வித்தியாசமான கதைகளைப் படமாக்குவதில் அந்தக் காலத்திலேயே முத்திரை பதித்தவர் வீணை எஸ்.பாலசந்தர். இவரின் படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. ’இதுவரை தமிழ் சினிமாவில் வந்திடாதவை’ என்று தைரியமாகச் சொல்லலாம். ‘ஆங்கிலப் படத்துக்கு இணையானவை’ என்கிற வார்த்தையை பல படங்களுக்குச் சொல்வார்கள். உண்மையிலேயே, இவரின் படங்கள் ‘ஆங்கிலப் படங்களுக்கு இணையானவை’தான். அந்தப் படங்களால் கவரப்பட்டு அவற்றின் தாக்கத்தில் இங்கே பல படங்களைக் கொடுத்தார்.
அந்த வகையில் ஹிட்ச்காக்கின் ‘சபோடாஜ்’ (1936) படத்தைத் தழுவி, அவர் உருவாக்கிய படம் ‘பொம்மை’.
மிகப்பெரிய செல்வந்தரும் தொழிலதிபருமான சோமசுந்தரம். அவரின் உறவுக்காரப் பையன்கள் அவரிடம் வேலை செய்கிறார்கள். அத்துடன் அவருக்கு பார்ட்னர் ஒருவரும் இருக்கிறார். சோமசுந்தரத்தைத் தீர்த்துக்கட்டினால், மொத்த சொத்துகளும் கம்பெனி மொத்தமும் தமக்கு வந்துவிடும் என்று பார்ட்னர் நினைக்கிறார். அதற்கு உறவுக்காரப் பையன்களில் ஒருவரைத் தவிர, மற்ற எல்லோரும் ஆதரவு தருகிறார்கள்.
இந்த நிலையில், சோமசுந்தரம் சிங்கப்பூர் செல்லத் திட்டமிடுகிறார். இதுதான் சமயம் என்று அவரை வெடிகுண்டு வைத்துக் கொல்வது என முடிவு செய்கிறார்கள். அந்த வெடிகுண்டை, ஒரு பொம்மைக்குள் வைத்து வெடிக்கச் செய்வது எனத் திட்டமிடுகின்றனர். அந்தத் திட்டத்தின்படி பொம்மைக்குள் வெடிகுண்டும் வைக்கப்படுகிறது. பொம்மையை அவரிடமும் தருகிறார்கள்.
ஆனால், அந்த பொம்மை அவர் ஏறிச் சென்ற டாக்ஸிக்குள்ளேயே இருந்துவிடுகிறது. அந்த டாக்ஸியில் வேறொரு தம்பதி ஏறுகிறார்கள். அவர்கள் பொம்மையைப் பார்த்துவிட்டு, குழந்தைக்குத் தர எடுத்துச் செல்கிறார்கள். அந்தப் பையனிடம் இருந்து இன்னொரு பையனுக்கு இன்னொரு பையனுக்கு என்று பொம்மை கை மாறிக்கொண்டே செல்கிறது.
இதெல்லாம் தெரிந்துகொண்ட விஷமிகள், ஒருபக்கம் பொம்மையைத் தேடுகிறார்கள். உறவுக்காரப் பையனில் ஒருவன் மட்டும் தவித்துக் கலங்குகிறான். தன் காதலியிடம் சகலத்தையும் சொல்கிறான்.
சிங்கப்பூர் செல்லும் விமானம், பழுதாகிவிட, வீட்டுக்குத் திரும்பி வருகிறார் சோமசுந்தரம். எனவே இன்னொரு பொம்மை, இன்னொரு வெடிகுண்டு தயார் செய்து அவரிடம் கொடுக்கப்படுகிறது. அந்த பொம்மையும் அவர் கைக்கு செல்லாமல் காரிலேயே எடுக்காமல் இருந்துவிட... இப்படியான குழப்பத்துடனும் சஸ்பென்ஸுடனும் சென்று, இறுதியில் போலீஸ்காரர்களுக்குத் தகவல் தெரிவிக்க, அவர்களும் விசாரணையில் இறங்க, பொம்மைக்குள் வெடிகுண்டு வைத்து கொலை செய்யப்பார்த்தவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். காருக்குள் இருந்த பொம்மை வெடித்து மற்றவர்கள் இறந்துபோகிறார்கள்.
ஏற்கெனவே, தமிழில் பாடல்களே இல்லாமல் ‘அந்த நாள்’ படத்தைத் தந்தார் வீணை எஸ்.பாலசந்தர். தவிர, அதிக ப்ளாஷ்பேக்குகளுடன் அந்தப் படத்தைக் கொடுத்திருந்தார். இதில், ‘பொம்மை’க்குள் வெடிகுண்டு எனும் விஷயத்தைக் கொண்டு த்ரில்லர் படமாகத் தந்திருந்தார்.
படத்துக்கு இசையும் இவர்தான். வசனத்தையும் பாடல்களையும் வித்வான் வே.லட்சுமணன் எழுதினார். வி.எஸ்.ராகவன், எஸ்.என்.லட்சுமி (அந்தக் காலத்திலும் அம்மா கதாபாத்திரம்தான்), வி.கோபாலகிருஷ்ணன், எல்.விஜயலட்சுமி, சதன், மாலி முதலானோர் நடித்திருந்தார்கள். அவரவர்களும் கொடுத்த கதாபாத்திரத்தை மிக நிறைவாக நடித்து அசத்தியிருந்தார்கள். வி.எஸ்.ராகவன் வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார். வி.கோபாலகிருஷ்ணன் கார் டிரைவராக நடித்து கலங்கடித்தார்.
‘பொம்மை’ படத்தில் புதுமையொன்று கையாளப்பட்டது. எடுத்ததுமே படம் தொடங்கிவிடும். கதை ஆரம்பமாகிவிடும். டைட்டிலே போடமாட்டார்கள். கொஞ்சநேரம் கழித்துப் போடுவார்கள் என்று பார்த்து ஏமாந்துபோனார்கள் ரசிகர்கள். அப்போதும் போடவில்லை. படம் முடிந்ததும் போடுவார்கள் போல என்று நினைத்தார்கள். ஆனால் படம் முடிந்ததும் கூட டைட்டில் எழுத்துகள் எதுவும் போடவில்லை. பின்னே என்ன செய்தார் வீணை பாலசந்தர்?
ரொம்ப ஸ்டைலாக ஒரு சேரில் அமர்ந்துகொண்டு, அரை டிராயரும் சட்டையுமாக அணிந்துகொண்டு, திரும்பிப் பார்ப்பார் வீணை பாலசந்தார்.
‘’நான் தான் இந்தப் படத்தை டைரக்ட் பண்ணின பாலசந்தர். இதுல சோமசுந்தரமா நான் நடிச்சதைப் பாத்துருப்பீங்க’’ என்று சொல்லிவிட்டு, படத்தின் வசனகர்த்தா, ஒலிப்பதிவாளர், ஒளிப்பதிவாளர், நடிகர் நடிகைகள், பாடகர் பாடகிகள் என அனைவரையும் நிற்கவைத்து, அவர்களையே அவர்களின் பெயர்களைச் சொல்லவைத்திருப்பார் பாலசந்தர்.
படத்தில் பல பாடல்கள் இருந்தன. பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருந்தார்கள். அதேபோல, கே.வீரமணி, ஹரிஹரசுப்ரமணியம் பாடியிருந்தார்கள். இன்னொருவரும் பாடியிருந்தார். ஏற்கெனவே, மலையாளத்தில் பாடியிருந்தாலும் தமிழில் இதுதான் இவருக்கு முதல் படம். இன்று வரை தன் காந்தர்வக் குரலால் நம்மை மனதை வசீகரித்துவரும் கே.ஜே.ஜேசுதாஸுக்கு தமிழில் முதல் படம் இதுதான். ‘நீயும் பொம்மை நானும் நினைச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை’ என்ற பாடல்தான் ஜேசுதாஸின் முதல் தமிழ்ப் பாடல்.
இன்னொன்றையும் நிறைவாகச் செய்திருந்தார் பாலசந்தர். ‘இந்தப் படத்துல பங்கெடுத்த எல்லாரையும் அறிமுகப்படுத்திட்டேன். இன்னொருத்தர் ரொம்ப முக்கியமானவர். அவரையும் அறிமுகப்படுத்திடுறேன்’ என்று சொல்லிவிட்டு, படத்தின் முக்கியப் புள்ளியான ‘பொம்மை’க்கு சாவிகொடுத்து தரையில் விடுவார். அந்த பொம்மை நடந்து செல்லும். தரையில் ‘சுபம்’ என்று வணக்கம் போட்டிருப்பார் பாலசந்தர்.
ஆங்கில பாணியில் அமைந்த இந்தப் படம் வெகுவாக ஈர்க்கவில்லை. அதற்குக் காரணம்... ரசிகர்களுக்கு புரிபடவில்லை. ஒளிப்பதிவிலும் நுட்பங்களுடன் ஜாலம் காட்டியிருந்தார்கள். பின்னர் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, புரிந்துகொண்டு கொண்டாடினார்கள். பாராட்டினார்கள்.
1964 செப்டம்பர் 25-ம் தேதி வெளியானது ‘பொம்மை’ திரைப்படம். படம் வெளியாகி, 58 ஆண்டுகளாகின்றன. நம் வசீகரக் குரலோன் கே.ஜே.ஜேசுதாஸ் நமக்குக் கிடைத்தும் 58 ஆண்டுகளாகின்றன.
தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்த அப்போதே பாடுபட்ட வீணை எஸ்.பாலசந்தரையும் மறக்க முடியாது. ‘நீயும் பொம்மை நானும் பொம்மை’ என்று பாடி, நம் மனதில் இடம் பிடித்த கே.ஜே.ஜேசுதாஸையும் மறக்க முடியாது.