ஒரு படத்தை எடுப்பதற்குக் கதாசிரியர் வேண்டும். வசனகர்த்தா வேண்டும். பாடல்களை எழுத கவிஞர் தேவை. கதையைத் திரைமொழிக்கு மாற்ற திரைக்கதையின் நுணுக்கங்கள் தெரிந்தவர் அவசியம். படத்தை இயக்குவதற்கு இயக்குநர் மிக மிக அவசியம். எல்லாவற்றையும் படமெடுப்பதற்கு தயாரிப்பாளர் முன்வர வேண்டும். எல்லாம் சரி! கதாசிரியராக, திரைக்கதையாசிரியராக, பாடலாசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல முகங்களுடன், பல கலைகளையும் கற்றறிந்தவராக ஒருவர் இருக்க முடியுமா? பலர் உண்டு. அவர்களில் மிக மிக முக்கியமானவர்... பஞ்சு அருணாசலம்.
செட்டிநாட்டுக்காரர். கவியரசு கண்ணதாசனின் அண்ணன் மகன். பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஏ.எல்.எஸ் புரொடக்ஷன்ஸ் கண்ணப்பனின் அண்ணன் மகன். இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு சினிமாவுக்குள் நுழையலாம். ஜெயித்துவிட முடியுமா என்ன? சிறுவயதில் இருந்தே படிக்கவும் எழுதவும் ஆர்வம். வீட்டில் இருந்த ரேடியோ பெட்டியில் இருந்து வந்த பாடல்கள் அவரை இன்னும் உந்தித்தள்ளின. இருபது ரூபாயுடன் புறப்பட்டு சென்னைக்கு வந்தார்.
சித்தப்பா ஏ.எல்.எஸ். கண்ணப்பன் வீட்டுக்கு வந்து இறங்கினார். மனமே இல்லாமல், ஸ்டூடியோ பணிக்கு அவரைச் சேர்த்துக் கொண்டார் சித்தப்பா. அடுத்தகட்டமாக இன்னொரு சித்தப்பாவான கண்ணதாசன் பக்கம் போனார். உதவியாளரானார். கண்கள் மூடி வாய் திறந்து கண்ணதாசன் பாடல் வரிகளைச் சந்தத்துக்குக் கட்டுப்பட்டது போல் சொல்லச் சொல்ல, அதை அட்சரம் பிசகாமல் எழுதினார் பஞ்சு அருணாசலம். பாட்டு உருவாகும் மாயாஜாலத்தையும் சினிமா பணிகள் நடக்கின்ற வித்தையையும் கற்றறிந்தார்.
ஒருகட்டத்தில் சொந்தமாகவே பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்தது. எல்லோரும் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, ‘கண்ணதாசன் எழுதினது மாதிரி இருக்கே, அவர்தான் எழுதிக்கொடுத்தாரா?’ என்றனர். எம்ஜிஆர் உட்பட பலரும் சந்தேகத்துடனேயே அப்படி கேட்டனர். அந்தப் பாடல்... ‘கலங்கரை விளக்கம்’ படத்தின் ‘பொன்னெழில் பூத்தது புதுவானில்’!
இப்படித்தான் பஞ்சு அருணாசலத்தின் தனி ஆவர்த்தனம் தொடங்கியது. ‘மணமகளே மணமகளே வா வா’ என்று எழுதினார். இந்தப் பாடல் ஒலிக்காத கல்யாணச் சத்திரங்களோ கல்யாண வீடுகளோ இல்லை. பாடல்கள் ஒருபக்கம் எழுதிக்கொண்டே இருக்க, கதை, திரைக்கதையின் பக்கம் சென்றார். ஆரம்பத்தில் எல்லாமே தோல்விதான். படம் திரைக்கு வந்து, ரசிகர்கள் தோல்வியடையச் செய்யவில்லை. படமே முற்றுப்பெறாமல் பாதியில் நின்றது.
சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக, இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தொடர்ந்து இயங்கிவந்தார். எழுபதுகளில், எந்தப் படமாக இருந்தாலும் ஏதேனும் ஒருவிதத்தில் இவர் டைட்டிலில் இடம்பிடித்திருப்பார்.
கதை என்று இவர் பெயர் வரும். திரைக்கதை என்று இவர் பெயர் வரும். வசனம் என்று இவர் பெயர் டைட்டிலில் இடம்பெறும். தயாரிப்பு என்று இவர் பெயர் இடம்பெறும். இப்படி பல முகங்களுடன் அறுபதுகளில் கண்ணதாசனுக்குப் பின்னிருந்து பணியாற்றி, எழுபதுகளில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துக்கொண்டார்.
’பஞ்சு அருணாசலம் இப்படிப்பட்ட கதைகளைத்தான் படமாக எடுப்பார்’ என்றெல்லாம் வட்டசதுரங்களெல்லாம் போட்டு அவரை அடைத்துவிடமுடியாது. ‘மயங்குகிறாள் ஒரு மாது’ மாதிரி படமெடுப்பார். ‘புவனா ஒரு கேள்விக்குறி’ மாதிரி படமெடுப்பார். ‘சகலகலாவல்லவன்’ என்று கமல்ஹாசனை சி சென்டர் ரசிகர்களுக்குள் அழைத்துச் சென்றார். சிங்கப்பூரைக் கதைக்களமாக்கி ‘ப்ரியா’ எடுத்து, ரஜினியின் திரையுலக வாழ்வில் முதல் வெள்ளிவிழாப் படத்தைக் கொடுத்தார்.
‘கல்யாண ராமன்’ மாதிரி எடுத்துக்கொண்டிருக்கும்போதே, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ மாதிரி சோகப்படமும் கொடுப்பார். பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் ஏராளமான படங்களைத் தயாரித்தார். இருந்தாலும், ஏவி.எம் நிறுவனம் படமெடுத்தால் இவரின் பங்களிப்பு ஏதேனும் ஒரு வகையில் இருக்கும். ஆரம்பகாலத்தில் ஜெய்சங்கரின் படங்களுக்குக் கதை வசனமெல்லாம் எழுதினார். பின்னர் ஏவி.எம் நிறுவனத்துக்கும் பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ முதலான படங்களுக்கும் எழுதினார். அதேபோலத்தான்... பாடல்களும். இவர் எழுதிய எத்தனையோ பாடல்களை தலையசைத்து கண் கிறங்கி, ரசித்துக் கேட்டுவிட்டு, ‘கண்ணதாசன், வாலி, வைரமுத்து...’ என்றெல்லாம் பெயர்களைச் சொல்லி அவர்கள் எழுதிய பாடல்களாகவே நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
‘கவரிமான்’, ‘வாழ்க்கை’ என்று ஒருபக்கம்... ‘உல்லாசப் பறவைகள்’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘தம்பிக்கு எந்த ஊரு’ என்று இன்னொரு பக்கம்... ‘மணமகளே வா’ மாதிரியான படங்கள் மற்றொரு பக்கம் என சகல ஏரியாக்களிலும் புகுந்துபுறப்பட்டார்.
வித்தியாசமான ரசனைக்காரர். கண்ணதாசனின் உதவியாளராக எம்எஸ்வி-யின் எத்தனையோ மெட்டுகளுக்குக் கவிஞர் சொல்லச் சொல்ல இவர் எழுதினாலும், சொந்தமாகப் படம் பண்ணும்போது, புதிய இசையமைப்பாளரின் பக்கம் போனால் என்ன என்ற தவிப்பும் தாகமும் இருந்தது. அதனால்தான் விஜயபாஸ்கர் எனும் இசையமைப்பாளரும் அவரால் ஏராளமான பாடல்களும் நமக்குக் கிடைத்தன.
அப்படித்தான்... 1976-ல் இவரும் இவரின் சகோதரரும் தயாரித்த ‘அன்னக்கிளி’ படத்தின் கதையை ஆர்.செல்வராஜிடம் வாங்கி, தேவராஜ் - மோகன் எனும் இரட்டையரை இயக்குநர்களாக்கி, இளையராஜா என்று புதிய நாமகரணத்தைச் சூட்டி இசைஞானியை நமக்கு வழங்கினார்.
தானே கதாசிரியர் என்றெல்லாம் நினைக்காமல், மகரிஷியின் நாவலையும் சுஜாதாவின் நாவலையும் படமாக்கினார். அவை ‘புவனா ஒரு கேள்விக்குறி’யாக, ‘காயத்ரி’யாக, ‘ப்ரியா’வாக வந்து ஹிட்டடித்தன.
திரையுலகத்தில் மிகவும் மதிக்கப்பட்ட அனுபவசாலி; ஜாம்பவான். கதையை உருவாக்கி, நடிகர்களைத் தேர்வு செய்து, லொகேஷன் முடிவுசெய்து, இருபது முப்பது நாட்கள் படப்பிடிப்பும் நடந்திருக்கும். ஒருகட்டத்தில், ‘தப்பான ரூட்ல கதை போவுதே’ என்று பதைபதைத்துப் போவார்கள். அவர்கள் உடனே அழைப்பது... பஞ்சு அருணாசலத்தைத்தான்! எடுத்ததையெல்லாம் போட்டுக் காட்டுவார்கள். இனி எடுக்க நினைத்து தயார் செய்துவைத்திருப்பதையெல்லாம் சொல்வார்கள். அனைத்தையும் கேட்டுவிட்டு, கதைக்குப் புதுப்பாதை போட்டுக் கொடுத்து அவை படமாகவும் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியையெல்லாம் சந்தித்திருக்கின்றன.
அதற்கு ஒரேயொரு உதாரணம்... கமலின் ‘அபூர்வ சகோதரர்கள்’.
ரஜினிக்கு காமெடி சிறப்பாகவே வரும் என்பதை ‘தம்பிக்கு எந்த ஊரு’ உணர்த்தியது. அதேபோல, அங்கே வந்த பாம்புக் காமெடி, அண்ணாமலை தொடங்கி, இன்றும் தொட்டுத் தொடரும் பாரம்பரியமாக ரஜினியுடன் வந்துகொண்டே இருக்கிறது.
தமிழில் எழுபதுகளில் இருந்து 90-கள் வரையிலான படங்களின் பட்டியலைப் பார்த்தால், அதில் பஞ்சு அருணாசலத்தின் பங்கு ஏதேனும் ஒரு வகையில் இருக்கும். ‘மைக்கேல் மதன காமராஜன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர், அதையடுத்து ஏனோ படம் தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை.
‘அன்னக்கிளி’யில் இளையராஜாவை அறிமுகப்படுத்தியது முதல் அவரின் அனைத்துப் படங்களுக்கும் இளையராஜாதான் இசை. அப்படியொரு பந்தம் இருவருக்கும். ஏவி.எம்., கமல், ரஜினி, சிவகுமார், எஸ்.பி.முத்துராமன், பாரதிராஜா, பிரபு, ராம்கி, சரத்குமார் என்று எல்லோருடனும் பணியாற்றியிருக்கிற பஞ்சு அருணாசலம்... எளிமையின் அடையாளம். கமலுக்கும் ரஜினிக்கும் எத்தனையோ வெள்ளிவிழாப் படங்கள் கொடுத்தவன் நான் என்றோ இசைஞானியையே அறிமுகப்படுத்தியவன் நான் தான் என்கிற கர்வமோ துளியுமில்லாத பண்பான மனிதர். அன்பான ஆளுமை.
பெயரிலும் மனதிலும் இலகுவான குணம் கொண்ட பஞ்சு அருணாசலத்தின் நினைவுநாளில் (ஆகஸ்ட் 9) அவரை நினைவுகூர்வோம்; போற்றுவோம்.