நகைச்சுவையும் குணச்சித்திரமும்: தனித்துவ நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி!


பளீர் முகமும் ஜிலீர் சிரிப்புமாக இருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி, எல்லோருக்கும் தெரிந்தவர்; எல்லோருக்கும் பிடித்தவர். எளிமையானவர்; இனிமையானவர். சதாபிஷேக வைபவங்களைக் கடந்து, இன்னும் இளமையும் குதூகலமுமாக இருக்கிற வெண்ணிற ஆடை மூர்த்திக்கு வயது மட்டும் ஏறுவதே இல்லை. காரணம்... அவரின் மனசு!

இயக்குநர் ஸ்ரீதர், புதுமைகளை விரும்புபவர். கதைகளிலும் காட்சி அமைப்பிலும் மட்டுமின்றி, நடிக நடிகையரிலும் புதுமுகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருந்தார். ‘வெண்ணிற ஆடை’ படத்தில் ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி முதலானோரை அறிமுகப்படுத்தினார். நிர்மலா, வெண்ணிற ஆடை நிர்மலாவானார். மூர்த்தி, வெண்ணிற ஆடை மூர்த்தியானார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தன. வக்கீல் குடும்பத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர், ஒருகட்டத்தில் ஜோதிட சாஸ்திரத்திலும் ஆர்வமானார். ஒருபக்கம் கலகலவென காமெடியில் பட்டையைக் கிளப்பினார். இன்னொரு பக்கத்தில், கேரக்டர் ரோலிலும் முத்திரை பதித்தார். இளம் வயதிலேயே முதிர்ந்தவராகவும் வயது முதிர்ந்த நிலையில் இளைஞராகவும் என அவர் ஏற்காத வேடங்களே இல்லை.

ஆரம்ப காலத்திலேயே ‘காசேதான் கடவுளடா’ படத்தில் வயதான கேரக்டரில், அசத்தியிருப்பார். ‘தமிழ்ப் படம்’ படத்தில் இளைஞராக மிர்ச்சி சிவா நண்பனாகவும் கலக்கியிருப்பார். எவரின் சாயலுமில்லாமல் நடிப்பும் காமெடியும் இருந்ததுதான் இவரின் ப்ளஸ் பாயின்ட் என்கிறார்கள் ரசிகர்கள். அந்தக் கால நாகேஷ், தேங்காய் சீனிவாசன் தொடங்கி இந்தக் கால கவுண்டமணி, வடிவேலு, விவேக் என மிகப்பெரிய ரவுண்டு வந்த வெண்ணிற ஆடை மூர்த்தியின் சாதனை, மூன்று தலைமுறையைக் கடந்தது!

‘வெள்ளிக்கிழமை ஹீரோ’ என்று கொண்டாடுவார்கள் ஜெய்சங்கரை. வாரந்தவறினாலும் வெள்ளிக்கிழமையன்று ஜெய்சங்கர் படம் ரிலீசாகிக்கொண்டே இருக்கும் அப்போது. இயக்குநர்கள் கதை சொல்லுகிற போதே, ‘இந்தக் கேரக்டருக்கு யார்னு பேசி முடிவு பண்ணிட்டீங்களா?’ என்று ஜெய்சங்கர் கேட்பார். ‘இல்லை’ என்று பதில் வந்தால், ஜெய்சங்கர் சொல்லும் பதில்... ‘மூர்த்தியைப் போடுங்களேன், நல்லாருக்கும்’ என்பதுதான்!

“என்னவோ தெரியல. ஜெய் சாருக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது. அதனால், எனக்காக அவர் படத்தில் சான்ஸ் வாங்கிக் கொடுத்துவிடுவார். அதேபோல், தடக்கென்று வீட்டு வாசலில் கார் ஹார்ன் சத்தம் கேட்கும். எட்டிப்பார்த்தால், ‘ஹாய்’ என்று விறுவிறுவென வந்து காபியெல்லாம் சாப்பிட்டுவிட்டுத்தான் போவார். அப்படியொரு நட்பு எங்களுக்குள்!” என்று வெண்ணிற ஆடை மூர்த்தி நெகிழ்வும் மகிழ்வுமாகச் சொல்கிறார்.

வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி நாட்டிய வெண்ணிற ஆடை மூர்த்தியுடனான எனது உரையாடல் மறக்க முடியாதது. அதில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

“உங்களை எல்லாருக்கும் பிடிக்குமாமே?” என்று அவரிடம் கேட்டேன்.

“இதிலென்ன இருக்கு! இது மாயமும் இல்ல, மந்திரமும் இல்ல, தந்திரமும் இல்ல. நாம நாமளா இருந்துட்டா, அடுத்தவங்க நம்மளை நல்லாவே ரசிப்பாங்க. இதுவரை 800-க்கும் மேலே படங்கள் பண்ணிருக்கேன். வேலைன்னு வந்துட்டா அதுல இன்வால்மென்ட், தேவைப்படும்போது பேச்சு, அப்படிப் பேசும்போது, யார்கிட்டயா இருந்தாலும் உண்மையா, அக்கறையா, மரியாதையா பேசுறது, மத்த நேரத்துல அமைதியோ அமைதி. இப்படி இருந்துட்டா, எல்லாருக்கும் நம்மளைப் பிடிக்கும். முக்கியமா, நம்மளை நமக்கேப் புடிச்சிரும்!” என்று புன்னகைக்கிற வெ.ஆ.மூர்த்திக்குள் அப்படியொரு பாஸிட்டிவ் எனர்ஜி!

திரைத் துறையில் தனது அனுபவம் குறித்து பேசிய மூர்த்தி, “நண்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம், ‘சோ டைரக்ட் பண்ணினார். நாகேஷ் படம் இயக்கினார். நீங்க ஏன் படம் டைரக்ட் பண்ணலை?’ என்று கேட்டார். அந்த அளவுக்கு நான் புத்திசாலின்னா பாத்துக்கோங்களேன். டைரக்ட் பண்றது ரொம்பக் கஷ்டமான வேலை. நடிக்கறது பார்ட் டைம் வேலை. நம்ம பார்ட்டை சரியாச் செஞ்சிட்டு, அடுத்த படத்துக்கு தடக்குன்னு ஓடிடலாம். ஆனா டைரக்‌ஷன் ஃபுல்டைம் ஜாப். டிஸ்கஷன், ஸ்கிரிப்ட், ரைட்டிங், லொகேஷன், ஷூட்டிங், எடிட்டிங், டப்பிங்னு ஓடிக்கிட்டே இருக்கணும். ஆனா நடிப்புன்னா, அதுக்குள்ளே அஞ்சு படங்கள் பண்ணிடலாம். இன்னொரு விஷயம்... எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும். ஆனாலும் ஒரு நப்பாசை இருந்துச்சு. ’கேரி ஆன் கிட்டு’ன்னு ஒரு டிராமா, ’களவுக்கலை’ன்னு டிடிக்காக ஒரு டிராமா. இன்னொரு டிராமாவை ’தி இந்து’ பத்திரிகைலதான் எடுத்தோம். அவங்கதான் அந்த சீரியல் பண்ணினாங்க” என்றார்.

“சரி ஏன் ஹீரோவாகவில்லை?” என்று கேட்டால் அதற்கும் சிரிக்கிறார்.

“நல்லவேளை... ஸ்ரீதர் என்னை ஹீரோவாக்கலை. அப்படி என்னை ஹீரோவாக்கியிருந்தா, எப்பவோ ஃபெயிலியராகியிருப்பேன். ஒரு உண்மை சொல்லட்டுங்களா? ஸ்ரீதர் சாரோட உதவியாளர் என்.சி.சக்ரவர்த்தி மூலமா ஸ்ரீதருக்கு முன்னாடி போய் நின்னேன். என்ன மாதிரி நடிக்கணும்னு ஆசைப்படுறேனு கேட்டார். காமெடின்னு சொன்னேன். அவர் சிரிச்சிட்டார். அவர் சிரிச்சது இருக்கட்டும்... உண்மையைச் சொன்னா நீங்களே சிரிப்பீங்க.

‘என்னப்பா மூக்கும் முழியுமா லட்சணமா இருக்கே. ஹீரோவா, செகண்ட் ஹீரோவா போடுறேம்பா’ன்னாரு. வேணாம்னுட்டேன். ‘உன் மூஞ்சி, நல்லாப் படிச்ச முகமா இருக்கு. காமெடி செட்டாகாதுய்யா’ன்னார் ஸ்ரீதர் சார். ‘ஒருத்தனுக்கு அவனோட நல்ல முகம்தான் அதிர்ஷ்டம்னு சொல்லுவாங்க. ஆனா எனக்கு என் நல்ல முகமே துரதிருஷ்டம் சார். பரவாயில்ல சார்’னு சொன்னேன். இந்த வார்த்தைதான், எனக்கு வாய்ப்பு கொடுக்க, அதுவும் காமெடியனாவே வாய்ப்பு கொடுக்க, ஸ்ரீதர் சாரைத் தூண்டுச்சு”என்று ஒளிவுமறைவின்றி ஒப்புக்கொள்கிறார் வெ.ஆ.மூர்த்தி.

அவரின் இன்னொரு அடையாளம்... டபுள் மீனிங் காமெடி.

“தமிழ் செழிப்பான மொழி. ஒரு சொல்லுக்குப் பல மாதிரியான அர்த்தங்கள் இருக்கு. சொல்லப்போனா ஒரு சொல்லுக்கு எட்டுவிதமான அர்த்தம் இருக்குன்னு சொல்லுவாங்க. சென்சார் போர்டுல இருந்த லேடி ஒருத்தங்க, ‘சார், உங்க படத்துக்கு பத்து கட் கொடுத்திருக்கு’ன்னு சொன்னாங்க. சரின்னேன். ‘நீங்க ஒரு வக்கீலும் கூட. ஏன் சார் இதுமாதிரிலாம் பேசுறீங்க?’ன்னு கேட்டாங்க. ‘ஜன்னல்லேருந்து தெருவைப் பாக்கும்போது, நீங்க பாக்கறது வேற; நான் பாக்கறது வேற. ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்ணைப் பாப்பாங்க. இது ஜன்னல் கோளாறு இல்ல. நம்ம பார்வையோட சிக்கல்’னு சொன்னேன். அதேசமயத்துல, நம்ம வாழ்க்கைல இதுமாதிரி போறபோக்குல நிறைய டபுள், டிரிபிள் மீனிங்லாம் பேசிக்கிட்டுதானே இருக்கோம்’’ என்று சொல்லிச் சிரிக்கிறவரிடம் பாசாங்குகளே இல்லை.

“நான், செட்ல இருக்கும்போது, யாரையும் மரியாதைக் குறைவா பேசினதே இல்ல. சின்னப்பையனா இருந்தாக்கூட, வாங்க தம்பின்னு சொல்லுவேன். சரி... ஆனாலும் ’டா’ போட்டு பேசுற ரெண்டு நண்பர்கள் உண்டு. ‘என்னடா வாங்க... போங்கன்னு. அசிங்கமா இருக்கு. இனிமே ’டா’ போட்டுதான் பேசணும்’னு முடிவுபண்ணினோம். அந்த நண்பர்கள், தேங்காய் சீனிவாசனும் சுருளிராஜனும்!’’ என்று அவர்களை நினைவுகூர்கிற மூர்த்தி, 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகர் ஜெய்சங்கரைப் போலவே, இயக்குநர் மகேந்திரனுக்கும் மூர்த்தியை ரொம்பவே பிடிக்கும். அவரின் படங்களில், அருமையான கேரக்டரைக் கொடுத்துவிடுவார் மகேந்திரன்.

“அந்த தம்ப்ப்ப்ரீ... எப்படி, எங்கே பிடிச்சீங்க சார்?” என்று கேட்டதும் வெ.ஆ.மூர்த்தியின் முகத்தில் கூடுதல் புன்னகை.

“அது விளையாட்டா செஞ்ச விஷயம். மகேந்திரன் சாரோட ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்துலதான் அப்படிச் சொல்ல ஆரம்பிச்சேன். டைரக்டர் கூட, ‘வேணாமே மூர்த்தி சார்’னு சொன்னார். ‘சார், உங்க படத்துல எனக்கு காமெடி ரோல் தராம, சீரியஸ் ரோலே தர்றீங்க. இதுமட்டுமாவது இருந்துட்டுப் போகட்டும் சார்’னு கேட்டுக்கிட்டேன். அவரும் வைச்சார். ஆனா இந்த அளவுக்கு ஹிட்டாகும்னு நினைக்கவே இல்ல.

அப்புறம் என்னாச்சுன்னா... என்னைப் படத்துக்கு புக் பண்ண வரும்போதே, டைரக்டர்கள், ‘மானே தேனேன்னு போட்டுக்கங்க’ன்னு சொல்ற மாதிரி, ‘சார், அங்கங்கே உங்க ஸ்டைல்ல இதையெல்லாம் சொல்லிருங்க சார்’னு சொல்லிருவாங்க. எப்படியும் 25 படங்களுக்கு மேல இதைப் பண்ணிருப்பேன். எனக்கே போரடிக்குதுன்னு சொன்னாலும் விடமாட்டாங்க.

இப்படித்தான், குதிரை கனைக்கிற மாதிரி ஒரு பொண்ணைக் கூப்பிடுற சீன். இதைப் பாத்துட்டு கமல் சார், ‘உலகத்துல எவனும் ஒரு பொண்ணை இப்படிக் கூப்பிட்டிருக்க மாட்டான் சார்’னு கிண்டல் பண்ணினார்” என்றார் மூர்த்தி.

“உங்கள் சினிமா வாழ்வில், டர்னிங் பாயின்ட்..?” என்று கேட்டதும் சற்று நேரம் மெளனம். பின்னர் மெளனம் கலைத்துப் பேசினார்.

“யோசிச்சுப் பாத்தா, அப்படி டர்னிங் பாயின்ட் மாதிரியான படங்கள்னு எதுவும் அமையலன்னுதான் சொல்லணும். ’காசேதான் கடவுளடா’ படம் அப்படிப்பட்ட படம்தான். ஆனா, அந்தப் படம் தேங்காய் சீனிவாசனுக்கு மிகப்பெரிய டர்னிங் பாயின்டா அமைஞ்சிச்சு. எனக்கு அப்படில்லாம் நடக்கல. ஒரு அஞ்சாறு படம் கைல இருக்கும். நடிச்சுக்கிட்டே வருவேன். திரும்பவும் அஞ்சாறு படம் வந்துரும். இப்படித்தான் 800 படங்கள் வரை பண்ணிருக்கேன். என்ன ஒண்ணு... எந்தப் படமா இருந்தாலும் அதுல ஏதோ ஒருவகைல, மக்கள் மனசுல நின்னுருவேன். கடவுளுக்கும் டைரக்டர்களுக்கும் நன்றி.

மகேந்திரன் சாருக்கு எம் மேல ஒரு நம்பிக்கையோ என்னவோ... அவரோட ’முள்ளும் மலரும்’ படத்துலேருந்தே தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்துடுவாரு. அதுவும் என்னை காமெடியனாவே அவர் பாக்கமாட்டார். கேரக்டர் ரோல்தான் தந்தார். மிகச் சிறந்த இயக்குநர் அவர்.

ஒருமுறை அவர் படத்தின் ஷூட்டிங். மத்தியானம் கால்ஷீட் கொடுத்திருந்தேன். வீட்ல சாப்பிட்டெல்லாம் முடிச்சிட்டு, போய் நின்னேன். ‘என்ன சார்?’னு கேட்டாரு. ‘இன்னிக்கி என் போர்ஷன் இருக்கே சார்’னு சொன்னேன். ‘அடடா... அடுத்த வாரம்தான் சார் இருக்கு’ன்னார். ‘சரி சார்... ஸாரி சார். வந்ததுக்கு ஒரு போட்டோவாவது எடுக்கச் சொல்லுங்க. அந்த திருப்தியோட கிளம்பறேன்’னு சொன்னேன். ரெண்டே நிமிஷம்... மெளனமா இருந்தார்.

‘நீங்க ரெடியாகுங்க சார். இன்னிக்கே எடுத்துடலாம்’னு சொல்லிட்டு அடுத்த அரை மணி நேரத்துல, என் கேரக்டருக்கான வசனத்தையெல்லாம் எழுதி, கையில கொடுத்தார். அந்தப் படம் ‘மெட்டி’. அதுல நான் புரோக்கர். எல்லாத்துக்குமே புரோக்கர். கல்யாணப் பொண்ணைப் பத்தி வாடகை வீடு கேக்கறவங்ககிட்டயும், வீடு விஷயமா கேக்கறவங்ககிட்ட மாப்பிள்ளை பத்தியும்னு மாத்தி மாத்திச் சொல்லுவேன். அதுவொரு காமெடியா, ஜாலியா இருக்கும். அத்தனை அற்புதமான இயக்குநர் மகேந்திரன் சார்” என்று நெகிழ்கிறார் வெ.ஆ.மூர்த்தி!

தொலைக்காட்சி ஊடகத்தையும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு வென்று காட்டியவர் வெ.ஆ.மூர்த்தி.

’’இப்ப இருக்கிற ஆடியன்ஸ், செம ஷார்ப். டிவி அசுரத்தனமான வளர்ச்சிகொண்டது. இப்படி வளர்ச்சியடையும்னு நல்லாவே தெரிஞ்சுது. அந்தச் சமயத்துல கூப்பிட்டு, சீரியல் பண்றீங்களான்னு கேட்டாங்க. ’மீண்டும் மீண்டும் சிரிப்பு’ பண்ணினேன். திரை வேணும்னா சின்னதா இருக்கலாம். ஆனா ரீச் ரொம்பவே அதிகம். என் ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’க்கு அப்படியொரு ரெஸ்பான்ஸ்.

அதுக்குப் பிறகு கே.பாலசந்தர் சார், பாலுமகேந்திரா, லட்சுமின்னு நிறைய பேர் டிவி பக்கம் வந்தாங்க. ஜெயிச்சாங்க. இதனோட வளர்ச்சியும் தாக்கமும் வீரியமும் இன்னும் இன்னும் அதிகமாயிட்டுதான் போகும். இன்னும் இன்னும் பல பேர்ல விஸ்வரூபம் எடுத்துக்கிட்டேதான் இருக்கும்’’ - நிறுத்தி நிதானமாகப் பேசி அன்புடன் புன்னகைக்கிற மூர்த்தி, இன்னும் இளமையாகத் தெரிகிறார்!

ஜூலை 25: வெண்ணிற ஆடை மூர்த்தி பிறந்தநாள்

x