சித்தார்த்தை இயக்கும்  8 தோட்டாக்கள் ஸ்ரீகணேஷ்


சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கிய ‘மாவீரன்’, கடந்த ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரித்தார்.

இந்நிலையில் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்தப் படத்தை அறிவித்துள்ளது. இதை, 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்குகிறார். இதில் சித்தார்த் நாயகனாக நடிக்கிறார். இது சித்தார்த்தின் 40-வது திரைப்படம்.

படம் பற்றி ஸ்ரீகணேஷ் கூறும்போது, “நான் இதற்கு முன் இயக்கிய படங்கள் த்ரில்லர் வகையை கொண்டிருந்தன. இது அதிலிருந்து மாறுபட்ட கதை. ஒரு தனிமனிதனின் வலிமையான பயணம்தான் படம். இது இயக்குநராக எனக்கும் பார்வையாளர்களுக்கும் புது அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். இது மொழி வயது தாண்டி அனைவருக்கும் பொருந்தக் கூடிய கதைதான்.

‘சித்தா’ படத்துக்குப் பிறகு சித்தார்த்திடம் இந்த ஸ்கிரிப்டை கொடுத்தேன். அந்தப் படத்தில் கிடைத்த மரியாதையை இந்தப் படம் காப்பாற்றும் என்று நம்பினார்.என் வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களின் அடிப்படையில் இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.” என்றார்.

x