என்றும் மார்க்கண்டேயன் என்று சிலரைச் சொல்லுவோம். நடிகர் சிவகுமாரை அப்படித்தான் கொண்டாடுகிறோம். அதேபோல், இன்னொரு நடிகரையும் சொல்லலாம். அறிமுகமான படத்தில் எப்படியிருந்தாரோ, ஏகப்பட்ட படங்களில் நடித்த பின்னரும் அதேவிதமாகத்தான் இருந்தார். உடம்பு ஒல்லியாகவும் ஆகவில்லை. குண்டாகவும் இல்லை. சொல்லப்போனால், தமிழ் சினிமா உலகில், கல்லூரி மாணவனாக அதிக படங்களில் நடித்தவர் இவராகத்தான் இருக்கும். ’அட என்னய்யா இது... இன்னும் எத்தனை வருஷத்துக்குத்தான் இவர் இந்த காலேஜ் ஸ்டூடண்டாவே நடிச்சிட்டிருக்கப் போறாரோ...’ என்று சினிமாவின் ரசிகர்கள் அலுத்துக்கொள்ளவே இல்லை. இத்தனைக்கும் வெரைட்டி வெரைட்டியாக பல கதாபாத்திரங்களில் நடித்து பேரும்புகழும் சம்பாதித்தார். இன்னொரு விஷயம்... எல்லோருக்கும் பிடித்த நடிகர்கள் எனும் பட்டியலில் இந்த நடிகருக்கும் அட்டகாசமான இடமுண்டு. அவர்... நடிகர் முரளி.
1964ம் ஆண்டு பிறந்த முரளியின் பூர்வீகம், கர்நாடகா. மிகப்பெரிய செல்வக் குடும்பத்தில் பிறந்தார். நடிப்பதில் ஆசையோ லட்சியமோ எதுவுமில்லாமல், தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றுதான் இருந்தார். இவரின் தந்தை சித்தலிங்கையா, சினிமாவின் காதலன். அப்படியே நேர்மாறாக இருந்தார். மிகப்பெரிய தயாரிப்பாளர். சினிமாவை ரசித்து ரசித்து தயாரித்தார். சித்தலிங்கையாவின் தயாரிப்பில் உருவான படம் என்றாலே, ‘அட்டகாசமான படத்தைப் பார்க்கப் போகிறோம்’ என்கிற முடிவுடனும் நம்பிக்கையுடன் வந்து பார்ப்பார்கள். முரளியின் அப்பா தயாரித்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப் படங்களாகவும், வெள்ளிவிழாப் படங்களாகவும் அமைந்தன.
ஆனால் முரளியின் 20வது வயதில் தடக்கென அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. சித்தலிங்கையாவிடம் கதை சொன்ன இயக்குநர், ‘’நம்ம படத்துக்கு புதுமுகமா போட்டாத்தான் நல்லாருக்கும்’’ என்று சொல்லி, தேடலில் இறங்கியிருந்தார். யதேச்சையாக முரளியைப் பார்க்க, அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்தார் இயக்குநர். ‘’ஓ... இப்பத்தான் பாக்கறீங்களா? என் பையன் இவன்’’ என்று சித்தலிங்கையா சொல்ல, அந்த நிமிடமே... ‘இவரை ஹீரோவாப் போடலாம் சார். நம்ம கதைக்கும் கேரக்டருக்கும் பொருத்தமா இருப்பார்’ என்று இயக்குநர் சொல்ல... அப்படித்தான் முரளி திரையுலகிற்கு வந்தார். ‘பிரேம பர்வா’ என்கிற அந்தப் படம்தான் முரளியின் முதல் படம். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
கல்லூரி இளைஞனாக முரளி நடித்தார். ரொம்பவே பாந்தமாகப் பொருந்தியது முரளிக்கு. 84ம் ஆண்டில் கல்லூரி இளைஞராக நடித்த முரளி, அடுத்த பத்துப்பதினைந்து வருடங்களிலுமே பல படங்களில் இளைஞராக, கல்லூரி இளைஞராகவே நடித்தார்.
முதல் படத்திலேயே ஆவேசம், கோபம், வீரம், துடிப்பு, காதல், காதலிக்குக் கட்டுப்படுதல், காதலில் சரணடைதல், அவலம் கண்டு எதிர்த்தல், கறுகறு நிறமும் அதற்கு நேர்மாறாக வெள்ளைவெளேரென கண்களும் ரசிகர்களை ஈர்த்தன.‘கண்ணில் ஏதோ மின்னலடிச்சிருச்சு’, ‘ஆத்தாடி பாவாடை காத்தாட’, ‘லவ் மீ லவ் மீ’, ‘போட்டேனே பூவிலங்கு’ என்று எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. குயிலி நாயகியாக அறிமுகமானார்.
அதே வருடத்தில் ‘புதியவன்’ எனும் படத்தில் நடித்தார். இந்தப் படத்திலேயே மைக் பிடித்து, மேடையில் பாடும் காட்சிகள் இருந்தன. பொதுவாக நடிகர் மோகன் மைக் பிடித்து நிறையவே பாடல்களில் நடித்திருக்கிறார் என்போம். அதேபோல, முரளியும் மைக் பிடித்து ஏகப்பட்ட பாடல்களுக்கு நடித்திருக்கிறார்.
இயக்குநர் மணிவண்ணனுக்கு முரளியின் முகத்தில் இருந்த கடுகடு கோபமும் சாந்தமான முகபாவமும் ரொம்பவே பிடித்துப் போனது. ‘இங்கேயும் ஒரு கங்கை’ படத்தில் நடிக்கவைத்தார். மிக கனமான அந்தக் கேரக்டரை அசால்ட்டாக நடித்து அசத்தினார்.
கமல், ரஜினிக்குப் பிறகு விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், மோகன் என்ற பட்டியல் இருந்தது. அவர்களுடன் முரளியும் இணைந்துகொண்டார். அப்போதெல்லாம் ஒரு படம் 40 நாட்கள் ஓடினால், அது ‘மினிமம் கியாரண்டி’ என்று சினிமா வட்டாரத்தில் சொல்லுவார்கள். முரளி நடித்த படங்கள், குறைந்தபட்சம் 40 நாட்களைக் கடந்தும் அதிகபட்சமாக நூறுநாள், 150 நாள், வெள்ளிவிழா என்றும் ஓடின.
நாமெல்லாம் கொண்டாடிக்கொண்டிருக்கிற மிக முக்கியமான இயக்குநரான மணிரத்னம் ஒருவகையில், முரளியைப் போலத்தான்! கன்னடத்தில் ‘பல்லவி அனுபல்லவி’ எடுத்துவிட்டு, இங்கே தமிழுக்கு வந்தார். ’பகல் நிலவு’ படத்தை இயக்கினார். சத்யராஜ், முரளி நடித்தார்கள். சத்யராஜுக்கு அப்படியொரு அட்டகாசமான கேரக்டர். முரளிக்கு துடிப்புமிக்க ரவுடித்தனம் பண்ணுகிற, எவரையும் எதிர்க்கிற கதாபாத்திரம். இரண்டுபேருமே அசத்தினார்கள். இளையராஜாதான் இசை. ‘பூமாலையே தோள் சேர வா’ முதலான பாடல்கள், பலரின் செல்போன்களில் இப்போதும் குடிகொண்டிருக்கின்றன.
‘முரளியைப் போட்டா முதலுக்கு மோசம் இருக்காது’ என்றார்கள் விநியோகஸ்தர்கள். ‘முரளி கால்ஷீட் சொதப்பமாட்டார்’ என்று இயக்குநர்கள் பேசிக்கொண்டார்கள். 85ம் ஆண்டில் ‘புதிர்’ படம் வந்தது. இரட்டை வேடத்தில் நடித்து வித்தியாசங்கள் காட்டி பிரமிக்க வைத்தார். ’சம்பளத்துல கறார் காட்டமாட்டார்’ என்று தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். ‘ஒரு தயாரிப்பாளரோட பையன்யா அவரு. நம்ம கஷ்டம் தெரிஞ்சு நடந்துக்கறாரு’ என்று கொண்டாடினார்கள். எந்தக் கேரக்டராக இருந்தாலும் நடித்துக் கொடுப்பார் என்று இயக்குநர்கள் நம்பினார்கள். புதிதாக வந்த அறிமுக இயக்குநர்கள், தயக்கமில்லாமல் முரளியிடம் கதை சொல்லலாம் எனும் நிலை இருந்தது.
’மார்க்கெட் வேல்யூ’ கொண்ட நடிகராக உயர்ந்துகொண்டே போனார் முரளி. இளையராஜா ஏகப்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார். ‘உதயகீதம்’ இயக்குநர் கே.ரங்கராஜை அழைத்து, ‘நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணுங்க’ என்றார். ‘முரளிகிட்ட பேசுங்களேன். இதுக்குப் பொருத்தமா இருப்பார்’ என்று தெரிவித்தார்.
அதன்படி இளையராஜாவின் தயாரிப்பில் கே.ரங்கராஜ் இயக்கத்தில் முரளி நடித்த ‘கீதாஞ்சலி’ படம் வெளியானது. இந்தப் படத்தில் முரளிக்கான பாடல்களை இளையராஜாவே பாடினார். முதல் படத்திலேயே ‘ஆத்தாடி பாவாட காத்தாட’ என்று பாடியவர், இங்கே ‘துள்ளியெழுந்தது பாட்டு’, ‘ஒரு ஜீவன் அழைத்தது’, ‘கிளியே கிளியே சோலைக்கிளியே’ என பாடல்களைப் பாடி ஹிட்டடிக்கச் செய்தார். அதேசமயம், முரளிக்கு எஸ்.பி.பி. பாடினாலும் அற்புதமாக இருக்கும். ஜேசுதாஸ் பாடினாலும் பொருத்தமாக இருக்கும்.
மீண்டும் பாலசந்தரின் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கத்தில் கார்த்திக்குடன் சேர்ந்து நடித்தார் முரளி. ‘வண்ணக்கனவுகள்’ எனும் அந்தப் படம் இருவரின் நடிப்புத்திறனையும் பறைசாற்றின. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமாக இருந்தன. முக்தா பிலிம்ஸ் முரளியை வைத்து ‘ஒரு மலரின் பயணம்’ எடுத்தது.
மனோஜ்குமார் இயக்கத்தில் ‘மண்ணுக்குள் வைரம்’ வந்தது. முரளியால் கல்லூரி மாணவனாக நடிக்கமுடிந்தது. கோப ஆவேசம் கொண்டவராகவும் நடிக்கமுடிந்தது. நகரத்து இளைஞனாகவும் வலம் வந்தார். கிராமத்துக்கார வாலிபனாகவும் நடித்தார். ரொம்பவே பேசாமல் உம்மணாமூஞ்சியாக நடித்ததையும் ஏற்றுக்கொண்டார்கள் ரசிகர்கள்.
சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம், புதிய இயக்குநரை அறிமுகப்படுத்தியது. அந்த இயக்குநர் தன் கதைக்கு முரளியே சரியாக இருப்பார் என நினைத்தார். படம் வெளிவந்து, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘புதுவசந்தம்’ முரளியின் மார்க்கெட்டை இன்னும் இன்னுமாக உயர்த்தியது. ஆர்ப்பாட்டங்களே இல்லாமல் முரளிக்கென ரசிகர் கூட்டம் உருவானது.
‘பாலம்’, ‘புதிய காற்று’ படங்களில் புரட்சிக்காரராக நடித்து அசத்தினார்,‘நானும் இந்த ஊருதான்’, ’நம்ம ஊரு பூவாத்தா’,’சாமி போட்ட முடிச்சு’, ‘சின்னப்பசங்க நாங்க’ என்று கிராமத்துக் கதாபாத்திரங்களுக்கும் பொருந்தி, கதாபாத்திரமாகவே வாழ்ந்தார். முரளி நடித்த பல படங்கள், நூறு நாள் படங்கள். வெள்ளிவிழாப் படங்கள்.
எப்போதும் புதிய முயற்சியுடனும் நல்ல கதையுடனும் வலம் வரும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ ’மூன்றாம் பிறை’ மாதிரியான படங்களை எடுத்த நிறுவனம், புதிய இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்தது. 91ம் ஆண்டு அந்தப் படம் வெளியானது. முதல் படத்திலேயே இயக்குநர் கதிர் பேசப்பட்டார். ‘இதயம்’ படத்தையும் முரளியின் நடிப்பையும் எவராலும் மறந்துவிடமுடியாது. நெஞ்சை நெகிழவைக்கிற, மெளன மொழியாகவே இருக்கிற, காதலைச் சொல்லத் தயங்குகிற, தயங்கித் தயங்கி உருகுகிற கதாபாத்திரத்தை முரளி வெகு அழகாகச் செய்திருந்தார். இளையராஜாவின் பாடல்களையும் அவை அனைத்தும் ஹிட் என்பதையும் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன? ’வெள்ளிவிழாப் படமாக அமைந்தது.
பிறகு வெள்ளிவிழாப் படங்கள் என்று வரிசையாக அமைந்தன. வெள்ளிவிழா நாயகன் என்றே முரளியைப் புகழ்ந்தது தமிழ் சினிமா. முரளியின் குரலில் மென் சோகம் இழையோடிக் கொண்டே இருக்கும். ‘பொட்டுவைத்த ஒரு வட்டநிலா’வையும் ‘ஒருமணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ பாடலையும் ‘இது முதன்முதலா வரும் பாட்டு’ என்ற பாடலையும் முக்கியமாக, முரளியின் முகபாவங்களையும் யாரால் மறக்கமுடியும்.
‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில், வடிவேலுவுடன் சேர்ந்து முரளி அடித்த லூட்டியை இன்றைக்கும் காமெடி சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டே இருக்கின்றன. சிவசக்தி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் செல்லப் பிள்ளையாகவே மாறினார் முரளி. ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ மாதிரியான படங்கள் பெரிய வெற்றியைக் கொடுத்தன. இயக்குநர் சேரன் முதல் படத்தில் பார்த்திபனை நாயகனாக்கி துணைக்கு வைத்துக் கொண்டார். இரண்டாவது படமான ‘பொற்காலம்’ படத்தில் முரளியை வைத்துக்கொண்டார். மீண்டும் இருவரையும் இணைத்து ‘வெற்றிக்கொடி கட்டு’ உருவாக்கினார்.
’வாட்டாக்குடி இரணியன்’, ‘அதர்மம்’, ‘பூந்தோட்டம்’, ‘கிழக்கும் மேற்கும்’ உள்ளிட்ட படங்கள்,’ ’என்றும் அன்புடன்’ மாதிரியான படங்கள், கஸ்தூரி ராஜாவின் படங்கள் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஜொலித்தார் முரளி.
இன்றைக்கு முரளியின் மகன் அதர்வா, நடிகராகிவிட்டார். பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். எவரின் சாயலுமில்லாமல் முரளி நடித்தது போலவே, அவர் மகனும் யார் சாயலுமில்லாமல் நடித்துக்கொண்டிருக்கிறார்.
64ம் ஆண்டு பிறந்த முரளி, 2010ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மறைந்தார். இன்றைக்கும் கல்லூரிப் படங்கள் நிறையவே வருகின்றன. அடுத்தடுத்து வருகின்ற ஆண்டுகளிலும் கல்லூரி சம்பந்தப்பட்ட படங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். இன்னும் எத்தனை படங்கள் வந்தாலும் சட்டென்று நம் ஆழ்மனதில் இருந்து, கல்லூரி இளைஞனாக முரளி ஒருகணம் நம் எதிரே வந்துபோவார். அதுதான் முரளி எனும் மகத்துவக் கலைஞனுக்குக் கிடைத்த வெற்றி.
இன்று செப்டம்பர் 8ம் தேதி முரளியின் நினைவுதினம். யதார்த்தக் கலைஞனை, கல்லூரி இளைஞனாக என்றும் மார்க்கண்டேயனாக நடித்த இயல்பான நடிகனை நினைவுகூர்வோம்; போற்றுவோம்!