இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், தன் கையில் எப்போதும் காப்பு ஒன்று போட்டிருப்பார். கூடுமானவரை, தன் படத்தின் நாயகனுக்கு காப்பு போட்டு அழகுபார்ப்பார். ‘நான் கமல் சாரோட தீவிர ரசிகன். அவரோட ‘சத்யா’ படம் பாத்து மிரண்டுட்டேன். அன்னிலேருந்து, அந்தப் படத்துல கமல் சார் போட்டிருக்கிற மாதிரி எனக்கும் காப்பு போடுற பழக்கம் வந்துருச்சு’ என்று அவரே பல மேடைகளில் தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுக்காக, கமலை வைத்து இயக்கிய ‘விக்ரம்’ படம்தான் கடந்த பல மாதங்களாக டாப்பிகல் நியூஸ். ‘நான் கமல் சாரோட வெறித்தனமான ரசிகன். அவர் படம் பாத்துட்டுதான் இயக்குநராகணும்னு முடிவு பண்ணி, சினிமாவுக்குள்ளேயே வந்தேன்’ என்று லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்திலேயே சொன்னார். ஒரு ‘ஃபேன் பாய்’ படம் என்று ‘விக்ரம்’ படத்தை ரசிகர்கள் அணுகினார்கள். கெளதம் மேனனும் கூட ‘ஃபேன் பாய்’ நினைப்பிலேயே கமலை வைத்து எடுத்ததுதான் ’வேட்டையாடு விளையாடு’.
’செவன்த் சேனல்’ மாணிக்கம் நல்ல தயாரிப்பாளர். ஆனால் ஏனோ அவருடைய படங்கள் மிகப்பெரிய வசூலை அடையவே இல்லை. இத்தனைக்கும் நல்ல சினிமாக்களின் காதலன்.
2001-ல் ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராகும்போதே கெளதம் மேனன் இளைஞர்களின் கவனம் ஈர்த்தார். 2003-ல் சூர்யாவை வைத்து, ‘காக்க காக்க’ படம் எடுத்தார். படத்தை முதல்முறை பார்த்துவிட்டு, படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், ‘இன்னொரு தடவை பாக்கணும்பா’ என்று பேசிக்கொண்டார்கள். அதன்படியே பலமுறை பார்த்தார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு குலைநடுங்கச் செய்யும் வில்லன் கதாபாத்திரம் அதில் ரொம்பவே பேசப்பட்டது.
கெளதம் படங்களில், ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பது போலவே வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சொல்லப்போனால், வில்லனின் கதாபாத்திரம் மிக அற்புதமாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும். ‘இது சினிமா, காட்சி ஊடகம், வெறும் கற்பனைதான் என்பதையும் கடந்து, வில்லன்கள், நம் அடிவயிற்றைக் கலக்கியெடுத்து, மிரட்டியெடுத்துவிடுவார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, படத்தின் நாயகிகளை அவர்களின் கதாபாத்திரங்களை, மிக யதார்த்தமாகவும் அதேசமயம் தைரியமாகவும் அன்புக்கு ஏங்குபவர்களாகவும் இயல்பாக உருவாக்கியிருப்பார். இந்த மூன்றும் கலந்த கலவையாக வந்து, நம் மனசையெல்லாம் வேட்டையாடியது ‘வேட்டையாடு விளையாடு’.
‘மின்னலே’ எடுத்துவிட்டு இந்திக்குப் போன கெளதம், ‘காக்க காக்க’ எடுத்துவிட்டு தெலுங்குப் பக்கம் போனார். தமிழில் மூன்றாவது படமாக, தன் ஆதர்ச நாயகன் கமலுடன் இணைவோம் என்று அவரே எதிர்பார்க்கவில்லை.
மர்மமான முறையில், பெண்ணைக் கொலை செய்கிறார்கள். அதுவும் போலீஸ் அதிகாரியின் மகளை. அதைத் துப்புத்துலக்க, சென்னையில் இருந்து கீரனூர் வரும் மற்றொரு போலீஸ் அதிகாரிதான் நாயகன் கமல். அங்கே விசாரணைக்குப் பிறகு தோண்டியெடுக்கும் பிணத்தில் இருந்து, ஒருவித பரபரப்புத் திரைக்கதை எகிறிக்கொண்டே இருக்கும். கொலையாளியைத் தேடும் பணி அமெரிக்கா வரை நீளும். அந்த பரபர பயணத்தில் நாமும் தொற்றிக்கொண்டு பயணிப்போம்.
தொடர் கொலைகள், குவியல் பிணங்கள், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், நடுவே ஃப்ளாஷ்பேக்கில் நினைத்துப் பார்க்கிற கமாலினி முகர்ஜினியுடனான காதல், கல்யாணம். அவரின் மரணம். அமெரிக்காவில் பார்க்கிற ஜோதிகா, அவருக்கு ஏற்பட்டிருக்கிற மனத்துயரம், மன அழுத்தம், அதிலிருந்து அவரை மீட்டெடுப்பது, அவருடன் பழகுவது, திருமணமாகி மனைவியை இழந்த கமலுக்கும் - திருமணமாகி குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து பெற்ற ஜோதிகாவுக்கும் நடுவே கவிதையாய் மலர்கிற காதல், வில்லன்களின் குரூர முகங்கள், வக்கிர குணங்கள் என எல்லாமே கெளதம் டச்.
ராகவன் டி.சி.பி-யாகவே அதகளம் பண்ணியிருப்பார் கமல். ‘என் கண்ணு வேணும்னு கேட்டியாமே. இந்தா... எடுத்துக்கோ’ என்று கண்ணை அகல விரித்துக் கேட்டு ஸ்டைலாக சண்டையிட்டு வீழ்த்துவதில் இருந்து டைட்டிலின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் கமலை துள்ளத்துடிக்க ரசித்து ரசித்து எடுத்திருப்பார் கெளதம்.
அதிலும் கமல் எப்படி? அப்போது வந்த பல படங்களில், கமல் மீசையில்லாமல் மழுமழுவென இருந்தார். இந்தப் படத்தில் வகிடெடுத்த ‘சூரசம்ஹாரம்’ கமல்ஹாசன். ஆனால் முறுக்குமீசைக்கு பதிலாக, அழகாக செதுக்கிய கமலின் எண்பதுகளின் மீசை அது. படத்தில் ஒரு இருபது வயது குறைந்திருக்கும் கமலுக்கு.
அதேபோல், படம் பார்த்துவிட்டு வந்தவர்கள், கமலின் நடிப்பு, படத்தின் மிரட்டல்களையெல்லாம் தாண்டி, கமலின் காஸ்ட்யூமை ரொம்பவே ரசித்தார்கள். ஒரு காட்சியில் அரைக்கை வெள்ளைச்சட்டையுடன் வருவார். மற்றொரு காட்சியில் முழுக்கை சட்டை அணிந்து கைமணிக்கட்டு வரை பட்டன் போட்டிருப்பார். இன்னொரு காட்சியில், முழுக்கைச் சட்டையை பாதி வரை மடித்துவிட்டிருப்பார். அமெரிக்காவில் கோட்டும்சூட்டுமாகக் கலக்குவார். நெல்லைச்சீமையில் அவர் புல்லட் ஓட்டிவரும் அழகு ஒருபக்கம். காக்கி யூனிஃபார்மில் மனைவியைக் கெஞ்சுவதும் கொஞ்சுவதும் இன்னொரு பக்கம். போதாக்குறைக்கு கூலிங்கிளாஸ் அணியும்போது, அந்தக் கண்ணாடி கமலால் இன்னும் அழகு கூடிப்போயிருக்கும்.
சில காட்சிகளே என்றாலும் மகளை இழந்த வேதனையை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருப்பார் பிரகாஷ்ராஜ். ’பார்த்த முதல்நாளே’ என்று கமலுடன் பாடுகிற கமாலினி முகர்ஜி, பார்த்த மாத்திரத்திலேயே நம்மைக் கவர்ந்துவிடுவார். பிரகாஷ்ராஜ் மகளுக்கு நேருகிற கொடூரக் கொலை, அதையடுத்து கமலின் அப்செட், அடுத்த நிமிடத்தில் அதிலிருந்து விடுபட்டு, கண்டறிதலில் செலுத்தப்படுகிற யோசனை, கமல் நிமிடத்துக்கு நிமிடம் தன் முகபாவனைகளால் அதிகாரியாகவும் சராசரி மனிதனாகவும் என கலக்கியெடுத்திருப்பார்.
கமலின் நடை, கெளதமுக்கு ரொம்பப் பிடிக்குமோ என்னவோ. படத்தில் பல காட்சிகளில் கமலின் நடை காட்டப்பட்டிருக்கும். ‘மஞ்சள் வெயில் மாலையிலே’ பாட்டு முழுக்கவே, கமலும் ஜோதிகாவும் நடந்தபடி இருப்பார்கள்.
பொதுவாகவே படத்துக்கு பாடல் வரிகளைப் பயன்படுத்துவது கெளதம் ஸ்டைல். ‘வேட்டையாடு விளையாடு’ கூட எம்ஜிஆர் பாட்டுதான். அதேபோல நாயகன் நாயகி வில்லன் என்று கேரக்டர்களுக்கு பெயர் சூட்டுவதும் ரசனையாக இருக்கும். ராகவன், கயல்விழி, ஆராதனா, இளமாறன், அமுதன் என்றெல்லாம் பெயர் சூட்டியிருப்பார். கெளதம் ஸ்டைல்களில் இதுவும் ஒன்று.
டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் குலைநடுங்க வைக்கும். நடிப்பில் மிரட்டியெடுத்திருப்பார். அதேபோல் அவருக்குத் தோழனாக நடித்தவரும் கலக்கியிருப்பார். அவருக்கு கெளதம் குரல் கொடுத்திருப்பார்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு சென்னை, நெல்லை, வெளிநாடு என மொத்த அழகையும் அப்படியே அள்ளிக்கொண்டு வந்திருக்கும்.
ஹாரீஸ் ஜெயராஜ் - கெளதம் கூட்டணியின் மற்றொரு ஹிட் ரக பாடல்கள் இந்தப் படத்திலும்! ‘கற்க கற்க’ என்ற டைட்டில் பாடல், உன்னி மேனனும் பாம்பே ஜெயஸ்ரீயும் பாடுகிற ‘பார்த்த முதல் நாளே’, ஹரிஹரன் பாடிய ‘மஞ்சள் வெயில் மாலையிலே’ என எல்லாப் பாடல்களையும் தாமரை எழுதினார். எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன.
‘மின்னலே’, ‘காக்க காக்க’, ‘வேட்டையாடு விளையாடு’ என ஹாட்ரிக் அடித்தார் கெளதம். செவன்த் சேனல் நாராயணனின் தயாரிப்பில் மிகப் பிரம்மாண்ட வெற்றிப்படமாக அமைந்தது. ’வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்துக்குப் பிறகு வந்த ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ பெரிதாகப் போகவில்லை. இதையடுத்து வந்த ‘வேட்டையாடு விளையாடு’ வசூல் வேட்டையாடியது.
கெளதம் வாசுதேவ் மேனன் படங்களுக்கு இளைஞர்களிடம் எப்போதுமே தனி ஸ்பெஷல் மரியாதை உண்டு. இப்போது ‘விக்ரம்’ படம் மெகா வசூலை எட்டியிருக்கும் நிலையில், கமல் - கெளதம் கூட்டணியில், ‘வேட்டையாடு விளையாடு - 2’ வெளிவந்தால் நன்றாக இருக்கும் என சமூகவலைதளங்களில் பதிவிடுகிறார்கள்.
2006 ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது ‘வேட்டையாடு விளையாடு’. படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகின்றன. கமலும் கெளதமும் இணைந்து அப்போது ஏற்படுத்திய வசூல் வேட்டையின் சூட்சுமமும் விளையாட்டின் ரசனையும் இன்னும் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியபடியேதான் இருக்கின்றன.