68-ல் எம்ஜிஆரின் 8 படங்களிலும் ஜெயலலிதா நாயகி!


68-ம் ஆண்டு எம்ஜிஆர் நடித்து வெளியான படங்கள் எட்டு. இதிலொரு சுவாரஸ்யம்... இந்த எட்டிலும் நாயகியாக ஜெயலலிதா நடித்தார். மேலும், இதே வருடத்தில், சிவாஜியுடன் முதன்முதலாக ஜோடியாக நடித்தார். 68-ம் ஆண்டில், ஜெய்சங்கருடன் இரண்டு படங்கள், ரவிச்சந்திரனுடன் இரண்டு படங்கள், சிவாஜியுடன் இரண்டு படங்கள் என வரிசையாக நடித்தார் ஜெயலலிதா.

இயக்குநர் ஸ்ரீதரின் அறிமுகமாக ‘வெண்ணிற ஆடை’ படத்தில் ஜெயலலிதா அறிமுகமானார். 1965-ம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி வெளியானது ‘வெண்ணிற ஆடை’. அதே வருடத்தில், பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்க, முதன்முதலாக அவரின் இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியானது. இந்தப் படம் 65-ம் ஆண்டு, ஜூலை 9-ம் தேதி வெளியானது. இந்தப் படம்தான், எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் முதலில் ஜோடி சேர்ந்த படம். இதையடுத்து, செப்டம்பர் 10-ம் தேதி இருவரும் சேர்ந்து நடித்த ‘கன்னித்தாய்’ வெளியானது.

இதைத் தொடர்ந்து 66-ம் ஆண்டு, எம்ஜிஆர் நடித்து பல படங்கள் வெளியாகின. ஆனால், ‘சந்திரோதயம்’, ‘கன்னித்தாய்’ ஆகிய இரண்டு படங்களில் எம்ஜிஆருடன் ஜெயலலிதா நடித்திருந்தார். 65-ல் இரண்டு படங்கள், 66-ல் இரண்டு படங்கள் என வெளியாகியிருந்தன. 67-ல், ‘காவல்காரன்’ திரைப்படமும் ‘தாய்க்குத் தலைமகன்’ படமும் வெளியாகின. இந்த இரண்டு படங்களிலும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஜோடி சேர்ந்து நடித்தார்கள்.

68-ல், ஜெயலலிதா திரை வாழ்வில் மிக முக்கியமான ஆண்டு என்றே சொல்லவேண்டும். இந்த வருடத்தில் எம்ஜிஆர் நடித்து வெளியான படங்கள் மொத்தம் எட்டு. ஜனவரி 11-ம் தேதி ‘ரகசிய போலீஸ் 115’ வெளியானது. பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கினார். பிப்ரவரி மாதம் 23-ல், ‘தேர்த்திருவிழா’ வெளியானது. இது தேவர் பிலிம்ஸ் படம். மார்ச் 15-ல், ஜி.என்.வேலுமணியின் தயாரிப்பில், கே.சங்கரின் இயக்கத்தில், ‘குடியிருந்த கோயில்’ வெளியானது. ஏப்ரல் 25-ல், ‘கண்ணன் என் காதலன்’ வெளியானது. சத்யா மூவீஸ் தயாரித்த இந்தப் படத்தை ப.நீலகண்டன் இயக்கினார்.

ஜூன் 27-ல், எம்ஜிஆர் நடிப்பில் ‘புதியபூமி’ வெளியானது. இயக்குநர் சாணக்யா இயக்கியிருந்தார். இவர்தான் எம்ஜிஆரின் 100-வது படமான ‘ஒளிவிளக்கு’ படத்தையும் இயக்கினார். ஆகஸ்ட் 15-ல், எம்ஜிஆரின் நடிப்பில், இயக்குநர் ப.நீலகண்டன் இயக்கத்தில், ‘கணவன்’ வெளியானது. இந்தப் படத்தின் கதையை எம்ஜிஆரே எழுதியிருந்தார்.

செப்டம்பர் 20-ல், எம்ஜிஆரின் 100-வது படமாக, ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில், ‘ஒளிவிளக்கு’ வெளியானது. அக்டோபர் 21-ல், தேவர் பிலிம்ஸின் ‘காதல் வாகனம்’ வெளியானது. ஆக, 68ம் ஆண்டில், எம்ஜிஆரின் நடிப்பில், ‘ரகசிய போலீஸ் 115’, ‘தேர்த்திருவிழா’, ‘குடியிருந்த கோயில்’, ‘கண்ணன் என் காதலன்’, ‘புதிய பூமி’, ‘ஒளிவிளக்கு’, ‘கணவன்’, ‘காதல் வாகனம்’ என எட்டுப் படங்கள் வெளியாகின.

இதில், ‘ரகசிய போலீஸ் 115’, ‘குடியிருந்தகோயில்’, ஒளிவிளக்கு’ என மூன்று படங்களும் வண்ணப்படங்கள். இந்த வருடத்தில் எம்ஜிஆர் நடித்த எட்டுப் படங்களிலும் ஜெயலலிதாதான் ஹீிரோயினாக நடித்தார்.

இரண்டு படங்களை சாணக்யா இயக்கினார். இரண்டு படங்களை ப.நீலகண்டன் இயக்கினார். இரண்டு படங்களை எம்.ஏ.திருமுகம் இயக்கினார். ஒரு படத்தை கே.சங்கர் இயக்கினார். இன்னொரு படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கினார். ஆனால் எல்லாப் படங்களிலும் எம்ஜிஆருக்கு ஜெயலலிதா ஜோடியாக நடித்தார். திரையுலகில் ஜெயலலிதாவுக்கு இது முக்கியமான ஆண்டாகவே பார்க்கப்படுகிறது.

இன்னொரு சுவாரஸ்யம்... சிவாஜியின் சொந்தப் படமாக ‘கலாட்டா கல்யாணம்’ 68-ம் ஆண்டில்தான் வந்தது. சி.வி.ராஜேந்திரன் இயக்கினார். ஏப்ரல் 12-ம் தேதி வெளியானது இந்தப் படம். இந்தப் படம்தான் ஜெயலலிதா சிவாஜியுடன் முதன்முதலாக இணைந்த படம். ‘வந்த இடம் நல்ல இடம் வரவேண்டும் காதல் மகராணி’ என்ற பாடல், ஜெயலலிதாவின் வரவுக்காகவே வாலி எழுதிய பாடல்.

இந்த வருடத்தில்தான் ரவிச்சந்திரனுடன் ‘அன்று கண்ட முகம்’ படத்திலும் ‘மூன்றெழுத்து’ படத்திலும் ஜெயலலிதா ஜோடியாக நடித்தார். அதேபோல, ’பொம்மலாட்டம்’ படத்திலும் ’முத்துச்சிப்பி’ படத்திலும் ஜெய்சங்கருக்கு ஜோடியாக நடித்தார்.

இதே வருடத்தில், பி.மாதவன் தயாரித்து, இயக்கிய ‘எங்க ஊர் ராஜா’ அக்டோபர் 21-ம் தேதி வெளியானது. இதிலும் சிவாஜிக்கு ஜெயலலிதாதான் ஜோடி. எம்ஜிஆரின் ஜோடியாக நடித்து எந்த வருடத்தில் அதிக படங்களில் நடித்தாரோ... அதே வருடத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு இணையான நடிகரான சிவாஜி கணேசனுடனும் ஜோடி சேர்ந்தார்.

ஆக, 68-ம் வருடத்தில், எம்ஜிஆர் நடித்த எல்லாப்படங்களிலும் ஜெயலலிதா நாயகி. அவை மொத்தம் எட்டுப் படங்கள். ரவிச்சந்திரனுடன் இரண்டு படங்கள், ஜெய்சங்கருடன் இரண்டு படங்கள், சிவாஜியுடன் இரண்டு படங்கள் என மொத்தம் 68-ம் வருடத்தில், 14 படங்களில் ஜெயலலிதா நாயகியாக நடித்தார்.

x