திரை விமர்சனம்: குலுகுலு


உதவி என்று கேட்டு வருகிற எல்லோருக்கும் உதவுவதையும் பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதையும் தவிர வேறெந்த இலக்குகளும் அற்ற ஓர் உலகம் சுற்றும் நாடோடியின் பயணமே ‘குலுகுலு’.

சென்னையில் நாடோடியாக சுற்றித் திரியும் ‘கூகுள்’ (சந்தனம்) யாராவது உதவி கேட்டால் உடனடியாகச் செய்துகொடுக்கிறான். அப்படி உதவிகளைச் செய்வதால் பல பிரச்சினைகளில் மாட்டிக்கொள்கிறான். ஆனாலும் கேட்பவருக்கெல்லாம் உதவி செய்வதை நிறுத்த மறுக்கிறான். இந்தச் சூழலில் இஸ்ரோ சைன்டிஸ்ட் ஒருவரின் மகன் ஒருவன் தனது தந்தை தன் மீது அன்பு வைத்திருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொள்ள விழைகிறான். இதனால் அவனுடைய நண்பர்களுடன் இணைந்து தான் கடத்தப்பட்டுவிட்டதாக நாடகமாட முயல்கிறான். ஆனால், ஒரு இலங்கைத் தமிழர் குழுவினரால் அவன் உண்மையிலேயே கடத்தப்பட்டுவிடுகிறான்.

கடத்தப்பட்டவனை மீட்க அவனுடைய நண்பர்களுக்கு கூகுள் உதவுகிறான். கடத்தப்பட்டவனின் காதலியும் (நமீதா கிருஷ்ணமூர்த்தி) இவர்களுடன் இணைந்துகொள்கிறாள். இதற்கிடையில், மதுபான அதிபர் ஒருவர் இறந்துவிடுகிறார். அவரது இரண்டாவது மனைவியின் மகள் மடில்டா (அதுல்யா சந்திரா) வைக் கொல்ல அவளுடைய மாற்றாந்தாய் சகோதரர்கள் (பிரதீப் ராவத், பிபின்) துரத்துகிறார்கள். இளைஞன் ஏன் கடத்தப்பட்டான்? அவனை மீட்கும் பயணத்தில் கூகுளுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் என்ன ஆனது? தன்னைக் கொல்லத் துடிக்கும் சகோதரர்களிடமிருந்து மடில்டா தப்பித்தாளா? ஆகிய கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதிக் கதை.

‘சூது கவ்வும்’, ‘ஜில் ஜங்க் ஜக்’, போன்ற அபத்த நகைச்சுவை வகைமையிலான படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். சம்பந்தமே இல்லாத நபர்கள் எதேச்சையாக ஒரே புள்ளியில் இணைக்கப்படும் ஹைபர்லிங்க் திரைக்கதை, வித்தியாசமான கதைச் சூழல்கள், இயல்பிலேயே ஏதேனும் ஒரு விசித்திரத்தன்மையைக் கொண்டிருக்கும் கதாபாத்திரங்கள், எதிர்பாராமல் நிகழும் விஷயங்களாலும் அவற்றின் உள்ளீடாக இருக்கும் அபத்தத்தாலும் விளையும் நகைச்சுவை ஆகியவற்றைக் கொண்டு வித்தியாசமான படங்களை விரும்பும் ரசிகர்களை திருப்திபடுத்துவதில் ஓரளவு வெற்றிபெற்றிருக்கிறார்.

படத்தின் மையக் கதாபாத்திரமான கூகுள் அமேசான் மழைக்காடுகளில் ஒரு பழங்குடி இனத்தில் பிறந்தவன். அவனைத் தவிர அவனது இனத்தைச் சேர்ந்த அனைவரும் அழிந்துவிட்டதால் அவனுடைய தாய்மொழியைக்கூட யாருடனும் பேச இயலாமல் தனியனாக வாழ்கிறான். உலகின் பல நாடுகளில் சுற்றித் திரிந்து 13 மொழிகளையும் பல வகையான வேலைகளையும் கற்றுக்கொள்கிறான். தமிழ்நாடும் தமிழும் மனதுக்குப் பிடித்துப்போகவே இங்கேயே தங்கிவிடுகிறான். இங்கு உதவி கேட்கும் அனைவருக்கும் கேள்வி கேட்காமல் உதவி செய்கிறான். சில நேரம் எதிர்பாராமல் நிகழும் சொதப்பல்களால் உதவி கேட்டவரிடமே அடி வாங்குகிறான்; தேவையற்ற பல பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்கிறான். இப்படி ஒரு கதாபாத்திர வடிவமைப்பே தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிது. படத்தின் எல்லா கதாபாத்திரங்களுமே இப்படிப்பட்ட ஏதோவொரு விசித்திரத்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கின்றன. அதனால் புத்துணர்வளிக்கின்றன.

யாரென்றே தெரியாத நபர்களுக்கு தன் உயிரையும் பணையம் வைத்து யாரேனும் உதவுவார்களா, கடத்தல் நாடகம் ஆடித்தான் அப்பாவின் அன்பை தெரிந்துகொள்ள வேண்டுமா, தம்முடைய சிற்றன்னையின் மகளைக் கொல்ல இரண்டு சகோதரர்கள் இவ்வளவு கொலைவெறியுடன் சுற்ற வேண்டுமா, ஒரு இளைஞனைக் கடத்துகிறவர்கள் இவ்வளவு அப்பாவிகளாகவா இருப்பார்கள், பப்ஜி விளையாட்டில் தோற்றதற்காக துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாவார்களா என்றெல்லாம் தர்க்கபூர்வமான கேள்விகளை எழுப்பிக்கொண்டால் இந்தப் படத்தைத் துளியும் ரசிக்க முடியாது. இதுபோன்ற காரணமற்ற விளங்கிக்கொள்ள முடியாத மனித இயல்புகளினால் விளையும் அபத்தங்கள்தான் இந்தப் படத்தின் அடிப்படை. இதைப் புரிந்துகொண்டால் மட்டுமே இந்தப் படத்தை ரசிக்க முடியும்.

அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை, ஒவ்வொருவரும் தமது தாய்மொழியைப் பேண வேண்டியதன் அவசியம், பெண்களின் வாழ்க்கைத் தேர்வு சுதந்திரம், கலாச்சாரம், காதல் ஆகியவற்றின் பெயரில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் அத்துமீறல்கள், பாலியல் குற்றங்களுக்கெதிரான கோபம், என அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்களை திரைக்கதையின் போக்கில் அழகாக இணைத்து கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குநர். அழுத்தமான வசனங்கள் இதற்குக் கைகொடுக்கின்றன.

அதேசமயம் படத்தின் நீளம் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை சோதிக்கிறது. இறுதியில் நிகழும் சண்டைக் காட்சிகள் அபத்த நகைச்சுவையா, சீரியஸ் காட்சிகளா என்னும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. நகைச்சுவைக் காட்சிகளையும் கேளிக்கையையும் மட்டுமே எதிர்பார்த்துச் செல்லும் ரசிகர்களை இந்தப் படம் கவருமா என்பது கேள்விக்குறி. ஏனென்றால் காட்சிகளில் இருக்கும் உள்ளார்ந்த அபத்தத்தைப் புரிந்து கொண்டால் மட்டுமே படத்துடன் ஒன்ற முடியும். இந்த ஜானரை புரிந்துகொள்ளாதவர்களும் விரும்பாதவர்களும் படத்துடன் ஒன்றுபடுவது கடினம்.

இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் சந்தானம் போன்ற நடிகரை நடிக்க வைத்திருப்பதே இயக்குநரின் மாறுபட்ட சிந்தனையை வெளிச்சம்போட்டுக் காண்பிக்கிறது. நகைச்சுவைக்காக அதுவும் பிறரைக் கிண்டலடிக்கும் கவுண்டர் பாணி நகைச்சுவைக்காக அறியப்பட்டவர் சந்தானம். உடல்கேலி உள்ளிட்ட பிரச்சினைக்குரிய நகைச்சுவை வசனங்களுக்காக விமர்சிக்கப்பட்டவரும்கூட. அப்படிப்பட்ட சந்தானம் இந்தப் படத்தில் எந்த அடையாளத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாத யாருக்கும் தீங்கு செய்யாத பிறருக்காக வாழும் உலக மனிதனாக நடித்திருக்கிறார். அவருடைய வழக்கமான நடிப்புப் பாணிக்கும் நகைச்சுவைக்கும் துளியும் இடமளிக்காத கதாபாத்திரத்தை துணிச்சலுடன் ஏற்றிருக்கிறார். அதை மிகச் சிறப்பாக திரையில் நிகழ்த்தியும் காண்பித்திருக்கிறார். அந்த வகையில் இது சந்தானத்தின் திரைவாழ்வில் மிக முக்கியமான படம்.

முதன்மைக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கும் பெண்களான அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிரதான வில்லனாக பிரதீப் ராவத் ரசிக்கவைக்கிறார். அப்பா இறந்துகிடக்கும்போதுகூட பப்ஜி விளையாடுவதில் ஆர்வம் காட்டும் புத்தி பேதலித்த+கொடூர வில்லனாக பிபின் கவனம் ஈர்க்கிறார். ஆள்கடத்தலில் ஈடுபடும் இலங்கைத் தமிழர்கள் குழுவின் தலைவராக மரியம் ஜார்ஜ் வழக்கம் போல் காமெடியில் ஸ்கோர் செய்கிறார். அவருடைய கூட்டாளிகளும் கவனம் ஈர்க்கிறார்கள்.

சந்தானம் படங்களில் தவறாமல் இடம்பெறும் ‘லொள்ளு சபா’ சேஷு, மாறன் இருவரும் அங்காங்கே சிரிக்க வைக்கிறார்கள். சந்தோஷ் நாராயணின் பாடல்களும் பின்னணி இசையும் வித்தியாசமான திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு பொருந்துகின்றன. ’அம்மா நானா’ பாடல் வித்தியாசமான மெட்டுக்காகவும் குரலுக்காகவும் நினைவில் நிற்கிறது. இடைவேளை துப்பாக்கி சண்டைக் காட்சியிலும் நீண்ட இரவு நேர இறுதிக் காட்சியிலும் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் உழைப்பு பளிச்சிடுகிறது.

வித்தியாசமான திரைப்படங்களை விரும்புவோர் நிச்சயமாகப் பார்க்க வேண்டிய திரைப்படம் ‘குலுகுலு’. தமிழின் அரிதான அபத்த நகைச்சுவை வகைமையை முன்னெடுத்துச் செல்வதும் படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் விஷயங்களுக்காகவும் அனைவருக்கும் பரிந்துரைக்கத்தக்க படமும்கூட.

x