ஆறிலிருந்து எழுபது வரை: ரஜினி சரிதம் - 71


நல்லவனுக்கு நல்லவன் படத்தில்...

ரஜினியை முழுமையான மாஸ் ஹீரோவாக முன்னிறுத்திய எஸ்பி.முத்துராமன், அவரது நடிப்புத் திறமைக்கும் நிறையத் தீனி போட்டிருக்கிறார். இதை ஒப்புக்கொண்ட பாலசந்தர்: ‘‘சிவாஜி ராவ் என்கிற வைரத்தை கண்டுபிடித்து ரஜினியாக்கியது நானாக இருந்தாலும் அந்த வைரத்துக்குப் பலவிதமான கதாபாத்திரங்கள் கொடுத்து பட்டை தீட்டியது எஸ்பி.எம்!’’ என்று கூறியிருக்கிறார்.

அது முற்றிலும் உண்மை. ரஜினியின் மாஸ் பிம்பத்தை மேலும் மேலும் பெரிதாக்குவதற்காக கதை, காட்சியமைப்பு, இசை, பாடல்கள் என அனைத்து அம்சங்களிலும் அதை எக்ஸிக்யூட் செய்தார் எஸ்பி.எம். குறிப்பாக பாடல்களில், ‘பொதுவாக எம் மனசு தங்கம் போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்’, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்’, ‘காள காள முரட்டுக்காள’, ‘மனிதன்... மனிதன்’ என பல பாடல்களை படத்தில் இணைத்து ரஜினிக்குப் புகழ் சேர்த்தார்.

அதேநேரம், ரஜினியிடம் சிறந்த குணச்சித்திர நடிப்புத்திறமை இருப்பதை தொடக்கத்திலேயே புரிந்துகொண்டு, பல படங்களில் அதை வெளிப்படுத்தவும் களம் அமைத்துக் கொடுத்தார் எஸ்பி.எம். அப்படியொரு படம்தான் எஸ்பி.எம்., ஏவி.எம்., ரஜினி கூட்டணியில் வெளியாகி 150 நாட்கள் ஓடிய ‘நல்லவனுக்கு நல்லவன்’. சிறந்த நடிப்புக்காக ரஜினிக்கு பல விருதுகளை வென்றுகொடுத்த படம்.

தெலுங்கு சினிமாவில் தனது நடிப்பு முறைக்காக ‘ரிபெல் ஸ்டார்’ என்று பெயர்பெற்ற கிருஷ்ணம் ராஜு நடிப்பில், பாஸ்கர ராவ் இயக்கத்தில் 1983-ல் வெளியாகி வெற்றிபெற்றது ‘தர்மாத்மூடு’ என்ற தெலுங்குப் படம். இதன் ரீமேக் உரிமையைக் கையோடு வாங்கிய ஏவி.எம்., அதில் ரஜினியை நடிக்க அழைத்தது. படத்தைப் பார்த்த ரஜினி, “இதை எஸ்பி.எம். சார் இயக்குவதுதான் சரியாக இருக்கும்” என்று சொன்னார். அதை ஏற்றுக்கொண்டு, திரைக்கதை, வசனத்தை மட்டும் அப்போது பிரபலமாகியிருந்த விசுவை வைத்து எழுதும்படி செய்தார் ஏவி.எம்.சரவணன். வாலி, முத்துலிங்கம், நா.காமராசன், ஆகியோருடன் வைரமுத்து, கங்கை அமரனும் பாடல்களை எழுத, இளையராஜா சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தார்.

மீண்டும் மூன்று விதமான ரஜினி

ரவுடித்தனம்தான் கம்பீரம் என்று நினைக்கும் மாணிக்கமாக அறிமுகமாகும் ரஜினியை, தனது நற்பண்புகளால் கவர்ந்து அவரைத் திருமணம் செய்துகொள்கிறார் நிராதரவான பெண் உமாவாக வரும் ராதிகா. “ஊரை மிரட்டி வாழாமல், ஒரு வாய்ச் சோறு சாப்பிட்டாலும் அது உங்கள் உழைப்பில் கிடைத்ததாக இருக்க வேண்டும்” என்று ரஜினியிடம் எடுத்துச் சொல்கிறார் ராதிகா. அதுவரை தன்னை நல்வழிப்படுத்த யாரும் வராத நிலையில், ராதிகாவின் இந்த வார்த்தைகள் ரஜினியின் குணத்தைப் புரட்டிப்போடுகின்றன. மனைவியின் பேச்சைக் கேட்டு, தான் செய்த குற்றங்களுக்காக காவல் அதிகாரியான மேஜர் சுந்தர்ராஜனிடம் சரண் அடைகிறார்.

குற்றங்களை ஒப்புக்கொண்டதால் விரைவிலேயே சிறையிலிருந்து வெளியே வரும் ரஜினி, தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக்கொள்கிறார். காவல் அதிகாரியின் பரிந்துரையால் விசுவின் தொழிற்சாலையில் ஒரு தொழிலாளியாக வேலை கிடைக்கிறது ரஜினிக்கு. அங்கே ரஜினியின் கடும் உழைப்பும், நேர்மையும் முதலாளியான விசுவைக் கவர, அவரைத் தனது தொழிற்சாலைக்கு நிர்வாகி ஆக்குகிறார்.

முதலாளி விசுவுக்கு, கார்த்திக் ஒரு பொறுப்பில்லாத உதாரி மகன். அவரைத் திருத்த முயற்சிக்கிறார் ரஜினி. காலச்சக்கரம் வேகமாக சுழல்கிறது. ரஜினி, நடுத்தர வயது மனிதராகி விடுகிறார். அவர் தனது உயிராகக் கருதுவது தனது மகள் துளசியைத்தான். கார்த்திக்கும் துளசியும் காதலிக்க, பெற்றோரின் எதிர்ப்பை மீறி, ஓடிச்சென்று திருமணம் செய்துகொள்கிறார்கள். மகளின் திருமணத்தால் மனம் உடையும் ராதிகா இறந்துவிடுகிறார். இந்த சமயத்தில் ரஜினிக்கு இன்னொரு இக்கட்டும் வந்து சேர்கிறது. கார்த்திக் உயிருக்கு அவருடைய நண்பர்களாலேயே ஆபத்து வருகிறது. சரியான நேரத்தில் ரஜினி அவரைக் காப்பாற்றுகிறார். உண்மையை உணர்ந்து கார்த்திக் திருந்துகிறார்.

இந்தக் கதையில் ரவுடித்தனமே வாழ்க்கை என நம்பும் இளைஞர், பின்னர் நடுத்தர வயது தொழிலாளி, பிறகு 60 வயதைத் தொடும் அப்பா என ஒரு கதாபாத்திரத்தின் மூன்று விதமான காலக்கட்டங்களை தனது பண்பட்ட குணச்சித்திர நடிப்பால் வெளிப்படுத்திக்காட்டி வியக்க வைத்தார் ரஜினி.

பாசம் கொட்டி வளர்த்த மகள், காதலனுடன் சென்றுவிடும் நேரத்தில் மனமுடையும் அப்பாவாக ‘சிட்டுக்கு... செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது’ என்று மகளை எண்ணி ஏங்கிப்பாடும் பாடல் காட்சியில் உருக்கமான நடிப்பைக் கொடுத்தார் ரஜினி. அவரது அந்த நடிப்புக்காக ஃபிலிம்ஃபேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது என பல விருதுகள் ரஜினியை வந்தடைந்தன. “பட வாய்ப்புகள் அவ்வளவாய் இல்லாமல் இருந்த கார்த்திக், இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் பிஸியான நடிகராக மாறினார்” என்கிறார் எஸ்பி.எம்.

ரஜினியுடன் போட்டி!

‘போக்கிரி ராஜா’ தொடங்கி ரஜினியுடன் பல படங்களில் நடித்திருக்கும் ராதிகா, ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் அவருடன் நடித்தபோது ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்கிறார் இப்படி - “ ‘நல்லவனுக்கு நல்லவன்’ கதையைக் கேட்டதுமே இது ரஜினியின் நடிப்புக்கு தீனி போடுகிற படம் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. எனக்கும் படத்தில் நல்ல ஸ்கோப் இருந்தது. அதனால், ரஜினியைவிட சிறப்பாக நடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். முதல் நாள் படப்பிடிப்பில் சில காட்சிகளில் எனது நடிப்பைப் பார்த்த ரஜினி, ‘ஒரு முடிவோடத்தான் இருக்கீங்க போல… வாங்க போட்டி வெச்சுக்குவோம்’ என்றார்.

அந்த டீல் எனக்குப் பிடித்திருந்தது. அதன்பிறகு எடுக்கப்பட்ட காம்பினேஷன் காட்சிகளில் யார் இன்னும் ஷட்டிலாக நடிப்பது என்பதில் எங்களுக்குள் போட்டி இருந்தாலும் காட்சிகளில் இருந்த தன்மை எங்கள் இருவரையுமே மிக இயல்பாக நடிக்க வைத்துவிட்டது. எஸ்பி.எம் சாரும் பல ஷாட்களில் ‘இன்னொரு ரீடேக் போயிரலாம்... இதுல கொஞ்சம் அதிகமா நடிச்ச மாதிரி இருக்கு. எந்தக் காட்சியிலும் ட்ராமா தெரியக்கூடாது’ என்று சொல்லி என்னைக் கண்ட்ரோல் பண்ணிவிட்டார்.

என்றாலும் ரஜினியிடம் நடிக்கும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சீன் பேப்பரில் இருக்கும் வசனங்கள், ஆக்‌ஷன் ஆகியவற்றுடன் சில சின்னச் சின்ன விஷயங்களைச் சேர்த்துக் கொள்வார். தனக்கான ஷாட் முடிந்ததும் ஓய்வாகப் போய் உட்கார்ந்து விடமாட்டார். நான் தனியாக நடிக்கும் காட்சிகளில் நான் எப்படி நடிக்கிறேன் என்று கவனித்துக் கொண்டிருப்பார்.

படப்பிடிப்பு இடைவேளையில், ஆன்மிகம், தத்துவம் என்று என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். நானும் எனக்குத் தெரிந்ததையும் புத்தகங்களில் படித்ததைக் கொஞ்சம் மாற்றியும் சொல்லி அவரை இம்பிரஸ் பண்ணுவேன். என்னைக் கூர்ந்து கவனிக்கும் ரஜினி, அதில் ஏதாவது ஒரு கருத்து தன்னைப் பாதித்துவிட்டால் ‘வெரி இம்ரசிவ்’ என்று சொல்லிவிட்டு தீவிர யோசனையில் ஆழ்ந்துவிடுவார். அப்போதெல்லாம் நான் அவரைச் ‘சிந்தனைச் சிற்பி’ என்று கிண்டல் செய்வேன்.

இதே படத்தில்தான் ‘உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே...’ என்கிற பாடல் வரும். இது கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பேக் வாட்டர் ஏரியில் படமாக்கப்பட்டது. படகில் நானும் ரஜினியும் பாடியபடி செல்வதுபோல் எஸ்பி.எம் சார் நிறைய லாங் ஷாட்கள் வைத்து அற்புதமாகப் படமாக்கினார். லாங் ஷாட் எடுக்கும்போதெல்லாம், ‘இருவரும் ஏதாவது பேசிக்கொண்டிருங்கள்’ என்று ஸ்பீக்கரில் கத்திச் சொல்லுவார். அதனால், படகில் அமர்ந்து நானும் ரஜினியும் பாடல் வரிகளுக்கு வாய் அசைப்பதற்கு பதிலாக எதிர்கால வாழ்க்கையைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம்.

ரஜினி சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார், பணம் புகழுடன் இருக்கிறார். அவருடைய எதிர்கால வாழ்க்கைத் திட்டம் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அப்போது அவரிடம் ‘இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து நீங்கள் என்னவாக இருப்பீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘சாமியாராப் போகலாம்னு நினைக்கிறேன்’ என்று இயல்பாகச் சொன்னார். அதைக் கேட்டு எனக்கு ரொம்ப ஷாக்!

’நீங்க சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கீங்க... இதைவிட்டுட்டு நீங்க வேற நிலைக்குப் போறதை சினிமா உலகமும் உங்களைச் சுத்தி இருக்கவங்களும் எப்படி அனுமதிப்பாங்க? நீங்க சாமியாரா மாறுவது உங்கள் விருப்பமாக இருக்கலாம். அவையெல்லாம் குடும்பமும் தொழிலும் இல்லாதவர்களுக்கு. நீங்கள் கூறுவது எளிது. செயல்படுத்துவது கடினம். அதனால் நீங்கள் சொன்னதில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்று நான் சொன்னேன்.

அதற்கு அவர். ‘நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. நான் சாமியாராகப் போகாவிட்டாலும் அப்படியொரு வாழ்க்கையை வாழ்வது எனக்கு நிம்மதியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மனதளவில் சாமியாராக வாழ்வது என்பது வேறு’ என்றார். இன்று வரையிலும் ரஜினி சொன்னபடியே செய்துகொண்டிருப்பதில் எனக்கு ஆச்சரியமில்லை. ஏனென்றால் ரஜினி அப்படித்தான்” என்கிறார் ராதிகா.

உண்மைதான்... ரஜினியின் 100-வது படமே அதற்கு சாட்சி!

(சரிதம் பேசும்)

x