சுஹாசினி: கலைக் குடும்பத்திலிருந்து வந்த சுயம்பு!


’மனதில் உறுதி வேண்டும்’ சுஹாசினி

பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படங்கள், அறுபதுகளிலும் எழுபதுகளிலும்கூட வந்திருக்கின்றன. மற்ற படங்களில் நடித்த நடிகைகள், இதுபோன்ற படங்களில் நடித்து பேரும்புகழும் கூடுதலாக அடைந்திருக்கிறார்கள். எண்பதுகளில், அந்த நாயகி வந்தபோது, இரண்டு விஷயங்கள் நடந்தன. முதலாவது... சொந்தக் காலில் நிற்கக்கூடிய, சுயபச்சாதாபமில்லாத கனமான, அறிவார்த்தமான கதாபாத்திரங்களென்றால் அந்த நடிகையைத்தான் தேர்வு செய்தார்கள். இரண்டாவது... அந்த நடிகை நடிக்கிறாரென்றால், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை இன்னும் பலமாக்கினார்கள். இந்த இரண்டுக்கும் சொந்தக்காரர் நடிகை சுஹாசினி.

வக்கீல் குடும்பம் என்று பரமக்குடி தொடங்கி சென்னை வரை அறியப்பட்ட கமல்ஹாசனின் குடும்பத்திலிருந்து கமல்ஹாசனுக்குப் பிறகு அவரின் அண்ணன் சாருஹாசன் நடிகரானார். அதேபோல், ‘ராஜபார்வை’ உள்ளிட்ட சில படங்களில் கமலின் இன்னொரு சகோதரர் சந்திரஹாசனும் நடித்தார். இந்த இரண்டு அண்ணன்களின் மகள்களும் பின்னாளில் நடிக்க வந்தார்கள். சந்திரஹாசனின் மகள் அனுஹாசன் ஒருவர். மற்றொருவர் சாருஹாசனின் மகளான சுஹாசினி.

’ஜானி’ பட டைட்டில்

திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் இயக்குநர் கனவில் இருந்து, அதன் நடுவே நடன உதவி இயக்குநராகவும் பணியாற்றியவர் கமல். அதேபோல், இன்றைக்கு மிகச்சிறந்த நடிகை என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிற சுஹாசினி, திரையுலகில் உதவி ஒளிப்பதிவாளராகத்தான் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். ஒளிப்பதிவாளர் அசோக்குமாரிடம் உதவியாளராக, ‘ஜானி’ முதலான பல படங்களில் பணியாற்றினார்.

‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துக்குப் பிரபல ஓவியர் ஜெயராஜின் மகளைத் தேர்வுசெய்து அனுமதி கேட்டார் இயக்குநர் மகேந்திரன். ஆனால் அது நடக்கவில்லை. கமலின் குடும்பத்துக்கும் சாருஹாசனின் குடும்பத்துக்கும் நல்ல நெருக்கமும் பழக்கமுமாக இருந்த மகேந்திரன், பிறகு சுஹாசினியைத் தேர்வுசெய்தார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அப்படியொரு ஜீவனைக் கொடுத்து முதல் படம் என்றெல்லாம் நம்மை நினைக்கவிடாதபடி நடித்தார் சுஹாசினி.

இளையராஜாவின் இசையில் உருவான ‘பருவமே...’ பாடலில் மோகனும் சுஹாசினியும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அந்தப் படமும் அப்படியொரு ஓட்டம் ஓடியது. 1981-ம் ஆண்டு அறிமுகமான சுஹாசினி, இன்று வரை எவர் சாயலுமில்லாத தனித்துவம் மிக்க நடிகை என்று கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இரட்டை இயக்குநர்கள் வரிசையில், மறக்க முடியாதவர்கள் ராபர்ட் - ராஜசேகரன். இவர்களின் முதல் படைப்பாக வெளியான ‘பாலைவனச் சோலை’ படம் புதியதொரு சகாப்தத்தை எழுதியது. நான்கைந்து நண்பர்கள் எனும் கான்செப்ட், பாலசந்தரின் ‘புன்னகை’ காலத்திலேயே உள்ளது என்றாலும், ஐந்து நண்பர்களும் ஒரு நாயகியும் எனும் கதைக்களம் கொண்ட ‘பாலைவனச் சோலை’ ஆண் - பெண் நட்பையும் அதன் உன்னதத்தையும் பதிவுசெய்தது.

சங்கர் - கணேஷ் இசையில் வெளியான ‘பாலைவனச்சோலை’ அடைந்த வெற்றி, அப்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காட்டன் புடவையும் மென் சோகமும் மென் புன்னகையும் கலந்த முகமுமாக வலம் வந்த சுஹாசினியை, தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பார்த்தார்கள் ரசிகர்கள். எண்பதுகளில், காட்டன் புடவைக்கு மவுசு சுஹாசினியால்தான் என்று இன்றைக்கு ஐம்பது ப்ளஸ்ஸில் இருக்கிறவர்கள் ஃப்ளாஷ்பேக் சொல்வார்கள். 'மேகமே மேகமே...’ பாடலைக் கேட்டு வாணி ஜெயராம் குரலுக்காகவும் சுஹாசினியின் பண்பட்ட நடிப்புக்காகவும் கைக்குட்டை நனைய அழுத ரசிகர்களெல்லாம் உண்டு!

இந்தச் சமயத்தில், பாரதிராஜாவின் ‘புதிய வார்ப்புகள்’, தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோது, அதில் நாயகியாக அறிமுகமானார் சுஹாசினி. அதேபோல், கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டபோது அங்கே அறிமுகமானார் சுஹாசினி.

இந்த இரண்டு படங்களிலும் நடிப்பில் எப்போதும் போலவே தன் தனிமுத்திரையைப் பதிக்க அவர் தவறவில்லை.

பாரதிராஜாவின் சிஷ்யர்களான மனோபாலாவும் மணிவண்ணனும் தங்களின் முதல் படத்து நாயகியாக சுஹாசினியைத்தான் தேர்வு செய்தார்கள். ‘ஆகாய கங்கை’யில் கார்த்திக்குடன் நடித்தார். ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தில் மோகனுடன் நடித்தார்.

அருக்காணி (கோபுரங்கள் சாய்வதில்லை)

சுஹாசினி என்றால் மிகுந்த படிப்பாளி, தேர்ந்த புத்திசாலி, பெண்ணடிமைத்தனங்களை எதிர்ப்பவர் என்பன போன்ற குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் வந்தவேளையில், ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தின் ‘அருக்காணி’ கதாபாத்திரம், அந்தக் கதாபாத்திரத்தின் ஜடையைப் போலவே, ஒட்டுமொத்த படத்தையும் தூக்கி உயர்த்தியது. ‘எதை வேண்டுமானாலும் ஒருத்தி விட்டுக்கொடுப்பாள்; ஆனால் தன் கணவனை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டாள்’ எனும் கருத்துக்கு மாற்றாக, தன் கணவனையே விட்டுக்கொடுக்கும் கிராமத்து வெள்ளந்தி அருக்காணி, ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தினாள்.

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் ‘லாட்டரி டிக்கெட்’, தேவர் பிலிம்ஸின் ‘தாய்வீடு’ படத்தில் ரஜினியின் தங்கை என்றெல்லாம் நடித்தாலும் சுஹாசினியின் திறமைக்கு இன்னும் கனமான கதாபாத்திரங்கள் தேவை என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.

சிந்து பைரவி

இந்தச் சமயத்தில்தான் கே.பாலசந்தரும் இளையராஜாவும் முதன்முறையாக இணைந்தார்கள். ‘சிந்து பைரவி’ உருவானது. ‘சிந்து’வாக சுஹாசினி நடித்த ஒவ்வொரு காட்சியும் காவியமானது. ஒரு நாவலில் வருகிற பெண் கதாபாத்திரம் எந்த அளவுக்கு நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்துமோ, அப்படியொரு தாக்கத்தை நமக்குள் கடத்தினார் சுஹாசினி.

’சிந்து பைரவி’ படத்தில் சுஹாசினியின் கதாபாத்திரம், வாழ்நாளுக்கான அடையாளம். ‘இந்தப் படத்தில் இவரைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது’ என்று சுஹாசினியின் முக்கால்வாசி படங்களில், அவரின் நடிப்பை வைத்து தாராளமாகச் சொல்லலாம். அதுதான் சுஹாசினி ஒரு நடிகையாக அடைந்த மாபெரும் வெற்றி. உதட்டில் சிரிப்பையும் கண்களில் கண்ணீரையும் ஒருசேர வரவழைத்துக்கொண்டு, சுஹாசினி பேசுவது அவருக்கே உரித்தான தனி ஸ்டைல்!

‘அவள் ஒரு தொடர்கதை’யை எழுபதுகளில் எடுத்த கே.பாலசந்தருக்கு அதை இன்னொரு வெர்ஷனாக எடுத்தால் என்ன தோன்றியதோ என்னவோ... எண்பதுகளில், அப்படியொரு சிந்தனையுடன் படம் எடுத்தார். ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘மனதில் உறுதி வேண்டும்’ என்றானது. ‘கவிதா’, ‘நந்தினி’யானாள். ஒரு நர்ஸாக, ஒரு குடும்பத்தைத் தாங்கும் தேவதையாக, மணமுறிவுத் தோல்வியிலிருந்து மறுபிறப்பெடுக்க விழைபவளாக, புதிதாக வந்த காதலை ஏற்க மனமில்லாதவளாக, விஸ்வரூப அவதாரம் எடுத்தார் சுஹாசினி.

மனோபாலாவின் ‘என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்’ என்ற படமாகட்டும், பாசிலின் ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படமாகட்டும்... இரண்டிலும் சுஹாசினி ராஜபாட்டையே நடத்திக் காட்டினார்.

பாலகுமாரன், சுஜாதாவின் வாசகர்கள் பலரும், அந்த நாவல்களில் உள்ள பெண் கதாபாத்திரங்களை, சுஹாசினியின் முகத்துடன், மேனரிஸத்துடன் ஒப்பிட்டுக்கொண்டார்கள். ஒரு நாவலின் கதாபாத்திரம் அந்த நாவலுக்குத் தொடர்பே இல்லாத ஒரு நடிகையால் உருவம் பெறுகிறது என்றால் அது சுஹாசினி வெளிப்படுத்திய நடிப்பு நுட்பத்தின் நல்விளைவுதான்!

வருகின்ற படங்களையெல்லாம் ஒப்புக்கொள்ளாமல், நல்ல கதைகொண்ட படங்களை மட்டுமே ஏற்றுக்கொண்டார். பிறகு, இயக்குநர் மணிரத்னத்தைத் திருமணம் செய்துகொண்டார். ஆனாலும் சும்மா இருந்துவிடவில்லை. மணிரத்ன நாயகிகள் பலருக்கும் சுஹாசினிதான் பின்னணிக் குரல் கொடுத்தார். கணவரின் படங்களின் திரைக்கதையில் பங்கேற்றார். தயாரிப்புப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன் தங்கை அனுஹாசனை அறிமுகப்படுத்தி, ‘இந்திரா’ என்ற படத்தை இயக்கி, இயக்குநராகவும் புதுப்பரிமாணம் எடுத்தார்.

தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். பல உன்னத விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார். ஓடிடி-யில் வெளியான ‘நவரசா’விலும் தன் பங்களிப்பைச் செய்தார். இன்னமும் தன் கலைப்பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகையர் பலர் உண்டு. அதில் தனித்துவ நாயகி எனும் முத்திரையுடன் இன்றைக்கும் மறக்க முடியாத இடத்தில் இருக்கிறார் சுஹாசினி. அவரை மனம் திறந்து வாழ்த்துவோம்!

ஆகஸ்ட் 15: நடிகை சுஹாசினி பிறந்தநாள்

x