நாம் எல்லோரும் திரையில் ஆசை ஆசையாகப் பார்த்த நடிகர், தன் நடிப்பால், நம்மை உற்சாகப்படுத்துவார்; மகிழ்ச்சிக்குள்ளாக்குவார்; மலைக்கச் செய்வார். நாம் நமக்குப் பிடித்த நடிகரின் படங்களை ஆசை ஆசையாகப் பார்ப்போம். அதேபோல, எல்லா வயதினரும் ரசிக்கும் வகையில் நடிக்கிற நடிகருக்கும் தனக்கென பிரத்யேக ஆசை இருக்கும்தானே. ‘இந்த மாதிரி கேரக்டரில் நடித்தால் நம் ரசிகர்கள் விரும்புவார்கள்’ என்று தெரிந்து தொடர்ந்து ‘மாஸ்’ படங்களைக் கொடுத்துவரும் நடிகருக்கு, ‘நம் ஆசைப்படி, விருப்பப்படி ஒரு படம் நடிக்க வேண்டும்’ என்று ஆசை இருப்பது இயல்புதானே!
நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படி ஆசைப்பட்டு, விருப்பப்பட்டு, ஒரு தவம் போல் அந்தப் படத்தை வழங்கினார். அதையும் தன் 100-வது படமாகத் தந்தார். மிகப்பெரிய தாக்கத்தையோ வெற்றியையோ அந்தப் படம் தராத போதும், மிக உன்னதமான மகானை இளைஞர்களிடையே அந்தப் படம் சென்று சேர்த்தது.
குருநாதரால் தன்னை அடையாளம் கொண்டு, குருவையே தன் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் அறிமுகப்படுத்தினார். அந்தத் திரைப்படம் அந்த மகானின் பெயரைக் கொண்டே வெளியானது. அதுதான் ’ஸ்ரீராகவேந்திரர்’ திரைப்படம்.
கர்நாடக மாநிலத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த சிவாஜிராவ் கெய்க்வாட், கண்டக்டராகத் தன் வாழ்வைத் தொடங்கினார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரால் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து அவரால் பட்டை தீட்டப்பட்டார். இயக்குநர் மகேந்திரன் ஒரு பக்கம், ரஜினியை இன்னும் செம்மையாக்கினார். ரஜினியை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குநர் எனும் பெருமை எஸ்.பி.முத்துராமனுக்கு உண்டு. ரஜினியை ‘மாஸ்’ நடிகராக, ஆக்ஷன் ஹீரோவாக, சூப்பர் ஸ்டாராக, ‘சி’ சென்டர் ஆடியன்ஸின் ஆதர்ச நாயகனாக, வசூல் சக்கரவர்த்தியாக பிரம்மாண்டமாக உருவாக்கிய பெருமைக்கு உரியவர் எஸ்.பி.முத்துராமன்.
‘இத்தனை புகழையும் பெருமையையும் அந்தஸ்தையும் செல்வத்தையும் இப்படியான வாழ்க்கையையும் நமக்கு அருளியவர் குரு மகான் ஸ்ரீராகவேந்திரர்’ என மனதில் வரித்துக்கொண்டார் ரஜினிகாந்த். குருவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் ஸ்ரீராகவேந்திரருக்கு விரதமிருந்தார். அதை வெளிப்படுத்தவும் செய்தார்.
அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களும், அவரவர் ஊரிலிருக்கிற ராகவேந்தர் கோயிலுக்குப் போய் வழிபடுவதற்கும் கையில் ரஜினியைப் போலவே செப்பு வளையம் போட்டுக்கொள்வதற்குமான மிகப்பெரிய பங்களிப்பை தன் குருநாதருக்குக் காணிக்கையாக்கினார், தன் திரைப்படம் மூலமாகவே!
ஆறேழு பாடல்கள், ஏழெட்டு சண்டைகள், காட்சிக்குக் காட்சி ஸ்டைல், வார்த்தைக்கு வார்த்தை பஞ்ச் வசனங்கள் என பக்கா ஆக்ஷன் படம் கொடுத்திருந்தால், 100-வது படம் வசூல் மழை பொழிந்திருக்கும் என்பதெல்லாம் ரஜினிக்குத் தெரியாதா என்ன? ‘எனக்கு இவ்வளவு பெரிய வாழ்க்கையை, புகழைக் கொடுத்தவர் என் குரு ராகவேந்திர சுவாமிகள். அவருக்குக் காணிக்கையாக அவரின் சரிதத்தை எடுப்பதுதான் என் வாழ்நாளுக்கும் நான் செலுத்துகிற நன்றிக்கடன்’ என்று நெகிழ்ச்சியுடன் சொன்ன ரஜினி, தன் செலவில் உருவான திருமண மண்டபத்துக்கு ‘ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம்’ என்றுதான் பெயர் சூட்டியுள்ளார்.
தன் ஆசையை, விருப்பத்தை, தன் திரையுலக குருநாதரிடம் சொல்ல, ‘கவிதாலயா’ பேனரில் தயாரிக்க முன்வந்தார் கே.பாலசந்தர்.
தன்னை வைத்து கமர்ஷியல் சினிமாக்களைக் கொடுத்த, மசாலா சினிமாக்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனை இந்தப் படத்தின் இயக்குநராக்கினார். அதுவரை, புராண - இதிகாசப் படங்களின் பக்கமே போகக்கூட யோசிக்காத எஸ்.பி.எம். ரஜினிக்காக முன்வந்து இயக்கினார்.
ஸ்ரீராகவேந்திரர் எனும் மகானின் சரிதத்தைப் படக்குழுவினர் படித்துப் படித்து உள்வாங்கிக்கொண்டார்கள். போதாக்குறைக்கு ரஜினி, அந்த மகானின் லீலைகளைச் சொல்லச் சொல்ல இன்னும் இன்னுமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள். கவிதாலயா நிறுவனத்துக்கு இப்படியொரு படம் எடுப்பது புதிது. இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கும் புதியதுதான். 80-களின் தொடக்கத்திலேயே பக்திப்படமெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டிருந்தன.
ரஜினி அதைப் பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அந்த வேடத்தைத் தாங்கி நடித்தார். ஸ்ரீராகவேந்திரராக அவதாரமெடுத்து முழு அர்ப்பணிப்புடன் படத்தை வழங்கினார்.
சிதம்பரம் அருகேயுள்ள புவனகிரியில் அவதரித்து இன்றைக்கு உலகமே போற்றி வணங்கிக் கொண்டிருக்கும் பிருந்தாவன மகான் குரு ஸ்ரீராகவேந்திரரின் சரிதத்தை, அழகிய கதையாக, அற்புதத் திரைக்கதையாக, தன் வாழ்நாள் ஆசையாக வெளிப்படுத்தியிருந்தார் ரஜினி. அதற்கு கவிதாலாயா ஊழியர்கள், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், இளையராஜா என அனைவரும் திறம்படப் பணியாற்றிக் கொடுத்தார்கள்.
லட்சுமி, டெல்லி கணேஷ், மோகன், தேங்காய் சீனிவாசன், அம்பிகா, கே.ஆர்.விஜயா, செந்தாமரை, விஷ்ணுவர்த்தன், ஒய்.ஜி.மகேந்திரன், பண்டரிபாய், நிழல்கள் ரவி, வெண்ணிற ஆடை மூர்த்தி, பூர்ணம் விஸ்வநாதன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருந்தார்கள்.
‘ஆடல் கலையே தேவன் தந்தது’, ‘அழைக்கின்றான் மாதவன்’ என படம் முழுக்க பாடல்களாலும் பின்னணி இசையாலும் மகானுக்கு குரு வணக்கம் செலுத்தினார் இசைஞானி இளையராஜா. எல்லாப் பாடல்களிலும் கர்நாடக இசையும் பக்தியும் இழையோடின. கன்னடத்தில் ரஜினி தன்னுடைய குருவாக மதிக்கும் ராஜ்குமாரைப் போலவே, ஸ்ரீராகவேந்திரரின் சரிதத்தில் நடித்ததையும் பெருமையாகவே கருதினார் ரஜினிகாந்த்.
இந்தப் படம் சிறந்த படமாகத்தான் எடுக்கப்பட்டது. ஆனால், ரஜினியின் ரசிகர்களுக்கு இது ரஜினி படமாக இல்லை. ஆனாலும் இந்தப் படத்துக்குப் பிறகு ஸ்ரீராகவேந்தரரின் பக்தர்கள் அதிகமானார்கள். வியாழக்கிழமைகளில் இந்த மகானுக்கு இன்று வரை விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். படம் தோல்வி அடைந்தாலும், தான் பரப்ப நினைத்த தன் குருவின் சரித்திரத்தை மிகச்சரியாகக் கொண்டுசேர்த்துவிட்டோம் எனும் நிறைவு ரஜினிக்கு! தமிழக அரசு வரிவிலக்கு அளித்தது. அதுமட்டுமா? சிறந்த நடிகர் விருதையும் ரஜினிக்கு வழங்கி கெளரவித்தது.
1985 செப்டம்பர் 1-ம் தேதி வெளியானது ‘ஸ்ரீராகவேந்திரர்’. படம் வெளியாகி, 37 வருடங்களாகிவிட்டன. அந்த வருடத்தில், ரஜினி நடித்து பாலுமகேந்திரா இயக்கத்தில் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ வெளியானது. எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் பாக்யராஜுடன் நடித்த ‘நான் சிகப்பு மனிதன்’ வெளியானது. இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் சிவாஜியுடன் அவர் நடித்த ‘படிக்காதவன்’ படம் வெளியானது. அந்தப் படங்களின் வெற்றி தந்த சந்தோஷத்தையும் கடந்து, ‘ஸ்ரீராகவேந்திரர்’ படம் தன் 100-வது படமாக வந்தது மிகப்பெரிய திருப்தியைக் கொடுத்தது ரஜினிக்குள். அது... ஆத்ம திருப்தி!
37 வருடங்களாகிவிட்டாலும், ரஜினியையும் ரஜினியின் குருவான ஸ்ரீராகவேந்திரர் எனும் அற்புத மகானுக்கு வழங்கிய குரு காணிக்கையையும் மறக்கவே முடியாது.