இயக்குநர், பாடலாசிரியர் ரவிஷங்கர் தற்கொலை - திரையுலகம் அதிர்ச்சி


சென்னை: கடந்த 2002ம் ஆண்டு மனோஜ் நடிப்பில் வெளியான ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தின் இயக்குநர் ரவிசங்கர் (63) துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்யா வார இதழ் ஆரம்பித்த புதிதில் ‘குதிரை’ என்ற சிறுகதை மூலம் அதன் பொறுப்பாசிரியர், நடிகர் பாக்யராஜின் பாராட்டைப் பெற்றவர் ரவிஷங்கர். அவரின் எழுத்து நடை பாக்யராஜூக்குப் பிடித்துப் போக அவரை தன்னிடம் உதவியாளராக சேர்ந்துக்கொண்டார். ’இது நம்ம ஆளு' உட்பட சில படங்கள் வேலை செய்துவிட்டு, இயக்குநர் விக்ரமன் படங்களில் பணிபுரிந்தார் ரவிஷங்கர்.

’சூர்யவம்சம்’ படத்தில் இடம் பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ' என்ற பாடல் உட்பட சில பாடல்களையும் எழுதினார். பின்னர் இயக்குநராகி 'வருஷமெல்லாம் வசந்தம்' என்ற படத்தை இயக்கியதோடு, அதில் எல்லா பாடல்களையும் எழுதி இருந்தார். அதில் 'எங்கே அந்த வெண்ணிலா?' என்ற பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவரது நண்பரும், பத்திரிகையாளருமான கல்யாண்குமார் சமூகவலைதளப் பக்கத்தில்,’திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே வசித்தார். நண்பர்களின் தொடர்பையும் குறைத்துக் கொண்டார். நேற்று இரவு கே.கே நகரில் உள்ள தன் அறையில் தூக்கு போட்டு, தற்கொலை செய்து கொண்டார் ரவிஷங்கர். தனிமையே அவரை கொன்றுவிட்டதாக கருதுகிறேன்.

ஒரு மிகப் பெரிய இயக்குநராக அல்லது பாடலாசிரியராக வலம் வருவார் என்று எதிர்பார்த்தேன். தமிழ் சினிமாவின் கண்ணாமூச்சி ஆட்டத்தில் தன்னை தொலைத்துக் கொண்டார். போய்வாருங்கள் ரவிஷங்கர்... வலியோடு உங்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்... ஒரு ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ காற்றில் கரைந்து போனது’ என்று வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

x