என்றும் உலாவும் இளையநிலா எஸ்.பி.பி!


எஸ்.பி.பி (ஓவியம்: இளங்கோ)

எஸ்.பி.பி... தமிழ் சினிமாவின் இன்னொரு மூன்றெழுத்து மந்திரம். இந்தப் பெயரை உச்சரிக்காத உதடுகளே இல்லை. இவரின் குரலைக் கேட்காத செவிகளே இருக்கமுடியாது. அநேகமாக, எனக்கு நினைவுதெரிந்து, அவரின் எந்தப் பாடலை முதன்முதலில் கேட்டேன் என்று தெரியவில்லை. ‘நேற்று இன்று நாளை’ படத்தின், ‘பாடும்போது நான் தென்றல் காற்று’ பாடலாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். அப்போது அவர் பெயரெல்லாம் தெரியாது. ‘மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து’ என்று அந்த ‘அணைத்து’என்பதை அணைத்துப் பாடுவதில் அப்போதே ஏதோவொரு மேஜிக் தெரிந்தது. அதேபோல், ‘கல்யாணம் கச்சேரி கொண்டாட்டம்’ என்ற ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடலில், கல்யாணம் என்பதில் ‘ம்’, கச்சேரி என்பதில் ‘ரி’, கொண்டாட்டம் என்பதில் ‘ம்’ என்பதை ஸ்டைலாக ஒரு அழுத்து அழுத்திப் பாடியிருப்பார்.

அப்போதெல்லாம் கோயில் விழாக்களென்றால் பாட்டுக்கச்சேரி நிச்சயமாக இடம்பெறும். ஒவ்வொரு பாடகரின் குரலுக்குத் தகுந்தபடி பாடுவதற்கு, இரண்டு மூன்று பாடகர்கள் இருப்பார்கள். எஸ்.பி.பி.யின் பாடலைப் பாடுபவர் எழுந்து மைக் பிடித்தாலே அப்படியொரு கைதட்டலும் விசிலும் அதிரவைக்கும். ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’ என்ற பாடல்தான் அன்றைக்கு பெல்பாட்ட இளைஞர்களின் மவுத்டோன் பாடல். எப்போதும் இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பார்கள் எங்களின் அண்ணன்மார்கள். அந்தப் பாட்டில் ‘பபபபபப்பாபா... பபபபபபபா’ என்றெல்லாம் எஸ்.பி.பி. ஹம்மிங்கில் விளையாடிவிட்டு சட்டென்று பாடலைத் தொடருவார். ’கம்பன் ஏமாந்தான்’ பாடலை கமல்தான் பாடினார் என்றெல்லாம் நினைத்ததுண்டு.

பின்னாளில்தான், பழைய படங்களைப் பார்க்கவும் பழைய பாடல்களைக் கேட்கவும் சிந்தனைகள் பின்னோக்கிச் சென்றன. ஜெமினி கணேசனுக்கு ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்று பாடியதுதான் முதல் பாடல். ஆனால் அதற்குள் வந்துவிட்டது எம்ஜிஆருக்காக பாடிய ‘ஆயிரம் நிலவே வா’.

‘அவள் ஒரு நவரசநாடகம்’ என்றும் ‘பாடும்போது நான் தென்றல் காற்று’ என்றும் ‘வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்றும் எம்ஜிஆருக்குப் பாடியது தனி ஸ்டைலாக இருந்தது. ‘நீ எனக்காகப் பாடுற மாதிரி பாடாதே. நீ எப்படிப் பாடுவியோ, அப்படியே பாடு. நான் பாத்துக்கறேன்’ என்று சிவாஜி சொல்ல, ‘பொட்டு வைத்த முகமோ’ என்று பாடினார்.

‘நான் அவனில்லை’ படத்தில் ஜெமினிக்கு ‘ராதா காதல் வராதா’ என்ற பாடல் அப்போது அட்டகாசமாக புதுரத்தம் பாய்ந்த பாடலாக அமைந்தது. இதேபோல், ‘பட்டிக்காட்டு ராஜா’ படத்தில் கமலுக்கு ‘உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’ என்ற பாடலும் மைக் பாடலாக ஹிட்டடித்தது. ‘ராதா காதல் வராதா’ பாடலை எஸ்.பி.பி.யைத் தவிர வேறு யாரும் பாடமுடியாது என்று பந்தயம் கட்டி நண்பர்களுடன் சண்டைபோட்டதெல்லாம் ஞாபகத்தில் இருக்கிறது.

’சம்சாரம் என்பது வீணை’ என்ற பாடலும் ‘நந்தா நீ என் நிலா’ என்ற பாடலும் ஏகப்பட்ட சங்கதிகளுடன் அன்றைக்கு எல்லோராலும் முணுமுணுக்கப்பட்ட பாடலாக அமைந்தது. ‘அவள் ஒரு நவரசநாடகம்’ தனித்துத் தெரிந்தது. ‘தேன் சிந்துதே வானம்’ முதலான பாடல்கள் தனி த்வனியாக இருந்தன. ’எங்கள்வீட்டு தங்கத்தேரில் எந்த மாதம் திருவிழா’ என்ற பாடலும் அப்படித்தான். இதில், ‘திருவிழா திருவிழா’ என்று சொல்லும்போதே, நமக்குள் திருவிழா கொண்டாட்டம் வந்திறங்கியிருக்கும்.

‘அவள் ஒரு தொடர்கதை’யில் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’, அப்போது கைதட்டல் பெறுவதற்காகவும் ரசிகர்களைக் கவர்வதற்காகவும் மேடைகளில் பாடப்பட்டது. ‘ஒருநாள் உன்னோடு ஒருநாள்’ என்ற பாடலைக் கேட்ட பிறகு காதலிக்கத் தொடங்கியவர்கள் உண்டு.

ஜி.கே.வெங்கடேஷ் இசையில், ‘தொடுவதென்ன தென்றலோ’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். இளையராஜாவின் இசையில் ‘தாலாட்டு... பிள்ளை உண்டு தாலாட்டு’ பாடலும் நம்மை தாலாட்டும்.

அப்போது எஸ்.பி.பி.யின் முகம் தெரியாது. ஆனால் ஆண்களும் பெண்களும் அவரை உள்ளே வரித்துக் கொண்டார்கள். காதலிக்கத் தொடங்கினார்கள். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் கமலுக்கான எல்லாப் பாடல்களும் எஸ்.பி.பி.தான். ‘எங்கேயும் எப்போதும்’, கமல் பாடுகிறாரா எஸ்.பி.பி. பாடுகிறாரா என்று குழப்பும். அந்தப் பாடல்களின் உணர்வுகளை, கதாபாத்திரங்களின் தன்மையை நமக்குள் கடத்திவிடுகிற காந்தசக்தி, அவருடைய குரலில் கும்மியடித்தது.

இளையராஜா - எஸ்.பி.பி.

ரஜினிக்கு, ‘நம்ம ஊரு சிங்காரி சிங்கப்பூரு வந்தாளாம்’ பாடலும் ‘பொல்லாதவன்’ படத்தில், ‘நான் பொல்லாதவன்’ பாடலும் ‘பில்லா’ படத்தின் ‘மை நேம் இஸ் பில்லா’ பாடலும் ரஜினியே பாடுவது போல் இருந்தது. ’நம்ம ஊரு சிங்காரி’யில் ‘மன்மதன் வந்தானா நம்ம சங்கதி சொன்னானா?’ என்று உச்சரிக்கும்போது, மன்மதன் வந்து பலரையும் உசுப்பிவிட்டான்.

‘அம்மம்மோய்... அப்பப்போய் மாயாஜாலம்தான்’ பாடலையும் ‘மாமன் ஒருநா மல்லிகப்பூ கொடுத்தான்’ என்ற பாடலையும் கேட்டுப் பாருங்கள். முன்னதில் ‘சொக்கிப்போய் நிக்கிறேண்டா’ என்று பாடும்போது நாம் சொக்கித்தான் போனோம். பின்னதில், ’என் மாமன் வந்தான் அங்கே, ஒரு மாங்கா தந்தான் திங்க...’ என்று அப்பாவியாகவும் காதலுடனும் ஏக்கத்துடனும் பெண்ணின் மனதைச் சொன்னபோது, பெண்கள் எஸ்.பி.பி.யின் குரலில் தங்கள் காதலையும் காதலனையும் தேடினார்கள்.

‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ என்ற பாடலில் எஸ்.பி.பி.யும் கொஞ்சுவார். வயலினும் குழையும். ஒவ்வொரு நிலாவைச் சொல்லும்போதும் ஒவ்வொரு த்வனி காட்டியிருப்பார். ஆயிரம் நிலவை அழைத்த அதிசயக்குரலோனுக்கு இந்த நிலாக்களெல்லாம் எம்மாத்திரம்? சங்கர் கணேஷின் இசையில் ‘நீயா’ படத்தில், ‘ஒரே ஜீவன்’ பாடலும் ‘நான் கட்டில் மீது கண்டேன்’ பாடலும் சொக்கவைக்கும்.

குழந்தைகளுடன் பாடுகிற ஹீரோ என்பதால், ‘ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளைப் பொன்வண்டுகள்’ என்று அடக்கிவாசிப்பார். அரைகுறை ஆடையுடன் இருக்கும் நாயகியை வனாந்திரத்தில் பார்த்துவிட்டதால் ‘பட்டுப்பூவே உன்னைப் பார்த்தால் பாட்டுப்பாட ஆசை, கண்ணாலே கவியானேன்’ என்று உச்சஸ்தாயியில் காதலையும் காமத்தையும் உரக்கச் சொல்லுவார். அதேபோல், இரவு வேளையில், எவருமில்லாத் தனிமையில், ‘நா பூவெடுத்து வைக்கணும் பின்னாலே அத வைக்கிறப்போ சொக்கணும் தன்னாலே’ என்று ஹஸ்கி குரலில் ஐஸ்க்ரீம் கலந்து கொடுத்திருப்பார். சிலோன் ரேடியோவில், ‘ஒரேநாள் உனைநான் நிலாவில் பார்த்தது’ என்று தினமும் ஒலிபரப்புவார்கள்.

யாருக்குப் பாட வேண்டும் என்பதையும் எந்தச் சூழலுக்கான பாடல் என்பதையும் எந்தவிதமான பாவங்களைக் கொண்ட பாடல் என்பதையும் முழுவதுமாக அறிந்து உணர்ந்து அநாயசமாகப் பாடிவிட்டுச் சென்றுவிடுவார் எஸ்.பி.பி. பிறகு அந்தப் பாடலுக்கான காட்சிக்கு நடிகர்கள் அவர் பாடியதற்குத் தக்கபடி நடிக்கவேண்டியிருந்தது. இப்படியெல்லாம் மாயங்கள் காட்டிய பாடகர், இந்தியாவில் இவரைப் போல இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

‘எனக்கொரு காதலி இருக்கின்றாள்’ என்ற பாட்டு. எம்.எஸ்.வி.யும் எஸ்.பி.பி.யும் இணைந்து பாடியிருப்பார்கள். ‘இலக்கணம் மாறுமோ’ பாடலை எஸ்.பி.பி. பாடிய விதத்தைக் கேட்டு சிலிர்த்துக் கண்ணீர் விட்டார் மெல்லிசை மன்னர். அதேபோல், இந்தப் பாடலை பாடி முடித்ததும் எஸ்.பி.பி.யை அப்படியே கட்டியணைத்துக்கொண்டார். ’தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும் பாடாமல் போனால் எது தெய்வமாகும்?’ என்று சொல்லும்போது, தெய்வமே இறங்கிவந்து, எஸ்.பி.பி.யின் தலைதொட்டு, தொண்டை தொட்டு ஆசீர்வதித்திருக்கும்.

பி.சுசீலாவுடன் எஸ்.பி.பி.

’நம்ம கடைவீதி கலகலக்கும்’ என்று ஜாலியாய் விஜயகாந்துக்குப் பாடுவார். ‘காலை நேரப் பூங்குயில் கவிதை பாடத் தேடுது’ என்று மெல்லிசையில் குரல் குழைத்து காதல் ஏக்கத்தையும் சொல்லுவார். ‘வெண்மேகம் மண்ணில்’ என்று ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் பாடியபோது அவரை அண்ணனாக பார்த்தார்கள் பெண்கள். ’வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது குளுகுளு தென்றல் காற்றும் வீசுது’ என்ற பாடலில் வளையோசை கொலுசு போல் பெரிதாக சத்தம் போடாதல்லவா. அதேபோல் குளுகுளு காற்றுதானே. கவிதை என்பதும் மென்மையானதுதானே. அப்படியொரு வித்தையை குரல் வழி கடத்துவதெல்லாம் பாலுவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

அவரின் குரல், எல்லா நடிகர்களுக்கும் பொருந்தியது. எல்லோருக்கும் விருப்பமான குரலானது. பதினாறு மொழிகளில் பாடியிருக்கிறார். அவர் இசையமைத்த பாடல்கள் இன்றைக்கும் ஹிட் வரிசையில் இருக்கின்றன. அவர் நடித்த படங்களிலும் அவரைத் தவிர வேறு எவரையும் பொருத்திக் கற்பனை செய்யமுடியாது.

ஹரிகதைகள் சொல்லிப் பாடுகிற அப்பா சாம்பமூர்த்திதான் முதல் குரு. அதனால்தானோ என்னவோ, ‘சிப்பிக்குள் முத்து’ படத்தில் ’ராமன் கதை கேளுங்கள்’ என்ற உபந்யாசப் பாடலை ஒரு கதை போல் பாடி மகிழவைத்திருப்பார். ‘சங்கராபரணம்’ ’சங்கரா’வும் பாடுவார். ’ஓ ரங்கா ஸ்ரீரங்கா கொப்பரத்தேங்கா’ என்று துள்ளாட்டமும் போடவைப்பார். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் ‘தோகை இளமயில் ஆடிவருகுது’ பாடலையும் ‘இளையநிலா பொழிகிறதே’ பாடலையும் ‘மணியோசை கேட்டு எழுந்து’ பாடலையும் கேட்டுப் பார்த்தால், மூன்று வித சிச்சுவேஷன்களையும் உணர்வுகளையும் நமக்குள் கடத்தியிருக்கிற எஸ்.பி.பி.யின் குரலைக் கண்டு வியக்கத்தான் முடிகிறது.

‘ஏக் துஜே கேலியே’படத்தின் அந்தப் பாடலை எஸ்.பி.பியை பாடவைக்கலாம் என பாலசந்தர் சொல்ல, லட்சுமிகாந்த் பியாரிலால் ஒத்துக்கொள்ளவே இல்லை. ‘அவர் பாடாட்டி இந்தப் பாட்டே வேணாம்’ என்று சொல்லிவிட்டார் கே.பி. பிறகு சமாதானமாகி, எஸ்.பி.பி.யையே பாடவைத்தார்கள். இன்று வரைக்கும் அந்தப் பாடல்தான் தலைமுறைகளைக் கடந்தும் காதலின் தேசியகீதமாக இருந்தது. தேசிய விருதுகளைப் பெற்றுத் தந்த பாடல்களில் இதுவும் ஒன்று!

எஸ்.பி.பி. மாதிரி ஹம்மிங்கிலும் நடுவில் செய்கிற குறும்பிலும் திடீரெனச் சிரிக்கிற சிரிப்பிலும் இந்திய அளவில் எந்தப் பாடகர்களும் செய்யாத அதிசயங்கள் என்று வியக்காத இசையமைப்பாளர்களே இல்லை.

‘தாழம்பூவே வாசம் வீசு’ என்ற பாடலுக்கு முன்னதாக ஒரு சின்ன ‘ம்ம்ம்ம்ம்ம்’ என்றொரு ஆலாபனை. ‘ணம் தம் தம் ணம்தம் நம்தம்நம்தம்...’ என்று ‘காதல் ஓவியம்’ படத்தின் பாடலுக்கு முன்னொரு ஆலாபனை. ‘மடை திறந்து தாவும் நதியலை நான்’ பாடலின் நடுவே ‘பபபாப்பா பபபாப்பா பாப்பா...’ என்றொரு ஹம்மிங். ‘இளமை இதோ இதோ’வில் நடுவே ஒரு ஹம்மிங்.

‘பூமாலை ஒரு பாவையானதோ’ என்ற பாடலில் ‘தகத தகதா தகத தகதா.. தகதா தகதகதக...’ என்றொரு ஹம்மிங். ‘மெளனராகம்’ படத்தில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ முன்னதாக ஒரு ஆலாபனை. அதில் ஏக்கமும் வருத்தமும் ஒரு கழிவிரக்கமும் மட்டுமே இருக்கும். நடுவே, ‘தாமரை மேலே நீர்த்துளி போல்’ என்று பாடும்போது பிரியப்போகிற தம்பதிக்காக வருந்தி அழ ஆரம்பித்துவிடுவோம்.

இளையராஜாவுடன் சேர்ந்து பாடிய ‘எடுத்து நான் விடவா என் பாட்டை தோ தோ தோழா’ என்ற பாடலில், இரண்டு நண்பர்களும் நிஜத்தில் மட்டுமில்லாமல், பாடலிலும் ஜாலியும்கேலியுமாக விளையாடியிருப்பார்கள்.

இளையராஜாவுடன் எஸ்.பி.பி.

‘ஆவாரம்பூ’ படத்தில் ‘சாமிகிட்ட சொல்லி என்னை சேர்த்ததிந்த செல்லக்கிளியே’ பாடலை ஒருமுறை கேட்டுவிட்டால், இளவயசுக்காரர்கள் காதலிக்கத்தொடங்கிவிடுவார்கள். நடுத்தர வயதுக்காரர்கள் மனைவியை இன்னும் நேசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். ‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே’ ஹம்மிங்கே நமக்குள் பாரம் ஏற்றிவிடும். ஒரு பாடலுக்கு வரியும் இசையும் நடிப்பும் உயிர் கொடுக்கும். பாலு பாடினால், பெரும்பங்கு அவரின் குரலே செய்துவிடும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பாடாத மொழிகளில்லை. எம்.எஸ்.வி., கே.வி.மகாதேவன், வி.குமார், விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ், இளையராஜா என்று தொடங்கி இன்றைய அநிருத் வரை எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியிருக்கிறார். இருபதாவது வயதில் பாடத் தொடங்கியவர் 74 வயது வரையும் பாடினார். திரைக்கு வந்து ஐம்பதாண்டுகளாகிவிட்டன. 40 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கிறார். இதுவரை இவ்வளவு பாடல்களை வேறு எவரும் பாடியதில்லை என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறார்.

தெலுங்கில் இசையமைக்கத் தொடங்கி, தமிழில் ‘துடிக்கும் கரங்கள்’, ‘சிகரம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். கே.பாலசந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’, வஸந்தின் ‘கேளடி கண்மணி’, குணா, காதலன், உல்லாசம் முதலான எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரேநாளில் 18 பாடல்களைப் பாடி ரிக்கார்டிங் செய்த பெருமையும் சாதனையும் கொண்ட எஸ்.பி.பி., பாடலுக்கு நடுவே சிரிப்பார். ‘காமன்கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்’ என்று ‘பரிகாசம்’ சொல்லும்போது லேசான பரிகாசச் சிரிப்பை உதிர்ப்பார். கிட்டத்தட்ட ரிக்கார்டிங் தியேட்டரின் கூண்டுக்குள் இருந்தபடி, 40 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார் என்றால் 40 ஆயிரம் பாடல்களுக்கு நடித்திருக்கிறார் என்பதாகத்தான் நினைக்கிறேன். சிலிர்க்கிறேன்.

‘சத்யா’ படத்தில் வில்லன் கிட்டிக்கு அத்தனை அமைதியாக, சாத்வீக வில்லனுக்குரிய குரலைக் கொடுத்திருப்பார் எஸ்.பி.பி. ‘சிப்பிக்குள் முத்து’ படத்தில் கமலுக்கு குரல் கொடுத்திருப்பார். மரணத்துக்கு முன்பு வரை கூட வயதாகிவிட்டாலும் குரலுக்கு மட்டுமே வயது குறைந்துகொண்டே இருந்தது; இளமை கூடிக்கொண்டே இருந்தது.

குருவை மதிப்பவர், ஆதரவு தந்தவர்களை மறக்காமல் நன்றி கூறிக்கொண்டே இருந்தவர், நல்ல மனிதர், இனிமையான நண்பர் என்று எல்லோரும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

‘நிலா’வை பெண்பாலாக, பெண்ணுக்கு உதாரணமாகத்தான் சொல்லுகிறது இலக்கியம். ஆனால் உலகளவில் முதன்முதலாக ஒரு ஆணுக்கு உதாரணத்துடன் சொன்னால், அது எஸ்.பி.பி.க்காகத்தான் இருக்கும்!

’நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா’ அவர். ‘வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி’ என்று வானம்பாடியாகிவிட்டவர் அவர்.

‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே

’வானம் விட்டு வாராயோ

விண்ணிலே பாதையில்லை

உன்னைத் தொட ஏணியில்லை’ என்று இசையமைத்துப் பாடினார் எஸ்.பி.பி.

பாதையில்லாத வானம்தான். உங்களைத் தொட ஏணியே இல்லைதான். ஆனால் ‘வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ’ என்று இன்னமும் ஏங்கிக்கொண்டே இருக்கிறோம், ரசிகர்களாகிய நாங்கள்! அதேசமயத்தில், ‘இறந்தும் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்’ என்று சிலரைச் சொல்லுவோம். இந்த வரிசையில் எஸ்.பி.பி.யைச் சொல்லமுடியவில்லை. எஸ்.பி.பி. இறக்கவே இல்லை. வாழ்ந்துகொண்டிருக்கிறார்.இந்த அகண்ட பிரபஞ்சத்தில், ஒருநாள்... ஒரேயொரு நாள்... எஸ்.பி.பி.யின் குரலை ஒரேயொருவர் கூட என்றைக்குக் கேட்காமல் இருக்கிறாரோ... அன்றைக்குத்தான் எஸ்.பி.பி. எனும் நிலா, தேய்ந்துவிட்டது என்று அர்த்தம். இதெல்லாம் நடக்கிற காரியமே இல்லை பாலுசார்!

நீங்கள்... இன்னமும் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறீர்கள்!

’சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

நாளை என் கீதமே என்றும் உலாவுமே

என்றும் விழாவே என் வாழ்விலே!’ என்று பாடிய பாலுவின் குரல் நம் வாழ்வில் இரண்டறக் கலந்து, நமக்குள் இனம்புரியாத உறவையும் பந்தத்தையும் கொடுத்திருக்கிறது

’இந்தத் தேகம் மறைந்தாலும்

இசையாய் மலர்வேன்... கேளாய் பூமனமே!’ என்று சொன்னதைத்தான் நாங்களும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் பாலு சார்.

நீங்கள்... இன்னமும் வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறீர்கள்!

- செப்டம்பர் 25 : எஸ்.பி.பி-யின் நினைவுதினம்.

x