மோகன் 45: பயணங்கள் முடிவதில்லை!


’ஹரா’ படத்தில் மோகன்

நம் மனதில் ஒவ்வொருவருக்கும் இடம் கொடுத்திருப்போம். திரையுலகில் இப்படிப் பலருக்கும் இடம் கொடுத்து வைத்திருக்கிறோம். நடிகர் மோகனுக்கும் அப்படியான இடத்தைத் தந்திருக்கிறோம். எண்பதுகளில் தொடங்கிய மோகனுக்கும் நமக்குமான பந்தமென்பது, இன்றைக்கும் வரைக்கும் படமாகவோ, பாடல்களாகவோ தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த மோகனுக்கு சினிமாவில் நடிக்கிற ஆசையெல்லாம் இல்லை. அவரின் உச்சபட்ச ஆசை என்பது, ‘படிக்க வேண்டும், வேலைக்குப் போக வேண்டும், கைநிறைய சம்பளம் வாங்க வேண்டும், சினிமா - டிராமா என்று ஜாலியாகச் சுற்ற வேண்டும், திருமணம், குழந்தைகள் என்று செட்டிலாகிவிட வேண்டும்’ என்று சராசரியாக ஒவ்வொரு ஆணும் நினைப்பது போலத்தான் இருந்தன. ஆனால் காலம் அவரை திரைக்குள் கைப்பிடித்து அழைத்து வந்தது.

’’கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, வங்கி வேலைக்கு அப்ளை செய்திருந்தேன். வங்கியில் வேலையும் கிடைத்தது. அந்தச் சமயத்தில்தான், என் நண்பர் ஒருவர் மூலமாக நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ‘எனக்கு நடிக்கறதுல எல்லாம் விருப்பமே இல்லப்பா’ என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். ஆனால் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து என்னை நாடகத்தில் நடிக்கவைத்தார்கள். சினிமாவுக்குள் அடியெடுத்து வைக்க அதுதான் ஆரம்பம். இத்தனை வருடத் திரையுலக வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால், ஆச்சரியமாகவும் வியப்பாகவும் அதேசமயம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது’’ என்று மோகன் தொலைபேசியில் என்னிடம் பேசும்போது தெரிவித்தார். உண்மைதான். மோகன் திரைக்கு வந்து 45 ஆண்டுகளாகின்றன. இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகள், சுவாரசியமான திரைத் தருணங்கள் என இனிமையான நினைவுகளுடன் நிறைவாக வாழ்ந்துவருகிறார்!

’கோகிலா’வில் கமலுடன் மோகன்

மோகன் நடித்த நாடகத்தைப் பார்க்க, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திரா வந்திருந்தார். அப்போது அவர் ஒளிப்பதிவாளர் மட்டுமே. கமலிடம் பேசி ஒரு கதையைச் சொல்லி, படமாகப் பண்ணுவதாகவும் தான் இயக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். கன்னடத்தில் அந்தப் படத்தை எடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். நாடகத்தைப் பார்த்த பாலு மகேந்திரா, நடிகர் மோகனின் இயல்பான நடிப்பால் ஈர்க்கப்பட்டார். முகமும் சினிமா பூச்சுகள் ஏதுமின்றி பாந்தமாக இருக்கவே, ‘’நாளைக்கு வந்து என்னைப் பாருங்க’’ என்று மோகனிடம் சொல்லிச் சென்றார். இப்படியாகத்தான் கமல், ஷோபா, ரோஜாரமணி முதலானோருடன் மோகன் நடித்த ‘கோகிலா’ படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.

இந்தப் படம் 1977 அக்டோபர் 7-ம் தேதி வெளியானது. இதையடுத்து நண்பர்கள், ‘பேசாம சினிமால தொடர்ந்து நடி’ என்று வாழ்த்தினார்கள். ‘கோகிலா’ படத்தைப் பார்த்த இயக்குநர் மகேந்திரன், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் மோகனை நாயகனாக நடிக்க வைத்தார். பிரதாப், சரத்பாபு முதலானோர் நடித்த இந்தப் படத்தில்தான் சுஹாசினி அறிமுகமானார்.

முன்னதாக, பாலு மகேந்திரா பிரதாப், ஷோபாவை வைத்துக்கொண்டு எழுத்தாளர் ராஜேந்திரகுமாரின் கதையை ‘மூடுபனி’ எனும் பெயரில் படமாக்கினார். அதில் மோகனையும் நடிக்கவைத்தார். டைட்டிலில் ‘கோகிலா’ மோகன் என்றே போடப்பட்டது. புகைப்படக் கலைஞராக நான்கைந்து காட்சிகளில் நடித்திருப்பார் மோகன்.

இதன் பிறகுதான் இயக்குநர் துரை இயக்கத்தில், டி.ராஜேந்தரின் இசையில் ‘கிளிஞ்சல்கள்’ வெளியானது. மோகன், பூர்ணிமா பாக்யராஜ் (அப்போது பூர்ணிமா ஜெயராம்) நடித்த அந்தப் படம் வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. அநேகமாக, இந்தப் படத்தில்தான் டைட்டிலில், ‘கோகிலா’ எனும் முன்னொட்டு இல்லாமல் ‘மோகன்’ என்று தனியே பெயர் இடம்பெற்றது.

’நெஞ்சத்தைக் கிள்ளாதே’

இதேசமயத்தில், ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மோகன் ஒப்பந்தமானார். சுதாகர் கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தில் மொட்டையடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்கெல்லாம் தயாராகவே இருந்தார் மோகன். இந்தத் தருணத்தில், கமல், சரிதாவை வைத்து கே.பாலசந்தர் இயக்கிய தெலுங்குப் படமான ‘மரோசரித்ரா’, தமிழில் டப்பிங் செய்யப்படாமலேயே சென்னையில் 600 நாட்களைக் கடந்து ஓடியது. இந்தப் படத்தை தமிழில் எடுக்கும் முடிவில் இருந்தார் பாலசந்தர்.

‘’ஒருநாள் பாலசந்தர் சார்கிட்டேருந்து போன் வந்துச்சு. என்னை வரச்சொல்லியிருந்தார். நானும் போனேன். என்னைப் பாத்ததும் கோபமாயிட்டார் பாலசந்தர் சார். ‘என்னய்யா... மொட்டைத்தலையோட இருக்கே’ன்னு கேட்டார். நான் விஷயத்தைச் சொன்னேன். அப்படியே அஞ்சு நிமிஷம் அமைதியா இருந்தார். ‘சரி சரி... அந்தப் படத்தை நல்லாப் பண்ணு. அப்புறம் பாக்கலாம்’னு சொல்லி அனுப்பினார். ஏனோ தெரியலை... ‘மரோசரித்ரா’வை தமிழ்ல அவர் எடுக்கவே இல்ல. அது எனக்கு இன்னிக்கி வரைக்கும் வருத்தம்தான்’’ என்றார் மோகன்.

இதன் பின்னர்தான், இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில், மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரிப்பில், ‘பயணங்கள் முடிவதில்லை’ வந்தது. 300 நாள், 400 நாள் என்றெல்லாம் ஓடியது. மணிவண்ணனின் முதல் படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் நாயகனானார் மோகன். வரிசையாகப் படங்கள் வந்தன.

தயாரிப்பாளர்களின் நடிகர் என்று பேரெடுப்பது இங்கே மிக முக்கியம். தயாரிப்பாளர்களுக்குப் பிடித்த நடிகரானார் மோகன். இயக்குநர்களின் சிந்தனைகளுக்கு ஏற்றார் போல் நடிகர்கள் ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம். எல்லா இயக்குநர்களுடனும் தோழமையுடன் பழகினார். வரிசையாகப் படங்கள் வந்தன. அது... இளையராஜாவின் காலம். இசைஞானி இசையமைத்தால் படங்கள் பூஜையின்போதே விற்றுவிடும். ‘கோவைத்தம்பி, இளையராஜா, மோகன்’ என்றால் அப்படியே அள்ளிக்கொள்வார்கள் படத்தை.

கே.ரங்கராஜின் ‘உதயகீதம்’ மற்றொரு வளர்ச்சியை மோகனுக்குக் கொடுத்தது. இவரின் முதல் படமான ‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்திலும் மோகனே ஹீரோ. ஸ்டில்ஸ் ரவி நெருங்கிய நண்பரானார். அவருக்காகவே படம் நடித்துக் கொடுத்தார். மனோபாலா நல்ல பழக்கமானார். ’’அவரை இயக்குநராகப் போட்டால் நான் கால்ஷீட் தருகிறேன்’’ என்று ‘பிள்ளை நிலா’ வாய்ப்பை மோகன் வழங்கினார்.

இத்தனைக்கும் மோகன் அன்றைக்கு செம பிஸி. படத்தில் இரவுக்காட்சிகளே அதிகம். ஆகவே, மற்ற படங்களில் நடித்துமுடித்துவிட்டு, இரவு வீட்டுக்குச் செல்லாமல், நேராக ‘பிள்ளைநிலா’ படத்தில் நடிக்க வந்துவிடுவார். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

’பயணங்கள் முடிவதில்லை’

கோவைத்தம்பிக்கு மட்டுமின்றி சினிமாவில் சென்டிமென்ட் பார்ப்பது ரொம்பவே அதிகம். இதனால், கோவைத்தம்பி படங்களில் மோகன் நாயகனாக நடிப்பார். கால்ஷீட் இல்லையென்றால் வேறொரு நாயகன் நடிப்பார். இவர் வருவதற்கு ஏற்றார் போல் கெளரவ வேடங்கள் கொடுக்கப்பட்டன. ‘நான் பாடும் பாடல்’ படத்தில் அப்படித்தான் கெளரவ வேடத்தில் நடித்தார். போஸ்டரிலும் விளம்பரங்களிலும் மோகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஒருபக்கம்... மணிவண்ணன் ‘நூறாவது நாள்’, ‘24 மணி நேரம்’, ‘இளமைக்காலங்கள்’ என்றெல்லாம் தொடர்ந்து பயன்படுத்தினார். இன்னொரு பக்கம் ஆர்.சுந்தர்ராஜன், ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘தூங்காத கண்ணின்று ஒன்று’, ‘குங்குமச்சிமிழ்’, ‘மெல்லத்திறந்தது கதவு’ எனத் தொடர்ந்து நடிக்க வைத்தார். எண்பதுகளில் பிரபல இயக்குநர்கள் பலரும் மோகனுடன் இணைந்தார்கள். பூர்ணிமா ஜெயராம், நளினி, அம்பிகா, ராதா, ராதிகா, அமலா, ரூபினி, ரேவதி என மோகனுடன் ஜோடி சேராத நடிகைகளே அப்போது இல்லை.

ஒரு இடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திரா அழைத்தார். ராதிகா, அர்ச்சனாவுடன் மோகன் நடித்த ‘ரெட்டைவால் குருவி’ படத்தை இயக்கினார். இதற்கு முன்புதான் ‘மெளனராகம்’ வந்திருந்தது. இதுகுறித்து மோகன் என்னிடம் பேசும் போது சொன்னார்... ‘’என்ன மோகன், ‘மனைவி கேட்டானு டைவர்ஸ் கொடுக்கற கேரக்டர்ல நடிச்சு உனக்கு நல்ல பேர் ஜாஸ்தியாயிருச்சு போல இருக்கு. இந்தப் படத்துல வசமா மாட்டினே நீ. ‘என்ன இந்த மோகன், ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டு இப்படி ஏமாத்துறானே’ன்னு உன்னை எல்லாரும் திட்டப்போறாங்க பாரு’ன்னு எங்கிட்ட ஜாலியாச் சொல்லி கிண்டலடிச்சார். என் வாழ்க்கைல மணிரத்னம் சாரோட பண்ணின ‘மெளனராகம்’, ‘இதயக்கோயில்’ படங்களும் சரி, என் குருநாதர் பாலு மகேந்திரா சாரோட ஒர்க் பண்ணின எல்லாப் படங்களும் சரி... மறக்கவே முடியாது’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் மோகன்.

மோகன் என்றால் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, இயல்பான நடிகர் என்று பேரெடுத்தார். அதேசமயம், ‘விதி’, 'கோபுரங்கள் சாய்வதில்லை’ போன்ற படங்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் கலக்கினார். இயக்குநர் இராம.நாராயணன் மோகனை வைத்து எடுத்த காமெடிப் படங்கள் அனைத்தும் தனி ரகம்.

கமலுக்குப் பிறகு மோகனுக்குத்தான் பெண் ரசிகைகள் என்று சொல்லும் அளவுக்கு அமைதியான ரசிகர் கூட்டமும் படையும் இன்றைக்கும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இசைஞானி இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் மோகனுக்கென்றே பிரமாதமாக அமைந்தன.

டிடிகே 60, டிடிகே 80 என்று கேசட்டுகள் இருந்த காலம் அது. இளையராஜா - மோகன் பாடல்களை ஒரு பேப்பரில் எழுதிக்கொண்டு போய் மியூஸிக் சென்டரில் கொடுத்து பதிவுசெய்து போட்டுப்போட்டுக் கேட்டு வளர்ந்த ரசிகர்கள் உண்டு. பிறகு சி.டி காலம் வந்தது. வரிசையாக பாடல்களின் பட்டியல் இருக்கும். இளையராஜா - மோகன் கூட்டணியில் உள்ள ‘மோகன் காதல் பாடல்கள்’, ‘மோகன் சோகப் பாடல்கள்’, ‘மோகன் மேடைப் பாடல்கள்’, ‘மோகன் காதல் தோல்விப் பாடல்கள்’ என்றெல்லாம் டைட்டில் போட்டு சி.டி-க்கள் சக்கைப்போடு போட்டு விற்பனையாகின. டிராவல்ஸ் கார்களிலோ, சொந்தக் காரிலோ பயணிப்பவர்கள், பஸ் டிரைவர்கள் என அனைவரும் மோகன் பாடல்களை ஒலிபரப்பி கேட்டுக்கொண்டே பயணிப்பதை இன்னும் வழக்கமாகவும் பழக்கமாகவும் கொண்டிருக்கிறார்கள்

‘’என் திரைப்பயணம், ‘கோகிலா’வுல ஆரம்பிச்சு 45 ஆண்டுகளாகியிருக்கு. இதுக்கு வாழ்த்துகள் சொன்ன உங்களுக்கும் ‘இந்து தமிழ் திசை - காமதேனு’வுக்கும் நன்றி. ஆனா நிறைய பத்திரிகைகள், ஊடகங்கள், என்னை ‘மைக்’ மோகன் ‘மைக்’ மோகன்னு குறிப்பிட்டு எழுதுறாங்க. ‘மைக்’ பிடிச்சிட்டு நடிச்சதெல்லாம் குறைவுதான். ஆனா அதையே ஒரு அடையாளமாச் சொல்றது வருத்தமா இருக்கு. மத்தபடி, என் ரசிகர்களுக்கு மட்டுமில்லாம, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கு நான் நடிச்சிட்டிருக்கிற ‘ஹரா’ ரொம்பவே பிடிக்கும்’’ என்பதையும் பகிர்ந்துகொண்டார் மோகன் (தலைப்பில் மட்டுமல்ல... கட்டுரையிலும் ‘மைக்’ இடம்பெறாது மோகன் சார்).

’ஹரா’ மோகன்

எண்பதுகளில், கமல் படமோ ரஜினி படமோ வந்தாலும் கூட, மோகன் படங்கள் கூடுதலாக வசூல் செய்யும். அதிக நாட்கள் ஓடும். மோகன் படம் வெளியாகும்போது தங்களின் படங்களை தள்ளி ரிலீஸ் செய்த, தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்களெல்லாம்கூட உண்டு.

‘கோகிலா’வில் தொடங்கிய நடிகர் மோகனின் திரைப் பயணம், இன்று குஷ்புவுடன் நடிக்கும் ‘ஹரா’விலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அவரின் படத்தலைப்பைத்தான் சொல்ல வேண்டும் இங்கே! மோகனின் ‘பயணங்கள் முடிவதில்லை’!

x