அனல் தெறிக்கும் வசனங்களால் கவனம் ஈர்த்த கண்ணாம்பா!


’மனோகரா’ படத்தில் கண்ணாம்பா

சினிமாவில், நாயகனுக்கு அம்மாவாகவோ நாயகிக்கு அம்மாவாகவோ நடிக்கும் நடிகைகளுக்கு மாறுபட்ட, வேறுபட்ட வாய்ப்பு கிடைப்பதென்பது அரிதினும் அரிது. ஆனால் கொடுக்கப்பட்ட அம்மா கதாபாத்திரங்களுக்குள் தன்னை வெகு அழகாகப் பொருத்திக்கொண்டு, தன் வசனங்களாலும் உச்சரிப்புகளாலும் முகபாவனைகளாலும் ஒவ்வொரு அம்மாவாக உருவெடுத்தவர் நடிகை கண்ணாம்பா.

அந்தக் காலத்தில், ‘கண்ணாம்பாவை அம்மா கேரக்டருக்குப் போட்டால்தான் சரியாக இருக்கும். வசனங்களையெல்லாம் தெறிக்கவிடுவார்; கெஞ்சிப் பேசி பார்ப்பவர்களையும் கேட்பவர்களையும் கலங்கடிப்பார்’ என்பார்கள். அதேபோல், ‘கண்ணாம்பா நடிப்பதாக ஒத்துக்கொண்டுவிட்டார். ஆகவே அவர் பேசுவதற்கு இன்னும் ஆறேழு பக்கங்கள் கூடுதலாக எழுதுங்கள். ஜமாய்த்துவிடுவார்’ என்றார்கள். எத்தனை பக்க வசனங்கள் என்றாலும் ஏற்ற இறக்கங்களுடன் பேசி கைதட்டல் வாங்குவாரே சிவாஜி. கண்ணாம்பாவும் அப்படித்தான். ‘கண்ணாம்பா அளவுக்கு அனல் பறக்கும் வசனங்களை எவரும் பேசவே முடியாதுப்பா’ என்று அன்றைக்குப் பத்திரிகைகள், விமர்சனங்களில் இவரைக் கொண்டாடின.

அட்சரம் பிசகாமல் பேசுவார் கண்ணாம்பா. அழகுத் தமிழை, உச்சரிப்பு பிசகாமல் பேசுவார். பாவம் மாறாமல், உணர்ச்சிப் பெருக்குடன் பேசுவார். படம் பார்க்கிறவர்களின் கரவொலிகளைப் பெற்ற கண்ணாம்பாவுக்கு, தெலுங்குதான் தாய்மொழி என்றால் எவருமே நம்பமாட்டார்கள். தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள், தமிழ்ப் பாடலைத் தெலுங்கில் எழுதிவைத்துக்கொண்டு பாடுவது போலத்தான், கண்ணாம்பா, தமிழ் வசனங்களைத் தெலுங்கில் எழுதிவைத்துக்கொண்டு வசனங்கள் பேசி பிரமிக்க வைத்தார்.

பி.கண்ணாம்பா

ஆந்திர மாநிலத்தில் பிறந்த கண்ணாம்பா, 16-வது வயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்டார். ‘அரிச்சந்திரா’ நாடகத்தில் இவர் சந்திரமதியாக நடித்தது, பேசப்பட்டது. இவரின் நடிப்பைக் கண்டு, பார்வையாளர்கள் கதறி கண்ணீர்விட்டார்களாம். ’அனுசுயா’,’ யசோதை’, ’சாவித்திரி’ முதலான நாடகங்களில் நடித்து எல்லோராலும் கவனிக்கப்பட்டார். ’’புராணக் கதாபாத்திரங்களை நம் கண்ணுக்கு முன்னே மேடையில் உலவவிட, கண்ணாம்பாவைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?’’என்று ஆந்திர மக்கள் கொண்டாடினார்கள்.

நாடக சமாஜத்தின் நிர்வாகிகளில் ஒருவரான கே.பி.நாகபூஷணம், கண்ணாம்பாவை விரும்பினார். தன் விருப்பத்தைத் தெரிவித்தார். இவரும் சம்மதித்தார். அப்போது கண்ணாம்பாவுக்கு 23 வயது. கண்ணாம்பா, ராஜராஜேஸ்வரி அம்பாளின் தீவிர பக்தை. அதனால் புதிதாக நாடகக் கம்பெனி தொடங்கி, அதற்கு ‘ஸ்ரீராஜராஜேஸ்வரி நாட்டிய மண்டலி’ என்று பெயர் வைத்து, ஆந்திரம், தமிழகம், கர்நாடகம் என்று பல மாநிலங்களிலும் நாடகங்களை மேடையேற்றினார்கள்.

பி.கண்ணாம்பா

நடிகர் வி.நாகையாவின் முதல் படமான ‘கிரஹலட்சுமி’ படத்தில் கண்ணாம்பா ஜோடியாக நடித்தார். இந்த ஜோடி, பொருத்தமான ஜோடி என்று எல்லோரும் பாராட்டினார்கள். இந்தப் படம்தான் தமிழகத்தின் பக்கம் கண்ணாம்பாவை சிகப்புக் கம்பளமிட்டு வரவேற்பதற்கான பிள்ளையார் சுழியாக அமைந்தது. தியாகராஜ பாகவதருடன் ‘அசோக்குமார்’ படத்தில் நடித்தார். இதில் வில்லி கதாபாத்திரம்தான். ஆனால் தன் நடிப்பால், உருட்டு விழிகளால், மிரட்டல் குரலால் நடிப்பில் புதுபாணியை உருவாக்கிக் காட்டினார்.

தமிழ் சினிமாவில் வசனங்களுக்காகப் பேசப்பட்ட முதல் திரை எழுத்தாளர் இளங்கோவன்தான், இந்தப் படத்துக்கு வசனம் எழுதினார். அத்துடன் கண்ணாம்பாவுக்கான வசனங்களை, பேசிக் காட்டி, பேசிக் காட்டிப் புரியச் செய்தார். அவர் சொல்லுகிற வசனங்களை, தெலுங்கில் எழுதிக்கொண்டு, தமிழில் பேசி நடித்தார். தியாகராஜ பாகவதரின் வசன உச்சரிப்பைவிட, கண்ணாம்பாவின் வசனம் பிரமாதம் என்று ரசிகர்கள் கொண்டாடினார்கள். பத்திரிகைகள் எழுதின.

உத்தமபுத்திரன்

ஜூபிடர் நிறுவனம், இளங்கோவனின் வசனத்தில் ‘கண்ணகி’ படத்தை எடுத்தது. அந்தப் படமெடுக்க தூண்டுகோலாக அமைந்தது கண்ணாம்பாவின் நடிப்பும் வசன உச்சரிப்பும்தான் என்று திரையுலகம் பேசிக்கொண்டது. உணர்ச்சி ஒருபக்கம், கண்ணீர் ஒருபக்கம், துக்கம் ஒருபக்கம், ஆவேசம் ஒருபக்கம் என உணர்ச்சிப் பெருக்கெடுத்து கண்ணாம்பா பேசிய வசனங்களுக்குக் கண்ணீருடன் கைத்தட்டினார்கள் ரசிகர்கள். கோவலனாக பி.யு.சின்னப்பா நடித்தார். நாகையா - கண்ணாம்பா ஜோடி தெலுங்கில் பேசப்பட்டது போல், தமிழில் பி.யு.சின்னப்பா - கண்ணாம்பா ஜோடி பேசப்பட்டது.

இளங்கோவனுக்கு அடுத்து தமிழ் சினிமா உலகில், கலைஞரின் வசனங்கள், புதியதொரு புரட்சியையே உண்டுபண்ணியது. எல்.வி.பிரசாத் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடித்த ‘மனோகரா’ படத்தில், சிவாஜிக்கு அம்மாவாக நடித்தார் கண்ணாம்பா. ‘பொறுத்தது போதும் மனோகரா பொங்கியெழு’ என்று கண்ணாம்பா பேசப்பேச, கட்டப்பட்ட இரும்புச்சங்கிலியை அறுத்துக்கொண்டு வருவாரே சிவாஜி... இந்தக் காட்சியில் கண்ணாம்பாவின் வசன உச்சரிப்புக்காகவும் கலைஞரின் வசனத்துக்காகவும் சிவாஜியும் நடிப்புக்காகவும் வலிக்க வலிக்க கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தது ரசிகக் கூட்டம்.

இதன் பின்னர் கண்ணாம்பாவுக்குக் கிடைத்ததெல்லாம் அம்மா கதாபாத்திரங்கள்தான். சிவாஜிக்கு அம்மாவாக, எம்ஜிஆருக்கு அம்மாவாக நடிக்க கண்ணாம்பாவை அழைத்தார்கள். எல்லாக் கதாபாத்திரங்களிலும் தனக்கென ஒரு பாணியை வைத்துக்கொண்டு அசத்தினார். ஹீரோவுக்கு அம்மா என்று ஒரு கேரக்டர் இருக்க வேண்டும் என்பதற்காகவெல்லாம் கண்ணாம்பாவை புக் செய்யமாட்டார்கள். அந்த அம்மா கேரக்டருக்கு வலுவான நடிப்புத் திறமையும் வசன உச்சரிப்பும் கொண்ட நடிகை இருந்தால்தான் பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று கண்ணாம்பாவை நடிக்க அழைத்தார்கள்.

தேவர் பிலிம்ஸ், எம்ஜிஆர் கூட்டணிப் படங்களில், பெரும்பாலும் கண்ணாம்பாதான் எம்ஜிஆருக்கு அம்மா. ’உத்தமபுத்திரன்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘நிச்சயதாம்பூலம்’ என்று எண்ணற்ற படங்களில் அம்மா கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்தார் கண்ணாம்பா. ’பாகப்பிரிவினை’ படத்தில் இவரின் நடிப்பும் சிவாஜி மீது இவர் காட்டுகிற பாசமும் பரிவும் கலங்கடித்துவிடும்.

அநேகமாக, தமிழ் சினிமாவில் ஒரு அம்மா எப்படி இருக்க வேண்டும் என்கிற இலக்கணங்களுக்கு உயிர் கொடுத்து, உலவவிட்டு, இலக்கியம் படைத்தார் கண்ணாம்பா. அம்மா நடிகைகளுக்கெல்லாம் ’ரோல்மாடல்’ அம்மா என்று இவரைக் கொண்டாடாத அம்மா நடிகைகளே இல்லை.

1911அக்டோபர் 5-ம் தேதி பிறந்த கண்ணாம்பா, 1964 மே 7-ம் தேதி காலமானார். இன்று கண்ணாம்பாவின் 111-வது பிறந்தநாள். கண்ணாம்பா எனும் அம்மாவையும் அவரின் அனல் பறக்கும் வசன உச்சரிப்புகளையும் தமிழ் சினிமா ரசிகர்கள் என்றென்றும் நினைவில் வைத்திருப்பார்கள்; கொண்டாடுவார்கள்!

x