உண்மையிலேயே நம்மைக் கலகலப்பாக்கிவிடும். இசையும் வரிகளும் ரெட்டை மாட்டு வண்டி போல் வந்து நம்மை எங்கோ கூட்டிச் செல்லும்.
‘என்னைத் தொட்டு... என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி / எனக்குச் சொல்லடி... விஷயம் என்னடி’ என்ற பாடலை அடிக்கடி கேட்கிறவர்களின் பட்டியலில் நானும் இருக்கிறேன். அந்தத் தாளமும் குரல்களும் புல்லாங்குழலும் வரிகளும் நம்மை குதூகல மழைக்குள் குடையுடன் நிற்கவைத்துவிடும்.
இசையமைப்பாளர்கள் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் முதலானோரின் இசையிலும் ஏராளமான பாடல்களை எழுதியிருக்கிறார் பிறைசூடன். ‘அமரன்’ படத்தில் ஆதித்யன் இசையில் நான்கு பாடல்களை எழுதினார். ‘வெத்தல போட்ட ஷோக்குல’ என்று கார்த்திக் பாடிய பாடலும் ‘சந்திரனே சூரியனே’ எனும் பாடலும் மிகவும் ஹிட்டான பாடல்களாக, படம் வருவதற்கு முன்பே முணுமுணுக்கப்பட்டன.
தேவா இசையில் தொடர்ந்து எழுதினார். இருவரின் கூட்டணியில் பல பாடல்கள் வெற்றி பெற்றன. அப்போதும் விருது வந்து இவரின் தோளில் விழுந்தது. நடுவே, தொலைக்காட்சி சீரியல்கள் பக்கமும் வந்தார். நடித்தார். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு வசனங்களும் எழுதி முத்திரை பதித்தார்.
ரஹ்மான் இசையிலும் நிறைய ஹிட் கொடுத்திருக்கிருக்கிறார் பிறைசூடன். கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து இயக்கி, கமல் நடித்த ‘தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ பாடலை எழுதினார். பிரசாந்த் நடித்த ‘ஸ்டார்’ படத்தில் ‘ரசிகா ரசிகா’ பாடலில் பல புதுமை வார்த்தைகளையெல்லாம் ஆங்காங்கே தூவியிருந்தார்.
தெலுங்கிலும் தமிழிலும் வந்த ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ படத்தில் தமிழுக்கான பாடல்களையும் வசனங்களையும் எழுதியதைக் கண்டு பலரும் வியந்து போனார்கள். வசனங்களை பல காட்சிகளில் கவிதையாக்கித் தந்திருப்பார். பக்தியிலும் ஈடுபாடு கொண்ட பிறைசூடன் பக்திப் பாடல்கள் கொண்ட கேசட்டுகள் நல்ல விற்பனையாயின.
‘எம் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ படத்தில், ‘புல்லைக் கூட பாடவைத்த புல்லாங்குழல்’ என்ற பாடலில் ‘ கவிதையைக் குழைத்து தேன் தடவிக் கொடுத்திருப்பார். கேள்வி என்றாலே ஒரு பதில் வேண்டுமே / கேட்டாலும் தரவே நல் மனம் வேண்டுமே / வீணை என்றாலே ஒரு விரல் மீட்டத்தான் / நாதம் வந்தாலே நல் சுகம் கூட்டத்தான்’ என்ற வரிகளில் சொக்கிப்போய்விடுவோம்.
தமிழ்த் திரையுலகில், எவரின் சாயலுமில்லாமல், புது பாணியுடன், தனக்கே உரிய எழுத்து ஜாலத்துடன் வெற்றி அடைந்த மகத்துவக் கவிஞன் பிறைசூடன். 2021 அக்டோபர் 8-ம் தேதி மறைந்தார். இனிய தமிழில் அவர் எழுதிய பாடல்களை அடுத்தடுத்த தலைமுறையினரும் கேட்டுக்கொண்டேதான் இருப்பார்கள்!