நல்ல வேலை, வசதியான வாழ்க்கை, மனைவி (இந்துஜா), மகள் சத்யா (ஹியா தவே) ஆகியோரை உள்ளடக்கிய அழகான சிறு குடும்பம் என நிம்மதியாக வாழ்கிறார் பிரபு (தனுஷ்). திடீரென்று மகளுக்கு ஏற்படும் அமானுஷ்ய நிகழ்வுகள் பிரபுவின் நிம்மதியைச் சிதைக்கின்றன. தனிமையில் இருக்கும்போது தன்னிடம் யார் கண்களுக்கும் தெரியாத ஒருவர் பேசுவதாகவும் அவர் தன்னை மிரட்டுவதாகவும் உணர்கிறாள் சத்யா. பல முயற்சிகளுக்குப் பிறகு சத்யாவுக்குப் பேய் பிடித்திருப்பதைத் தெரிந்துகொள்கிறார் பிரபு. ‘கதிர்(தனுஷ்) என்பவரைப் பிரபு கொல்ல வேண்டும் அப்போதுதான் சத்யாவை விட்டு நீங்குவேன்’ என்று கட்டளையிடுகிறது அந்தப் பேய். கதிர் யார்? அவர் ஏன் கொல்லப்பட வேண்டும்? பிரபுவுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் என்ன ஆனது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கிறது படம்.
‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’, ‘மயக்கம் என்ன’ என ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பிடித்துவிட்ட படங்களைக் கொடுத்திருக்கும் அண்ணன் - தம்பி இணையான இயக்குநர் செல்வராகவன், தனுஷ் இருவரும் பத்தாண்டுகளுக்குப் பிறகு இணைந்திருக்கும் படம் இது. பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும் ப்ரொமோஷன் சத்தங்கள் எதுவும் இல்லாமல் வெளியாகியிருக்கிறது இந்தப் படம். அதற்குக் காரணம் செல்வா- தனுஷ் இணையின் முந்தைய மூன்று படங்களுக்கும் இந்தப் படத்துக்கும் தரத்தில் மலையளவு வித்தியாசம் இருப்பதுதான் என்றே படத்தைப் பார்த்ததும் தோன்றுகிறது. படத்தின் கதை திரைக்கதையை தம்பி தனுஷ் எழுத, அண்ணன் செல்வா இயக்கியிருக்கிறார். தனுஷ் கதை, திரைக்கதை எழுதிய பிற படங்களைவிடவும் இந்தப் படம் தரத்தில் ரொம்பவும் பின்தங்கியே இருக்கிறது.
படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் ஓரளவு ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. தனுஷ் போன்ற ஒரு மாஸ் இமேஜ் கொண்ட நடிகரை மகள் மீது உயிரையே வைத்திருக்கும் தந்தையாக மகளின் துன்பத்தைக் கண்டு துடிக்கும் கையறுநிலையில் இருக்கும் மனிதராகப் பார்ப்பது மனதைத் தொடுகிறது. முதல் பாதி முழுக்க தனுஷின் நட்சத்திர அந்தஸ்துக்கான கமர்ஷியல் திணிப்பு எதுவும் இல்லாமல் இருப்பது பாராட்டுக்குரியது. இடையிடையே உடன்பிறந்த இரட்டையர்களான பிரபு, கதிரின் சிறுவயது கதையைச் சொல்லும் ஃப்ளாஷ் பேக் காட்சிகள் இரண்டாம் பாதியில் அறிமுகமாகும் கதிர் கதாபாத்திரத்துக்கான சரியான பில்டப்பைக் கொடுக்கின்றன. சரியான நேரத்தில் வரும் இடைவேளைக் காட்சி இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்நோக்க வைக்கிறது.
ஆனால் இரண்டாம் பாதி இடைவேளை ஏற்படுத்திய எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக எந்த இடத்திலும் பார்வையாளரை ஆச்சரியப்படுத்தவில்லை என்பதுடன், பலவீனமான காட்சிகளுடன் சுவாரசியம் இல்லாமல் நகர்கிறது. இடைவேளைக்குப் பிறகு காணாமல் போன திரைக்கதையின் உயிர்ப்பு இறுதிவரை எழவேயில்லை. ஜோசியர் சொன்னதைக் கேட்டு தாயால் கைவிடப்பட்டு அனாதையாக வளரும் கதிர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக வன்முறையாளராக வளர்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவர் இத்தனை கொடூரமான கொலைகாரனாவதற்கு வலுவான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை. இதனால் கதிருடன் பார்வையாளர்கள் எந்த இடத்திலும் ஒன்ற முடியவில்லை. அவருக்கு கொடுக்கப்படும் பில்டப் காட்சிகளும் உரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகின்றன. அதேபோல் கதிருக்கும் பிரபுவுக்குமான இறுதி மோதலிலும் எந்த சுவாரசியமும் இல்லை. சர்வசாதாரணமான சண்டைக் காட்சிக்குப் பிறகு இரண்டாம் பாகத்துக்கான வலிந்து திணிக்கப்பட்ட முன்னோட்டத்தோடு அவசரமாக படம் முடிந்துவிடுகிறது.
தனுஷ் அழகான குடும்பத் தலைவன், கொடூர வில்லன் என இருவேறு முகங்களை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்தின் திரைக்கதை பலவீனங்களைக் கடந்து படத்தைப் பார்த்துவிட முடிவதற்கு அவருடைய அபாரமான நடிப்பு முதன்மைக் காரணம். இந்துஜாவுக்குக் கதையில் பெரிய வேலை இல்லை. கதிரின் வாய்பேச முடியாத மனைவியாக வரும் எல்லி அவ்ராம் (Elli AvrRam) கதாபாத்திரத்துக்கு சரியான தேர்வு. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ‘வீரா சூரா’ பாடல் ரசிக்கவைக்கிறது,. பின்னணி இசை படத்தின் ஹாரர் வகைமைக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு இயற்கையான ஒளிக்கலவைகள் இயல்பான வண்ணங்களுடன் கண்களுக்கு விருந்து படைக்கிறது. ஆனால், திரைக்கதையில் பலம் இல்லாததால் படம் ஒட்டுமொத்தமாக ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தத் தவறுகிறது!
மொத்தத்தில் ’நானே வருவேன்’ செல்வராகவன் – தனுஷ் கூட்டணியின் மிக பலவீனமான படைப்பு.