பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்த தீர்க்கப்படாத கொலை - கொள்ளைக் குற்றத்தை விசாரிக்கச் செல்லும் இளம் போலீஸ் அதிகாரி அதிலிருந்து பெறும் அனுபவங்களும் அறிதல்களுமே ‘டைரி’.
புதிதாக எஸ்.ஐ-ஆகப் பணியில் சேரும் இளைஞர்களுக்கு முக்கியமான சில பொறுப்புகளை அளிக்கிறார் மூத்த காவல் அதிகாரி (அஜய் ரத்னம்). அதன்படி, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் தேங்கியிருக்கும் வழக்குகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தீர்ப்பதன் மூலம் காவல் துறை மீதான மக்களின் அவநம்பிக்கையைப் போக்கும் பொறுப்பு வரதனுக்கு (அருள்நிதி) வருகிறது.
16 ஆண்டுகளுக்கு முன் ஊட்டியில் நடந்த ஒரு கொலை -கொள்ளை வழக்கைக் கையிலெடுக்கிறார் வரதன். அதற்காக ஊட்டிக்குச் செல்பவருக்கு உதவ உள்ளூர் எஸ்.ஐ பவித்ரா (பவித்ரா மாரிமுத்து) நியமிக்கப்படுகிறார். இருவரும் சேர்ந்து எவ்வளவு முயன்றும் எந்தத் துப்பும் கிடைக்காமல் திணறுகிறார்கள். இந்த நிலையில் வரதனின் காரை ஒருவன் திருடிவிட அதனுடன் அவர் இந்த வழக்கு தொடர்பாகச் சேகரித்துவைத்திருந்த ஆவணங்களும் துப்பாக்கியும் தொலைந்துவிடுகின்றன.
மறுபுறம் ஊட்டியிலிருந்து கோவைக்கு நள்ளிரவில் கிளம்பும் கடைசிப் பேருந்து கதையில் முக்கிய இடம் பிடிக்கிறது. இளம் தம்பதியைக் கொன்று நகைகளைக் கொள்ளை அடித்துவிட்டுத் திரும்பும் மூவர், ஒரு முதிய பெண்மணி, கணவனை இழந்த பெண் ஒருவர், காதலியின் கரம் பற்றுவதற்காக அவசரமாகச் செல்லும் இளைஞர் (ஷாரா), உள்ளுர் எம்எல்ஏ-வின் அடியாட்களால் துரத்தப்படும் அவருடைய மகளும் அவரின் காதலரும், இரண்டு குழதைகளுடன் ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, கல்லூரி மாணவி ஒருவர். வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியேறிய இளைஞர், தோடர் இனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஆகியோர் வெவ்வேறு நிறுத்தங்களில் இந்தப் பேருந்தில் ஏறிப் பயணிக்கின்றனர்.
அந்தப் பயணத்தில் சிலருக்கு அமானுஷ்ய அனுபவங்கள் கிடைக்கின்றன. தான் தொலைத்துவிட்ட ஆவணங்களையும் துப்பாக்கியையும் தேடிப் பயணித்துக்கொண்டிருக்கும் வரதன் இந்தப் பேருந்துக்குள் நுழைய நேர்கிறது. வரதன் ஏன் பேருந்துக்குள் வந்தார்? அவர் கையிலெடுத்த வழக்குக்குக் காரணம் பேருந்தில் இருக்கும் கொள்ளைக்காரர்கள்தானா? சிலருக்கு மட்டும் அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்படுவது ஏன்?பேருந்தில் பயணிப்போருக்குக்கும் இந்த வழக்குக்கும் என்ன தொடர்பு? வரதன் இந்த வழக்கைத் தீர்த்துவைத்தாரா? இப்படியான பல்வேறு கேள்விகளுக்கு விடை அளிக்கிறது படத்தின் இரண்டாம் பாதி.
த்ரில்லர், ஹாரர்-த்ரில்லர் வகைப் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் அருள்நிதிக்கு இது இந்த ஆண்டில் மட்டும் அந்த வகைமையைச் சேர்ந்த மூன்றாவது படம். ஹாரர், த்ரில்லர், ஆக்ஷன், சென்டிமென்ட் என பலவகையான ஜானர்களில் பயணிக்கும் சிக்கலான கதையமைப்பை முதல் படத்திலேயே தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குநர் இனனாசி பாண்டியன். ஒருகட்டம் வரை பார்வையாளர்களின் நிதானத்தைக் கோரி அதற்குப் பிறகு முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து ஆச்சரியங்களை அளிக்கும் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இதன் மூலம் தன் முதல் படத்தை எளிதில் புறக்கணித்துவிட முடியாத படமாகக் கொடுப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார்.
படத்தின் தொடக்கம் முதல் முதல் பாதியின் பெரும்பகுதி ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத காட்சிகளாகவும் தர்க்கத்துக்குப் பொருந்தாத நிகழ்வுகளுடன் பயணித்து ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை சோதிக்கிறது. ஆனால் அதுவரையிலான காட்சிகளின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட மர்மம் இடைவேளைக்கு முன்பிலிருந்து சூடுபிடிக்கிறது. படத்தின் இரண்டாம் பாதின் பெரும்பகுதி அமானுஷ்யமும் சுவாரசியமும் நிறைந்த காட்சிகளால் பார்வையாளர்களின் கவனத்தைக் கட்டிப்போடுகிறது.
உண்மையாக என்ன நடந்தது என்பதைச் சொல்லும் ட்விஸ்ட்டுடன் கூடிய இறுதிப் பகுதி ஹாரர், ஃபேன்டசி, த்ரில், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களையும் கலந்து புதுமையான அனுபவத்தைத் தருகிறது. அந்த முடிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும். அமைந்துள்ளது. இறுதியில் என்ன நடக்கும் என்பதை ஓரளவு முன்கூட்டியே ஊகித்துவிட முடிந்தாலும் அது திரையில் நிகழும் விதத்தை ரசிக்க முடிகிறது.
ஜஸ்ட் லைக் தட் ஒரு அதிகாரியின் உத்தரவின் பேரில் பல புதிய காவலர்கள் பழைய வழக்குகளைத் தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவது, எஸ்.ஐ-களுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பது, ஒரு ஆற்றுக்குள் பேருந்து மூழ்கியிருப்பது பல ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் யாருக்கும் தெரியாமல் இருப்பது, போன்ற ஏகப்பட்ட லாஜிக் பிழைகள் இருக்கின்றன. பாடல்களும் நகைச்சுவைக் காட்சிகளும் தேவையற்ற திணிப்புகளாகத் துருத்தித் தெரிகின்றன. இவற்றைக் கவனித்து சரி செய்திருந்தால் ’டைரி’ தன் முழுமையான சிறப்பை எய்தியிருக்கும்.
அருள்நிதி வழக்கமானதொரு கதாபாத்திரத்தில் வழக்கம்போல் நடித்திருக்கிறார். இறுதிப் பகுதியில் சென்டிமென்ட் நடிப்பில் மட்டும் சற்றே வித்தியாசம் காண்பித்திருக்கிறார். நாயகியாக பவித்ரா மாரிமுத்துவுக்கு நாயகனுக்கு உதவுவதையும் அவரைக் காதலிப்பதையும் தவிர வேறெந்த வேலையும் இல்லை. காவல் துறை வாகன ஓட்டுநராக வரும் சாம்ஸ் நகைச்சுவை எனும் பெயரில் எரிச்சலைக் கிளப்புகிறார். இரட்டை அர்த்த வசனங்களும் உருவக்கேலியும் நிரம்பியதாக இருந்தாலும் ஒரு சில இடங்களில் ஷாராவின் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது. நடிப்பிலும் அவர் குறைவைக்கவில்லை. முதிய பெண்மணியாக வரும் தனம் உட்பட பேருந்தில் பயுணிக்கும் அனைவரும் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
ரான் ஈத்தன் யோஹனின் பின்னணி இசை படத்தின் மர்மம் நிறைந்த தன்மைக்குப் பெரும் பலம் கூட்டியிருக்கிறது. அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு இருள் சூழ்ந்த இரவுநேர ஊட்டி கதாபாத்திரங்களுக்கும் அளிக்கும் அச்சுறுத்தலைப் பார்வையாளர்களும் உணரவைக்கிறது.
மொத்தத்தில், பலவகை ஜானர்களை உள்ளடக்கிய ‘டைரி’, குறைகளைத் தாண்டி நிறைவளிக்கவே செய்கிறது.