ரேனேவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய!


துஷாரா

பச்சக்கல்லு மூக்குத்தி, தலை நிறைய கனகாம்பரம் என ‘சார்பட்டா’ மாரியம்மாவாக நடித்த துஷாரா தமிழ் சினிமா கதாநாயகிகள் கவனிக்கத்தக்க வரவு. அதே மூக்குத்தி, கலரிங் முடி என ’மாரியம்மா’ கதாபாத்திரத்திற்கு நேர் எதிரான 'ரேனே’வாக ’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் களம் இறங்கி இருக்கிறார். காமதேனு இணையதளத்துக்காக ஒரு மாலைப் பொழுதில் அவரது இல்லத்தில் துஷாரவை சந்தித்தோம்.

’நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் தலைப்பே வித்தியாசமா இருக்கே... கதை கேட்டதும் என்ன தோன்றியது உங்களுக்கு?

’சார்பட்டா’ படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குநர் பா.இரஞ்சித் படத்தில் நடிக்கிறேன் என்பதே எனக்கு ஆனந்தம் கலந்த அதிர்ச்சி தான். இதை பார்த்து சில பேர், “கலையரசன், ஹரி போல நீங்களும் இரஞ்சித்துடைய குழுவில் இணைந்து விட்டீர்களா?” என்று கேட்டார்கள். உண்மையில் அது எனக்கு சந்தோஷமாகத் தான் இருந்தது. “மறுபடியும் நான் ஏன்?” என்று இரஞ்சித்திடம் கேட்டபோது, “மாரியம்மா கதாபாத்திரத்தால் தான் உனக்கு ரேனே” என்றார்.

இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் மிகவும் அவசியமான ஒரு உரையாடல் என்பது தெரிந்தது. ஏனென்றால், எல்.ஜி.பி.டி.க்யூ-வில் (LGBTQ) எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், படம் அதை மட்டுமே பேசவில்லை. பா.இரஞ்சித் படங்களில் இருக்கும் காஸ்ட் பொலிட்டிக்ஸ்சும் இதில் இருக்கிறது.

துஷாராவைப் பொறுத்தவரை காதல் என்றால் என்ன?

என்னைப் பொறுத்தவரை காதல் என்பது எந்தவொரு வரையறைக்குள்ளும் அடங்காத ஒன்று. இருவருக்குள்ளே வரும் ஈர்ப்புக்கும் காதலுக்கும் காரணம் கண்டுபிடித்துச் சொல்லி விட்டால், ‘ஓ! அவ்வளவு தானா’ என்று தோன்றும். எந்த ஒரு காரணமும் இல்லாமல் நாம் அதை உணரவேண்டும். நானும் அதை உணர்ந்திருக்கிறேன். இப்போது என் காதல் என் வேலை மீது தான் இருக்கிறது.

’நட்சத்திரம் நகர்கிறது’ ரேனே பத்தி சொல்லுங்க?

’ரேனே’ பயங்கர திமிரான ஒரு கேரக்டர். அவ யோசிக்கற விஷயங்களை எங்கயுமே சொல்லத் தயங்காத ஒரு பொண்ணு. வழக்கமான வாழ்க்கையில் அவள் தனக்குப் பிடித்ததை செய்து கொண்டிருப்பாள். ஆனால், அதை பார்க்கும் மற்றவர்களுக்கு அது திமிராகத் தெரியும். அது அவளுக்கு பிரச்சினையாக இருக்காது. மாரியம்மாவும் வந்து விடக்கூடாது, துஷாராவும் தெரியக்கூடாது ரேனே இருக்க வேண்டும் என அதற்கான பயிற்சி எடுத்தேன். அதெல்லாம் சவாலானதாக இருந்தது.

மாரியம்மா, ரேனே இதில் துஷாராவின் மனதுக்குப் பிடித்தவர் யார்?

மாரியம்மா, ரேனே ரெண்டு பேருமே அப்படித்தான். மாரியம்மா எனக்கு வாழ்க்கை கொடுத்த ஒரு கதாபாத்திரம். வெளியில் நான் அனைவருக்கும் துஷாராவாக தெரிந்ததை விட மாரியம்மாவாகத் தான் அதிகம் தெரிந்தேன். அதனால், மாரியம்மாவை எப்போதும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. ஆனால், ரேனேவிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் நிறைய.

துஷாரா ஃபேமிலி பத்தி சொல்லுங்க...உங்க அப்பா விஜயன் திமுக அரசில் முக்கிய நபர்னு கேள்வி பட்டோம். அரசியல் சார்ந்த விஷயங்கள் பேசுவீங்களா?

என் அப்பாவுக்கு அரசியல் மட்டும் தான் தெரியும். நானே பல சமயங்களில் பொறாமைப்படும் அளவுக்கு அவருக்கு பல விஷயங்கள் தெரியும். அம்மா ஹவுஸ் வொய்ஃப். அவர்கள் இல்லை என்றால் என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது. சினிமாவுக்குள் போக வேண்டும் என்று நான் சொன்னதும் உடனே சம்மதம் தெரிவிக்கவில்லை. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் மறுத்தார்கள்.

அதன் பிறகு தான் சினிமாவுக்குள் வந்தேன். ‘சார்பட்டா பரம்பரை’ படம் பார்த்துவிட்டு என் அப்பா என்னிடம் “நீ இப்படி நடிப்பாய் என தெரிந்திருந்தால் முன்பே உன்னை நடிக்க விட்டிருப்பேனே” எனச் சொல்லி என் நெற்றியில் கொடுத்த முத்தத்தை என்றுமே மறக்கமாட்டேன்.

அடுத்து என்ன படங்கள்?

‘ராட்சசி’ பட இயக்குநர் கெளதம் ராஜ், அருள்நிதியுடன் ஒரு படம் இதை முடித்துவிட்டு பாலாஜி மோகனுடன் ஒரு படம் ஒப்பந்தம் ஆகியுள்ளேன்.

x