மிருகங்களையும் நடிக்கவைத்த சாண்டோ சின்னப்பா தேவர்!


தமிழ்த் திரையுலகில் பெரிய பெரிய கம்பெனிகளெல்லாம் எத்தனையோ படங்களை நமக்கு வழங்கியிருக்கின்றன. இன்றைக்கு உள்ள சினிமா வர்த்தக வேறுபாடுகளால், அந்தக் கம்பெனிகள் படம் எடுப்பதையே விட்டுவிட்டன. சில நிறுவனங்கள் நஷ்டமாகி மூடப்பட்டுவிட்டன. இன்னும் சில நிறுவனங்கள், வேறு ஏதோ காரணங்களால் படங்கள் எடுப்பதே இல்லை. ஆனாலும் சிட்டாடல் தொடங்கி, பட்சி ராஜா என ஆரம்பித்து, ஜெமினி, ஏவி.எம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ் சினிமாவின் அடையாளமாக இன்றைக்கும் நம் மனதில் நிற்கின்றன.

அப்படி காலங்கள் கடந்தும் நம் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிற தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ‘தேவர் பிலிம்ஸ்’. இந்தப் பெயரைச் சொல்லும்போதே, ஓவல் சைஸ் திரைக்குள்ளிருந்து பிளிறல் சத்தத்துடன் யானை ஓடிவருவது நினைவுக்கு வரும். அடுத்தது... உடலில் சந்தனத்தையே சட்டையாக அணிந்துகொண்டு, ‘முருகா முருகா’ என உச்சரிக்கும் சாண்டோ சின்னப்பா தேவர் நினைவுக்கு வருவார்.

நடிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு படமெடுப்பதே பெரும்பாடு. சிலர் கால்ஷூட் சொதப்பி விட்டால், மொத்த நடிகர்களின் கால்ஷீட்டும் சொதப்பலாகிவிடும். அப்படியிருக்க, விலங்குகளைக் கொண்டு படம் எடுக்கமுடியுமா? அதுவும் குறிப்பிட்ட காலத்துக்குள்! தேவர் பிலிம்ஸ் என்றாலே ஏதேனும் விலங்கு பிரதானமாக இருக்கும். அல்லது அன்றைக்கு மிகப்பெரிய உச்சத்தில் இருந்த எம்ஜிஆர், சரோஜாதேவி, கண்ணாம்பா, எம்.ஆர்.ராதா என்று நடிப்பார்கள். இப்படி பிரம்மாண்ட கூட்டணியுடன், ஒரு படத்தை சொன்னதுசொன்னபடி, முடிப்பது என்பதே பெரிய சாதனைதான்.

’படத்துக்குப் பூஜை போடுகிற நாளிலேயே, படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார் சின்னப்பா தேவர்’ என்பார்கள். அதன்படி, படம் எடுக்கப்பட்டு, அதேநாளில் வெளியாகும் என்பார்கள். மாடு வைத்து எடுப்பார்; புலியை வைத்து எடுப்பார்; யானையை வைத்து எடுப்பார். ஆடு வைத்து எடுப்பார். பிறகு அந்த விலங்குகளும் புகழ்பெற்றுவிடும். ‘ஆட்டுக்கார அலமேலு’ படத்தைப் பார்க்க வந்த கூட்டம் ஒருபக்கமென்றால், ஒவ்வொரு தியேட்டருக்கும் ஆடு வந்தது. ஆடு பார்க்க வந்த கூட்டம் இன்னொரு பக்கம் என்பதெல்லாம் சரித்திரம்!

பார்ப்பதற்கு பயில்வான் போல் உடம்பு. ஆனால் பேசினால், பக்திப்பழம். ஐந்து நிமிடப் பேச்சுக்குள் நூறு முறை ’முருகா முருகா’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ராமநாதபுரம் பூர்விகம். வறுமையும் சோகமும் சூழ்ந்த குடும்பம். கோயம்புத்தூருக்கு வந்து வாழ்வைத் தொடங்கினார். மில்லில் வேலை பார்த்து, கிடைப்பதைக் கொண்டு வாழ்ந்துவந்தார். கூடவே சகோதரர்களுடன் சேர்ந்துகொண்டு உடற்பயிற்சிக் கூடமும் வைத்திருந்தார்.

அந்தக் காலத்தில், சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் இருந்தது. கோவையில் ஜூபிடர் ஸ்டூடியோ இருந்தது. அப்போதெல்லாம் மாதச் சம்பளம்தான். அப்படி இந்த ஸ்டூடியோவில் மாதச்சம்பளத்துக்கு வேலை பார்த்த ஒரு சிலர், சின்னப்பா தேவரின் உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்துபோவார்கள். எல்லோருடனும் இனிமையாகப் பழகினார் தேவர். இவரின் கட்டுமஸ்தான உடற்கட்டைப் பார்த்துவிட்டு, சண்டைக் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதுதான் அவரின் சினிமா பிரவேசம். அப்போது இரண்டு விஷயங்கள் சாண்டோ சின்னப்பா தேவர் வாழ்க்கையில் நிகழ்ந்தன. ஒன்று... சினிமாவின் மீதான ஆசை. இன்னொன்று... அங்கே வந்துபோய்க்கொண்டிருந்த நடிகருடனான நட்பு. சினிமாவின் மீது கொண்ட தீராத ஆசையில் முளைத்ததுதான் ‘தேவர் பிலிம்ஸ்’. அந்த நடிகருடனான நட்பு கிடைத்ததால்தான் ‘தேவர் பிலிம்ஸ்’ இன்றைக்கும் நம் மனதில் தனியொரு இடம்பிடித்து நிற்கிறது. நட்பும் தோழமையும் அன்புமாக இருந்த அந்த நடிகர்... எம்ஜிஆர்.

‘இங்கே ஸ்டூடியோ இருந்தாலும் சென்னைக்குப் போனால்தான் சினிமால பொழைக்க முடியும்’ என்று முடிவெடுத்தார் தேவர். சென்னைக்கு வந்தார். படாதபாடு பட்டார். ’நாமே சொந்தமாக படம் எடுத்தால் என்ன?’ எனும் திட்டத்தைச் சொல்லி, நண்பர்களிடம் உதவி கேட்டார்.

நண்பர்களும் உதவினார்கள். படமெடுக்க பணம் தயாரானது. கதையும் உருவாக்கப்பட்டது. நாயகன் எம்ஜிஆர்தான் நண்பராயிற்றே! எம்ஜிஆர், பானுமதி, கண்ணாம்பா நடிப்பில், முதல் படம் தயாரிக்கப்பட்டது. அது... ‘தாய்க்குப் பின் தாரம்.’ எம்ஜிஆருக்கும் பெரிய வெற்றி. தேவர் பிலிம்ஸுக்கும் செம வசூல். முதல் படத்திலேயே விலங்கைப் பயன்படுத்தினார். மாடு கம்பீரம் காட்டி மிரட்டியது. அடுத்தடுத்த படங்களில் யானை, சிங்கம், புலி என ஒரு ரவுண்டு வந்தார் தேவர்.

நண்பர் எம்ஜிஆரை வைத்துதான் முதல் படம் எடுத்தார். ஆனால் இருவருக்கும் ஏனோ சண்டை வந்துவிட்டது. ஆனாலும் இருவரும் பேசிக்கொள்ளாமலேயே படத்தை எடுத்து முடித்தார்கள். வெற்றியும் கிடைத்தது. பிணக்குகள் நீங்கின. நட்பு இன்னும் பலப்பட்டது. பிறகென்ன... சிவாஜியும் பீம்சிங்கும் இணைந்து ‘ப’ வரிசைப் படங்கள் எடுத்தது போல் எம்ஜிஆரும் தேவரும் இணைந்து ‘தா’ வரிசைப் படங்களாக எடுத்துத் தள்ளினார்கள். ‘தாய்க்குத் தலைமகன்’, ‘தர்மம் தலைகாக்கும்’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்று வரிசையாக வெற்றிப் படங்களைக் கொடுத்தார். பூஜை போடுவார். ரிலீஸ் தேதி அறிவிப்பார். முன்னதாக அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சம்பளம் பேசுவார். அந்தச் சம்பளத்தை படம் முடிவதற்குள்ளாகவே கொடுத்து செட்டில் பண்ணிவிடுவார்.

அடுத்து இன்னொரு விஷயமும் செய்தார். கதைக்கென ஒரு குழுவை உருவாக்கினார். ‘தேவர் பிலிம்ஸ் கதை இலாகா’ உருவாக்கப்பட்டது. குழுவினருக்குப் பணம் கொடுத்து ஆங்கிலப் படங்களைப் பார்க்கச் சொல்வார்.

மறுநாள், ஒவ்வொருவரும் கதையைச் சொல்லவேண்டும். அதன் ஏதோவொரு காட்சியில் இருந்து, ஒரு கதையையே உருவாக்கச் சொல்லுவார் தேவர். இதுதான் தேவரின் பாணி என்றே எல்லோராலும் சொல்லப்பட்டது. எம்ஜிஆர் இல்லாமல், ரஞ்சன், ஜெமினி கணேசன், சி.எல்.ஆனந்தன் என்று நாயகனாகக் கொண்டும் படங்களை எடுத்தார். ஆனால் எம்ஜிஆர்தான் தேவர் பிலிம்ஸின் நாயகன் என்று ரசிகர்கள் பொருத்திப் பார்த்தார்கள்.

‘தேவர் பிலிம்ஸ்’ படமென்றால் எம்ஜிஆர் இருப்பார். எம்.ஆர்.ராதா இருப்பார். கண்ணதாசன் பாடல்கள் எழுதுவார். கே.வி.மகாதேவன் இசையமைப்பார். கதை இலாகா இவரிடம் கதை தயார்செய்து சொல்ல வேண்டும். அது பிடித்திருந்தால் கதையைத் தொடரச் சொல்வார். பிடிக்காவிட்டால், ‘போதும்போதும் குப்பைல போடு இந்தக் கதையை. வேற ரெடி பண்ணுங்கப்பா’ என்று சொல்லிவிட்டு விருட்டெனக் கிளம்பிவிடுவார்.

’கதை என்று இருக்க வேண்டும். அந்தக் கதையில் சென்டிமென்ட், காதல், வீரம், த்ரில், முக்கியமாக சண்டைக் காட்சிகள் என்றெல்லாம் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து வயதினரும் ஒன்றாகச் சேர்ந்து வந்து படம் பார்க்க வேண்டும். இதுதான் படத்தின் வெற்றிக்கான சூத்திரம்’ என்பார் தேவர். இவர் கதை ஓகே என்று சொன்னதும் எம்ஜிஆரிடம் நேரம் கேட்டு கதை சொல்வார்கள். சிலசமயம் கேட்பார். பல முறை, ‘முதலாளி கதை கேட்டுட்டு ஓ.கே.சொல்லிட்டார்ல. அப்புறமென்ன, ஆரம்பிச்சிடலாம்’ என்று சொல்லிவிடுவார் எம்ஜிஆர்.

‘சின்னவரோட கால்ஷீட்டும் கிடைச்சிருது. மிருகங்களுக்கும் முறையா பயிற்சி கொடுத்து எடுத்துடுறாங்க. ஒரே படத்துல நம்பியார், அசோகன், எம்.ஆர்.ராதான்னு எல்லாரும் இருக்காங்க. ஆனாலும் சொன்ன தேதில படத்தை ரிலீஸ் பண்ணிடுறாருப்பா தேவரு’ என்று திரையுலகிலேயே வியந்துவியந்து பேசிக்கொண்டார்கள். இன்னொரு விஷயத்தையும் ஆச்சரியமாகச் சொல்கிறார்கள். படத்தில் பணிபுரிபவருக்குப் பெரும்பாலும் ஒரே சமயத்தில் ‘பேமென்ட்’ கொடுத்துவிடுவாராம் தேவர்.

யானையைக் கருவாக வைத்துக்கொண்டு இந்தியில் படமெடுப்பார். பிறகு தமிழில் கொண்டுவருவார். சில வருடங்கள் கழித்து வேறொரு கதையாக அதையே மாற்றி இன்னொரு படம் எடுத்து வெற்றி பெறவைத்துவிடுவார். தமிழைத் தவிர வேறு மொழிகள் தெரியாது. ஆனால் இந்தி நடிகர் ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா முதலானோரிடம் நேரில் சென்று, கதையைச் சொல்லி, சம்பளத்தைப் பேசி ஓ.கே வாங்கிவிடுவதில் சூரர் இவர். ‘இதுதான் சம்பளம்’ என்று அவர்கள் சொல்ல, தன் கை இடுக்கில் எப்போதும் வைத்திருக்கும் கைப்பையில் இருந்து சட்டென்று மொத்தப் பணத்தையும் எடுத்துக் கொடுத்துவிடுவாராம் தேவர்.

கமல், ரஜினியை வைத்தும் ஹிட்டுகள் கொடுத்தார். அவர்களை ‘சி’ சென்டர் ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தார்.

கதை இலாகாவில் உள்ள எவரையும் சோர்வாகும்படி வைத்துக்கொள்ளவே மாட்டார். அவர்களுக்கு இந்த மாதம் ஒரு தொகையைச் சம்பளமாகத் தந்தால், அடுத்த மாதம் கொஞ்சம் கூடுதலான தொகையைச் சம்பளமாகக் கொடுப்பார். ‘என்ன’ என்பது போல் ஆச்சரியமாகப் பார்த்தால், ‘முருகன் கொடுக்கச் சொல்றான். என்ன பண்ணலாங்கறே’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவாராம்! கதை இலாகாவில் இருந்த தூயவன், கலைஞானம் உள்ளிட்டவர்கள் சாண்டோ சின்னப்பா தேவரை வியந்து வியந்து சொல்லியிருக்கிறார்கள்.

புகழ்பெற்ற ஏவி.எம் நிறுவனம் எம்ஜிஆரை வைத்து ‘அன்பே வா’ படத்தைத் தயாரித்தது. ஆனால் தேவர் பிலிம்ஸ் சிவாஜியை வைத்து ஒரு படம்கூட தயாரிக்கவில்லை. அதேபோல் நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி, சிவாஜியைவைத்து ஏராளமான படங்களைத் தயாரித்தார். ஆனால் எம்ஜிஆரை வைத்து ஒரு படம்கூட தயாரிக்கவில்லை. தேவர் தன் கம்பெனியின் மூலம், எம்ஜிஆரை வைத்து 26 படங்களைத் தயாரித்திருக்கிறார்.

உடம்பு முழுக்க சந்தனமும் நெற்றி முழுக்க விபூதியுமாக மருதமலை முருக பக்தராக வாழ்ந்த தேவர், எம்ஜிஆரை ‘ஆண்டவரே’ என்று அழைப்பதும் எம்ஜிஆர், ‘முதலாளி’ என்று தேவரை அழைப்பதும் அவர்களின் நட்புக்கும் அன்புக்குமான உதாரணங்கள்.

பார்ப்பதற்கு பயில்வான். பேச்சும் கரடுமுரடுதான். ஆனால் உள்ளம் மட்டும் வெள்ளை. கோவையில் உள்ள மருதமலை கோயில் இன்று பிரசித்தி பெற்றுத் திகழ்வதற்கு தேவர் செய்த திருப்பணிகள் ஏராளம். கோவை விநியோகஸ்தர், இவரின் படத்தை வாங்குவதற்கு பணத்துடன் வந்தார்.

படத்தின் விலையெல்லாம் பேசப்பட்டது. அதற்கான பணத்தை விநியோகஸ்தர் கொடுக்க வந்தபோது, ‘ஐயரே, பணம் வேணாம், அதுக்குப் பதிலா எனக்கு ஒண்ணு செய்யணும். நம்ம மருதமலை கோயில் பக்கத்துல ஒரு ரோடு போட்டுக்கொடுத்திருங்க’ என்று சொல்ல, அதன்படியே சாலை அமைக்கப்பட்டது.

அதேபோல் தன் வாழ்நாளில் தனக்கு உதவி செய்தவர்களை ஒருபோதும் மறக்காமல் இருந்தார் சாண்டோ சின்னப்பா தேவர். ஆரம்ப காலத்தில் ‘தேவர் பிலிம்ஸ்’ நிறுவனத்தைத் தொடங்க, கோவையில் உள்ள நண்பர்கள் சிலர் ஆளுக்கு பத்தாயிரம் என கொடுத்தார்கள். ஒவ்வொரு படத்தின் மூலம் கிடைத்த லாபத்தில் இருந்து ஒரு தொகையை தனக்கு வைத்துக்கொள்வார். இன்னொரு தொகையை மருதமலை முருகனுக்கு வழங்குவார். மற்றொரு தொகையைப் பிரித்து நலிந்தோருக்கு உதவிகள் செய்யப் பயன்படுத்துவார். இன்னுமொரு தொகையை தனக்கு உதவி செய்த நண்பர்களுக்கு வழங்குவார்.

செய்யும் தொழிலில் நேர்மை, செய்த உதவியை மறக்காத குணம், தொழிலாளர்களின் வியர்வை காய்வதற்கு முன்பே ஊதியம், நம்மால் முடிந்த உதவி, கடவுளிடம் மாறா பக்தி என மனிதத்துக்கும் மனிதராக வாழ்வது எப்படி என்பதற்கும் உதாரண புருஷராக வாழ்ந்தார். சினிமாவில் புதுபாணியை உருவாக்கி வெற்றி பெற்றார்.

‘தேவர் பிலிம்ஸ்’ நிறுவனத்தை நமக்குள் பசுமரத்தாணியாய் இன்றைக்கும் பதிக்கச் செய்திருக்கும் சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவரின் நினைவு தினத்தில் (1978 செப்டம்பர் 8) அந்த மாமனிதரை நினைவுகூர்வோம்!

x