`மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறேன்'- சர்ச்சை பேச்சுக்கு ‘இரவின் நிழல்’ நடிகை பிரிகிடா கண்கலங்கி விளக்கம்!


தன்னுடைய சர்ச்சை பேச்சுக்கு நடிகை பிரிகிடா மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் குறித்தான மக்களின் கருத்துகளை கேட்டறிய நடிகர் பார்த்திபன், படத்தில் சிலாக்கம்மா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை பிரிகிடா மற்றும் படக்குழுவினர் சென்னை, மதுரை, கோவை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் திரையரங்குகளில் மக்களை சந்தித்து வருகின்றனர். அப்போது ஒரு இடத்தில் சேரி மக்கள் குறித்து பிரிகிடா சொன்ன கருத்து சர்ச்சையானது. #அரெஸ்ட்_பிரிகிடா என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது. இதனையடுத்து தான் சொன்ன கருத்துக்காக பிரிகிடா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மன்னிப்பு கேட்டார்.

மேலும், தற்போது தன்னுடைய சமுக வலைதள பக்கத்திலும் இதற்கு விளக்கம் கொடுத்து காணொளி ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது, ‘நேற்று நான் சேரி மக்கள் குறித்து பேசி இருக்கக் கூடியது மிகவும் தவறான ஒரு விஷயம். இதற்கு நான் மிகவும் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். முதலில் நான் அந்த படத்தோடு ஒன்றிப்போய் பேசினேன். ஆனால், உங்களை புண்படுத்தும்படியாய் நான் பேசியிருக்கும் இந்த வார்த்தைகளுக்கு எந்தவொரு விளக்கம் நான் கொடுத்தாலும் அது சரியாய் இருக்காது. படம் நடித்து விட்டு நான் போடக்கூடிய முதல் காணொளியாய் இது அமையும் என்பதும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னை கைது செய்ய வேண்டும் என்று இணையத்தில் பார்த்தபோது மனதளவில் பாதிக்கப்பட்டேன். என் வாயால் இப்படி ஒரு தவறான விஷயத்தை சொல்வேன் என எதிர்பார்க்கவில்லை.

என்னைத் திட்டி நிறைய பதிவுகளை பார்த்தேன். இது எனக்கு மிகப்பெரிய பாடம். வாழ்க்கையில் முக்கியமான அடி எடுத்து வைத்திருக்கும்போது இப்படி நடந்திருக்கிறது. படத்திற்காக மக்கள் கொடுத்த ஆதரவு சந்தோஷம் இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. இதுபோன்ற கருத்து சொல்லக்கூடாது என என்னையும் பொறுப்பான இடத்தில் வைத்திருக்கிறீர்கள். எனக்கும் சேரியில் இருக்கக்கூடிய நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் சொல்ல வந்த கருத்து வேறு விதமாக போய் விட்டது. எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’ என பேசி இருக்கிறார் பிரிகிடா.

x