கலவரத்தைத் தூண்டும் பேச்சு: எஸ்கேப்பான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை கைது செய்ய தனிப்படை அமைப்பு


கனல் கண்ணன்

இருமதத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் நேற்று புகார் அளித்தார். அதில், "கடந்த 1-ம் தேதி மதுரவாயலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலைப்பண்பாட்டு பிரிவின் செயலாளரும், திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் அவர், 'ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்' என பேசினார்.

ஏற்கெனவே 2006-ம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகளான நிலையில் மீண்டும் தற்போது கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியது கண்டிக்கத்தக்கது. அதே போல் திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருகின்றனர்.

மேலும் இரு மதத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையிலும் கனல்கண்ணன் பேசியுள்ளதால், அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இப்புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து அவரை கைது செய்ய மதுரவாயலில் உள்ள வீட்டிற்கு சைபர் கிரைம் போலீஸார் சென்றனர். ஆனால் அங்கு அவர் இல்லாததால் வடபழனி, வளசரவாக்கம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கும் அவர் இல்லாததால் தலைமறைவான கனல்கண்ணனை பிடிக்க தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

x