கேரளாவின் சின்னஞ்சிறிய கிராமத்தில் பிறந்தவர் அவர். ஆனால் தென்னிந்திய மொழிகளில், தனித்துவத்துடன் ராஜாங்கமே நடத்தினார். யாருடன் வேண்டுமானாலும் நடிப்பார். எவருடன் நடித்தாலும் தனக்கான முத்திரையைப் பதிப்பார். ‘நடிப்பில் இவர் மாதிரி கிடையாது’ என்று இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாட்டியத்திலும்கூட அப்படித்தான் இன்னமும் புகழ்ந்துகொண்டிருக்கிறோம். நடிப்புக்கென்றே பிறந்து, நடனத்துக்கென்றே பிறந்து, தன் திறமையைக் கொடிநாட்டிய தாரகை... நாட்டியத் தாரகை. எல்லோருக்கும் அவர்... பத்மினி. நெருங்கிய வட்டாரத்திலும் திரையுலகிலும் பப்பிம்மா!
சின்னக்குழந்தைகள் காலில் சலங்கை கட்டிக்கொண்டு நடனமாடினால், உடனே எல்லோரும் உதாரணமாக பத்மினியின் பெயரைத்தான் சொல்லுவார்கள். யாராவது நடனமாடினால், ’எம் பொண்ணு பத்மினி மாதிரி பரதத்துல பேரெடுக்கணும்’ என்று விரும்புவார்கள். ‘பத்மினி மாதிரிலாம் நடனமாட முடியாதுப்பா’ என்று அவர்களே தங்களை சமாதானப்படுத்திக் கொள்வார்கள்.
பத்மினி, பப்பி, நாட்டியப் பேரொளி என்றெல்லாம் பின்னாளில் அழைக்கப்பட்ட பத்மினியை பால்யத்திலும் வாலிப வயது வரையிலும் கூட ‘திருவிதாங்கூர் சகோதரிகள்’ என்றுதான் அழைத்தார்கள். ‘லலிதா, பத்மினி, ராகினி’ என மூன்று சகோதரிகளும் நாட்டியத்தில் சிறந்தவர்கள். மயில் மாதிரி துள்ளிக்குதித்து ஆட்டம் போடுவதில் சூரப்புலிகள். மூவரில் பத்மினி தனியாக ஜொலித்தார். நடிப்பிலும் மின்னினார்.
இன்றைக்கு ஏழெட்டு தமிழ்ப்படங்களில் நடித்தால்தான் இந்திப் பட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் பத்மினிக்கு அப்படியே நேரெதிராக வாய்த்தது. முதலில் இந்திப் படங்களில் நடித்தார். ’கல்பனா’ எனும் இந்திப் படத்தில் நடித்தார்.
அதன் பிறகுதான் தமிழ்த் திரையுலகம் பத்மினியை இனம் கண்டுகொண்டது. இந்தியில் அறிமுகமாகி தமிழுக்கு வந்தாலும், தமிழ் மக்கள்தான் பத்மினியைக் கொண்டாடத் தொடங்கினார்கள். 17-வது வயதில் தொடங்கிய திரைப்பயணம் அடுத்தடுத்து பேரொளியாக, சூரியனைப் போல பிரகாசித்துக் கொண்டே போனது.
1949-ம் ஆண்டிலேயே ’வாழ்க்கை’, ‘பவளக்கொடி’, ‘சந்திரலேகா’ என வரிசையாக படங்கள் வரத் தொடங்கிவிட்டன. எம்ஜிஆர், ஜெமினி முதலான எத்தனையோ நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தாலும் ‘சிவாஜி - பத்மினி’ ஜோடியை எல்லோரும் ரசித்தார்கள். கொண்டாடினார்கள். 1950-களில் அவரது ராஜ்ஜியம் தொடங்கியது!
அப்படி சிவாஜியும் பத்மினியும் இணைந்த முதல் படமாக ‘தூக்குதூக்கி’ வந்தது. ‘சிவாஜி - பத்மினி’ ஜோடி போலவே ‘சிவாஜி - டிஎம்எஸ்’ ஜோடியும் இதில்தான் இணைந்தது. இருவரின் நடிப்பும் பத்மினியும் நடனமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
‘ராஜாராணி’யில் ராணி மாதிரியாகவே அழகு ததும்ப வந்து நடிப்பிலும் அசத்தினார். ‘தங்கப்பதுமை’ படத்தில் இவரின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. ‘தெய்வப்பிறவி’ படத்தில் சந்தேகப்படுகிற கணவராக சிவாஜியும் மருகித் தவிக்கும் மனைவியாக பத்மினியும் ஆகச்சிறந்த நடிப்பை வழங்கினார்கள்.
எம்ஜிஆருடன் ‘மன்னாதிமன்னன்’, ‘மதுரை வீரன்’ என்று பல படங்களில் நடித்தார். இங்கே, இருவரில் யார் அழகு என்று பட்டிமன்றமே நடத்தினார்கள் ரசிகர்கள். ஜெமினியுடன் நடித்த படங்களிலும் தன் நடிப்பால் ஒருபக்கம் கரவொலி வாங்கினார். நடனத்தால் விசில் சத்தத்தை சம்பாதித்தார்.
எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு, வாரப் பத்திரிகையில், தொடராக கதையொன்றை எழுதினார். எழுதும்போதே, பேசப்பட்ட... புகழப்பட்ட நாவல், படமாக எடுக்க எல்லோருமே ஆசைப்பட்டார்கள். கதையைப் படித்த பலரும் அப்படித்தான் விரும்பினார்கள். அந்தக் கதை படமாக எடுக்கப்பட்டது. பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. ஐம்பது வருடங்களைக் கடந்தும் இன்றைக்கும் அந்தப் படம் இன்றும் கொண்டாடப்படுகிறது. அப்படி மறக்க முடியாத அளவுக்கு, கொத்தமங்கலம் சுப்புவின் கற்பனை கேரக்டருக்கு உயிர் கொடுத்தார்கள் இரண்டு பேர். ஒருவர்... சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜி கணேசன். இன்னொருவர் மோகனாம்பாளாக ஜொலித்த பத்மினி. படத்தில் அவருக்கு ‘தில்லானா மோகனாம்பாள்’ எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. நிஜத்தில், எப்போதோ... ’நாட்டியப் பேரொளி’ என்று பட்டம் கொடுத்துப் பாராட்டினார்கள் தமிழ் ரசிகர்கள்.
பத்மினியின் கண்கள் தனி அழகு. கண்களிரண்டும் நடித்துக் கொண்டிருக்கும். அதேசமயத்தில், கால்களிரண்டும் நர்த்தனமாடும்.
மலையாள தேசத்தில் பிறந்திருந்தாலும் தமிழ் உச்சரிப்பில் அதிசயிக்கவைத்தார். இவரின் வசன உச்சரிப்புக்கும் முகபாவனைகளுக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. பத்மினி வசனம் பேசுகிறாரென்றால், இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கண் ஜாடையில் பேசிக்கொள்வார்கள்.
பிறகு கேமரா லென்ஸ், குளோஸப் ஷாட்டுக்குள் நிற்கும். குளோஸப் ஷாட்டுகளில், பத்மினியின் மொத்த அழகும் மொத்தத் திறமையும் வெளிப்படும். சிவாஜியுடன் மட்டுமே 50-க்கும் மேற்பட்ட படங்களில் சேர்ந்து நடித்தார். தமிழ் சினிமாவில் பொருத்தமான ஜோடிப் பட்டியலில் சிவாஜி - பத்மினிக்கும் தனி இடம் கொடுத்தார்கள் ரசிகர்கள்.
‘சபாஷ் சரியான போட்டி...’ எனும் வசனம் பொருத்தமானதுதான். பத்மினியும் வைஜெயந்திமாலாவும் நடன மகாராணிகள். இருவரின் நடனமும் அசத்தியெடுத்துவிடும்.
பத்மினி பிரமாதமாக ஆடுவார். அவரின் ஆட்டத்தைப் பார்க்கவே படத்துக்கு வந்த கூட்டமெல்லாம் உண்டு. ஆனாலும் டான்ஸ் ஆடாமல் நடித்த படங்களும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கின்றன. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் பத்மினி நடித்த ‘சித்தி’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. பத்மினியின் நடிப்பைப் பாராட்டாத பத்திரிகைகளே இல்லை. இத்தனைக்கும் படத்தில் பத்மினிக்கு ஜோடி யார் தெரியுமா? எம்.ஆ.ராதா. இவர் நடிப்பில் அசுரனல்லவா!ஆனாலும் இந்த நடிப்பு அசுரனுக்குப் போட்டியாக நடித்து, ஒவ்வொரு காட்சியிலும் ஜெயித்துக்கொண்டே இருப்பார் பத்மினி!
பிரஸ்டீஜ் பத்மநாபனையும் சாவித்திரியையும் மறக்கவே முடியாது நம்மால். ‘வியட்நாம் வீடு’ படத்திலும் நடனமெல்லாம் இருக்காது. நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒருபக்கம் சிவாஜி பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே, பிராமண கணவராகவே வாழ்ந்திருப்பார். பத்மினியும், சாவித்திரியும் மடிசார் புடவையும் பிராமண பாஷையுமாகப் பேசி அசத்தியிருப்பார். ‘பாலக்காடு பக்கத்திலே’ பாடலுக்கு சும்மா ரெண்டே ரெண்டு ஸ்டெப் போட்டு ஆடியிருப்பார் பத்மினி. அவ்வளவுதான். அதற்கே விசில் பறந்தது தியேட்டரில்! மடிசார் புடவையின் முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு, கொஞ்சம் முதுகு குனிந்து, இடுப்பை வளைத்து, தலையை லேசாகக் கவிழ்த்து, நாணிக்கோணியபடி நடந்து வந்து சிவாஜியுடன் பேசுகிற ஒவ்வொரு காட்சியும் வெவ்வேறு விதமான பாவனைகளுடன் இருக்கும்! ஒருமுறை பணிவு இருக்கும். இன்னொரு முறை அன்பு மேலோங்கி இருக்கும். அடுத்த முறை அதிர்ச்சியைக் காட்டுவார். இன்னொரு பக்கம் வேதனையில் கலங்கவைப்பார்!
‘பேசும் தெய்வம்’ படத்தில் பத்மினிக்கு ஏகப்பட்ட க்ளோஸப் காட்சிகள் கொடுத்தார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். காட்சிக்குக் காட்சி பத்மினி நடித்து முடித்தவுடன் கே.எஸ்.ஜி பாராட்டுவாராம். ‘ரொம்பப் பிரமாதம்’, ‘அபாரம்’, ‘இதைத்தான் எதிர்பார்த்தேன், சரியா பண்ணிட்டேம்மா’ என்றெல்லாம் பாராட்டிக் கொண்டே இருக்க, ஒருநாள் இரவு கே.எஸ்.ஜி-க்கு போன் போட்டார் சிவாஜி. ‘’என்னய்யா, இந்தப் படத்துல என் ஆக்டிங் சரியா வரலியா? நான் நல்லாப் பண்ணலியா?’’ என்று வருத்தத்துடன் கேட்டார்.
பதறிப் போனார் கே.எஸ்.ஜி. விவரம் கேட்டார். ‘’இவ்ளோ நாள் நடிச்சிட்டிருக்கேன். இந்தப் படத்துல ஒரு சீனுக்குக் கூட என்னைப் பாராட்டவே இல்லியேய்யா’’ என்று சிவாஜி நொந்துபோய் கேட்க, ‘’உங்க நடிப்புக்குச் சொல்லவா வேணும். என்ன இப்படி சின்னக்குழந்தையாட்டம் வருத்தப்படுறீங்க. பப்பிக்கு நல்ல நடிக்கிற காட்சிகள் இதுல அதிகம். அவங்க சரியா நடிச்சாத்தான் படம் ஆடியன்ஸுக்குள்ளே தாக்கத்தை ஏற்படுத்தும். உங்க நடிப்பு எவ்ளோ பிரமாதமா வந்துருக்குன்னு படம் வந்த பிறகு தெரிஞ்சிப்பீங்க’’ என்று சமாதானம் செய்தாராம் கே.எஸ்.ஜி. அந்த அளவுக்குத் தன் நடிப்பின் முழுத்திறமையையும் கொட்டியிருப்பார் பத்மினி.
'இருமலர்கள்’ படத்தின் ’மாதவிப் பொன்மயிலாள்’ பாடலுக்கு பத்மினியும் நாட்டியமும் சிவாஜியும் நடையும் இன்று வரை எவராலும் மறக்க முடியாது.
எத்தனையோ உறவுகளை படங்கள் கதையாகச் சொல்லியிருக்கின்றன. ஆனால் பாட்டிக்கும் பேத்திக்குமான உறவைச் சொன்னது ‘பூவே பூச்சூடவா’ தான்! ‘பூங்காவனத்தம்மா’ எனும் பாட்டியாகவே வாழ்ந்து கலங்கடித்திருப்பார் பத்மினி.
பத்மினி, அழகு ததும்பும் நடிகை. பத்மினி, பரதம் தெரிந்த நடிகை. பத்மினி நடிப்பில் பல உணர்ச்சிகளை வெளிக்கொண்டு வரும் நடிகை. எந்தக் கேரக்டராக இருந்தாலும் அதில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் நடிகை... எட்டாவது அதிசயம்தான்! அவதார நாயகிதான்!
1932 ஜூன் 12-ம் தேதி பிறந்த பத்மினி, 2006 செப்டம்பர் 24-ம் தேதி காலமானார். நாட்டியம் உள்ளவரை ‘நாட்டியப் பேரொளி’யைக் கொண்டாடிக்கொண்டே இருப்பார்கள் நடன ரசிகர்கள். சினிமா உள்ளவரை, நடிகை பத்மினியை வியந்துகொண்டே இருப்பார்கள் திரை ரசிகர்கள்!