மறைந்த இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘மாப்பிள்ளை’, ‘தர்மதுரை’ என ஆறு வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. இவற்றில் சிவாஜியும் ரஜினியும் சகோதரர்களாக இணைந்து நடித்த ‘படிக்காதவன் 210 நாட்கள் ஓடிய படம். ‘குத்தார்’ என்கிற இந்திப் படத்தைத் தழுவி உருவான படம் இது. இதில் சிவாஜி ஏற்று நடித்த அண்ணன் கதாபாத்திரத்துக்கு தன்னுடைய இயற்பெயரையே சூட்டியிருந்தார் இயக்குநர்.
அண்ணன் ராஜசேகர் (சிவாஜி), தம்பிகள் ராஜா (ரஜினி), ராமு (விஜய் பாபு) ஆகிய மூவரும் பாசம் மிகுந்த சகோதரர்கள். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த தன் தம்பிகளை அந்தக் குறை தெரியாமல் பார்த்துக் கொள்கிறார் அண்ணன். தன் மனைவியான ராதாவிடம் (வடிவுக்கரசி) “தம்பிகளை நம் குழந்தைகள் போல் வளர்க்க வேண்டும்” என்று கூறுகிறார். இதை விரும்பாத ராதா, கணவன் வெளியூர் சென்றிருக்கும்போது அவருடைய தம்பிகளை வீட்டைவிட்டு விரட்டி அடிக்கிறார். சென்னைக்கு ஓடும் ராஜாவும், ராமுவும் அங்கே ரஹிம் (நாகேஷ்) என்கிற நல்ல மனிதரின் ஆதரவில் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறார்கள்.
ராஜா சொந்த டாக்ஸி ஓட்டி அதில் வரும் வருவாயில் தம்பியைப் படிக்க வைக்கிறார். தம்பியோ செல்வந்தரான பூர்ணம் விஸ்வநாதனின் மகளான ரம்யா கிருஷ்ணனைக் காதலிக்கிறார். அதற்காக, “எனது அண்ணன் பெரிய பணக்காரர்” என்று சொல்லி ரம்யாவை ஏமாற்றுகிறார். இந்நிலையில், பூர்ணம் விஸ்வநாதனின் சொத்துகளை அபகரிக்க அவருடைய தம்பி (ஜெய்சங்கர்) திட்டமிட, அதற்காக அவர் விரிக்கும் வலையில், விழுந்து விடுகிறான் ராமு. இதையறிந்து கண்டிக்கும் அண்ணன் ராஜாவைப் பார்த்து ‘நீ படிக்காதவன்’ என அவமதிக்கிறார்.
இதற்கிடையில், அண்ணன் ராஜசேகரை 20 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிபதியாகச் சந்திக்கிறார் ராஜா. எதிர்பாராதவிதமாக ராஜா மீது கொலைப்பழி விழுகிறது. ஜெயிலில் இருக்கும் தம்பி ராஜாவை சந்திக்கும் ராஜசேகர், உண்மைக் குற்றவாளியை கண்டுபிடித்து ராஜாவை விடுவிக்க உறுதியேற்கிறார். அதற்காகவே நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கறிஞராக மாறி வாதாடுகிறார். குற்றவாளி ஜெய்சங்கர் என நிரூபிக்கிறார். இப்போது, பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருகிறார்கள்.
படத்தில் தனது டாக்ஸிக்கு லட்சுமி என்று பெயர் வைத்து அதனுடன் ரஜினி பேசுவதே தனி அழகு. சிவாஜிக்கும் ரஜினிக்கும் நாகேஷுக்கும் ரஜினிக்கும் வடிவுக்கரசிக்கும் ரஜினிக்கும் அம்பிகாவுக்கும் ரஜினிக்கும் ஜனகராஜுக்கும் ரஜினிக்கும் இடையிலான காட்சிகள் ரசிகர்களை கலங்கவும் மனம் விட்டுச் சிரிக்கவும் வைத்தன. ‘ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன்’ பாடல் காட்சியில் யேசுதாஸின் குரலுக்கும் ராஜாவின் இசைக்கும் தன்னுடைய உருக்கமான நடிப்பால் உயிர் கொடுத்தார் ரஜினி. சோகப்பாடல் என்றபோதும் ரஜினியின் நடிப்புக்கு கைதட்டல் விழாத தியேட்டர்களே இல்லை. 1985-ல் தீபாவளி நாளில் வெளியாகி 210 நாட்கள் ஓடியது ‘படிக்காதவன்’.
கங்குவா உருவான கதை
இந்தப் படத்தின் இயக்குநர் ராஜசேகர், ரஜினியுடன் ஐந்து படங்களில் இணைந்து பயணித்த தனது அனுபவத்தை உயிரோடு இருந்தபோது பத்திரிகைப் பேட்டி ஒன்றில் இப்படிச் சொல்லி இருந்தார்:
“ரஜினியுடனான எனது முதல் சந்திப்பை மறக்கவே முடியாது. ராகவன் தம்பியின் கதை மற்றும் தயாரிப்பில் நான் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய படம் 'மலையூர் மம்பட்டியான்'. அந்தப் படத்தையும் பார்த்துவிட்டு, ‘யார் இந்த ராஜசேகர்?’ என என்னைப்பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு அவரைச் சந்திக்க வரும்படி நேரம் கொடுத்திருந்தார் ரஜினி. வாகினி ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த நான், மதிய உணவு இடைவேளையில் ஏவி.எம் ஸ்டுடியோவுக்கு போய் அவரைச் சந்தித்தேன். என்னை ‘ராஜசேகர் சார்’ என்று மரியாதையாக அழைத்தார் ரஜினி. நான் வியந்துபோனேன்.
சில படங்களே இயக்கிய என்னைப் பார்த்து, ‘இந்திப் படம் பண்ண துணிச்சல் வேணும். அதுக்கே உங்களைப் பாராட்ட நினைச்சிருந்தேன். இப்போ, ‘மலையூர் மப்பட்டியான்’ படத்தை நேற்று பார்த்தேன். என்ன சார் படம் அது. திரும்பத் திரும்ப மம்பட்டியான் கேரக்டர் மனசுல ஓடிக்கிட்டே இருக்கு. அவ்வளவு கிளாஸ் அண்ட் மாஸா அந்தக் கேரக்டரைசேஷனை ஸ்கிரீன் பிரசன்ஸ்ல கொண்டு வந்திருக்கீங்க. அந்தப் படத்தை நாம ஏன் இந்தியில பண்ணக் கூடாது?’ என்று கேட்டார். அப்படித்தான் ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தை இந்தியில் 'கங்குவா' என்ற படமாக உருவாக்கி வெற்றி கொடுத்தோம். யார், என்ன என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்காமல் தகுதி அறிந்து பாராட்டுவதில் ரஜினி ஒரு மேதை.
காயம்பட்டாலும் காட்டிக்கொள்ள மாட்டார்
'கங்குவா' படத்துக்கு முன் 'தம்பிக்கு எந்த ஊரு?' படத்தில் முதல் முறையாக இணைந்து பணியாற்றினோம். நான் எழுதி, ரஜினி பேசிய முதல் வசனம், ‘நான் இந்த சவாலை ஏத்துக்கிட்டேன். இதுலே நிச்சயமா ஜெயிச்சுக் காட்டுவேன்'. என்னையும் அறியாமல் நான் எழுதிய தீர்க்க தரிசனம் இது. ரஜினி யாருடைய மனமும் வேதனைப்பட்டுவிடக்கூடாது என்பதில் எவ்வளவு கவனமாக இருப்பார் என்பதற்கு இரண்டு நிகழ்ச்சிகளைக் கூறுகிறேன்.
சாலிகிராமம், அருணாசலம் ஸ்டுடியோவின் ஆலமரத்தடியில் 'படிக்காதவன்' படத்தின் படப்பிடிப்பு நடந்தது. உணர்வும் ஆக்ஷனும் இணைந்த காட்சியை இரவு ஒன்பது மணியைத் தாண்டி எடுத்துக் கொண்டிருந்தோம். படத்தின் தயாரிப்பாளர் வீராசாமியும் படப்பிடிப்பில் இருந்தார்.
கதைப்படி, தன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருக்கும் ரஜினி தனது ‘லட்சுமி’ டாக்ஸியை ஒரு கட்டையால் அடித்து நொறுக்குவது போல் காட்சி. ’ரெடி ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன்’ என்று சொன்னதும் டாக்ஸியின் கண்ணாடிகளை அவர் உடைப்பார். அந்த சமயத்தில் ரஜினியின் முகத்தில் திடீர் மாற்றம். அவருக்கு ஏதோ பிரச்சினை என சட்டென்று ஊகித்துவிட்டேன். அதனால் ஷாட்டின் குறுக்கே ஓடிப்போய் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டேன். அவரது கை மூட்டு விலகியிருந்தது. சட்டென்று வீங்கியும்விட்டது. அங்கேயே அவருக்குச் முதலுதவி செய்தோம்.
நான், ‘சார் மருத்துவமனைக்குச் செல்வோம். இது எலும்பு சம்பந்தப்பட்டது’ என்று சொன்னேன். அப்போது, ‘உணர்ச்சிவசப்பட்டு. ‘பேக் அப்’ சொல்லிவிடாதீர்கள். இந்த வலியை மேனேஜ் செய்துகொள்கிறேன்’ என்று சொல்லி அந்தக் காட்சியை முழுமையாக நடித்துக்கொடுத்தவர், என் காதருகில் வந்து சொன்னார். ‘இது எதுவும் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ தெரிய வேண்டாம். என் கண்ணைப் பாருங்கள். கண்ணாடித் துகள் ஒன்று தெறித்து கண்ணுக்குள் போய் விட்டதோ என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. கடுமையான உறுத்தலும் வலியும்.’
நான் ரஜினி சாரை உடனடியாக அருகில் இருந்த விஜயா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். கண்களைப் பரிசோதித்த மருத்துவர், சிறு கண்ணாடித் துகளை நீக்கிவிட்டு, ‘இனி பயப்பட வேண்டாம்’ என்று சொல்லி காயம் ஆறிட சொட்டு மருந்து கொடுத்து அனுப்பினார். தனக்கு ஏற்பட்ட வலியைப் பிரச்சினையை படக்குழுவினருக்கு முன்னால் சொன்னால் தன் மீது அன்புகொண்டுள்ள அவர்களுடைய மனம் வேதனைப்படும் என்பதால் அவர் தனக்குப் படப்பிடிப்பில் படும் எந்தக் காயத்தையும் பகிரங்கப்படுத்தாதவர் என்பதை அப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
ரசிகர்களின் உணர்வை மதிக்கிறேன்; ஆனால்..?
இதேபோல் இன்னொரு சம்பவம். ரஜினியின் 'ஸ்ரீ ராகவேந்திரா' படத்துக்கு தென் சென்னை ரஜினி ரசிகர்கள் இணைந்து, தியாகராய நகர் பனகல் பூங்காவில் ஒரு பிரம்மாணட விழாவை நடத்தினார்கள். அதில் கலந்து கொள்வதற்காக, ஏவி.எம் ஸ்டுடியோவில் 'படிக்காதவன்' படப்பிடிப்பிலிருந்த ரஜினியும் நானும் மாலை 7 மணிக்கு படப்பிடிப்பை ஒரு மணி நேரம் ஒத்தி வைத்துவிட்டுப் புறப்பட்டோம். வடக்கு உஸ்மான் சாலை வழியாகச் சென்றபோது, ரஜினி வருவது சென்னை முழுவதும் தெரிந்துபோய், பாண்டி பஜார், பனகல் பார்க், ஜி.என்.செட்டி சாலைப் பகுதிகளில் கடுமையான டிராஃபிக் ஜாம். எந்த வண்டியும் நகர முடியவில்லை. அதற்குள் அந்த விழாவுக்குச் செல்லவேண்டிய நாங்களும் மாட்டிக் கொண்டோம். ஒவ்வொரு மீட்டராக நகர்ந்த டிராஃபிக்கில் காரில் அமர்ந்திருந்தபோது ரஜினி வேதனையுடன் என்னிடம் சொன்னார்:
‘எனது படத்துக்கு விழா எடுக்கிறார்கள் என்பது எனக்குப் பெருமைதான். ரசிகர்களின் உணர்வை மதிக்கிறேன். ஆனால், பொதுமக்களுக்கு இவ்வளவு சிரமம் ஏற்பட்டுவிட்டதே! இங்கே தேங்கிப் போய் நிற்கும் கார்கள், பைக்குகள், சைக்கிள்களில் வந்துகொண்டிருப்பவர்களுக்கு யாருக்கு என்ன அவசரமோ? பிரசவத்துக்காக செல்ல வேண்டியவர்கள் கூட இருக்கலாம் என நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இனி, இதுபோன்ற விழாக்களை உள்ளரங்குகளில் நடத்தும்படி சொல்லப் போகிறேன். நாம் என்ன அரசியல் காட்சியா கூட்டத்தைக் காட்டி நம்மை நிரூபிப்பதற்கு?’ என்று சொன்னார் ரஜினி.
இதைக் கேட்டதும், ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக்கொண்டு திரும்பிப் பார்க்காமல் ஓடும் இந்த எந்திர உலகத்தில் இப்படியும் ஒரு மனிதனா என்று ரஜினியைப் பற்றி நினைத்துப் பெருமை கொண்டேன். அதேபோல், கல்லும் முள்ளும் தனக்குப் பஞ்சு மெத்தை என்று நினைப்பவர் ரஜினி. அதற்கு உதாரணம், கொடைக்கானலில் 'தம்பிக்கு எந்த ஊரு?' படப்பிடிப்பில் நடந்த சம்பவம்” என்று சொல்லி இருக்கிறார் ராஜசேகர். அந்த சம்பவம் குறித்து அடுத்த வாரம் அவர் சொல்லக் கேட்போம்.
(சரிதம் பேசும்)
படங்கள் உதவி: ஞானம்