திரை விமர்சனம்: திருச்சிற்றம்பலம்


தாயை இழந்த இளைஞன் தன் வாழ்க்கைத் துணையைத் தேடும் பயணத்தில், தன்கூடவே இருப்பவர்களின் அருமையைப் புரிந்துகொள்வதுதான் ‘திருச்சிற்றம்பலம்’.

ஃபுட் டெலிவரி பாயாக வேலை பார்க்கிறான் ‘பழம்’ என்றழைக்கப்படும் திருசிற்றம்பலம் (தனுஷ்). தனது தாத்தா சீனியர் திருச்சிற்றம்பலம் (பாரதிராஜா), அப்பா காவல்துறை அதிகாரி நீலகண்டன் (பிரகாஷ் ராஜ்) ஆகியோருடன் வசிக்கிறான். ஒரு கார் விபத்தில் அம்மாவையும் தங்கையையும் பறிகொடுக்கும் திருச்சிற்றம்பலம் அதனால் பயந்த சுபாவமும் தந்தை மீது வெறுப்புணர்வும் கொண்டவனாகிறான். அண்டை வீட்டில் வசிக்கும் ஷோபனா (நித்யா மேனன்) பழத்தின் நெருங்கிய தோழியாக அவனின் இன்ப துன்பங்களில் பங்கேற்கிறாள். தன் வாழ்க்கைத் துணையைத் தேடும் பயணத்தில் பழத்துக்கு என்ன ஆகிறது. அவனுடைய அப்பாவுக்கும் அவனுக்குமான பிணக்கு என்ன ஆனது? அவனது வாழ்வில் ஷோபனா என்னவாக இருக்கிறாள்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீதிக் கதை.

நாம் அன்றாடம் சந்திக்கும் எளிய நடுத்தர வர்க்க மனிதர்களின் கதை. நம் வாழ்விலும் நம்மைச் சுற்றியிருப்போரின் வாழ்விலும் நடந்திருக்கக்கூடிய சம்பவங்கள், வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப்போடும் திருப்பங்கள் என ஒரு யதார்த்த ஃபீல் குட் படம் பார்த்த திருப்தியைத் தருகிறது ‘திருச்சிற்றம்பலம்’. ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு கதாபாத்திரங்களை உயிரோட்டத்துடன் வடிவமைத்து அவற்றுக்குத் திறமையான நடிகர்களைத் தேர்வு செய்திருப்பதன் மூலம் தன் மறுவருகையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர்.

படத்தின் நாயகன், அவனது அப்பா, தாத்தா ஆகியோரை மட்டுமே கொண்டிருக்கும் குடும்பத்தின் மூலம் பெண் இல்லாத வீட்டின் களையிழந்த ஒழுங்கற்ற நிலையும் தமிழ் சினிமாவில் முதல் முறையாக பதிவாகியிருக்கிறது. இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கிடையிலான நெருக்கமும் முரண்களும் இதை ஒரு சாதாரண காதல் கதையாகக் காட்டாமல் வாழ்க்கைப் பயணத்தில் குடும்ப உறவுகளின் பல்வேறு பரிமாணங்களையும் பரிணாமங்களையும் போகிற போக்கில் யதார்த்தமாகவும் ஈர்க்கும் வகையிலும் சொல்லிச் செல்லும் உணர்ச்சிகரமான படமாக ஆக்கிவிடுகிறது.

தனுஷ் - நித்யா மேனன் இடையிலான நட்பு அழகாகவும் யதார்த்தமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. செயற்கை இல்லாமல் நிஜத்தில் ஆண்-பெண் நட்பு எப்படி அன்பும் அக்கறையும் கிண்டலும் கேலியும் சின்னச் சின்னச் சண்டைகளும் மனவருத்தங்களும் காயங்களும் நிறைந்ததாக இருக்குமோ அப்படியே இந்தப் படத்தில் பதிவாகியுள்ளது. எப்போதும் கூடவே இருக்கும் எதிர்பாலினத் தோழமை கிடைத்தவர்கள் அது குறித்து பெருமைப்பட்டுக்கொள்ளவும் கிடைக்காதவர்கள் அதை நினைத்து ஏங்கவும் வைத்துவிட்டார்கள். இவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் இடையிலான உறவும் நெருக்கமும் கூட சினிமாத்தனம் இல்லாத அழகால் வசீகரிக்கிறது.

மூன்று கதாநாயகியரில் தனுஷுக்கு வாழ்க்கைத்துணை ஆகப் போவது யார் என்பதை ஊகிப்பதில் பெரிய சிரமம் எதுவும் இல்லை. ஆனால், ஊகித்துவிட்ட அந்த விஷயத்தை திரையில் சொல்வதிலும் அங்காங்கே சில சுவாரசியங்களை வைத்து அலுப்பைத் தவிர்த்திருக்கிறார்கள். குறிப்பாக, கிளைமேக்ஸை ஒட்டிய அந்த வீடியோ கால் காட்சி ஏற்படுத்தும் ஆச்சரிய உணர்வில் திரையரங்கமே ஆர்ப்பரிக்கிறது.

இருப்பினும், இரண்டு மணி நேரம் படத்தை நீட்டிக்கும் அளவுக்கு கதையில் அடர்த்தியோ ஆழமோ இல்லை என்பதை பல இடங்களில் உணர முடிகிறது. இரண்டாம் பாதியில் கிராமத்தில் நடக்கும் காட்சிகள் பல படங்களில் பார்த்துவிட்ட உணர்வைத் தருகின்றன. குழந்தை கடத்தல்கார கதாபாத்திரத்தை வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் சண்டைக் காட்சிக்கு கதையளவில் வலுவான காரணம் இருந்தாலும் திரைக்கதையில் அது இடம்பெற்றிருக்கும் தருணம் தேவையற்ற திணிப்பாக உணர வைத்துவிடுகிறது

படத்தை ஒட்டுமொத்தமாக தோளில் சுமந்து நிற்பது நித்யா மேனன். அழகால் அசத்திக்கொண்டே அண்டை வீட்டுப் பெண் என்கிற உணர்வை அளிக்கும் சவாலை தன் அபார நடிப்புத் திறமையால் லாகவமாக கடந்திருக்கிறார். நடிப்பிலும் அதகளம் செய்திருக்கிறார். தனுஷ், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் என்று மூன்று சிறந்த ஆண் நடிகர்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணாக தனித்துத் தெரிகிறார். தனுஷுக்கு எளிதான கதாபாத்திரம் போல் தோன்றினாலும அதிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். அழுகையை கட்டுப்படுத்திக்கொள்வது, அப்பா மீதான கோபத்தை வெளிப்படுத்துவது, தாத்தாவின் லொள்ளுகளுக்கு கடுப்பாவது, காதலிகளால் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் ஏமாற்றம் தரும் வலியை வெளிப்படுத்தாமல் இருக்க சிரமப்படுவது என படத்துக்கு தன் நடிப்பால் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

மிகைநடிப்பை வெளிப்படுத்தி சொதப்ப அனைத்து சாத்தியங்களையும் கொண்ட கதாபாத்திரத்தில் அதுபோன்ற எந்தத் தவறையும் செய்யாமல் அளவான நடிப்பால் மனதில் இடம்பிடிக்கிறார் பாரதிராஜா. தாத்தா கதாபாத்திரம் என்றாலும் முதுமையின் சாயலே இல்லாமல் இளைஞரின் உற்சாகமும் முதியவரின் பக்குவமும் வெளிப்படும் கதாபாத்திரத்தை இதைவிடச் சிறப்பாக வேறு யாரும் செய்துவிட முடியாது. குற்ற உணர்வை மனதில் புதைத்துக்கொண்டு மருகும் காட்சிகளில் பிரகாஷ் ராஜ் எப்பேற்பட்ட நடிகர் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. மகனிடம் மன்னிப்புக் கேட்கும் காட்சியில் கேமராவில் அவருடைய முகம் தெரியவில்லை. ஆனாலும் குரல் நடிப்பிலேயே அந்தக் காட்சிக்குத் தேவையான நெகிழ்ச்சியைக் கொடுத்துவிடுகிறார்.

தனுஷால் காதலிக்கப்படும் நகரத்து நவீனப் பெண்ணாக ராஷி கண்ணா, கிராமத்து பைங்கிளியாக ப்ரியா பவானி ஷங்கர் - இருவரும் சில காட்சிகளிலும் தலா ஒரு பாடலிலும் வந்துபோகிறார்கள். ராஷி கண்ணாவின் கதாபாத்திர உருவாக்கம் சற்று கவனம் ஈர்க்கிறது. பொதுவாக தமிழ் சினிமாவில் நவீன ஆடைகளை அணியும் உயர்தட்டு பெண்கள் சுயநலவாதிகளாகவும் பணத்தாசை பிடித்தவர்களாகவும் பிறர் உணர்வுகளை மதிக்கத் தெரியாதவர்களாகவும் சித்தரிக்கப்படுவார்கள். அதுவும் நாயகனின் காதலை ஒரு படித்த பணக்காரப் பெண் நிராகரித்துவிட்டால் அவர் கொடூர வில்லியாகவே ஆக்கபட்டுவிடுவார். இந்தப் படம் அந்த மோசமான ட்ரெண்டை மாற்றியிருக்கிறது. ஒரு பெண் ஒரு ஆணுடன் நட்புடன் நெருங்கிப் பழகுவது மட்டுமே காதலாகிவிடாது என்பதை நாயகனுக்கும் அதன் வழியாக அவனைப் போன்ற பல இளைஞர்களுக்கும் உணர்த்தவும் இந்தக் கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

அனிருத்தின் இசையில் ‘மேகம் கருக்காதா’ பாடல் தனுஷின் வரிகள், வசீகரமான செட்டிங், அழகான நடனம் என அனைத்தும் சிறப்பாக அமைந்து மனதைக் கொள்ளைகொள்கிறது. ‘தாய்க்கிழவி’ பாடல் தாலம் போடவைக்கிறது. பின்னணி இசையில் கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார் அனிருத்.

காதல், நட்பு, குடும்ப உறவுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அழகான படமாக உதட்டில் புன்னகையுடனும் மனதில் நிறைவுடனும் திரையரங்கைவிட்டு வெளியேறவைக்கிறான் இந்த ‘திருச்சிற்றம்பலம்’.

x