கவிதை எழுதுபவர்கள் வேறு; சினிமாவுக்கு எழுதுகிற பாடலாசிரியர்கள் வேறு. புலமையுடன் எழுதுபவர்கள் மற்றொரு ரகம். ஆனால் சினிமாவுக்கு பாட்டெழுத வந்தவர், புலவராகவும் இருந்துவிட்டால், அவரிடமிருந்து வருகிற பாட்டுகெளல்லாம் மா, பலா, வாழை என முக்கனியின் சுவையுடன்தானே இருக்கும். கவிஞர் வாலியின் பல பாடல்களை கண்ணதாசன் பாடல்கள் என்று குழம்பிப்போவோம். கங்கை அமரன் பாடல்கள் சிலவற்றை வைரமுத்து பாடல்கள் என நினைத்துக்கொள்வோம். ‘இந்தப் பாட்டே புதுவிதமா இருக்கே... யாருய்யா எழுதினது?’ என்று கேட்பார்கள். ‘வேற யாரு... புலமைப்பித்தன்யா’ என்றதும் ‘அதானே பாத்தேன்’ என்று சொல்லிக்கொள்வார்கள். அப்படியொரு தனி ரகம்... அவருடைய பாடல்கள்!
கோயம்புத்தூர்க்காரரான புலமைப்பித்தன், 1935-ம் ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி பிறந்தார். பிறந்ததும் அவருக்கு ராமசாமி என்றுதான் பெயர் வைத்தார்கள். வளர வளர, கூடவே வருடன் சேர்ந்து தமிழும் வளர்ந்து, வளர்த்தது. தமிழின் மீதும் தமிழ்ப் புலமையின் மீது காதல் கொண்டவர், தன் பெயரை புலமைப்பித்தன் என்று மாற்றிக்கொண்டார். ‘எப்படியாவது சினிமாவுக்குப் பாட்டெழுத வேண்டும்’ என்று ஆசைப்பட்டார். ஆனால், ‘இப்படித்தான் எழுத வேண்டும்’ என்பதில் மிக உறுதியாக இருந்தார்.
1964-ல் சென்னைக்கு வந்தவருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கதவு திறந்தது. அப்படி கோடம்பாக்கத்து ரிக்கார்டிங் தியேட்டர் கதவைத் திறந்துவிட்டவர் எம்ஜிஆர். ‘குடியிருந்த கோயில்’ படத்தில் ரோஷ்னாரா பேகம் எனும் கவிஞரையும் புலமைப்பித்தனையும் அறிமுகப்படுத்தினார். ‘நான் யார் நீ யார்’ என்கிற பாடல்தான் சினிமாவில் இவர் எழுதிய முதல் பாடல்.
எம்ஜிஆரை யாருக்குத்தான் பிடிக்காது? ஆனால் எம்ஜிஆருக்கு ஒருவரைப் பிடிப்பதென்பது லேசுப்பட்ட காரியமல்ல. தன் வசீகரப் புலமையாலும் தமிழாலும் எம்ஜிஆரையே தன் பக்கம் இழுத்தார் புலமைப்பித்தன். ‘’இந்தப் படத்துல இந்தப் பாட்டை புலமைப்பித்தனுக்குக் கொடுத்துருங்க’’ என்று எம்ஜிஆர் இயக்குநரிடமும் இசையமைப்பாளரிடமும் சொல்லிவிடுவார். பிறகு மறுபேச்சுக்கே இடமில்லை.
அதேபோல், ’’புலமைப்பித்தன் பாட்டு கொடுத்துட்டாரா?’’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார் எம்ஜிஆர். கொடுத்தது தெரிந்ததும், பாடல் வரிகளைச் சுடச்சுட அறிந்துகொள்ளும் ஆவலுடன் அதைக் கேட்டு ரசிப்பார்.
'பொய்கை எனும் நீர்மகளும் பூவாடை போர்த்திருந்தாள்
தென்றல் எனும் காதலனின் கை விலக்க வேர்த்து நின்றாள்
என்ன துடிப்போ அவள் நிலை நீ உணரமாட்டாயோ
அந்த நிலையில் அந்த சுகத்தை நான் உணரக்காட்டாயோ’ என்கிற ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் வரிகளைக் கேட்டுச் சொக்கிப் போனது நாம் மட்டுமா? எம்ஜிஆரும்தான்!
‘எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா’ என்று இலக்கியத்தையும் இலக்கணத்தையும் சேர்த்துக் குழைத்து, சாதாரண தமிழ் சினிமாப் பாடலாகக் கொடுக்கிற வித்தை புலவருக்கு மட்டுமே உரித்தானது. ’நீ என்னென்ன செய்தாலும் புதுமை / உன்னை எங்கெங்கு தொட்டாலும் இளமை’ என்று காதலர்கள் கொஞ்சுவதிலும் புலமைச் சுகம் கூட்டினார். ’பொன்னந்தி மாலைப் பொழுது / பொங்கட்டும் இன்ப நினைவு’ என்று அந்த குளுகுளுக் காட்சிக்கேற்ப வரிகளைப் போட்டு நம்மை அவர் வசமாக்கிவிடுகிற தமிழ் வாத்தியார் அவர்!
’பல்லாண்டு வாழ்க’ எனும் படத்தில், ’சொர்க்கத்தின் திறப்புவிழா / புதுச்சோலைக்கு வசந்தவிழா / பக்கத்தில் பருவநிலா இளமை தரும் இனிய பலா / இன்று பார்க்கட்டும் இன்ப உலா’ என்று தமிழில் விளையாடுவார் புலமைப்பித்தன். ’பாடும்போது நான் தென்றல் காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று நான் வரும்போது ஆயிரம் ஆடல் ஆட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன’ என்கிற ‘நேற்று இன்று நாளை’ படத்தின் பாடலில், ’மெல்லிய பூங்கொடி வளைத்து, மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து, இதழில் தேனைக் குடித்து, ஒரு இன்ப நாடகம் நடித்து’ என்று எழுபதுகளின் எம்ஜிஆரை, தன் வசீகர வரிகளால் இளமை நாயகனாக்கியிருப்பார் புலமைப்பித்தன்.
அதேசமயத்தில், ‘ஓடிஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்’ எனும் வாழ்வியல் தத்துவத்தை மிக எளிமையாக ‘நல்ல நேரம்’ படத்தில் சொல்லியிருப்பார். ஊனமுற்ற தங்கைக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டுமே எனும் கவலையுடன் பட்டணத்துக்கு வருபவனின் கண்களில் திருமண ஊர்வலம் படும். அப்போது, அந்த இசைக்கலைஞன், ’பூமழைத்தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது - எழில் பொங்கிடும் தங்கையின் நெற்றியில் குங்குமம் சிரிக்கின்றது மங்கலக் குங்குமம் சிரிக்கின்றது’ என்று ‘குங்குமம் சிரிக்கின்றது’ என்பதில் ஒரு கவித்துவத்தைக் குழைத்துத் தீட்டியிருப்பார். ’பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் பிள்ளைக்காகப் பாடுகிறேன்’ என்று எழுதினார்.
’ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ’ என்று காதலையும் இருவரின் தனிமையையும் பெண்ணைத் தாமரைக்குமாக ஒப்பிட்டிருக்கும் புலவர், உள்ளே பல வரிகளில் புகுந்து விளையாடியிருப்பார். ‘இது நம்ம ஆளு’ படத்தில் ‘அம்மாடி இதுதான் காதலா அட ராமா... இது என்ன வேதமா?’ என்பார். ‘’இந்தப் பாட்டை நீங்களே பாடிருங்க. அப்பதான் நீங்க இசையமைச்சதையும் மக்கள் ஒத்துப்பாங்க’’ என்று ‘பச்சமலை சாமி ஒண்ணு உச்சிமலை ஏறுதுன்னு எடுடா தம்பி மேளம்’ என்று எழுதி பாக்யராஜின் இசையை வரவேற்றார்.
மனோவின் குரலில், ‘அதோ மேக ஊர்வலம் / அதோ மின்னல் தோரணம் அங்கே! இதோ காதல் ஊர்வலம் / இதோ காமன் உத்ஸவம் இங்கே!’ என்று தேவலோகத்துக்கே தன் வரிகளால் அழைத்துச் சென்றிருப்பார் புலமைப்பித்தன். ‘தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா, தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா?’ என்கிற ‘கல்யாணத் தேனிலா’ பாட்டைக் கேட்டுத்தானே ஒவ்வொரு இரவையும் கழிக்கிறோம்?
‘வானம் கைநீட்டும் தூரம் எங்கள் ராஜாங்கம் என்றென்றுமாகும், மேகம் தேர் செல்லும் மின்னல் சீர்கொண்டு வானில் ஊர்கோலம் போகும்’ என்று ‘கூக்கு என்று குயில் கூவாதோ’ என்ற பாடலை ஒப்பீடுகளில் நம்மை அசரடித்திருப்பார். ‘விழியின் வழியே நீயா வந்து போனது’ என்பார். ‘நாயகன்’ படத்தின் ‘நீயொரு காதல் சங்கீதம்’ பாடலின் வரிகள் அனைத்துமே காவியம்.
‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா? இன்னமும் இருக்கா? என்னவோ மயக்கம்’ என்பாள் அவள். ‘என் வீட்டில் இரவு உன் வீட்டில் இரவா? இல்லை பகலா? எனக்கும் மயக்கம்’ என்பான் அவன். ‘அழகன்’ படத்தின் இந்தப் பாடலையும் பாடல் படமாக்கப்பட்ட விதத்தையும் கடந்து இந்த வரிகள் நமக்குள் ஜாலம் பண்ணிக்கொண்டே இருக்கும்.
பாடலுக்குள் கவிதையையும் சொன்னார். அதைப் புலமையுடன் சொன்னார். தனித்துவத்துடன் சொன்னார். எந்த நடிகருக்கும் சமரசம் செய்துகொள்ளவில்லை அவர். பணம் கிடைக்கிறதே என்று பாடலுக்குள்ளும் சமரசம் செய்யத் தயாராக இல்லை.
ஒவ்வொரு பாடலுக்குள்ளும் புலமைப்பித்தனின் புலமை இழையோடிக்கொண்டே இருக்கும். சந்தானபாரதியும் பி.வாசுவும் இணைந்து ‘பாரதி வாசு’ என்ற பெயரில் இயங்கினார்கள். பாரதிராஜாவின் தயாரிப்பில் இவர்களின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில், ‘செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு / வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு’ என்ற பாடலை இப்போது கேட்டாலும் காதல் எனும் உணர்வு, வயதைக் கடந்து குபுக்கென்று எட்டிப் பார்க்கும். கற்பனையாக யாரையோ காதலிப்பதான உணர்வைத் தூண்டும். அதுதான் புலமைப்பித்தனின் மந்திர எழுத்துக்களின் மாயாஜாலம்!
’வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டுவந்து இசைக்கும் நாயனம்
தாழம்பூவில் கல்யாண ஓலை கொண்டு
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து’
என்கிற வரிகளும் பாட்டு நெடுக பல இடங்களில் வருகிற புல்லாங்குழலும், தீபன் சக்கரவர்த்தி மற்றும் உமா ரமணின் வித்தியாசமான குரல்களும் நம்மை என்னவோ செய்யும். ‘செவ்வந்திப் பூக்களில் செய்த வீடுதான் பானுப்ரியாவா?’ என்று கேட்டுக்கிறங்கிப் போனோம். ’இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவினில் தொட்டிலைக் கட்டிவைத்தேன் / அதில் பட்டுத்துகிலுடன் அன்னச்சிறகினை மெல்லென இட்டுவைத்தேன்’ என்று ஆராரோ பாடியிருப்பார்.
’நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால் / என் கேள்விக்கு பதிலைத் தரட்டும் நேர்மைத் திறமிருந்தால்’ என்று எம்ஜிஆருக்கு எழுதினார் புலமைப்பித்தன். அதில், ’உழைப்போர் அனைவரும் ஒன்று அந்த உணர்வினில் வளர்வது இன்று, வளியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை இனியொரு நாளும் நடக்காது’ என்று கம்யூனிஸமும் பாடியிருப்பார். ’தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று தமிழ்க்கவி பாரதி பாடிய பாட்டினை நடைமுறையாக்கிடுவோம்’ எனப் பாடிய புலமைப்பித்தனை எம்ஜிஆர் விடவே இல்லை. எனும் சினிமாப் பாடல்களுக்குள்ளேயே சங்கதிகளையும் சேதிகளையும் இலக்கண இலக்கியங்களையும் ஒன்றாக்கி, ஒரு குவளைக்குள் அடைத்து பாட்டுப்பாட்டாகக் கொடுத்த புலமைப்பித்தனின் எழுத்தில் சொக்கிப்போன அரியணைக்கு வந்த பின்னரும் கூட எம்ஜிஆர் அவரை விட்டுவிடாமல் அரசவைக் கவிஞராக்கினார்.
‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் புலமைப்பித்தன் இப்படி எழுதினார்...
’ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?’ என்று பாட்டுக்குள் தேன் வரிகளையும் தேள் வரிகளையும் சூட்டி கனாக் கண்ட நவீன புலவன்... புலமைப்பித்தன்.
1935 அக்டோபர் 6-ம் தேதி பிறந்த புலமைப்பித்தன் 2021 செப்டம்பர் 8-ம் தேதி மறைந்தார். இன்று அவரது 87-வது பிறந்தநாள்.
டீக்கடைகளில், கல்யாண வீடுகளில், செல்போன்களில், ப்ளூ டூத்துகளில், ஸ்பாட்டிஃபைகளில், சரிகம கார்வான்களில், எஃப்.எம்-களில், ‘நள்ளிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க’ என்றோ ‘கல்யாணத் தேனிலா காய்ச்சாத பால்நிலா’ என்றோ ’நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற’ என்றோ, ‘ஓ... வசந்த ராஜா’ என்றோ ஏதோவொரு பாடல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும். கேட்டுக்கொண்டேதான் இருப்போம். புலமைப்பித்தன் தனது பாடல் வரிகளால் காற்று மண்டலத்தில் உலவிக்கொண்டே இருப்பார்!