‘ஒருகோடி ரூபாய்’ பிசினஸ் செய்த ‘தாவணிக்கனவுகள்!’


சினிமாவுக்கான கதை சொல்லலில், அண்ணன் - தங்கை கதை என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. இதற்கான இலக்கணத்தை உருவாக்கித் தந்தது ‘பாசமலர்’ திரைப்படம். நம் வீடுகளில்கூட அண்ணன், தங்கை பாசத்தைப் பார்த்து, ‘பெரிய பாசமலர் சிவாஜி, சாவித்திரி’ன்னு நினைப்பு என்று ஜாலியாகக் கேலி செய்வோம். தங்கச்சி சென்டிமென்ட் கதையில் நடிக்காத நடிகர்களே இல்லை எனலாம்! இப்படி அண்ணன் - தங்கச்சி என்கிற கதை என்றாலே நம்மை உணர்ச்சிப்பெருக்கெடுத்து அழவைத்துவிடுவார்கள் என்றிருந்த நிலையில் இருந்து சற்றே விலகி, வேலை, வரதட்சணை, எதிர்காலம் என்றெல்லாம் பேசிய வகையில் தனித்துத் தெரிந்ததுதான் ‘தாவணிக்கனவுகள்’.

’முந்தானை முடிச்சு’ எனும் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் அடுத்த வருடத்திலேயே வெளியான ‘தாவணிக்கனவுகள்’ படத்தில் பல விஷயங்களைச் சேர்த்திருந்தார் பாக்யராஜ். தன் குருநாதர் பாரதிராஜாவை இதில் நடிக்கவைத்தார். ‘கல்லுக்குள் ஈரம்’ படத்துக்குப் பிறகு, இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவாகவே நடித்தார் பாரதிராஜா. அதேபோல், நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் தன் படத்தில் முதன்முதலாக நடிக்கவைத்த பெருமைக்கு உரிய படமாகவும் அமைந்தது ‘தாவணிக்கனவுகள்’. சிஷ்யன் சிவாஜிகணேசனை வைத்து எடுத்த அடுத்த வருடத்தில், ‘முதல் மரியாதை’ எனும் காவியத்தையே படைத்தார் பாரதிராஜா என்பது கொசுறு நினைவூட்டல்.

‘தாவணிக்கனவுகள்’ என்பது அண்ணன் - தங்கைக் கதை அல்ல. அண்ணன் தங்கைகளின் கதை. கோல்டு மெடல் வாங்கி டிகிரி பெற்ற நாயகனுக்கு ஐந்து தங்கைகள். ஆனால் வறுமை. வேலையும் கிடைத்தபாடில்லை. விரக்தியில் எப்போதாவது ‘தண்ணி’ போட்டுவிட்டு தன் சோகம் தீர்த்துக்கொள்கிற சராசரி இளைஞன் பாக்யராஜ்.

அம்மாவும் ஐந்து தங்கைகளும் என்றிருக்க அந்த வீட்டுக்கு இருக்கிற ஒரே ஆதரவு... வீட்டு உரிமையாளரும் முன்னாள் ராணுவ வீரரும் சைக்கிள் கடை வைத்திருப்பவருமான சிவாஜி கணேசன்தான்! அவ்வப்போது உதவுவார். ஆனாலும் சிவாஜியும் பாக்யராஜும் முட்டிக்கொண்டே இருப்பார்கள். அதுவொரு செல்லக் கோபம், ஜாலிச் சண்டை என்பது அடுத்தடுத்த காட்சிகளில் தெரியும்.

ஒருகட்டத்தில், வீட்டைவிட்டு சென்னைக்கு ஓடிவிடுவார் பாக்யராஜ். அப்படி ஓடுவதற்குக் காரணமே சிவாஜியாகத்தான் இருப்பார். அங்கே தனக்குத் தெரிந்த பெண்ணுக்கும் தகவல் சொல்லுவார். அந்தப் பெண்... ராதிகா.

பணம் சம்பாதிக்க ஐந்து வழிகள் வைத்துக்கொண்டு, சினிமா நடிகராவது, கொள்ளையடிப்பது என இஷ்டத்துக்குத் திட்டங்கள் போடுவார் பாக்யராஜ். ஒன்றும் சரிவராத நிலையில், துணை நடிகையாக இருக்கும் ராதிகா, பாக்யராஜுக்கும் துணை நடிக வேடங்களை வாங்கித் தருவார்.

படத்தில், கூட்டத்தில் ஒருவராக நிற்கும் காட்சியில் வந்துபோகிற சான்ஸ் கிடைத்திருக்கும் தருணத்தில்தான், இயக்குநர் பாரதிராஜா ஸ்டூடியோவில் படமெடுத்துக் கொண்டிருப்பார். தற்செயலாக, அந்தக் காட்சி குறித்தும், ‘இப்படி வசனம் இருந்தா நல்லாருக்கும்’ என்று வசனங்களையும் ராதிகாவிடம் பேசிக்காட்டுவார் பாக்யராஜ். அதையெல்லாம் பார்த்துவிட்ட பாரதிராஜா’ இனிமே என் படத்துக்கு ரைட்டரும் நீதான். ஹீரோவும் நீதான்’ என்றதும், பாக்யராஜின் மொத்த வாழ்க்கையும் உயரத்துக்கு வந்துவிடும்.

பாக்யராஜின் குடும்பம் ஏழ்மையில் இருக்கும்போது அயர்ன்காரரும், டெய்லரும் பல உதவிகள் செய்திருப்பார்கள். போஸ்ட்மேனின் உதவியுடன் சிவாஜியும் பாக்யராஜ் அனுப்புவது போல் மணியார்டரில் பணம் அனுப்பி அந்தக் குடும்பத்துக்கு உதவுவார்.

இப்போது பாக்யராஜ் பெரிய ஸ்டாராகிவிட, பணம், புகழ் என கிடைக்க, ஊரில், படாடோபமாக, டாக்டர், இன்ஜினியர், வக்கீல் என மாப்பிள்ளை பார்த்து மூன்று தங்கைகளுக்குத் திருமணத்தை ஒரே சமயத்தில் நடத்த முனைவார். அப்போது ஏற்படும் குளறுபடியும் அதையடுத்து நிகழ்வதும்தான் படத்தின் க்ளைமாக்ஸ். வரதட்சணையோ காசு பணமோ முக்கியமே இல்லை, சாதியோ மதமோ முக்கியமில்லை என்கிற மெசேஜுடன் படம் முடியும்.

பாக்யராஜின் அம்மா ஜானகி. நித்யா முதலான தங்கைகள். டெய்லர், அயர்ன்காரர், போஸ்ட்மேன், மிலிட்டிரி மேன், ராதிகா. இவர்களுடன் பாக்யராஜின் பணக்கார மாமன் மகள் இளவரசி. அவருக்கு பாக்யராஜ் மீது காதல். ஆனால் ‘உன் அம்மாவையும் தங்கச்சிகளையும் விட்டுட்டு வா. நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்’ என்று மாமா சொல்ல, தன் காதலையே தூக்கியெறிந்துவிடுவார் பாக்யராஜ். ‘மெளன கீதங்கள்’ படத்திலேயே இன்டர்வியூ காட்சிகளில் கலக்கிய பாக்யராஜ், இதிலும் கலக்கியெடுத்து, கலகலப்பூட்டியிருப்பார்.

வாய் பேச முடியாத பையனுக்குத் தங்கையைக் கட்டிக்கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தன் இயலாமையைக் காட்டுகிற இடம் கலங்கவைக்கும். சிவாஜியின் சைக்கிள் கடை கல்லாவில் இருந்தே பணத்தை எடுத்து, சிவாஜிக்கு வீட்டுவாடகை கொடுப்பது கலகலக்கச் செய்துவிடும். இந்தப் படத்தில் சிவாஜியை வைத்து பாக்யராஜ் இயக்கினார். குருவை வைத்து இயக்கினார். அதேபோல் சிஷ்யரை வைத்தும் இயக்கினார். முதன்முறையாக பார்த்திபனுக்கு ஒரு முக்கியமான கேரக்டர் வழங்கியிருப்பார் பாக்யராஜ். போஸ்ட்மேன் கதாபாத்திரத்தில் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் சிவாஜியுடன் நடிக்கிற பாக்கியம் பார்த்திபனுக்குக் கிடைத்தது.

சிவாஜி கணேசன், பாக்யராஜை ‘பாக்யம் பாக்யம்’ என்றுதான் கூப்பிடுவார். ‘ஏண்டா பாக்கியம், நான் சரியா நடிக்கிறேனா, உன் படத்துல என்னை மாதிரி பெரிய ஆர்ட்டிஸ்ட்டையெல்லாம் போடமாட்டியே. நீயே நடிச்சு கைத்தட்டல் வாங்கிட்டுப் போயிடுவியே. எனக்கும் கைதட்டலெல்லாம் கிடைக்குமா பாக்யம்’ என்று அடிக்கடி கேட்டு வம்பு பண்ணிக்கொண்டே இருப்பாராம். அவருக்கு மரியாதை செய்யும் வகையில் இப்படத்தில் அவரை நடிக்கவைத்தார் பாக்யராஜ். சிவாஜி வருகிற காட்சிகளெல்லாம் கரவொலியும் கைதட்டலும் தியேட்டரை நிறைத்துக்கொண்டே இருந்தது.

குடும்பத்துடன் ஒரு ரிசப்ஷனுக்குப் போயிருக்கும்போது, ’‘பந்துக்களுடன் வரவும்னு ஒரு சம்பிரதாயத்துக்குத்தான் போடுவோம். அதுக்காக குடும்பத்துல இருக்கிற அத்தனைபேரும் வந்துருவீங்களா?’’ என்று பாக்யராஜ் குடும்பத்தை அசிங்கப்படுத்தும்போது அதற்கு அவரின் விளக்கம் ‘டச்சிங்’காக இருக்கும். ‘சரி... சினிமாவுக்குப் போகலாம்’ என்று போவார்கள். படத்தில் காட்சிகள் ‘ஒருமாதிரி’யாக வரும். உடனே தன் பாக்கெட்டில் இருந்து ஐந்து பைசாவைப் போட்டுவிட்டு, ‘அஞ்சுபைசா விழுந்துருச்சு’ என்று தங்கைகளைத் தேடச் சொல்லும் காட்சி, சினிமாவின் மாற்றங்களைச் சொன்னது போலவும் ஆச்சு; தங்கைகளுடன் படம் பார்க்கிற அண்ணனின் தவிப்பையும் ஜாலியாக சொன்ன மாதிரியும் ஆச்சு!

அந்தச் சமயத்தில், ஒரு கட்டத்தில், சினிமா கவர்ச்சியில் அப்படியே உறைந்து ஜொள்ளுவிடும் பாக்யராஜ், மெய்மறந்து போய்விட, கடைசி தங்கை அவரிடம், ‘அண்ணே, அஞ்சு பைசா போட மறந்துட்டியேண்ணே. சீனைப் பாத்தியா இல்லியா?’ என்று சொல்ல, மொத்த தியேட்டரும் வெடித்துச் சிரித்தது.

டைட்டிலில் நடிகர் திலகம் சிவாஜி என்று போடாமல், சிவாஜி மீது தேசியக் கொடியில் இருந்து பூக்கள் விழுவது போல் காட்டி, ‘இமயத்துடன் இணைந்து பணிபுரிவதில் பெருமைப்படுகிறோம்’ என்று டைட்டில் போடுவார் பாக்யராஜ். அதேபோல, எல்லாப் படங்களிலும் ஏதேனும் ஒரு முக்கியமான காட்சியில் டைரக்‌ஷன் கார்டு போடுவது அவரின் ஸ்டைல். ரிடையர்டு மிலிட்டிரிக்காரரான சிவாஜி மரணத்தை நெருங்கும் சூழலில் படுத்தபடுக்கையாக இருப்பார். ‘சாகும்போது நான் வீரமா சாகணும். நேதாஜியோட போட்டோவை எடுத்துட்டு வா’ என்பார் சிவாஜி. நடிகை நித்யா எடுத்து வந்து காட்டுவார். பார்த்த சிவாஜி திகைத்துப் போய், ‘நேதாஜி முகத்தைக் காட்டச் சொன்னா, கண்ணாடி எடுத்துட்டு வந்து என் முகத்தைக் காட்றே’ என்பார்.

‘எங்களைப் பொறுத்தவரைக்கும் நீங்கதான் நேதாஜி’ என்று சொல்ல, சாகக்கிடக்கிற சிவாஜி கண்ணாடியைப் பார்ப்பார். கண்ணாடியில் அவரின் முகம் அப்படியே மாறும். அங்கே நேதாஜியாக சிவாஜி தெரிவார். நெகிழ்ந்து மகிழ்ந்து, சல்யூட் வைப்பார் நிஜ சிவாஜி. அப்படியே இறந்துவிடுவார். கண்ணாடியில் தெரிகிற நேதாஜி சிவாஜி, அதிர்ச்சிக்கு உள்ளாகி, இறந்துபோன சிவாஜிக்கு சல்யூட் வைத்து மரியாதை செலுத்துவார். அப்போது, ‘கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, டைரக்‌ஷன் - கே.பாக்யராஜ்’ என டைட்டில் போடப்படும்.

ராதிகாதான் நாயகி. இளவரசியும் மற்றொரு நாயகி. ஆனாலும் இருவருக்கும் பெரிய வேலையெல்லாம் இல்லை. அதேசமயம் பாக்யராஜின் வாழ்க்கை மாறுவதற்கும் தங்கைகள் இறுதியில் மனம் மாறுவதற்கும் ராதிகாதான் காரணமாக இருப்பார். கைதட்டல்களை அள்ளுவார். போஸ்ட்மேன் மூர்த்தியாக பார்த்திபன் கவனம் ஈர்த்திருப்பார். சிவாஜியின் செயலுக்கு நெகிழ்ந்தும் அந்தக் குடும்பம் படுகிற கஷ்டங்களுக்கு வருந்தியும் பாக்யராஜ் முன்னேறிவிட்டார் என தெரிந்து மகிழ்ந்துமாக சிறப்பாக நடித்திருப்பார். ‘’குருநாதர் பாக்யராஜ் சார் ‘விதி’ படத்துல போஸ்ட்மேனா ஒரு சீன் வருவார். அவர் போட்டுக்கிட்ட டிரஸ்ஸைத்தான் ஒரு சென்டிமென்டா, நான் இந்தப் படத்துல போட்டுக்கிட்டேன்” என்று இயக்குநர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

'பிரவீணா பிலிம் சர்க்யூட்’ எனும் பெயரில் பாக்யராஜ் தயாரித்தார். ‘முந்தானை முடிச்சு’க்கு அடுத்து இந்தப் படம். ஆகவே எதிர்பார்ப்பு எகிடுதகிடாக உயர்ந்தது. பூஜையின்போது ஒரு கோடி ரூபாய்க்கு பிசினஸ் ஆனது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்றாலும் சில இடங்களில் வெற்றிபெற்றது ‘தாவணிக்கனவுகள்’. ஒருவேளை, சினிமா ஹீரோவாக ஆகாமல், இயல்பாக, ஏதேனும் ஒரு வழியில் முன்னுக்கு வந்து, தங்கைக்குத் திருமணம் செய்து வைக்க முனைந்திருந்தால், வேறொரு விதமாகவும் வேறொரு வெற்றியாகவும் இருந்திருக்குமோ என்னவோ.

இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட்டாகின. ‘அப்பனுக்கும் ரெண்டு பொண்டாட்டி’ என்றொரு பாடல். வைரமுத்து எழுதினார். வாலி எழுதிய ‘ஒரு நாயகன் உதயமாகிறான்’ என்ற பாடல், இன்றைக்கும் ஹிட் வரிசையில் ரசிக்கவைக்கிறது. முத்துலிங்கம் எழுதிய ‘வானம் நிறம் மாறும்’ என்ற பாடல் பாக்யராஜுக்கும் இளவரசிக்கும்! பாக்யராஜ் அறிமுகப்படுத்தி பல பாடல்களை ஹிட்டாக்கிய குருவிக்கரம்பை சண்முகம் எழுதிய ‘செங்கமலம் சிரிக்குது’ பாடல் எப்போது கேட்டாலும் நம்மை குஷிப்படுத்தி, உற்சாக மூடுக்கு கொண்டுவந்துவிடும். பாடல்களை எஸ்பிபி, எஸ்.ஜானகி, எஸ்.பி.ஷைலஜா பாடினார்கள்.

1984 செப்டம்பர் 14-ம் தேதி வெளியானது ‘தாவணிக்கனவுகள்’. டிவியில் எப்போது ஒளிபரப்பினாலும் பார்க்கலாம் என்ற பட்டியலில் இந்தப் படத்துக்கும் இடமுண்டு. நடிப்புலகின் குரு சிவாஜியையும் தன்னுடைய குருநாதர் பாரதிராஜாவையும் சிஷ்யன் பார்த்திபனையும் வைத்து இயக்கிய ‘தாவணிக்கனவுகள்’ படம், ஏதோ ஒருவகையில் பாக்யராஜின் கனவைப் பூர்த்தி செய்த படமாக அமைந்துவிட்டது. படம் வெளியாகி 38 ஆண்டுகளானால் என்ன... கனவுகள் சுகம்; தாவணிக்கனவுகள் பரமசுகம்!

x