இந்தக் கதாபாத்திரத்துக்கு அது செட் ஆகாது!


கிஷோர் தேவ்

’ஆடை’ படத்தில் நடிகை அமலாபாலுடன் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் கிஷோர் தேவ். இப்போது கலர்ஸ் தமிழில் ஒளிப்ரப்பாகி வரும் ’பச்சக்கிளி’ சீரியல் ஹீரோ. சினிமா டூ சீரியல் ஏன், ’பச்சக்கிளி’ சீரியல் அனுபவம் என பல விஷயங்களை காமதேனு இணையதளத்துக்காக பகிர்ந்து கொண்டார்.

‘பச்சக்கிளி’ சீரியல் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் உங்களிடம்?

‘பச்சக்கிளி’ சீரியலை பொறுத்தவரை இதுவரை எந்த ஒரு எதிர்மறையான விமர்சனங்களும் எனக்கோ அல்லது இந்த சீரியலுக்கோ கிடைக்கவில்லை என்பது தான் பாசிட்டிவான ஒரு விஷயம். இந்த சீரியலில் நான் கொஞ்சம் சீரியஸாக வருவதால், அதை மட்டும் மாத்திக்கச் சொன்னார்கள். ஆனால், இந்த கதாபாத்திரத்துக்கு அது செட் ஆகாது. அது சீக்கிரமே மாறும். அப்போது ரசிகர்களுக்கு இந்த கதாபாத்திரம் இன்னுமே பிடிக்கும் எனச் சொல்லி இருக்கிறேன். நிஜத்தில் என்னை ஜாலியாக பார்த்துவிட்டு, சீரியலில் சீரியஸாகப் பார்ப்பது என் நண்பர்களுக்கு வித்தியாசமாக இருக்கிறது.

ஒரு பக்கம் ‘பச்சக்கிளி’ ஜாலியான துறுதுறு பெண் என்றால், நீங்கள் அப்படியே நேரெதிரா?

ஆமாம்! ஆதித்யாவுக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்கும். அவன் பெண்களை மதிக்கக் கூடியவன் தான். ஆனால், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவன் சில விதிமுறைகள் வைத்திருப்பான். அதை பச்சக்கிளி தாண்டும் போது அவனுக்குப் பிடிக்காது. இந்தக் கதையை பொறுத்தவரை வில்லன் என்று யாரும் கிடையாது. ஆதித்யாவுக்கு என்று சில விதிமுறைகள் இருப்பது போல பச்சக்கிளிக்கும் சிலது இருக்கும். இது இரண்டும் ஒத்துப்போகாத போது தான் பிரச்சினைகள் வரும். இதுபோன்ற விஷயங்கள் தான் இந்தக் கதையில் வில்லனாக இருக்கும். ஆனால், இதையும் தாண்டி அவர்களுக்குள் அன்பு இருக்கும்.

இந்த கதைக்குள் எப்படி நீங்கள் வந்தீர்கள்?

கல்லூரியில் படித்து முடித்ததும் மீடியாவுக்குள் வர நான் முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஒரு படத்தில் உதவி இயக்குநராகவும் வேலை செய்தேன். ஆனால், அந்த படம் நடக்கவில்லை. பின்பு ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. பின்பு மியூசிக் ஆல்பம், விளம்பரங்கள், மாடலிங் என அதிலும் கவனம் செலுத்தி கொண்டிருந்தேன். இயக்குநர் சற்குணம் படம் ஒன்றில் இரண்டாவது லீட் என சில படங்கள் நடித்தேன். பிறகு ரசிகர்களுடன் கமர்ஷியலாக கனெக்ட் ஆக வேண்டும் என்று நினைத்தேன்.

நிறையப் பேர் என்னிடம் சீரியலில் நடிக்கச் சொல்லி சொன்னார்கள். ஆரம்பத்தில் இதுபற்றி நான் நிறைய யோசித்தேன். பிறகு தினமும் ரசிகர்களுடன் கனெக்ட் செய்து கொள்ள இது சரியான வழி என்று தெரிந்தது. அப்படித்தான் ‘பச்சக்கிளி’ சீரியல் செட்டில் எல்லோரும் குடும்பம் போல ஆகிவிட்டோம். மோனிஷாவும் நானும் நல்ல நண்பர்கள்.

சீரியல் டூ சினிமா என்பது தான் பலரின் கனவாக இருக்கும். நீங்கள் சினிமா டூ சீரியல் எனும் போது எதிர்கால திட்டம் என்ன?

நிச்சயமாக அடுத்த வருடமே ஆஸ்கார் வாங்கி விட வேண்டும் என்று நினைக்கும் அளவிற்கு எல்லாம் பெரிய திட்டம் ஒன்றும் இல்லை. ஆனால், இதிலிருந்து கற்றுக்கொண்டு சில விஷயங்கள் நடத்த வேண்டும் என்று ஆசை உள்ளது. சினிமா, சீரியல் என எதில் நல்ல வாய்ப்புகள் வந்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உங்கள் நண்பர்கள் வட்டம் குறித்து சொல்லுங்கள்?

பள்ளி - கல்லூரி கால நண்பர்கள் தான் இப்போது வரை எனக்கு நண்பர்கள். ஷூட்டிங் முடிந்தால் வீடு, நண்பர்கள் என செட்டில் ஆகி விட கூடிய பையன் தான் நான். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சாப்பாடு தான் எனக்குப் பெரிய போதை. நண்பர்கள் நாங்கள் ஒன்று சேர்ந்தால், எங்கு போய் என்ன சாப்பிடலாம் என்று தான் அதிகம் பேசிக்கொள்வோம்.

நடிகராக என்ன மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்?

நிறைய புதுவிதமான கதாபாத்திரங்கள் எடுத்து நடிக்க ஆசை. கதையில் எப்போதும் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பது குறித்து கவனமாக இருப்பேன். சீரியலுக்குள்ளே வரும் போது எனக்கான கதாபாத்திரமும் வாய்ப்பும் சீக்கிரம் கிடைத்து விடும் என்று தான் நினைத்தேன். உள்ளே வந்த பிறகு தான் இதில் உள்ள கஷ்டங்களும், போட்டிகளும் புரிய ஆரம்பித்தது. அதற்கேற்றாற் போல, என்னையும் மாற்றிக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் சீரியலுக்குள் நான் வர வேண்டும் என்று எடுத்த முடிவு சரி என்றே நினைக்கிறேன்.

மீடியாவுக்குள் வந்து பெற்றது, இழந்தது என்றால் எதை சொல்வீர்கள்?

நிறைய அனுபவங்கள். ஐடி படித்துவிட்டு அந்தத் துறையில் நுழைந்திருந்தால் அங்கு கிடைத்திருக்கும் அனுபவத்தை விட இங்கு எனக்கு நிறைய அனுபவமும் கற்றலும் கிடைத்திருக்கிறது. இழந்தது என்றால் எதுவும் இல்லை. நிறைய பிரச்சினைகள் இருக்கும் தான். ஆனால், அதெல்லாம் பழகிவிட்டது. அதை எதிர்கொள்ளும் தைரியமும் வந்துவிட்டது.

சினிமாவில் எந்த ஒரு நடிகருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள்?

அதெல்லாம் முன்பு இருந்தது. ஆனால், எது உண்மை என்று இப்போது தெரிய ஆரம்பித்துவிட்டது. நான் சொல்வதால் அது நடக்குமா எனத் தெரியாது. நான் எதிர்பார்க்காத நிறைய விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. இதை எல்லாம் தாண்டி, கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான்.

‘பச்சக்கிளி’ ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

‘பச்சக்கிளி’ சீரியல் கதையைக் கேட்டபோது இப்படி எல்லாம் இருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கே.எஸ். ரவிக்குமார், பாண்டிராஜ் படங்களைப் போல, இனி வரும் எபிசோட்களில் எமோஷனல், குடும்பம் என ஜாலியாக இருக்கும். பார்த்து ரசிக்கக் காத்திருங்கள்.

x