திரை விமர்சனம்: இந்தியன் 2


யூடியூப் சேனல் நடத்தி வரும் சித்ரா அரவிந்தன் (சித்தார்த்), ஆர்த்தி (பிரியா பவானிசங்கர்), தம்பேஷ் (ஜெகன்), ஹாரீஸ் (ரிஷிகாந்த்) ஆகியோர் ஊரில் நடக்கும் விதிமீறல்கள், முறைகேடுகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறார்கள். ஆனால், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் சுதந்திரமாகவே நடமாடுகிறார்கள். இவர்களைத் தண்டிக்க ‘இந்தியன் தாத்தா’ சேனாபதி (கமல்ஹாசன்) வர வேண்டும் என்றுசோஷியல் மீடியாவில் டிரெண்டிங் செய்கிறார்கள். அதன்படி சேனாபதியும் இந்தியா வருகிறார். அவரை கைது செய்ய, சிபிஐ துரத்துகிறது. இறுதியில் சேனாபதி ஊழலை ஒழித்தாரா, சிபிஐ-யிடம் சிக்கினாரா என்பது கதை.

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் 1996-ல்வெளியான ‘இந்தியன்’ சமூகத்தில் புரையோடி போயிருக்கும் ஊழலைப் பேசியது. ‘இந்தியன் 2’ படத்திலும் அதுதான் மூலக் கதை. அரசு அலுவலகங்களில் பணியாற்றிக்கொண்டு எளியமக்களின் ரத்தத்தைக் குடிக்கும் அளவுக்கு சிலர் எப்படியெல்லாம் ஊழல் செய்கிறார்கள், அதிலிருந்து தப்பிக்க என்ன செய்கிறார்கள், பெரும் பணக்காரர்களிடம் அரசு அதிகாரிகள் எப்படிப் பணிந்து கிடக்கிறார்கள், பிசினஸ்மேன்கள் கோடிக்கணக்கில் கடன் வாங்கி தப்பியோடி வெளிநாட்டில் எப்படி சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை ஷங்கர் தன் பாணியில் அழகாகவே சொல்லியிருக்கிறார். நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் வீட்டிலிருந்தே ஊழல் ஒழிப்பு தொடங்க வேண்டும் என்கிற கருத்தையும், அதுதொடர்பான காட்சிகளையும் சிறப்பாகவே அமைத்திருக்கிறார் ஷங்கர்.

ஆனால், அழகான ஒன்லைன் கதைக்கு திரைக்கதை அமைப்பதில் கோட்டைவிட்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கு வரும் சேனாபதியின் கதை தனியாகவும் நான்கு இளைஞர்களின் கதை தனித்தனியாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. இவை ஒரு புள்ளியில்இணையும்போது படம் கிளைமாக்ஸுக்கு வந்துவிடுவது ஏமாற்றமளிக்கிறது. படத்துக்குள் ஒன்றிப்போக முடியாத அளவுக்கு காட்சி அமைப்புகள் மேம்போக்காகவே இருப்பது பலவீனம். இடைவேளைக்கு முன்வரைசற்று விறுவிறுப்பாக நகர்கிறது. ஆனால், 2-ம் பாதியின் நீளம் சோதித்து விடுகிறது. முறைகேடாகப் பணக்காரர்கள் ஆனவர்களை ஒவ்வொரு மாநிலமாகச் சென்று சேனாபதி கொலை செய்வதும், வர்மக் கலையைப் பயன்படுத்தி இவற்றைச் செய்வதும் அலுப்பூட்டுகின்றன.

குறிப்பாக, சூரத்தில் ஒரு வீட்டையே தங்கத்தில் கட்டியிருக்கும் காட்சி பூச்சுற்றல். சிபிஐயிடம் இந்தியன் தாத்தா தொடர்ந்து சிக்கினாலும் சுலபமாகத் தப்புவது போன்ற காட்சிகளில் லாஜிக் மிஸ்ஸிங். லஞ்சம், ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து கலகம் செய்யும் சித்தார்த், ஒரு துர்நிகழ்வுக்குப் பிறகு ஒரேயடியாக மனம் மாறுவது ஒட்டவில்லை. இதில் இயக்குநர் வேறு உத்திகளை யோசித்திருக்கலாம்.

படத்தைத் தாங்கிப் பிடிப்பது கமல்ஹாசன்தான். பல கெட்டப்புகளில் வந்து கொலை செய்கிறார். ஆனால், ‘இந்திய’னில் அமைந்த மேக்கப் இதில் அமையாதது குறை. இளமைக்கே உரிய கோபத்துடன் சித்தார்த் அழகாக நடித்திருக்கிறார். ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் நடிப்பில் குறையில்லை. மறைந்த விவேக்,நெடுமுடி வேணு, மனோபாலா ஆகியோரை ஏ.ஐ. மூலம் அழகாகவே காட்டியிருக்கிறார்கள். பாபி சிம்ஹா, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ரேணுகா, தம்பி ராமையா, ஜெகன், ரிஷிகாந்த், டெல்லி கணேஷ் என நடிகர் பட்டாளமே படத்தில் இருக்கிறது.

படத்துக்கு இசை அனிருத். இசையில் ‘இந்தியன்’ ஏற்படுத்திய தாக்கத்தை இதில்உணர முடியவில்லை. ரவிவர்மனின் கேமரா, காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறது. நீளமான காட்சிகளில் படத்தொகுப்பாளர் கர் பிரசாத் கத்திரி போட மறந்துவிட்டார்.

‘இந்தியன் 2’ - ‘இந்தியன் 3’க்கான முன்னோட்டம் மட்டுமே

x