ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 75


“கதை சொல்லும்போது காட்சியை எப்படி விவரிப்பாரோ... அதைவிட சிறப்பாக அதைப் படமாக்கிவிடுவார்” என்று ரஜினியின் பாராட்டைப் பெற்றவர் இயக்குநர் ராஜசேகர். ‘படிக்காதவன்’ படப்பிடிப்பின்போது ஒருநாள் ராஜசேகரிடம் “நான் தயாரிக்க விரும்பும் அடுத்த படத்தை நீங்களே இயக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார் ரஜினி. அதை தட்டாமல் ஏற்றுக்கொண்ட ராஜசேகர், அதுபற்றி தொடர்ந்து விவரிக்கிறார்.

“ரஜினி தன்னுடைய சொந்தத் தயாரிப்பை என்னை நம்பிக் கொடுக்க விரும்புகிறார் என்பதை அறிந்தபோது எனக்கு பெருமையாக இருந்தது. என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக, அவர் அப்படிக் கேட்டதுமே அந்தப் படத்துக்கான தலைப்பை ‘மாவீரன்’ என்று வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டேன். ‘ஃபென்டாஸ்டிக்..! அந்தத் தலைப்புக்கு ஏற்றக் கதை ரெடியா இருக்கா?’ என்று ஆர்வமாகக் கேட்டார் ரஜினி.

‘உலகம் முழுவதுமே மாவீரர்கள் கதைதானே அதிகமாக இருக்கிறது சார்... அட்டகாசமான வீரம் செறிந்த கதையைத் தயார் செய்கிறேன்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘அந்தக் கவலையே வேண்டாம்... இப்போது நீங்கள் ஸ்கிரிப்ட்டுக்காக உங்கள் நேரத்தை செலவழிக்க வேண்டாம். அமிதாப் ஜி நடிப்பில் மன்மோகன் தேசாய் இயக்கியிருக்கும் ‘மார்டு’ (மனிதன்) படத்தை ரீமேக் செய்வோம். ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தில் சிக்கி நம் இந்திய நாட்டின் சமஸ்தானங்கள் பட்ட பாடுகளின் கதை அது. அதில் புரட்டகானிஸ்ட் கேரக்டர் உங்களுக்கு ரொம்பவே பிடித்துவிடும்’ என்றார். படத்தைப் பார்த்ததும் அதில் ராஜா ஆசாத் சிங்கின் உருவம் எனக்கு நம் தமிழ் மண்ணின் ராஜா சேதுபதியின் வீரத்தைப் பற்றி படித்திருந்ததெல்லாம் நினைவுபடுத்தியது. தமிழுக்கு ஏற்ப அதில் பல மாற்றங்களைச் செய்தோம்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பில் பல மறக்க முடியாத சம்பவங்கள் உண்டு. ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு மைசூர் பேலஸில் நடந்தது. அன்றைக்கு ரஜினி சார், அம்பிகாவை ஒரு குதிரையில் ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற காட்சியைப் படமாக்கினோம். ஒத்திகை முடிந்ததும் முதல் டேக் எடுத்தோம். ‘அம்பிகா குதிரையிலிருந்து நழுவி கீழே விழுந்துவிட்டார். இடுப்பில் நல்ல அடி. அடியெடுத்து வைத்து நடக்க முடியவில்லை. படப்பிடிப்பை ரத்துசெய்துவிட்டார்கள். அம்பிகா தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்’ என்று பத்திரிகைகளில் பரபரப்பாக செய்திகள் வந்துவிட்டன.

வலியைக் காட்டிக்கொள்ளாமல் நடித்தார்

ஆனால், உண்மையாக என்ன நடந்தது என்பது எனக்கும் படக்குழுவினருக்கும்தான் தெரியும். அந்த குதிரையேற்றக் காட்சியில் ரஜினிக்கு முன்னால் உட்கார்ந்த அம்பிகா, ஸ்கர்ட் உடை அணிந்திருந்தார். அதனால், குதிரையில் இரண்டு பக்கமும் கால்களைத் தொங்கவிடாமல் ஒரே பக்கமாகக் கால்களைப் போட்டவாறு அமர்ந்திருந்தார். ஒத்திகையில் சரியாக அமைந்ததால் அம்பிகா நழுவி விழுந்துவிடுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், குதிரையின் நான்கு கால் பாய்ச்சலில் பிடிமானம் ஏதுமில்லாமல் நழுவிய அம்பிகா, ரஜினியின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டே கீழே சரிந்து விழ, அவர் விழுந்த வேகத்தில் அவரது பிடியை விட்டுவிடக்கூடாது என்று நினைத்த ரஜினியும் கீழே விழ வேண்டியதாகிவிட்டது. ரஜினிக்கும் இடுப்பில் அடிபட்டு உள்காயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தனக்கு அடிப்பட்டதையோ, வலியையோ வெளியே சொல்லாமல் அடுத்து வந்த இரண்டுகள் நாட்கள் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் ரஜினி நடித்துக்கொண்டேயிருந்தார்.

ஆனால், நடக்கும்போது அவருடைய நடையில் இருக்கும் ஸ்டைலையும் கம்பீரத்தையும் கால்களில் கொண்டு வரமுடியவில்லை. தனது வேதனையை யாரிடமும் மறந்தும் சொல்லிவிடாமல், படப்பிடிப்பு முடிந்து மாலை அறைக்குச் சென்றதும் தனக்குத் தானே சிகிச்சை செய்துகொண்டிருந்தார் என்பதை ஐந்தாவது நாள்தான் கண்டுபிடித்தேன். தன்னால் எந்தவிதத்திலும் படப்பிடிப்பு நின்றுவிடக்கூடாது என்று நினைப்பதால்தான் அவர் சூப்பர் ஸ்டார்.

சந்திரமுகி படப்பிடிப்பில்...

கொடைக்கானலில் ‘தம்பிக்கு எந்த ஊரு?’ படப்பிடிப்பு நடந்தபோது இன்னொரு சம்பவம். ரஜினியும் மாதவியும் நடித்த காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தேன். அந்தக் காட்சியில் ரஜினி அணிந்திருந்த பேன்ட், சட்டையில் சேறும் சகதியும் பட்டிருக்கவேண்டும். ஷாட் ரெடியாகிவிட்டது. நான் மேக்கப் மேனை அழைத்து ரஜினியின் பேன்ட், சட்டையில் எங்கெல்லாம் சேற்றைப் பூசிவிட வேண்டும் என்று சொன்னேன்.

இது ரஜினியின் காதில் விழுந்துவிட்டது. அவ்வளவுதான் அடுத்த நொடி நாற்காலியிலிருந்து எழுந்த அவர், அந்த மண் சாலையின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடைச் சகதியை அள்ளி மேலே பூசிக்கொண்டு என்முன்னால் வந்து நின்றார். ‘நான் ரெடி சார்… நீங்க ஓகேன்னா ஷாட் போகலாம்’ என்றார். நான் மட்டுமல்ல; படக்குழுவில் இருந்த அத்தனை பேரும் இவர் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்தானா... ஒரு மனிதன் இவ்வளவு யதார்த்தமாக, சாமானிய மனநிலையைத் தக்கவைத்துகொண்டவனாக இருக்க முடியுமா என்று ஆச்சரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நான் நினைவுகூர விரும்புகிறேன். எனது இயக்கத்தில் நடித்த இன்னொரு முன்னணி நடிகர் விஷயத்தில் எனக்கு நேர்மாறான அனுபவம் உண்டு. காட்சிக்காக அவரது பேன்டில் சேற்றைப் பூசச் சென்றபோது மேக்கப் மேனைத் தடுத்து நிறுத்திய அவர், ‘எனக்கு சேறு சகதியெல்லாம் ரொம்ப அலர்ஜிங்க! அதனால உண்மையான சேறை பூசிடாதீங்க... பான் கேக்கை வச்சு சேறு பூசினாப்போல மேக்கப்லயே செய்ங்க. அதுக்கப்புறம்தான் நடிப்பேன்’ என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லிவிட்டார். அந்த சம்பவம் தான் ரஜினி தானே ஓடிப்போய் சாக்கடைச் சேற்றை அள்ளி சட்டையிலும் பேன்டிலும் பூசிக்கொண்ட சமயத்தில் எனக்கு நினைவுக்கு வந்தது” என்று மனம் திறந்த நினைவுகளைப் பதிந்து சென்றிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.

பிரபுவும் ரஜினியும்...

தனது திரை வாழ்க்கையில் நட்சத்திரமாக உச்சம் தொட்ட பிறகு சந்தை மதிப்புக்காக ரஜினியும் கமலும் பேசி வைத்துக்கொண்டு, இணைந்து நடிப்பதைத் தவிர்த்தார்கள். ஆனால், கமலைத் தவிர பிற முன்னணி நட்சத்திரங்கள் தன்னுடன் நடிக்க விரும்பியபோது, அவர்களுக்கு தன்னுடைய படங்களில் உரிய இடம் கொடுக்க ரஜினி தவறியதேயில்லை.

தர்மத்தின் தலைவன் படத்தில்...

அப்படித்தான் இளைய திலகம் பிரபு ரஜினியுடன் ‘தர்மத்தின் தலைவன்’, ‘குரு சிஷ்யன்’ ‘சந்திரமுகி’ உள்பட பல படங்களில் இணைந்து நடித்தார். அவற்றில் ‘குரு சிஷ்யன்’ படத்தையும் ‘சந்திரமுகி’யையும் ரஜினி ரசிகர்களும் சரி, பிரபு ரசிகர்களும் சரி இன்றைக்கும் கொண்டாடுகிறார்கள். ரஜினியுடன் முதன் முதலில் இணைந்து நடித்தது தொடங்கி, அன்னை இல்லத்துக்கும் ரஜினிக்குமான பந்தம் குறித்தும் பிரபு இங்கே தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

“நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அன்புக்குரிய அண்ணனாக அன்று முதல் இன்றுவரை எனது உள்ளத்திலே வரித்துக்கொண்டவன். கமல் எப்படி அப்பாவை தன்னுடைய ஆசான்களில் ஒருவராக சுவீகரித்துக் கொண்டாரோ அப்படித்தான் ரஜினியும் தன்னுடைய நடிப்புப் பயணத்தில் அப்பாவையே தனது சூப்பர் ஸ்டார் என்று ஏற்றுக்கொண்டவர். அண்ணன் ரஜினி அவர்களைப் பற்றி சொல்வதானால், அது ஒரு நாளில் முடிந்துவிடக்கூடியதல்ல. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும், அவரைப்பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு விஷயங்கள், அவ்வளவு நினைவுகள் மறக்க முடியாது.

என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. நான் நடித்த ‘ராகங்கள் மாறுவதில்லை’ படம் வெளிவந்த சமயம் அது. அந்தப் படத்தை அண்ணன் ரஜினி, மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறார். அவர் என்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் பார்த்துவிட்டு, ‘பிரபு... நீங்க நல்லா ஃபைட் பண்றீங்க. உங்க டான்ஸ் மூவ்மென்ட்ஸ் அவ்வளோ க்யூட்டா இருக்கு. நான் அவற்றைக் கண் கொட்டாமல் ரசிப்பேன்’ என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்தினார்.

பெரிய நடிகர்கள் எல்லோரிடமும் இதுபோல் பரந்த மனப்பான்மையை எதிர்பார்க்க முடியாது. இப்படி மனம் திறந்து பாராட்டுவது திறமையையும் உழைப்பையும் நம்புகிற ஒரு கலைஞனால்தான் முடியும். அது இரண்டுக்குமே அத்தாரிட்டியான நட்சத்திரம் ரஜினி அண்ணன். ‘தர்மத்தின் தலைவன்’ படத்தில் முதன் முதலாக நாங்கள் இணைந்து நடித்தோம். அப்பாவுடன் நான் முதன் முதலாக ‘சங்கிலி’ படத்தில் இணைந்து நடித்தபோது மிகவும் பயமாக இருந்தது. ஆனால், ரஜினியுடன் நடிக்கும் போது அந்த பயத்தைப் போக்கிவிட்டார்.

அவர் தன்னை ஒரு அண்ணனாக என்னை உணரவைத்துவிட்டார். என்றாலும் மனதுக்குள் ஒரு சின்ன சந்தேகம்... ரஜினி அண்ணன் நம்ம நடிப்புக்கு எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணப்போகிறார்... அவரோடு நடிக்கும்போது, நம் உடல்மொழியில் மாற்றம் தேவையா... அல்லது நமது ஸ்டைலிலேயே எப்போதும்போல் நடிப்பதா? என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் முதல் ஷாட் எடுப்பதற்கு முன் ரஜினி என்னிடம், ‘பிரபு உங்க ஸ்டைலை மாற்றாமல் பண்ணுங்க... அது எந்தக் காட்சியிலும் மிஸ் ஆகக்கூடாது’ என்றார். எனக்குத் தெளிவு பிறந்தது.

அதேபோல் அப்பாவிடம் ஒரு பிடிவாதமான பழக்கம் உண்டு. அவரது நடிப்பை உலகமே கொண்டாடினாலும் படப்பிடிப்புத் தளத்தில் அவர் ஒரு ஷாட்டில் நடித்து முடித்ததும் இயக்குநர், ஒளிப்பதிவாளர் தொடங்கி, அங்கே இருக்கும் லைட் மேனிடம் கூட ‘நான் நல்லா பண்ணினேனா?’ என்று கேட்டு தெரிந்து கொள்வார். அண்ணன் ரஜினியிடமும் இதே பழக்கம் அப்படியே இருந்தது; இன்னும் இருக்கிறது. அவரது தொடர் வெற்றிக்கும் இதுவும் ஒரு முக்கியமான காரணம். ‘சந்திரமுகி’ படத்தில் நடித்த அனுபவமே இன்னும் பல காலத்துக்குத் தாங்கக்கூடிய சாதனை” என்று கூறி நிறுத்தினார் பிரபு.

(சரிதம் பேசும்)

படம் உதவி: ஞானம்

x