ரஜினியின் ‘தர்மத்தின் தலைவன்’!


’தர்மத்தின் தலைவன்’ ரஜினி

ரஜினியும் பிரபுவும் இணைந்து நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. குருவும் சிஷ்யனுமாக ‘குரு சிஷ்யன்’ படத்தில் கலகலக்க வைத்திருந்தார்கள். அதேபோல் அண்ணனும் தம்பியுமாக ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் நெகிழ வைத்திருந்தார்கள். இந்த இரண்டு படங்களையும் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இன்னொரு தகவல்... இந்த இரண்டு படங்களுமே ஒரே வருடத்தில் வெளியானவை. ரஜினி, பிரபு, எஸ்.பி.முத்துராமன் என்பதுடன் இன்னொரு விசேஷமும் இந்தப் படத்துக்கு உண்டு. இன்றைக்கு வரை நம் மனதில் தனியிடம் பிடித்திருக்கும் குஷ்பு அறிமுகமான முதல் படம் இதுதான்!

சிறிய இடைவெளிக்குப் பிறகு தேவர் பிலிம்ஸ் ‘தர்மத்தின் தலைவன்’ படத்தைத் தயாரித்தது. கதை, திரைக்கதை, வசனங்களை பஞ்சு அருணாசலம் எழுதினார். இளையராஜாவின் இசையில் எஸ்.பி.முத்துராமன் தன் யூனிட்டோடு இந்தப் படத்தை இயக்கினார்.

கல்லூரிப் பேராசிரியர் ரஜினி. அதே கல்லூரியில் மாணவர் அவரின் தம்பி பிரபு. ரஜினியின் முறைப்பெண் சுஹாசினி. சுஹாசினிக்கு ஓவியம் வரைவதில் ஈடுபாடு. கல்லூரி, குடும்பம், ரஜினியின் ஞாபகமறதி, கல்லூரியில் மாணவர் நாசருக்கும் பிரபுவுக்கும் மோதல், இதை ரஜினி சமாதானப்படுத்துதல் என்று முதல் பாதி கலகலப்பாகவும் ஆக்‌ஷனாகவும் போகும்.

இதற்கிடையே, பிரபுவுடன் சமாதானமாகிவிடுவதாக நாசர் நம்பவைப்பார். இருவரையும் இணைத்துவைப்பார் ரஜினி. பிறகு இந்த ஊரே வேண்டாம் என்று படிப்பதற்காக வேறு ஊருக்கு பிரபுவை அனுப்ப நினைப்பார். அப்போது நாசருக்கும் பிரபுவுக்கும் மீண்டும் சண்டை. இதை அறிந்த ரஜினி அங்கே வர, ரஜினியைக் கத்தியால் நாசர் குத்திவிட, ரஜினி இறந்துபோவார்.

பதற வேண்டாம். இருக்கவே இருக்கிறார் இன்னொரு ரஜினி. கார் மெக்கானிக் ஷாப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலை செய்வார் பிரபு. அங்கே, கார் ஷெட் முதலாளி மகள் குஷ்பு. சொல்லவா வேண்டும் காதலுக்கு. இருவரும் காதலிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

அங்கே, திருட்டு, அடிதடி முதலான கெட்ட விஷயங்களில் ஈடுபட்டுவரும் ரஜினியைப் பார்ப்பார். தன் அண்ணனைப் போல் இருக்கும் ரஜினியை அண்ணனாகவே பார்ப்பார். ஒருநாள்... காரை ரஜினி திருடிவிட்டு வரும்போது போலீஸ் துரத்தும்.

ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்குவார். அங்கே பார்த்தால்... ஏகப்பட்ட ரஜினி படங்கள் ஓவியங்களாக இருக்கும். சுஹாசினி ரஜினியை நேரில் பார்த்து மயங்கிவிழுவார். அவரை முற்றிலுமாக வெறுப்பார். ஆனால் பிரபு ‘திருட்டு’ரஜினியை அண்ணனாகவே ஏற்பார். அவரின் பாசத்துக்குக் கட்டுப்பட்டு சகல கெட்டதுகளையும் விட்டுவிடுவார்.

வில்லன்கூட்டம் சும்மா இருக்குமா. சுஹாசினியைக் கடத்திவைத்துக் கொண்டு, ‘நீ வைரம் கடத்திட்டு வா. அப்பதான் விடுவிப்பேன்’ என கொள்ளைக்கூட்ட பாஸ் கேப்டன் ராஜ் சொல்லுவார். அதன்படி வைரம் கடத்தித் தருவார் ரஜினி. ஆனாலும் சுஹாசினியை விடமாட்டார். பிறகென்ன... ரஜினியும் பிரபுவும் கைகோர்த்துக்கொண்டு சண்டை போடுவார்கள். எதிரிகளைப் பந்தாடுவார்கள். அழித்தொழிப்பார்கள். சுஹாசினி, இந்த ரஜினியை ஏற்றுக்கொள்வார். க்ளைமாக்ஸில், ரஜினி - சுஹாசினி, பிரபு - குஷ்பு இருவருக்கும் திருமணம் நடக்க, வணக்கம் போடுவார்கள்.

காமெடி,சென்டிமென்ட், காதல், கலாட்டா, ஆக்‌ஷன் என கலந்துகட்டி கொடுத்திருப்பார் பஞ்சு அருணாசலம். பேராசிரியர் ரஜினியின் காமெடியும் குறிப்பாக ஞாபகமறதி காமெடியும் தியேட்டரையே கலகலக்கவைத்திருக்கும். விபூதிப்பட்டையும் ருத்திராட்சமும் வேஷ்டியும் அணிந்துகொண்டு பேராசிரியராக, மூக்குக்கண்ணாடியுடன் வேறு முகம் காட்டியிருப்பார் ரஜினி.

இரண்டாம் பாதியில் வரும் ரஜினியின் ஆக்‌ஷனும் அவரின் கரப்பான்பூச்சி காமெடியும் ரஜினிக்கே உண்டான ஸ்பெஷல். சுஹாசினியின் பாந்தமான, அமைதியான நடிப்பு, அந்தக் கதாபாத்திரத்துக்கு வலுவூட்டும். துள்ளலும் பாசமும் கொண்ட பிரபுவின் நடிப்பும் குஷ்புவின் இளமையும் அழகும் படத்துக்கு பலம் சேர்த்தன.

குஷ்பு அறிமுகமான ‘தர்மத்தின் தலைவன்’

இளையராஜா இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தன. ’ஒத்தடி ஒத்தடி’ என்ற பாடலை மலேசியா வாசுதேவன் பாடியிருப்பார். ’வெள்ளிமணிக் கிண்ணத்திலே’ என்ற பாடலை மலேசியா வாசுதேவன், மனோ, சித்ரா முதலானோர் பாடியிருப்பார். இந்த இரண்டு பாடல்களுமே ஆட்டம் போடவைக்கும். அதேபோல, ‘யாரு யாரு இந்தக் கிழவன் யாரு’ என்று மலேசியா வாசுதேவனும் மனோவும் பாடும் பாடலும் குத்தாட்டம் போடவைக்கும். ஜேசுதாஸின் குரலில், சித்ராவும் இணைந்து பாடுகிற ‘முத்தமிழ் கவியே வருக’ என்ற பாடல், நமக்குள் அமைதியைத் தந்துவிடும். படத்தின் முக்கியமான பாடலாக, ‘தென் மதுரை வைகை நதி’ என்ற பாடல், செம ஹிட்டானது. இந்தப் பாடலை எஸ்பிபி பாடியிருப்பார். பிறகு மலேசியா வாசுதேவனும் பாடியிருப்பார். இன்றைக்கும் ஏகப்பட்ட பேர் காலர் டியூனாகவும் டயலர் டியூனாகவும் இந்தப் பாடலை வைத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, ரஜினியும் சுஹாசினியும் அண்ணன் தங்கையாக ‘தாய்வீடு’ படத்தில் நடித்தார்கள். பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில், ‘அட வங்காளக் கடலே..’ என்று லலிதகுமாரி கனவு காண, அந்தப் பாடலில், ரஜினி - சுஹாசினி, விஜயகாந்த் - சுஹாசினி, சத்யராஜ் - சுஹாசினி என ஆடுவார்கள். இந்தப் படத்தில்தான் ரஜினியும் சுஹாசினியும் ஜோடியாக நடித்தார்கள்.

1988 செப்டம்பர் 29-ம் தேதி வெளியானது ‘தர்மத்தின் தலைவன்’. ரஜினி படத்துக்கே உண்டான வெற்றியையும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷனையும் அள்ளியது.

இன்னொரு கூடுதல் குல்கந்து தகவல்... தமிழில் குஷ்புவின் முதல் படம் வெளியான அதே தேதிதான், குஷ்புவின் பிறந்தநாள்! ஆக, குஷ்புவுக்கு தமிழ் திரையுலகம் கொடுத்த பிறந்தநாள் பரிசாக ‘தர்மத்தின் தலைவன்’ அமைந்தது!

x